வெள்ளி, 8 மே, 2026
நாய்க்கனேர
எங்க ஊரில் வாரம் ஒருமுறை சந்தைக்கு சேப்பக் கிழங்கு, முள் கத்தரிக்காயை சுமந்து ஏழு கிமீ நடந்தே சென்று வேலூர் பஜார்லே அதை விற்று, அரிசி, பருப்பு , எணணெய் முதலான மளிகை வாங்கி வருவர்.
நெல் அறுவடை நேரங்களில் மூட்டை மூட்டையாய் நெல் ஆலைகளுக்குச் செல்லும். பெரிய பானைகளில் நெல் விதைகளுக்காகவும், அரிசிக்காகவும் வைத்திருப்பர். பெரும் பாலும் கேழ்வரகுக் களி , கூழ் இவையே உணவு. புளிய மரத்துத் தளிர் பல நாட்களில் களிக்கு தொட்டுக்க. எப்போதாவது கத்தரிக்காயும் கருவாடும்.
டவுனிலிருந்து போலீஸ்காரன் பையன் நான் போகும் போது மட்டும் அரிசிச் சோறு, தோசை உண்டு.
ஊர் முச்சூடும் உறவினர் ஆதலால், பல வீட்டில் அழைப்பு. தேங்காய் புண்ணாக்கு, வெல்லம் அக்கா வீட்டில் ஒடுகத்தூரில். கிராமத்து மலையேறும் பாதையில் ஓடை உண்டு நீரற்று. அதன் கரையில் ஈச்ச மரங்கள். பழுக்கும் வரை யாரும் காத்திருப்பதில்லை. மலை உச்சி வரை எப்போதாவது ஏறினால் மிகப் பெருமை. ஆடு மேய்க்க மலை ஏறிச் செல்லும் இளைஞர் இளைஞி இடையே மலரும் காதல் பெரும்பாலும் தோல்வியே.
ஊருக்கு ஒதுக்குப் புறமாய் சாராயம் விற்பது,மாலை வேலையில் வரும் மைனர்களுக்கு. ஓரிரு சமயம் அப்பாவும் போவார், அவருடன் செல்லும் போது உடைத்த கடலை பூண்டு மிளகாய் உப்பு கலந்த கலவை ருசியாக எனக்கு. ஒருவித பூச்சியை வறுத்து இதனுடன் சேர்த்தும் உண்பர்.
நாய்க்கனேரி இப்போது மாறி விட்டது. இளைஞர்கள் படித்தவர்களாக மாறி விட்டனர். ஒரு சிலரே பயிர்த்தொழில். குல தெய்வ வழிபாட்டுக்கு ஆண்டுக்கு ஒருமுறை செல்வதோடு நின்று போனது தொடர்பு.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக