வெள்ளி, 8 மே, 2026
வீடு
தெருவோரக் குப்பை அள்ளும் குப்பனுக்கு மரநிழலே வீடு
வருவோர் போவோரிடம் கையேந்தும் பாலனுக்கு நடைபாதை வீடு
நாடோடி ஊரோடிக் கூத்தாடும் குயிலிக்கு திறந்தவெளியே வீடு
நாடுவிட்டு நாடுவந்து அகதியான அழகனுக்கு எல்லையே வீடு
பாடுபட்டு மூட்டை தூக்கும் முனியனுக்கு குடிசையொரு வீடு
பாலைவன வெயிலிலே காயும் கண்ணனுக்கு டார்மிட்டரி வீடு
சோலைவனத் தோட்டத்தே் காவலனாம் கோபிக்கு கடைசியிலே வீடு
சேர்த்த பணத்தோடு வங்கிக் கடனோடு சோமனுக்கு வீடு
சேராத அடுத்த வீட்டினருக்கும் இவனுக்கும் சண்டையோ பெரும்பாடு
ஊருக்கு வெளிப் புறமாய் தன்னந் தனியே கிரவுண்ட்
பேருக்கு ஒன்றாய் கர்ணன் கட்டிய ஒற்றை வீடு
நகருக்கு நடுவே அரசியல் வாதிக்கு மாளிகை வீடு
நல்லதொரு காவலுக்கு நம்பி அவன் நாள்தோறும் வாயிலிலே
நம்பி படித்தது பட்டப் படிப்பு முதல் வகுப்பில்
நம்ம எம்எல்ஏ எட்டாம் வகுப்பை எட்டாத மேதாவி
பல அடுக்கு கோபுர வீடு அதன் அருகே
சில பல கோடிகளைக் கொட்டி கட்டிய வீடு
எத்தனை கார்களோ வகையாய் அந்நிய பிராண்டாம் அவையாவும்
சொத்துக்கள் சேர்த்த விதம் ஊரறியும் உற்ற நண்பனால்
கேள்வி கேட்க யாருக்கும் துணிவில்லை உயிர்ப் பயத்தால்
கேளாத பிணமாய் மாறிட யாருக்குத் தான் ஆசை
காலம் மாறிப் போனது பேரனே
ஞாலம் சுழற்சியில் வீடுகள் மறைந்தன
கூட்டுக் குடும்பங்கள் மறைந்தே போயின
கூடுகள் துறந்த குருவிகள் போலவே
முற்றம் முழுதும் நிறைந்த குடும்பம்
முற்றிலும் மாறிய மூன்று பேராய்
வயதான தாயும் தந்தையும் இங்கே
அயலக வாழ்வில் மகளும் மகனும்
வீடுகள் மறைந்து அடுக்கு மாடிகள்
காடுகள் மறைந்து வணிக வளாகங்கள்
அமைதி மறைந்து ஆரவாரக் கூச்சல்
அடுத்தது என்னவோ அடியேன் அறியேன்
உழைப்பவர் பெருமை
இன்றல்ல என்றுமே உழைப்பவர் அவர்
இறைக்கு ஈடான உறுதி கொண்டவர்
இயங்கும் உலகே இவர்தம் தயவால்
இயந்திரம் போன்றே இயங்கும் மனிதர்
மண்ணைப் பொன்னாக்கும் வித்தை கற்றவர்
எண்ணெய் சுரக்க எரிதழல் வெயிலில்
தன்னைச் சுட்டு தரணிக்குத் தருபவர்
தன்னலம் பாராத தகைசால் பெருமகனார்
உண்ண உணவும் உழுபவர் கைகளில்
சொல்லி மாளாது சோர்விலா மானிடர்
வெல்வது சிலரே வறியவர் பலரே
ஊருணி நீரும் ஊரெல்லாம் சாலையும்
பாருக்கே ஒளியும் மாடமாளிகை கோபுரமும்
உழைக்கும் உடலின் வியர்வைத் துளிகளில்
உழைப்பவர் பெருமை ஒருநாள் அல்ல
தினம்தோறும் போற்றுதற் குரியது அன்றோ ?
மனங்கள் மகிழ வாழ்த்துகள் சொல்வோம்
வாழ்த்திப் பாடு
வாழ்ந்தாயா
தாழ்ந்தாயா
வீழ்ந்தாயா
வாழ்த்திப் பாடு
தாழ்த்தி விடாதே
காழ்ப்பு ஏனோ
ஏழ்மை கொடியதே
வாழ்க்கை வாழவே
பாழாய்ப் போகாதே
பழகக் கற்றுக் கொள்
வழக்கும் வாதமும்
முழக்கும் முரசும்
செழித்த நாட்டின்
வழிவழி வந்தது
தொழுவது இறைவனை
முழுமுதற் கடவுளை
அழுதாலும் மாண்டோர்
எழுவது இயலுமோ
கழுவினில் ஏற்றிய
கொழுத்த கள்வனோ
பழுத்த பழமென்றால்
விழுந்தே ஆகுமன்றோ
நாவழுந்தச் சொல்வதென்றால்
நானூறு வார்த்தையுண்டு
தமிழ் அமிழ்து
பழகிப் பாருமின்!
உழைத்த காலம்
வாழ்க்கை ஒரு வட்டம்
உழைத்த காலம் போனது
பிழைப்பு தேடி ஓடலே
கழைக் கூத்தாடி ஆகலே
கூழைக் கும்பிடும் போடலே
ஏழை என்றும் ஆகலே
ஊரைச் சுற்றி வந்தோம்
பேரைச் சொல்ல பிள்ளைகள்
நரைச்ச முடியும் மீசையும்
கரையைச் சேர்ந்த படகாய்
தரையில் நின்ற கால்கள்
அசைபோட ஆயிரம் உண்டு
வசைபாட நேரம் இதுவல்ல
இசையோடு பாடும் நேரம்
திசைமாறிப் போகாதே நண்பா
அசைந்தாடி அன்போடு உறவாடு
கற்பனைக் குதிரை ஏறி
பற்பல ஊரைச் சுற்றிவா
கற்பதற்குக் காலம் இல்லை
குற்றம் பார்ப்பது தவி்ர்
சுற்றம் சேர்ந்து வாழ்
அன்னைத் தமிழே
தமிழோடு உறவாடி தகைசான்ற நல்லோரோடு கலந்து
தலையாய மொழியான தாயோடு் சேயாகி விளையாடி
அழகான வரிகளில் அமைந்திடும் கவிதைகள் படைத்து
பழகிய தமிழில் பற்பல படைப்பை நல்கி
நாளும் எனக்கு நல்வரம் நல்கும் அன்னைத் தமிழே
தாளது பணிவேன் சிரம் தாழ்த்தி நானே !
ஆண்டொன்று போனாலும் மூப்பில்லை உனக்கே தாயே !
கண்டேன் கற்பனை உருவில் இளமங்கை நீயே
கனியோடு தேனும் பாலும் பருகிட தினமும்
கரையாத செல்வம் போன்றே உன்னத மொழியாய் என்றும்
உனது பிறப்பை தமிழில் காண்பேனா என்றாவது
ஏனது மட்டும் வேற்று மொழியினில் அறியேன்
மாற்றம் உண்டோ மனதில் தமிழ் ஆண்டாய் உருவாக்க
சீற்றம் வேண்டாம் பெரியோரே சொல்வதை ஆராய்வீர்
அழகான சொற்கள் ஆயிரம் உண்டு எளிதே என்பேன்
பழகினால் எதுவும் நன்றாகத் தோன்றும் அல்லவா
சிந்தனை செய்வீர் சீர்தூக்கிப் பார்ப்பீர் அறிஞரே
நிந்தனை செய்யாது நினைத்துப் பார்த்து அறிவீர்
தமிழ்ப் புத்தாண்டு சிந்தனை என்றே கொள்வீர்
தக்கதொரு விடையினை நல்குவீர் நம்புகிறேன் சான்றோரே !
நல்லவர் அவரா
சொல்லுங்கள் கடவுளர் பெயரால் கொழுக்கும் சிலரே
நல்லவர் அவரா நல்லது மட்டுமே செய்தாரா
சொகுசான வாழ்க்கை சொர்க்கமாய் வசதிகள் எவ்வாறு
வர்க்கப் பிரிவுகள் உண்டு வழிபடும் வகையில்
எளிமையற்ற எகத்தாளம் பேச்சில் எத்தனை கர்வம்
களிநடனம் புரிந்தே கடல் கடந்து போவார்
காசுக்காய் இவரோ கடவுளைத் தொழுவரோ வினாக்கள்
மாசற்ற வாழ்வும் இல்லாமல் போனதால் ஏமாற்றம்
மக்கள் இவரால் மயக்கம் கொள்வதும் ஏனோ?
விடைகள் தெரிந்தால் சொல்வீரா பெரியோரே உண்மையில்
தமிழே உயிர்
தாயென் உயிர் என்றால் தமிழும் உயிரே
சேயென் நாவில் எழுதிய அழகு மொழியே
வாயென் உயிரோடு இணைந்தே இருந்திடு எந்நாளும்
ஓயேன் புகழ்பாட ஒருநாளும் தாயே தமிழே !
மூத்த மொழியே உலகின் முதல் மொழியே
காத்து நிற்போம் நின் பெருமை எந்நாளும்
சங்கம் வளர்த்த தமிழே தொன்மை மொழியே
எங்கள் உணர்வோடு உறைந்த பெருமை பாட இனியவளே இயல் இசை நாடகம் ஆனவளே
கனியெனத் தித்திக்கும் கணக்கில் அடங்கா பாடல்கள்
காலம் கடந்த முதல் இலக்கண நூலே
காத்து பலகாலம் வளமாய் எம்மோடு கொண்டோம்
யாரும் உன்னை அழித்திட இயலாது அணைத்துக் காப்போம்
பேரும் புகழும் உலகில் என்றும் நிலைக்கும்
உனது புகழ் பாட ஒருநாள் போதுமா
மனதில் மகிழ்வு பெருகும் வரிகள் வளமாகும்
குறட்பா நாலடி அகநாநூறு புறநாநூறு எட்டுத் தொகை
குறையாத வகைகள் எண்ணில் அடங்கா நூல்கள்
வாழ்வின் நெறிகள் காதல் கல்வி ஈகை
வாகை சூடல் மனை மாட்சி மங்கலம்
எத்தனை எத்தனை புதைந்த இலக்கிய பெட்டகங்கள்
இன்று ஒருநாள் போதாது பெருமை பாட
என்றும் உன் நினைவில் வாழ்வோம் தாயே !
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
