வெள்ளி, 8 மே, 2026

இரவுக்கு என்ன கோபம்

காலத்தின் கோலங்களைக் கண்டதால் கோபம் ஞாலத்தில் அமைதி தேடியே கோபம் மனிதன் மாறவில்லை என்ற கோபம் புனிதம் எங்கே சென்றதென கோபம் பிரிவினை ஒன்றே வாசம் எங்கும் புரிதல் இல்லை எவர்க்கும் இங்கே எத்தனை யுகமோ மாறுதல் எங்கே புத்தனும் பிறந்த பூமி அன்றோ சாதிப் பேய்கள் ஆட்டம் போடுது சாக்கடை அரசியல் சதிர் ஆடுது நாடுகள் தோறும் எல்லைப் பிரிவுகள் நாடும் அமைதி தொலை தூரத்தில் மதங்களின் சண்டையில் மனிதம் மரித்தது வேதங்கள் வெறும் வரிகள் ஆனது தலைமைகள் தகுதி அற்றதாய் தாண்டவம் தறிகெட்ட கொள்கைகள் தலை விரித்தே நெறிகெட்ட மனிதர் வாழும் உலகம் பறிபோன ஒழுக்கம் பகையான உள்ளம் இரவுக்கு இதனால் அத்தனை கோபம் விடிவதா இல்லையா என்ற தயக்கம் நன்றெனச் சொல்ல எத்தனை உண்டு நலிந்த மக்கள் உயர்ந்து போயினரா வானத்தில் பறக்கும் விமானம் தருமா வாடிய முகங்களில் வண்ணச் சிரிப்பை கூடுகள் கட்டும் பறவை கூட காடுகள் கடந்து இரைதந்து காக்கும் வறுமை போக்காத வளமிருந்து பயனென் வயலை உழுதாலே பசிக்கு உணவாகும் எவரும் வருந்தாத உலகே வேண்டும் எங்கும் அமைதி என்பதே வேண்டும் எவரும் உலகில் எங்கும் செல்ல எல்லைகள் அற்ற உறவு வேண்டும் நடக்குமா என்ற ஐயம் என்றும் நடந்தால் நலமென உள் ளம் சொல்லும் இரவுக்கு இருளை விலக்கத் தோன்றும் இல்லாது கோபம் விலகிப் போகும்

கருத்துகள் இல்லை: