சனி, 18 டிசம்பர், 2021

Jack of all subjects master of none Part - 3

மூன்றாம் வருஷம் மெக்கானிக்கல் இஞ்சீனியரிங் வகுப்பு ஆரம்பிச்சப்ப புதுசா கல்லூரிலே திரும்ப சேர்ந்த மாதிரி புது நண்பர்கள். மத்த பிராஞ்சு விட மூன்று மடங்கு மாணவர்கள்.

புதுப் பிரிவுகள் புரொடக்‌ஷன் இஞ்சீனீயரிங்லாம் தோன்றிய காலம். NCC போக விளையாட்டு,ஓட்டம்னு ஏதேதோ கலந்துகிட்ட நேரம். தமிழ் மன்றத்துலே ஈடுபட ஆரம்பிச்சதும் அப்போதான். இணைச்செயலராகவும், செயலரோடு சேர்ந்து மன்ற விழாக்களை ஏற்பாடு செய்றதும் நல்ல அனுபவங்கள். எம்ஜிஆர் முதல்வராக இருந்தப்ப பன்ருட்டி இராமச்சந்திரனை முதலில் அணுகி பிறகு காளிமுத்துவை அழைத்து வந்தோம். குமரி அனந்தன், பெருஞ்சித்திரனார் போன்ற பேச்சாளர்களும் வந்தனர்.
கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் கலந்து சான்றிதழ்கள் கிடைத்தன. விளையாட்டில் பங்கு பெற்றதோடு சரி.
இரண்டு கல்விச் சுற்றுலா பைனல் இயருக்கு முன்னாடி. ஒன்று தென்னிந்தியா மைசூர், பெங்களூர்,ஊட்டி, கோயம்பத்தூர் முதலான இடங்கள் இரண்டு வட இந்தியா மும்பாய், டெல்லி,ஆக்ரா,சிம்லா முதலான இடங்கள்.
ஒவ்வொரு டூரிலும் மறக்க முடியாத ஏதோ ஒன்று நடக்கும். நண்பர்கள் அடி வாங்குவதிலிருந்து், மூக்கில் பனிமலை உயரங்களில் இரத்தம் வருவது வரை. மற்ற விவரங்களை வேறு கட்டுரைகளில் கூறியுள்ளேன்
நிறைய கேம்பஸ் இன்டர்வியூ நடக்கும். டாப் ரேங்க்ல இருக்கும் நண்பர்கள் சிலருக்கே பெரும்பாலும் சான்ஸ் கிடைக்கும்.
நான்காம் வருடம் படித்த போது SSC ( Short Service Commission) செலக்‌ஷன் பெங்களூரிலே, எட்டு பேர் இந்தியா முழுமைக்கும். அதிலே கலந்துகிட்டது ஒரு நல்ல அனுபவம். செலக்ட் ஆகலே.
இந்த அஞ்சு வருஷ படிப்புலே நடு நடுவே பல திருப்பங்கள் இருந்தாலும், அரியர்ஸ் இல்லாம, முதல் வகுப்புலே பாஸ் பண்ணப்ப மனசு சந்தோசப் பட்டது, அம்மா இருந்திருந்தா எவ்வளவு மகிழ்ச்சி அடைஞ்சிருப்பாங்கனு கண்ணோரம் கண்ணீர்த்துளி.
(வளரும்)

கருத்துகள் இல்லை: