வெள்ளி, 8 மே, 2026

பொங்கலோ பொங்கல்

பாட்டனும் பூட்டனும் சகதியில் கால் வச்சு பாடுபட்ட பூமியிலே நெல் மணிகள் சிரிச்சன ஓடுவீடு இல்ல மலைமேல அறுத்த மஞ்சம்புல் குடிசையிலே களிமண் தரை முச்சூறும் சாணம் பூசி பள பளக்க வச்சா மூத்த கிழவி அவ காதுல குண்டலமா தொங்கட்டான் கழுத்துலே தாலியிலே குண்டுமணி கோத்திருப்பா மூக்குத்தி மினுமினுக்க சாணியக் கரச்சி தெளிச்சு வாசலிலே போடுற கோலம் தெருவ அடச்சு நிக்கும் ஏலே பேராண்டி ஒசத்த குரல் தெருக்கோடி வர கேக்கும் ஆட்டுப் பாலுலே வச்ச காப்பித் தண்ணி குடிச்சு புட்டு புள்ள ஸ்கோலுக்கு போனா ஒரே வாத்தி ஒண்ணாம் கிளாசும் அஞ்சாங் கிளாசும் பாடஞ் சொல்லுவார் பொங்கலு வந்தாக்க டவுனுல வாங்கியாந்த துணில ஒய்யார பாவாட தங்கைக்கு பிளவுசோட எனக்கோ தொளதொள டவுசரு அத்தோட சட்டையும் வீட்டு முத்தத்துலே காய்கறி வச்சு சூரியனக் கும்பிட்டு கலவைக் காய்கறிக் குழம்போட புதுப் பச்சரிசி பொங்கல் கரும்பும் மஞ்சளும் வச்சு படைச்ச கையோட தேக்கம் இலைலே சாப்பாடு மறுநாள் காலைலே மாட்டைக் குளிப்பாட்டி கொம்புக்கு வண்ணம் பூசி புது மாப்புள கணக்கா அலங்காரம் இருட்டு வரதுக்குள்ளே மிரண்டு ஓடுற ஓட்டம் கழுத்து மணிச் சத்தம் கோவில் ரேடியோ சத்தம் எல்லாமும் சேந்து கிராமமே பள பளக்கும் வந்துருங்க நீங்களும் பொங்கலோ பொங்கலைப் பொங்கிக் கொண்டாட

கருத்துகள் இல்லை: