வெள்ளி, 8 மே, 2026
பெங்களூரு காலைக்காட்சி
காலை ஆறே காலுக்கு மடிவாளா எனப்படும் பெங்களூருவின் நுழைவாயில் வண்ண மயமான பூக்களால் களை கட்டியிருந்தது. நண்பரின் மருமகன் திருமணம் ஒன்றுக்குப் போக வேண்டி, முன்பதிவு செய்த பேருந்து 7 மணிக்கு மேலே வருமென்பதால்,வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.
சுறுசுறுப்பான காலை வேளையில் பல தரப்பட்ட மக்களும், உதிரிப் பூக்கள், கட்டிய பூ, பூமாலை, வெற்றிலை என வாங்கிச் சென்ற வண்ணம் இருந்தனர். மஞ்சள்,வெள்ளைநிற சாமந்தியும் , சிவப்பு நிற ரோஜாவும் உறவாடிய கட்டிய பூ முழம் போடப்பட்டு பைகளில் உள்நுழைந்தன. ஆட்டோக்கள், கார்கள், தள்ளு வண்டிகள் அணி வகுப்பை , போக்குவரத்துக் காவலர் விரட்டியபடி இருந்தார்.
அரசுப் பேருந்துகள், நீண்ட தூரப் பயண பேருந்துகள் விரைந்தபடி இருந்தன. நாளை விநாயக சதுர்த்தியை முன்னிட்டு வெளியூர் செல்லும் பயணிகள் இங்குமங்குமாக சூட்கேஸ், கைப்பை சகிதமாக பரவிக் கிடந்தனர். சாலையோரம் கடை விரித்திருந்த பெண்மணி தன்னை மறைத்தபடி நின்ற தள்ளுவண்டி மூதாட்டியை முன்னே போகச் சொல்லி விரட்டினார்.
பண்டிகை நாட்களின் பரபரப்புக் காட்சி கண் முன்னே, ஓடிக் கொண்டிருக்க நான் பயணிக்க வேண்டிய பேருந்தின் நடத்துனர் கை பேசியில் அழைத்து சற்று முன்னேயுள்ள RKT Travels வாசலில் நிற்குமாறு பணித்தார். சுமார் 20 நிமிட தாமதத்தில் பேருந்து வந்து இருக்கை 2 C ல் அமர்ந்து முன்னேயுள்ள நெடுஞ்சாலையும், எலெக்ட்ரானிக் சிட்டி மேம்பாலமும் கண்ணில் பட , பேருந்து திருச்சி நோக்கி வேகமெடுத்தது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக