வெள்ளி, 24 மார்ச், 2023

வருவாயா நாளை

 கொற்றவன் இங்கிருக்க கொற்றவை நீயெங்கே

உற்றவன் நானிருக்க ஊர்விட்டுப் போனாயோ
கற்றவன் சபையிருக்க துறந்தவள் எங்கேயோ
நற்றமிழ் பாடல்கள் நான்பாடி நின்றேனே
பெற்றவள் சொல்லியது மறந்தனை என்பதோ
சொற்றொடர் பலவுண்டு சோதனை செய்தாயோ
பற்றது துறந்து பறந்தே சென்றாயோ
முற்றும் துறந்த முனிவன் நானல்லன்
சற்றும் சிந்தியாத செயலாய் ஆனதுவே
முற்றம் அமர்ந்தே நிலவைக் கேட்டேன்
சீற்றம் கொண்ட கடலலையைக் கேட்டேன்
வற்றும் மனதாய் வறண் டு போனதுவே
பற்றிப் படர கொம்பைத் தேடியே
சுற்றியே தழுவிட எதனை நாடுவேன்
காற்றாடி போலாகி் காற்றில் அலையவோ
மேற்திசை கீழ்திசை எத்திசை தேடிடவோ
குற்றம் புரிந்தேனா தண்டனை அதற்கோ
மற்றவை காரணம் எதுவும் உண்டோ
வருவாயா நாளை வாசலில் காத்திருப்பேன்
வளையோசை கேட்டே வாரி அணைப்பேன்

கருத்துகள் இல்லை: