வெள்ளி, 24 மார்ச், 2023

எரிமலை

 எனக்குள் குமுறும் எரிமலை எதனையும் எரிக்கும்

உனக்கும் தேவை யெனில் தருவேன் அதனை நானே
கனக்கும் மனதின் கையறு நிலை தனைக் கண்டு
கனலாய் தோன்றும் நிலையே இதனின் காரணம் ஆகும்
மனிதன் மாறிய விலங்காய் மற்றவர் அழிவை நாடினான்
புனிதம் மறந்த வாழ்வே புவியில் இன்று உண்மை
கடமை என்பதே காசாய்ப் போன அவலம் காண்பீர்
மடமை மனதில் ஓங்கி மயக்கம் கொண்ட மாக்கள்
நல்லவை தீயவை அறியும் திறனும் இல்லை அன்றோ ?
பொல்லாத சொல்லே உயர கல்லாத கயவர் ஆனார்
விடியல் இல்லாத இரவாய் இருளில் மூழ்கிய மனங்கள்
கடினம் இந்நிலை மாறுதல் என்றால் பொங்கும் சினமே
நல்லவர் இல்லாத உலகில் வாழ்வது நரகம் அன்றோ
நல்குவீர் நீவிர் விடுதலை உண்டா இந்நிலை மாறிட ?

நடுநிலை ?

 சிரிச்சுப் பேசி பொய்யைக் கூறி வாங்குறது ஓட்டு

சிந்திக்க மறந்த மக்கள் மயங்கிப் போடுறது ஓட்டு
சொன்ன வார்த்தை மறந்து போகும் மனசை விட்டு
என்ன சொல்லி என்ன பயன் வெடிக்கிறது வேட்டு
ஏமாளி இவனோ என்பதாலே வந்ததே பாட்டு
கோமாளி பலர் கூடி வைத்ததோ தலையிலே குட்டு
தேர்தல் வந்தாலே கொள்கை மறந்த கும்பலின் கூட்டு
தேறுதல் மனசுக்கு இல்லை ஆடுகிற கூட்டம் அம்புட்டு
நாட்டுக்கு நல்லது பண்ணு நபருக்கு இல்லைனு காட்டு
நாட்டாமை நல்லது நடுநிலை மாறாத
சொல் கேட்டு

முடிந்த நாடகம்

 நிரந்தரம் எதுவும் உண்டோ உலகில்

நினைத்துப் பார்ப்பின் உண்மை உரைக்கும்
இன்றிருக்கும் ஒன்று நாளை இல்லை
இருப்பதும் போவதும் இறைவன் கணக்கு
கண்ணில் மறைந்து கருத்திலும் மறையும்
விண்ணில் தோன்றும் தாரகை கணக்காய்
தோன்றிடும் வாழும் மறையும் ஒருநாள்
தோல்வியோ வெற்றியோ ஓட்டம் முடியும்
சேர்த்த பொருளும் சொந்தமும் மறையும்
சேர்வது எங்கே கேள்விகள் என்றும்
நரகமோ சொர்க்கமோ விதிப்பலன் என்பர்
நடிப்பு முடிந்த நாடகம் போலவே
வேடம் கலைத்து இருப்பிடம் சேர்வர்
வேதனை மறைய காலமும் உருளும்

விடையே காணாத கணிதம்

 உலக வாழ்வு எதனைச் சுற்றி

உருக வைத்த அன்பு எங்கே
இறுகிப் போன பாறை நெஞ்சோ
மாறுதே இருளா ஒளியா வினாவே
அரிதாய் போனது அமைதி மனதில்
விரியும் கனவோ எல்லை அற்றே
யாரிதை ஆய்வர் விடை தேடியே
ஆறாத தீயும் அணையாது உள்ளே
தேறாது தேயாது காலம் சுழலும்
சொல்லாத கதையாய் சோகம் சுமக்கும்
பொல்லாத வாழ்வில் திருப்பம் அதிகம்
கதையாய் கவிதையாய் சிலமுறை பொங்கும்
விதைகள் வேறாய் விளைவது பலவாய்
முளையா நாற்றாய் சிலவிதை உண்டு
களையாய் அவையே கூடவே வளரும்
விடையே காணாத கணிதம் போன்றே
விடிவே இல்லா இரவாய் நீண்டு
எல்லை கண்ட எவரும் இல்லர்
பல்வித பாதையில் தொடரும் பயணம்

வருவாயா நாளை

 கொற்றவன் இங்கிருக்க கொற்றவை நீயெங்கே

உற்றவன் நானிருக்க ஊர்விட்டுப் போனாயோ
கற்றவன் சபையிருக்க துறந்தவள் எங்கேயோ
நற்றமிழ் பாடல்கள் நான்பாடி நின்றேனே
பெற்றவள் சொல்லியது மறந்தனை என்பதோ
சொற்றொடர் பலவுண்டு சோதனை செய்தாயோ
பற்றது துறந்து பறந்தே சென்றாயோ
முற்றும் துறந்த முனிவன் நானல்லன்
சற்றும் சிந்தியாத செயலாய் ஆனதுவே
முற்றம் அமர்ந்தே நிலவைக் கேட்டேன்
சீற்றம் கொண்ட கடலலையைக் கேட்டேன்
வற்றும் மனதாய் வறண் டு போனதுவே
பற்றிப் படர கொம்பைத் தேடியே
சுற்றியே தழுவிட எதனை நாடுவேன்
காற்றாடி போலாகி் காற்றில் அலையவோ
மேற்திசை கீழ்திசை எத்திசை தேடிடவோ
குற்றம் புரிந்தேனா தண்டனை அதற்கோ
மற்றவை காரணம் எதுவும் உண்டோ
வருவாயா நாளை வாசலில் காத்திருப்பேன்
வளையோசை கேட்டே வாரி அணைப்பேன்

தந்தவர் எல்லாம் வாழ்வர்

 வந்தோம் வாழ்ந்தோம் சென்றோம் என்பதா வாழ்க்கை

தந்தது எதுவோ பிறர்க்கு என்பதை யோசி
பந்தம் பாசம் நேசம் அன்பு கொண்டு
தந்தவர் எல்லாம் வாழ்வர் என்றும் நெஞ்சில்
எந்தை தாயும் ஏழை எளியர் காத்தே.
சிந்தை குளிர சிறிய உதவிகள் செய்வாய்
வந்தனம் வறுமை போக்கிய யாவர்க்கும் உண்டே
சந்தனம் சாக்கடை நாற்றம் போக்கியது போலே
நிந்தனை எவரையும் செய்தல் தவிர்த்து வாழு
உந்தனை உலகம் உயர்த்திப் புகழ் பாடும்

ஆயுள் தண்டனை

 வானத்தே தாரகை ஒளி வீசக் கூலி இல்லை

வான்மேகம் மழை பொழிய ஊதியம் கேட்பது இல்லை
வெள்ளி நிலா இரவில் ஒளிவீசக் கூலி இல்லை
சுள்ளென்று ஒளிவீசும் ஆதவன் பொருள் கேட்பது இல்லை
வளைந் தோடி வளம் சேர்க்கும் நதிக்கும் இல்லை
வலை போடும் மீனவர்க்கு கடலும் விலை கேட்பதில்லை
உயிர்க் காற்று உருவாக்க மரங்கள் விலை பேசவில்லை
உணவாகப் பயிர் விளையும் பூமியும் வரி கேட்பதில்லை
ஏனோ மனிதா கடமையாற்ற கைக்கூலி உனக்கு மட்டும்
ஏளனம் பேசினாலும் காதுகள் செவிடாய்ப் போனது எதனாலே
கையூட்டு பெற்றே ஓட்டளித்து கயவரைத் தேர்ந்தெடு வெட்கமில்லை
மையிட்ட விரலுக்கும் உனக்கும் ஆயுள் தண்டனை அவசியம்

தமிழே தாயே

 என்னில் கலந்து எண்ணம் நிறைந்து

என்றும் தொடரும் தமிழே தாயே
கனவில் நினைவில் கவிதை வடிவில்
தினமும் உன்னைச் சார்ந்தே வாழ்வே
சொல்லில் பொருளில் இனிமை உனதே
சொற்கள் அழகாய் சேர்ந்திடும் பாடல்
செவிக்கு இனிதாய் இசைக்கும் வரிகள்
காவியம் யாவும் உன்புகழ் பாடும்
ஓவிய வரிகள் ஓராயிரம் உண்டு
கற்களில் செதுக்கிய செப்பேடுகள் பழமை
கற்றலும் கேட்டலும் கன்னலின் சுவையாய்
உலகின் தொன்மை மொழியெனப் போற்றுவோம்
உன்னிலும் உயர்ந்தவள் ஞாலத்தில் இல்லை

இறுதிவரை தொடரும்

 வந்தது போனது வாழ்ந்தது காதல்

வசந்தம் வாழ்விலே சேர்த்தது காதல்
வாலிபம் வயோதிகம் கடந்தது காதல்
வாலைக் குமரி வயதினில் காதல்
வளர்ந்து முதிர்ந்து மூத்த காதல்
அலைகள் ஓய்வதில்லை இளமைக் காதல்
அழியாத முதல் மரியாதைக் காதல்
காவியம் பாடிடும் அன்றைய காதல்
கம்பனும் கண்ணதாசனும் பாடிய காதல்
கண்ணனும் கந்தனும் கொண்ட காதல்
என்னிலும் உன்னிலும் என்றுமே காதல்
எழுத்திலே உருண்டோடும் கவிதைக் காதல்
கண்ணிலே கனவிலே உறைந்திடும் காதல்
எண்ணப் பறவை சிறகடிக்கும் காதல்
மனிதம் வாழும் காதலும் வாழும்
மனங்கள் சுமந்து பறந்து செல்லும்
மறையாது என்றும் மறைந்தே இருக்கும்
உருகும் உளரும் உவகை கொள்ளும்
கருவில் உருவாகி இறுதிவரை தொடரும்

தினம் ஒரு கவிதை

 தினம் ஒரு கவிதை தீந்தமிழில்

இனம் கண்டு கொண்டேன் வரிகளில்
சினம் சில நேரம் உண்டு
மனம் கொள்ளை கொண்டு செல்லும்
வானம் எங்கும் வலம் வரும்
வனம் சுற்றி வந்து சேரும்
நாணம் கொண்ட பெண்ணின் நகைப்பு
காணக் கண் கோடி வேண்டும்
கண்களின் அசைவு காதல் பேசும்
கன்னச் சிவப்பு காவியம் ஆகும்
பெண்மையின் மென்மை பேசிய கவிதை
ஆண்மை அடங்கும் அதிசயம் சொல்லும்
விந்தைகள் புரியும் வித்தகம் சொற்களில்
சந்தம் அணிந்த வார்த்தைகள் மாலையாய்
இன்றும் என்றும் தொடரும் நாட்களில்
இனியதை ஏற்று பருகிட வாரீர்

தொடரும் கதை

 எங்கிருந்தாலும் வாழ்க ஏற்புடை வாழ்வாங்கு வாழீ

என்ன தவம் செய்தேனோ என்றாள் ஏந்திழை
தொலைதூரம் சென்றாள் சோர்வுற்றாள் துவண்டாள் துடித்தாள்
கலையாத காதலுக்கு முடிவேது மூப்பிலும் மறையாது
முதல் காதல் முடியாது போனாலும் பசுமை
சாதல் வழியல்ல சாகாத நினைவுகள் நிரந்தரம்
போகாத ஊருக்கு வழி தேடும் பருவம்
போகட்டும் விட்டு விடு வாழக் கற்கட்டும்
இன்று நேற்றல்ல என்றும் தொடரும் கதைதானே
தொன்று தொட்டு காவியங்கள் பலவின் கருதானே
எல்லைகள் கடந்த இன்ப வேதனை என்றாலும்
எனக்கும் உண்டு உனக்கும் உண்டு எழுதிடவே

காலங்கள் கடந்தும்

 பேருந்துப் பயணம் சென்னை நோக்கி

பேரானந்தம் கூடவே என்னை நோக்கி
பிறந்த ஊரோடு வளர்ந்த ஊரும்
சிறந்த பயணம் தானே கூறும்
பள்ளி நண்பர்கள் கல்லூரி நண்பர்கள்
புள்ளி இட்டு கோலமிட்ட நண்பர்கள்
காண்பதே சுகமே உள்ளம் உவக்கும்
காலங்கள் கடந்தும் தொடரும் நட்பே
உலக வாழ்க்கை உன்னதப் பயணம்
உவகை கொள்வதும் உரத்த சிரிப்பதும்
மற்றதை மறந்து மனது மகிழ்வதும்
கற்றதைக் கடந்து மழலையர் ஆவதும்
கூட்டம் போட்டு கும்மாளம் போடலும்
ஆட்டம் பாட்டம் அனைத்தும் செய்தும்
மீண்டும் இளமைப் பருவம் திரும்பும்
வேண்டும் இந்த நாட்கள் என்றும்

மனம் அசை போட்டுப் பாக்குது

 ஆடு ஒண்ணு குட்டி போட்டு பாலைக் கொடுக்குது

மாடு கண்ணு முட்டி முட்டி பாலைக் குடிக்குது்
வீடு மேலே சேவல் நிண்ணு் கூவப் பாக்குது
கோடு போட்டு புள்ளி வச்சு கோலம் வந்தது
ஏரு உழுது தண்ணி பாய்ச்சி நாத்து வளருது
ஏலே ஏத்தம் இறைச்சு வயலுக்கு தான் போகுது்
போரு கட்டி மாட்ட ஓட்டி நெல்லு உதிருது
ஊரு மக்க ஒண்ணு சேந்து கூத்து கட்டுது
சாதி சனம் சந்தை போயி திரும்ப வருது
வீதி எல்லாம் வண்ணக் கோலம் விழா என்றது
திண்ணை ஒண்ணு கதை கேக்க கூட்டம் கூட்டுது்
பண்ணை கணக்கு பாத்து படி அளக்க சொல்லுது்
மலையோர குடிசைப் பாட்டு தொலை தூரம் கேக்குது்
கலையாத மேகக் கூட்டம் கறுத்து இருளைச் சேக்குது
மறவாத நினைவுகள மனம் அசை போட்டுப் பாக்குது
பிறப்போமா மறுபடி குழந்தையானு எண்ணம் தோன்றி மறையுது

புதியவை தோன்றலும் பழையவை மறைதலும்

 எங்கோ தொடங்கி எங்கோ முடியும் வாழ்க்கை

எதிலோ பற்று எதுவோ நட்பு கேள்விகள்
சுழலும் பூமி சுழலும் சக்கரம் போன்றதே
சுற்றம் வருவது போவது என்பது நிகழ்வுகள்
வாலிபம் வயோதிகம் வனப்பு முதுமை இயற்கையே
வாடிய முகமும் தேடிய சுகமும் தேய்வதே
சிந்தனை பலவாய் காட்சிகள் மாறிடும் நாடகம்
சிற்பிகள் செதுக்கிய சிலைகள் போன்றவை தோற்றம்
வண்ணத்துப் பூச்சியாய் வலம் வரும் நாட்கள்
எண்ணச் சிதறல்கள் கனவாய் நனவாய் ஓவியம்
புரியாத புதிராய் சிக்கலும் புன்னகை தோற்றமும்
புதியவை தோன்றலும் பழையவை மறைதலும் வாடிக்கை
மனித வாழ்வே மனதில் விடை தேடி
மடிந்தே போகும் ஒருநாளில் மண்ணில் புதைந்தே

கடந்த கால நினைவுகள்

 தோழியே ஞாபகம் இருக்கா உனக்கு

தோடுகள் குலுங்க கல்லாட்டம் ஆடினாயே
இரண்டு நான்காக கற்கள் மேலறிந்து
இதனோடு பல்லாங் குழி ஆட்டமும்
ஆண் மகனும் ஆடலாம் என்றும்
வில்லைகள் எறிந்து கட்டங்கள் கடந்து
எல்லையற்ற மகிழ்ச்சி மனதில் பொங்கிட
இனிப்பு ஒன்றை காக்கா கடிகடித்து
இனிதாக உண்டதும் மறக்க முடியுமா
வைகுண்ட ஏகாதசி என்றாலே பரமபதம்
வைகறை வரையில் அரட்டை ஆரவாரம்
மழைக் காலம் வந்தாலே குதூகலம்
மழலையாகி மழை நீரில் நீச்சல்
கிராமத்து தெருக்களில் ஓடி விளையாடி
கிணற்றில் குதித்து கோட்டை கட்டி
ஈச்சமரம் தேடி மலையோர ஓடையில்
ஈசல் கலந்த பொரியோடு கடலை
தின்னக் கிடைக்கும் வேர்க்கடலை வெல்லம்
திகட்டாத நுங்கும் இளநீரும் மாங்காயும்
கவலைகள் அற்று சிறகடித்த நாட்கள்
கடந்த கால நினைவுகள் இனிமையே

கற்பனை உலகம்

 கற்பனை உலகம் ஒன்றை நான் படைத்தேன்

சுற்றிய திசைகள் யாவும் பசுமைப் போர்வையே
வான ஊர்திகள் வலம் வரக் காண்கிறேன்
கானக எல்லை ஒவ்வொரு ஊரிலும் அழகாய்
காற்று மாசற்று நதிகள் ஊடாக படகுகள்
வேற்று கிரகம் அல்ல பூமியின் தோற்றமே
ஆயுதம் எதுவும் தேவை இல்லை அமைதியே
ஆலயம் அவரவர் விருப்ப வடிவில் ஆங்கே
தடைகள் அற்ற பயணம் தரவுகள் தேவையற்று
படைகள் என்பதே கற்பனை ஓவியம் போன்றே
எதையும் எவரும் கொணர ஒருவகை நாணயம்
எங்கும் வளமாய் வறுமை என்பதே இல்லை
செல்வம் சமமாய் ஏற்றத் தாழ்வு அற்றே
செழித்த நிலங்கள் சேமிப்புக் கிடங்குகள் பலவும்
வேற்றுக் கிரகம் செல்ல விரைவு ஊர்திகள்
வேற்றுமை அற்ற மனிதர் கற்றவர் அனைவரும்
பிறப்பு இறப்பு சரிவிகிதம் பிணிகள் குறைவாய்
இறகை விரித்து வானில் பறந்து செல்லப் பாதைகள்
இத்தனை போதுமா இன்னமும் வேண்டுமா ஆராய
இயக்கம் ஒன்று நகருக்கு வெளியே உண்டு
சாத்தியம் ஆகுமெனில் இவையே சமுதாய நலமே
சாதிகள் சண்டைகள் மறைந்தே கனவாய் போகும்

வானில் மின்மினிகள்

 அண்ட பிரமாண்ட வானில் ஆயிரமாயிரம் மின்மினிகள்

சண்ட மாருதம் இடியோசை மின்னல் ஒளிக்கீற்று
அகண்ட வான்வெளி எல்லை அற்று விரிந்து
அத்தனை கோள்கள் அதிசய விண் கற்கள்
கணக்கில் அடங்கா வட்டப் பாதையில் வலம்வரும்
கற்பனை மனிதர்கள் காலங் காலமாய் கதைகளில்
கருப்பு ஓட்டை பாலின் பாதை என்று
கண்ணுக்குத் தெரியா பலவித மாய வலைகள்
சிறுபுள்ளி பூமியின் உருவமாய் காணாமல் போகுது
சிந்தனைக் கெட்டாத. அதிசய ஆளுமைகள் பலவும்
விண்வெளிக் கப்பலில் விந்தை மனிதர்கள் என்பதும்
கண்டதாய் சிலரும் கற்பனை என்பதாய் சிலரும்
புரியாத புதிராக அறிவுக்கு எட்டாத அதிசயமாய்
விரிந்து பரந்து சூன்யம் போன்றே தோற்றம்

ஆட்டு மந்தை

 குள்ள நரிக் கூட்டம் ஒன்று ஆட்டம் போடுது

கள்ள மனம் கொண்டே பாடம் சொல்லப் பாக்குது
வெள்ளை உள்ளம் எனச் சொல்லி ஏமாற்ற
நினைக்குது
கொள்ளை அடிக்க கும்பல் ஒன்றை கொண்டு சேக்குது
உறவாடி குடி கெடுக்க விவாதம் செய்து ஏய்க்குது
உதவாத செயல்களை உயரத் தூக்கி உன்னதம் என்றது
பசுத் தோல் போர்த்திய புலியிது போலி ஆனது
பக்கத்தில் போனாலே தெரியும் கானல் நீர் என்று
எத்தனை காலம் தான் ஏமாற்றி வாழும் இது
பித்தளை தான் தங்கம் அல்ல தெரிந்தே போகுமே
ஆட்டு மந்தை ஒன்று புலியோடு சேர்ந்து போகுது.
ஆகாரம் ஆவது தாமென தெரியாம கூட்டம் போடுது

வாழ்வு தொடரும் புதினம்

 ஒவ்வொரு பார்வை ஒரு கதை சொல்லும்

ஒன்றல்ல ஓர் ஆயிரம் கதைகள் உண்டு
சொல்ல மறைத்த கதை மறந்த கதை
சொந்தம் ஆன கதை சோகக் கதை
எத்தனை நினைவுகள் ஆழப் புதைந்தே இருப்பது
நித்தம் அசை போட சிலவும் உண்டு
மனமே சேமிக்கும் கிடங்கு ஒன்று பலவாய்
மறுபடி பிறவாமலே மறைந்து போவது உண்டு
இனிக்கும் சிலவும் இன்னலாய் சிலவும் அதிலே
இன்றோ நேற்றோ அல்ல காலம் கடந்தே
புதையல் என்றே புதைந்து உள்ளே உறைந்தே
திக்கு முக்காடி வெளி வரும் சிலநேரம்
திசைகள் வெவ்வேறாய் பிரிந்து சிதறிப் போகும்
மர்ம முடிச்சாய் விடை காணாமலே மறையும்
கர்ம வினை யென கடந்தும் செல்லும்
புதிரே வாழ்வு தொடரும் புதினம் போன்றே

வாழக் கற்றுக் கொள்

 நடிகரைத் திரையில் கண்டு கொண்டாடு

நகைத்து ரசித்து சிரித்து மகிழ்
வெறி கொண்ட மனிதனாய் ஏனோ
தறி கட்டுத் திரியாதே இளைஞா
காசுக்காய் அவனும் மகிழ்வுக்காய் நீயும்
காட்சியை காட்சியாகப் பார்த்து கொண்டாடு
கடவுள் அவனில்லை கற்பூரம் ஏற்ற
கடந்து போகும் இவை யாவும்
உயிர் கொடுக்க உன்னதங்கள் உண்டு
மயிர் நீங்க கவரிமான் இறக்கும்
வாழக் கற்றுக் கொள் நண்பா
வாடிப் போனது உனது குடும்பம்
வருவாயா மீண்டும் உயிரோடு சொல்
திரையில் மாய பிம்பம் மட்டுமே
விரைவில் திருந்து விடியல் வரும்
சாதிக்க பலவுண்டு சரித்திரம் படை
பித்தம் தெளிந்து தரைமீது நட
நித்தம் வரும் போகும் சினிமா
நின்னுயிர் போனது திரும்ப வருமா ?