வெள்ளி, 24 மார்ச், 2023

பயணங்கள்

 இயற்கையோடு ஒன்றியிருப்பது மனதுக்கு இதமானது. காலிலே சக்கரம் கட்டியவன், உலகம் சுற்றும் வாலிபன் என்றெல்லாம் பட்டப் பெயரும், கண்ணு படப் போகுதய்யா என்று சில நண்பர்கள் கூறினாலும், வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு இது ஒரு முழு நேரத் தொழிலாகவே மாறிவிட்டது.

தனியனாக, நண்பர்களுடன், உறவினர்களுடன் என ஏதாவது சந்தர்ப்பங்கள் வந்த வண்ணமே உள்ளன. 2022 முடியும் தருவாயில் திரும்பிப் பார்க்கிறேன். இயற்கைச் சுற்றுலாக்களே மிக அதிகம் இவ்வாண்டில்.
ஆண்டின் தொடக்கம் ஜனவரி மாதம் நாமக்கல் மற்றும் திருச்சியில் உள்ள ஆலய தரிசனத்தில் தொடங்கியது உறவினரோடு. பிப்ரவரியில் கண்டிகொட்டா என்ற இந்திய Canyon, பீலம் குகைகள், காணிப்பாக்கம், திருவண்ணாமலை என்று நண்பர்களுடன் உலா. இயற்கை அழகு பொங்கும் பென்னார் நதியும் அதையொட்டிய மலைக் குன்றும், பூமிக்கடியில் பல கிமீ செல்லும் பீலம் குகைகளும் வியப்பூட்டின.
ஜூன் மாதத்தில் அருகேயுள்ள இந்திராகாந்தி பூங்காவும், எதிரேயுள்ள பிளானடோரியமும், சொந்த ஊர் கங்கை அம்மன் திருவிழாவும். ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் பூனாவைச் சுற்றி உள்ள மலைப் பிரதேசங்கள், கடற்கரைகள் தனியொருவனாக. இயற்கையோடு பயணித்த மிக நீண்ட பயனமாக இது அமைந்தது. பூனாவை மையமாகக் கொண்டு, மழைக் கால பயணமாக மனதைக் கொள்ளை கொண்ட நாட்கள்.
குல தெய்வ வழிபாட்டிற்கு உறவினரோடு கிராமத்துப் பயணம். பசுமை வயல்கள், மலைக் குன்றுகள், ஏரியென பலவும் ஆகஸ்டு மாதத்திலேயே.
ஆகஸ்டு இறுதியில் கல்லூரி நண்பர்களுடன் கன்யாகுமரியும் அதைச் சுற்றியுள்ள இடங்களும் இயற்கையும் இறைவனும் வழிபட.
செப்டம்பரில் வால்பாறை மூன்றாம் முறையாக, மழைக் கால பசுமை, ஆர்ப்பரிக்கும் நீர் அலை ஓசையோடு பால்ய நண்பர்களுடன், குழந்தைகளாக மாறி. இடையே செப்டம்பர் 25ல் பிறந்த நாள் கொண்டாட்டம் உறவினரோடு.
வார இறுதி நாட்களில் வறுமையில் வாடும் புலம்பெயர்ந்த குழந்தைகளுக்கு கல்வியின் ஊக்கப் பயிற்சி, மழலைகளுக்குப் போதித்தல். நவம்பரில் ஒரு நீண்ட பயணம் நணபரோடும் உறவினரோடும். திருவண்ணாமலை, சாத்தனூர், பணமலை, செஞ்சி, பாண்டிச் சேரி, கங்கை கொண்டசோழபுரம், வடலூர் என சரித்திரப் புகழ் பெற்ற தலங் களுக்கு.
டிசம்பரில் மீண்டும் பயணம் திருமண நிகழ்வும், ஆலய தரிசனமும், இயற்கைச. சுற்றுலாவும், நாகர் கோவில், கன்யாகுமரி, திருச்செந்தூர், திருநெல்வேலி, குற்றாலம், பாபநாசம் என. சென்னையில் கல்லூரி நணபர்களுடன் உணவருந்தி மகிழ்ந்து, திருமண வரவேற்பில் இளமைக் கால நண்பர்கள் சந்திப்பு, காலை மெரினா கடற்கரை நடைப் பயிற்சி என பலவும்.
நாட்கள் தான் எத்தனை வேகம். ஓர் ஆண்டே முடியும் நாட்களை நோக்கி வேகமாக. வயதும் அதே வேகத்தில் 66 வயது இளமையைக் கடந்து. பயணங்கள் மட்டும் தொடர்ந்தே பயணிக்கும், உடலோடும், உணர்வோடும், உயிரோடும்.

கருத்துகள் இல்லை: