வெள்ளி, 7 டிசம்பர், 2018

எனக்கொரு காதலி

எனக்கொரு காதலி இருக்கின்றாள்
என்னோடு நகையாடி இருக்கின்றாள்
எப்போதும் நிழலாய் என்னுள்ளே
எனக்காய் பிறந்தவள் இன்னுயிரானவள்
கருத்தாய் கரிசனமாய் இருப்பாளவள்
கரம்கோர்த்து கதைபேசி என்னோடிருப்பாள்
காதோரம் காதலுடன் கதைத்திடுவாள்
களுக்கென்ற அவள்சிரிப்பு தேனமுதாம்
நானும் அவளும் உடலும் உயிருமாய்
அவள் பாட்டைக் கேட்டு உறங்கிடுவேன்
அவளின்றி ஓரிரவும் இருந்ததில்லை
சுகமான வாழ்க்கை என்றென்றும்
கற்பனைதான் ஆனாலும் கற்கண்டாய் !

எம்மினம்..

என் இனத்திற்கு எப்போதும் வேதனை
கண்டமொன்றே கடலுக்கடியில் உறங்குகிறது
மாற்றான் மண்ணில் அடிமையாய் அல்லல்
ஊருக்கு இளைத்தவர் எம்மினம் என்றாயிற்று
நெல் வயல்கள் நீருக்காய் ஏங்கி கருகிற்று 
நெடும்புயலால் வேரோடு சாய்ந்தன மரங்கள்
மழை வெள்ளம் மண்குடிசை புகுந்தது
தீக்கனல் காட்டை கருகச் செய்தது
வானம் பொய்த்தது வயல்கள் வறண்டன
புயல் காற்று இல்லையேல் பெரும் வெள்ளம்
ஏனிந்த தண்டனை எம்மின மக்களுக்கு
ஏதேனும் பரிகாரமுண்டா செய்திட
நிம்மதியாய் வாழவிடு நிர்க்கதியாய் ஆக்காதே
இயற்கையோ இறைவனோ இனியேனும் வேண்டாமிது !

மாறிவிடு

அடே மானிடப் பதர்களே
மனித இனம் பிறந்து
பல்லாயிரம் ஆண்டுகள்
இன்னும் உங்கள் 
சாதிவெறி போகவில்லை
இரத்தம் நிறம் சிவப்பு
தோலின்நிறம் மட்டுமே மாறும்
மானுடா யாவரும் உன் இனமே
சாதி மதங்கள் நீதானே பிரித்தாய்
காதல் இதைப்பார்ப்பதில்லை
உயிர்க்கொலை செய்து
என்ன கண்டாய்
பிடிக்காதவர்களை நீஒதுக்கு
அவர்களை வாழவிடு
களையெடுக்கப் பட வேண்டியது
உங்கள் உயிர் அவர்களல்ல
கற்றுக்கொள் ஒற்றுமையை
மிருகத்தினும் கீழாய்நீ
மாறிவிடு இல்லை செத்துமடி
அழிக்கப்பட வேண்டியது நீயே !
விசயன்

ஊழல் முதலைகள்

மாற்றமொன்று தேவை
மாற்றிட வேண்டுமென்றால்
மாக்களின் ஆட்சியை
கூழைக் கும்பிடு கூத்தாட்டம்
பொய்வாக்கு பொறுப்பின்மை
ஆள்வது மட்டுமே மனதில்
ஊழல் முதலைகள்
ஊரார் பணத்தில்
உல்லாச வாழ்க்கை
முடிவுக்கு வழிவேண்டும்
வாக்களித்தவரே தண்டிக்க
வாய்ப்பொன்று வேண்டும்
ஐந்தாண்டு அல்ல
இடித்திட வேண்டும்
இறுமாப்பை இப்போதே
வழியொன்று செய்வோம் !

மாயபிம்பம்

கண்மூடி உறங்கினாலே பல கனவுகள்
காலச்சக்கரம் புரவிகள் பூட்டியதேர்
வாழ்க்கை என்பதோ வளர்பிறை தேய்பிறை
வான்வெளியில் தோன்றும் தாரகைகள் சிலநேரம்
நீலவானில் முடிவு தேடிப் பயணம்
முடிவே இல்லையென்று
முதுமை சொல்லும்
உறவு நட்பு உறுதுணை உண்டு
உள்ளம் சிலநேரம் தனிமை நாடும்
மனித வாழ்க்கை மாயபிம்பம்
இறுதிப் பக்கம் வெற்றுத்தாளாய் !

நண்பர்களே

தோண்டக்குறையாது அன்பும் அறிவும்
பண்பாளருக்கு உள்ளது பரிவும் பாசமும்
என்றும் அழியாதது காதலும் நட்பும்
வாழ்வில் உயரத்தேவை
விடாமுயற்சி திறமை
வணக்கத்திற் குரியோர்
மூதறிஞர் முன்னோர்
இறப்பின் பின்னும் தொடரும்
புகழும் செய்த தர்மப்பலனும்
சொல்லும் சொல்லின் சிறப்பும்
இறைவன் கொடுத்த வரம்
வாழும் நாளெல்லாம் நண்பர்களே
வசந்தம் வளம் செழிக் கட்டும் !

கடைக்கண் பார்வை

கண்ணுக்குள்ளே உன்ன வச்சேன்
கதவிடுக்கில நான் பாத்தேன்
நித்தம் நித்தம் நீதானே என் நினைவு
அந்தி சாயும் நேரம்வரை
உனக்காக காத்திருப்பேன்
உன் கடைக்கண் பார்வை 

கதவிடுக்கில் நான் காண்பேன்
கண்ணை மூடி உறங்கும் வேளையிலும்
உன்னுருவம் என் முன்னே
ஏனிந்த தண்டனையோ ஏங்க வைத்தாயே
கண்ணுக்குள் உனை இருத்தி வைத்தேன் நான்
கரங்களுக்குள் எனை அணைத்து ஏற்பாயென்றே!

நரகாசுரர்

எல்லாமே மாறிப் போனது
அசை போட பழங்கதை மட்டுமே
பாட்டிக் கதை சொல்லும்
பாட்டனாய் நீயும் நானும்
பேசுவதும் எழுதுவதும் தவிர
பாமரனாய் ஒன்றும் செய்ய
இயலாதவனாய் நண்பா நீயும்தானே
தீயவை களையவே தீபாவளி
தீயிட்டுக் கொளுத்த பட்டாசு
அன்று மட்டுமே அழித்த இறைவன்
எங்கே போனான் தேடுகிறேன்
நரகாசுரர் ஆயிரமாயிரம் நாடெங்கும்
இன்னொரு தீபாவளி நாள்குறித்து
இவரெல்லாம் அழிக்க நீ வருவாயா ?

பொய்வாக்கு

ஏரு பூட்டி சோறு போடும் நண்பா 
ஏழையானாலும் உன்மனசு தங்கமே இங்கு
ஆனை கட்டி போரடிச்ச காலம்போச்சு
ஆர்கண் பட்டு ஆத்து நீர் வறண்டுபோச்சோ 
பாருக்கே பாரதம் முன்னோடி பாடிவச்சான்
பாட்டாளி உழைப்பாளி பரிதவிப்பது ஏனோ
காசுக்கு விலைபோகும் கயவர் கூட்டம்
காடாக நாட்டையே மாத்திப் புட்டாக
வீண்பேச்சு பொய்வாக்கு அரசே ஆச்சு
வாக்கு சுத்தம் இல்லாத நாடாபோச்சு
வாய்கிழிய கதறினாலும் செவிசாய்க்க ஆளில்லை
மாறுமோ இந்தநிலை மனசெல்லாம் குழப்பமே
மக்கள் துயர் தீக்க மன்னவன் வருவானோ!

மனித வாழ்க்கை

மழைக்கால குளிர் காற்று
மனதுக்கு இதமான காலை
கதிரவனுக்கு விடுப்பு
கடல் அலைகளுக்கு அமைதி
கால்கள் நடை போட
கனவுலகில் எண்ணங்கள்
கால மாற்றம் தான்
கண்களில் திரையோட்டம்
வாழ்க்கைப்பாதை வண்ண ஓவியமாய்
வளைந்து நெளிந்து
உயர்ந்து தாழ்ந்து
தொலைதூரம் போய்க்கொண்டு இருக்கிறது
இருந்தவை இல்லாமலும்
இல்லாதவை சேர்ந்தும்
எத்தனை திருப்பங்கள்
எங்கேயோ தொடங்கி
எங்கேயோ முடியும் மனித வாழ்க்கை !

விரைந்தோடி வா

என் காதுகளுக்குள் நீ இரகசியம் பேசி 
எத்தனை நாட்களாயிற்று
நதிநீரின் குளிர்ச்சியில் உன் கால்களை நனைக்க 
அதை என் கைபேசியில் புதைத்து வைத்தேன்
அடிக்கடி பார்த்து மகிழ
தூரமாய் நீ ஏங்கும் மனதோடு நான்
எத்தனை இரவுகள் இன்னும் இந்த இன்னல்
நாளொன்று போனால் வயதொன்று வளரும்
நரைத்த முடியை சாயமிட்டு மறைத்தே
இளமையை இருத்தி வைத்துள்ளேன்
முதுமை கொடியது கண்ணிமைக்கும் நேரத்தில்

காலனை அழைத்து விடும்
இனியேனும் தாமதம் செய்யாதே
இயற்கைக் காற்றில் இதயங்கள் சுமக்க

இமயம் போவதாய் சொன்ன வார்த்தைகள்
நீ உள்ளத்தின் ஆழத்தில் இருத்தி வைத்தாய் தானே
பனிபடர்ந்த சிகரங்கள் நமக்காய் 

கண் விழித்துக் காத்திருக்கின்றன
உன் கரம் பிடித்து தத்தி நடை போட்டு

மீண்டும் குழந்தையாய் நான் தவழ்ந்திருக்கிறேன்
விரைவில் வா! மேக ஊர்தியேறி விரைந்தோடி வா !

சுகமே

காலைக்கதிரவன் ஒளியூடே
கடற்கரைநடை சுகமே
அருவிச் சாரலில் ஆனந்தமாய் 
அமர்ந்திருத்தல் சுகமே
உயர்ந்த மரங்களின் சருகுகள் 
சத்தமிட கானக நடை சுகமே
மேகக்கூட்டம் உடல்தழுவ 
மலைமுகடுகள் சுகமே
நதிநீர் ஓட நாமதில் 
நின்றிடல் சுகமே
ஆர்ப்பரிக்கும் அலைகள் 

கால்கள் தழுவ கடல்நீர் சுகமே
வானம் கருத்து மழைநீர் 

நனைதல் சுகமே
மெல்லியளாள் கைகோர்த்து 

வேகமற்ற நடை சுகமே
தென்றல் உடல்தழுவ 

தெம்மாங்குப் பாட்டிசை சுகமே
பசுமை நெல்வயலில்

வரப்புமேல் நடை சுகமே
இயற்கை நமக்களித்த இன்பம்

இவையாவும் சுகமே !

கேள்விக்குறியாய் எதிர்காலம்

மாயவலைகள் பின்னப்பட்டன
மயக்க உணர்வில் வைக்கப்பட்டனர்
நன்மைதீமை உணராத நிலை
பொய் வாக்குறுதிகள் நாடகங்கள்
ஊழல் பெருச்சாளிகள் தலைமையில்
செய்வதறியாத மக்கள் செயலற்று
ஊடகங்கள் விபச்சார நோக்கில்
மூளைச் சலவை வேகமாய் எங்கும்
முடங்கியது ஆராயும் தன்மை
அரக்க குணமே அதிகவளர்ச்சி
சிக்கலில் சமுதாயம் சிக்குண்டு
விடைதான் இல்லை வினாக்கள் பல
விடிந்தது இன்னொரு நாளும்
கேள்விக்குறியாய் எதிர்காலம் நோக்கி ?

காதல் தேவைதானோ?

விழியிலே உதித்து இதயம் நுழைந்து
விடைகள் காணா உணர்வுகள் கலந்து
உறக்கம் தொலைத்து
கண்கள் பனித்து
உயிரின் ஆழம் கண்டு மீண்டுவந்து
பெரும் போராட்டம் என்றாலும்

விடாது தொடர்ந்து
சுட்டுவிடும் நெருப்பென்று தெரிந்தாலும்
சோகத்திலும் சுகம் கண்டு
உய்த்தவர்க்கே புரியும் இதன் வலிமை
காலமெல்லாம் நினைத்திருக்க

காதல் தேவைதானோ !

ஒற்றுமை வழிதேடு

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே
பிரிவினை கண்டவர் யாரோ ?
மதமென்ற மாயை எதற்கு
தோலின் நிறம் கருப்போ வெள்ளையோ
உதிரம் மட்டும் சிவப்புதானே
கடவுளர் பலரும் கண்டவர் எவரோ ?
ஒன்றே குலம் ஒருவனே தேவன்
தெரிந்தும் தெரியாத நிலை ஏனோ ?
கொண்டுவருவதும் எடுத்துச் செல்வதும்
மானிட உடல்மட்டும் தானே
மயக்க நிலை விட்டு வெளியேறு
மக்கள் நாமென்று கொள்
மாக்களும் பசித்தபோதே உண்ணும்
வேற்றுமை பாராட்டல் ஒழித்து
வேதங்கள் சொல்லும் உண்மையுணர்ந்து
ஒற்றுமை வழிதேடு உயர்வாய் !

புதிய உதயம்

உறக்கம் வராத இரவில். 
உருண்டு புறண்டு உறங்கி
மீண்டும் காலை மீண்டும் கவிதை
நீண்ட வாழ்க்கையிது
நீயும் நானும் வாதாடி
நித்தமும் கவிபாடி
வசந்தமும் வருத்தமும்
மாறிமாறி வருமென்று
தெரிந்து தெளிந்து
ஞானம் பிறந்து
ஞானியாகி மோனநிலை

பெற்றோமா ?
புறப்படு புதிய
உதயம் காண !