திங்கள், 15 ஏப்ரல், 2024

உரிமை உமதே

 ஊருக்கு நல்லதே செய்ய வந்த தலைவன் எங்கே

போருக்குப் போனாலும் புறமுதுகு காணாத தலைவன் எங்கே
பாருக்கே தலைமை என்ற வீரர்கள் வாழ்வது எங்கே
போராடிப் பெற்ற சுதந்திரம் நசிந்திடுமோ என்பதேன்
ஊர்கூடித் தேர்வது நல்லதொரு தலைவன் உண்மை தானே
உறவாடிக் களவாடி உண்மை மறைத்த கயவன் வரலாமோ
உன்மத்தம் ஆணவம் இறுமாப்பு தலைக்கனம் கொண்டவர் உயர்வதோ
உன்புத்தி தீட்டு உத்தமர் தேடி வாக்கைப் பதிவிடு
இம்முறை தோற்பின் காலனின் சுவடுகள் நாட்டினில் நடமாடும்
நம்மைத் தேற்றிட நாதியற்றுப் போவோம் உண்மை வாக்கிது
சிந்திக்க நேரம் சிறிதே உண்டு உரிமை உமதே
நந்திகள் விலகி நர்த்தகன் நடனம் கண்டு களிக்க !

மனித மனம்

 கரை தொடும் கடல் அலை

நுரை தந்து போகுது பார்
கரை தொடும் நதி நீரும்
கறை கழுவி செல்வது பார்
மலை தழுவும் மேகக் கூட்டம்
மழை நீரைத் தருவது பார்
இலை தழுவும் இனிய காற்று
இடை நுழைந்து குளிருது பார்
இருள் போக்கும் கதிரோன் கிரண்
இலைப் பசுமை தருவது பார்
காசுக்கு செய்வது இல்லை காண்
கடமை எனக் கொள்வது பார்
மனித மனம் மட்டும் இங்கே
புனிதம் இழந்து போவது ஏன் ?

இமாசலப் பிரதேசம் நாள் ஒன்பது, பத்து ( 19/3/24, 20/3/24)

 இமாசலப் பிரதேசம்

நாள் ஒன்பது, பத்து ( 19/3/24, 20/3/24)
காலை எட்டரை மணிக்குக் காலையுணவை முடித்து, இமாசலப் பிரதேசத்திற்கும், டல்ஹவுசிக்கும் டாட்டா சொல்லிவிட்டுக் கிளம்பி, 340 கிமீ பயணத்தைத் தொடங்கிய போது எட்டு , ஒன்பது மணி நேரத்தில் சண்டிகரை அடையலாம் என கூகுள் சொன்னது, மலைப்பாதையை விரைவில் கடந்து தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் தொடர்ந்தது. மதிய உணவுக்கு, வழக்கம் போல, சுமாரான ஓட்டல் ஒன்றில் நமது சாரதி நிறுத்த, வட இந்திய சாப்பாடு ஆர்டர் செய்து சாப்பிட்டு, சண்டிகரை நோக்கி பயணம் மீண்டும். இதற்கிடையில், ஏற்கனவே புக் செய்த ஓட்டல் booking.com கன்ஃபர்ம் பண்ணிய ரேட் தவறானது என்றும், மேலும் ஆயிரம் ரூபாய் வரை ஆகும், ஃபைவ் ஸ்டார் போன்ற ரெசார்ட் என ஏதோ கதைகள் சொன்னார். அதைக் கேன்சல் செய்து வேறொரு ஓட்டல் புக் செய்து, சண்டிகரை அடைந்த போது மணி் ஐந்தை நெருங்கி இருந்தது.
ஓட்டல் அறை பழையதாய், சுமார் மூஞ்சி குமார் போல இருந்தது. சிறிது நேர ஓய்வுக்குப் பின், சுற்றிப் பார்க்க நடக்க ஆரம்பித்த போது Sector 17B என்பது பேங்க்ஸ் மட்டுமே உள்ள பகுதி என அறிந்தேன். மற்றொரு பகுதிக்குச் சென்ற போது வெறும் அழகு நிலையங்கள் மட்டுமே. நகரம் நன்று திட்டமிடப்பட்டு நிர்மாணிக்கப் பட்டுள்ளது. மிக அகலமான சாலைகள், நடை பாதைகள், பார்க்கிங் இடங்கள், சாலையோர மரங்கள் என மற்ற இந்திய நகரங்களிலிருந்து மாறுபட்டு இருந்தது. ஓட்டல் எதுவும் கண்ணில் படாததால் அறைக்கே திரும்பி, இரவு உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டு, உறங்கிய போது, மறுநாள் காலை ஒன்பது மணிக்கு அறையைக் காலி செய்து, லோகல் சைட் சீயிங் முடித்து நேராக ஏர்போர்ட் செல்ல முடிவானது. இந்த ஒரு நாளுக்கு தனியான கட்டணம் நமது சாரதிக்குக் கொடுக்க ஏற்கனவே பேசி முடிவெடுக்கப் பட்டிருந்தது.
முதலில் சென்ற இடம் சுக்னா ஏரி, மிகப் பெரியதாய் அழகாய் இருந்தது. காலையுணவு அங்கே முடித்து, Luxury boat rideku டிக்கெட் வாங்கி, அரை மணி நேரப் பயணம் ஏரியில். ஏரிப்பாதையில் சிறிது நடை, ஓய்வுக்குப் பிறகு அருகில் இருந்த Rock Gardenkuப் பயணம். அனுமதிச் சீட்டு வாங்கி உள்ளே நுழைந்த போது 1978 ல் கல்லூரிச் சுற்றுலா வந்த போது இங்கே வந்திருந்த பழைய நினைவு வந்தது. இதன் சிறப்பே பல இடங்களில் இருந்து உடைந்த பொருட்களை வைத்து, பல உருவங் களாகவும், கட்டிடங்களாகவும் ( வளையல்கள், எலெக்டிரிகள் பீங்கான் பொருட்கள், டைல்ஸ், பழந்துணிகள் எள பலவும்) மாற்றி இருந்தார் தனி ஆர்வலர் ஒருவர். மிகப் பெரியதான வளைந்து, நெளிந்து, படிகளில் ஏறி, செயற்கை அருவிகளைப் பார்த்து முடிக்க, கால்கள் வலியெடுத்து, வெயிலின் தாக்கத்தில், வியர்த்து, வெளியே வந்து, புறப்பட்டு ஏர்போர்ட் ஒன்றரை மணிக்கே அடைந்தாயிற்று. சாரதிக்கு விடை கொடுத்து,செக் இன் செய்து, பாதுகாப்புச் சோதனை முடித்து, மதிய உணவும் சாப்பிட்டு, மொபைல் சார்ஜ் போட்டு உட்கார்ந்த போது நடந்த நிகழ்வை தனியாக, பதிவிட்டுள்ளேன். பத்து நாள் பயணம் முடிந்து, பெங்களூருவை அடைந்து, வீடு சேர்ந்த போது மணி ஒன்பதை நெருங்கி இருந்தது.
வெகு நாட்கள் கனவாய் இருந்த பயணம் இனிதே நிறைவேறிய மகிழ்ச்சி், வெவ்வேறு அனுபவங்கள் இவற்றை மனதில் இருத்தி அசதியில் உறக்கம் ஆட் கொண்டது. இயற்கையோடு ஒன்றிய பயணங்கள் மனதில் ஓர் அமைதியை நிலை நாட்டுகிறது
(முற்றும் )

ஊதா கலர் அழகி

 ஊதா கலர் அழகி

சண்டிகர் விமான நிலையம், பாதுகாப்பு சோதனை முடித்து, ரெஸ்டாரண்டில், மதிய உணவு முடித்து, கேட் எண் மூன்றை அடைந்து, மொபைலில் சார்ஜ் நாற்பதை நெருங்கிய தால், சார்ஜில் போட்டு அதனருகில் உள்ள இருக்கையில், அமர்ந்து வேடிக்கை பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன். கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. பிற்பகல் இரண்டரைக்கு மேல் பல விமானங்களின் தரையிறங்குதல், புறப்பாடு நடை பெற்றுக் கொண்டிருந்தது.
நடுத்தர வயதுப் பெண்மணி வேக வேகமாக வந்து, தனது மொபைலைச் சார்ஜ் போட்டு எனது பக்கத்து இருக்கையில் அமர்ந்தாள். முப்பது, முப்பத்தைந்து வயதிருக்கலாம். கொட்டைப்பாக்கு கொழும்பு வெத்தலைப் பாடலுக்கு நடனமாடிய குஷ்பூ போன்று அழகாய் இருந்தாள். வெளிர்நீல புடவையும், கறுப்பு முக்கால் கை பிளவுஸூம், மேட்சிங்காக கறுப்பு ஷூ, கறுப்பு, கோல்ட் கலந்த நெற்றிப் பொட்டு என வர்ணிக்கும் அளவுக்கு, ஃபேர் கலராகவும் இருந்தாள்.
சார்ஜ் போடுவது ஐந்தே நிமிடத்தில் எல்லாவற்றையும் தனது கைப்பையில் போட்டு எடுத்துக் கொண்டு கேட் நான்கு வரை சென்று, யாருக்கோ காத்திருப்பது போன்ற நிலையற்ற பதட்டம் அவள் முகத்தில்.்நான்கைந்து முறை இது தொடர்ந்தது. பலரது பார்வையும் அவள் மேலேயே, அவளது நடவடிக்கை அவ்வாறு, புடவையை அடிக்கடி சரி செய்ததில் இருந்து, புடவை அடிக்கடி கட்டாத பெண்ணாக இருக்க வேண்டும் என எண்ணிக் கொண்டேன். பதட்டத்தின் காரணம் கேட்கலாமா எனத் தோன்றினா
லும், கேட்கத் தயங்கி அவளது நடவடிக்கைகளை கவனித்தவாறு இருந்தேன்.
ஐந்தாவது முறையும் , சார்ஜ் போட்டுவிட்டு, எனது பக்கத்து இருக்கையில் அதே பதட்டத்தோடு அமர்ந்திருந்தாள். அவளே என்னிடம் பேச்சு கொடுத்தாள் இப்போது. ஆங்கில உரையாடல். நீங்கள் பெங்களூர் போகிறீர்களா என்றாள். ஆமாம் என்றேன். Vistara விமானத்திலா என்றாள். நான் மிக அமைதியாக இருந்த்து அவளுக்கு வியப்பாய் இருந்திருக்க வேண்டும். இல்லை நான் இண்டிகோ நான்கரை மணி விமானம் என்றேன். யாருக்காவது காத்திருக்கிறீர்களா எனக் கேட்டதற்கு இல்லை Vistara அரை மணி நேரம் தாமதம் என்றும், பெங்களூருவில் ஏழு மணிக்கு Conference என்றும் சொன்னாள். மணி மூன்றை நெருங்கி இருந்தது. எங்கே எனக் கேட்டதற்கு பெல்லந்தூர் என்றாள். ஏழு மணிக்கு நீங்கள் அங்கே அடைவது சாத்தியமே இல்லை எனச் சொன்னதும் நீங்கள் பெங்களூரா என்றாள், நான் ஆமென்று கூறி, பெங்களூருவின் மாலை நேர டிராபிக்கில், குறைந்தது ஒன்றரை மணி நேரம் அவுட்டர் ரிங் ரோடில் ஆகும் எனச் சொன்னேன். விஸ்டாரா விமானம் ஒன்று தரையிறங்கியதைக் காண்பித்து, இது உங்களது விமானமாக இருக்கலாம் என்றேன். அவளது பதட்டம் என்னுடன் பேசிய போது குறைந்திருந்ததாகத் தோன்றியது.
மீண்டும் அனைத்தையும் கைப்பையில் போட்டு, இருக்கையிலிருந்து எழுந்து,Happy Journey என்றபடி புறப்படத் தயாரானவளிடம், Same to you என்றேன். All the best to your Conference என்று சொல்லி முறுவலித்தேன், அவள் புன்னகைத்தபடி, நன்றி எனச் சொல்லி, கேட் நான்கு நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

கற்பனை கிராமம்

 அழகான வண்ண மலர்கள் சாலையோரங்களில்

பழகும் கிளிகள் கொஞ்சும் மரக்கிளைகள்
என்றோ காணாமல் போன குருவியின் கீச்சுக் குரல்
கன்றோடு பசுவும் கட்டு்ண்ட கொட்டகை நாற்றம்
கலப்பை சேற்றில் சிக்காமல் உழுகின்ற உழவன்
களத்து மேட்டிலே நெற்கதிர்கள் உலர்த்தும் மனையாள்
கிணற்றில் குதித்து கோட்டை கட்டும் சிறுவர்
சாணத்தை தெளித்து கோலத்தை வரையும. பெண்டிர்
ஆட்டு மந்தையுடன் காட்டுக்குச் செல்லும் சிறுமி
பாட்டுக் கேட்டு தேனீர் அருந்தும் பெரியவர்
சேட்டுப் பயல் பனங்காய் பறிக்க உயரே
வேட்டுச் சத்தம் தொலைதூரக் கிணறு ஒன்றில்
வேகவைத்த நெல்லின் வாசம் காற்றோடு கலந்து
கதிரவன் வரவுக்கு கட்டியம் கூறிய கிராமம்
கண்முன்னே நிழலாட கற்பனை விரிந்து மலர்ந்தது

இமாசலப் பிரதேசம் நாள் ஏழு , எட்டு ( 17/03, 18/03/24)

 இமாசலப் பிரதேசம்

நாள் ஏழு , எட்டு ( 17/03, 18/03/24)
காலை ஒன்பதரைக்கு வழக்கம் போல் கிளம்பி, தர்மசாலா கிரிக்கெட் மைதானத்தை அடைந்த போது, உள்ளே போக அனுமதிச் சீட்டு கேட் 5 ல் கொடுப்பதாகக் கூறி, சுமார் ஒருமணி நேரம் கழித்தே கொடுக்க ஆரம்பித்தார்கள். ஞாயிற்றுக் கிழமையாதலால் மக்கள் கூட்டம் நிறையவே இருந்தது.
உள்ளே சென்ற போது வண்ண வண்ண இருக்கைகள், பசுமை போர்த்திய மைதானம், ரெட் கலரில் கட்டிடங்கள், பின்புறத்து மலைக் குன்றுகள் என மிக அழகாக இருந்தது. கூடிய விரைவில் IPL போட்டிகள் இங்கு தொடங்கப் படலாம். பச்சைப் புல்வெளி போர்த்தியதால் ஃபீல்டிங் செய்வது நன்றாக இருக்குமென எண்ணினேன். மைதானம் மற்ற இடங்களை விடச் சிறியது எனவே தோன்றியது.
அடுத்தது திபெத் கைவினைப் பொருட்களின் கடை வீதி. வெறும் கண் நோக்கு மட்டுமே. ஏன் விலையை உயர்த்தி வைத்து ஏமாற்றுகிறார்களோ தெரியவில்லை. சரியான இலாபம் வைத்து விற்றால் வியாபாரம் அதிகரிக்கலாம். வேர்க்கடலை கொரித்தபடி பார்வையிட்டுத் திரும்பி, டல்ஹவுசி நோக்கிப் பயணத்தைத் தொடங்கினோம். நான்கு மணி நேரப் பயணம். ஒரு மணி நேரத்தில் முப்பது கிமீக்கு மேல் கடக்க இயலவில்லை. முழுவதுமே மலைப் பாதை. ஸ்டேட் ஹைவே குறுகி், சாலைப் பழுது நடந்து கொண்டே இருந்தது. சிறிது தூரமே தேசிய நெடுஞ்சாலை. சாலைகள் வளைந்து வளைந்து, பல இடங்களில் ஒரு வாகனம் மட்டுமே போவதற்காள அகலம. மதிய உணவு முடித்து மீண்டும் பயனித்து, ஓட்டலை அடைந்த போது, ஐந்து்மணி. ஓய்வெடுத்து இரவு உணவை மூன்றாம் மாடியில் சாப்பிட்டு, அறைக்கு வந்து, வழக்கம் போல் பத்தரைக்கு உறங்கப் போயாயிற்று.
காலை உணவுண்ண மூன்றாவது மாடிக்குச் சென்ற போது, கதிரவன் ஒளி வெள்ளம் அதிகமாகவே இருந்தது. பார்க்க தூரத்து பச்சையும், மலை முகடுகளும் அழகாக. ஒன்பதரைக்கு கஜ்ஜியார் நோக்கிப் பயணம். வழி நெடுகிலும் பசுமையான பைன் மரக் காடுகள், மிகப் பிரசித்தி பெற்ற டல்ஹவுஸி பப்ளிக் பள்ளி, பனிப் பொழிவு நிறைந்த மலைகள் எனக் கண்களுக்கு இனிமையான காட்சிகள். சுமார் 24 கிமீ கடந்த பிறகு திடீரென கண்ணில் பட்டது, பசுமை போர்த்திய மிகப் பெரிய சமவெளிப் பிரதேசம். மினி சுவிட்சர்லாந்து என்ற பெயரோடு வரவேற்றது. சிறியதாய் நடுவே ஏரி ஒன்று. பனி உருகிய நீர் புல் வெளியில் ஊறி, கால்களை நனைத்தது, நடக்கும்போது. வட்ட வடிவத்தில் அழகாய், சுற்றிலும் பைன் மரக்காடுகள், குதிரை ஏற்றம் செய்வதற்கென சிமென்ட்டால் ஆன பாதை என மிக அழகாய் இருந்தது. ஒரு டூயட் பாட ஏற்ற இடம். பலர் ஜோடிகளாய்த் திரிந்தார்கள். தொப்பை குறைய வழி சொல்வதாக இளைஞர்கள் சிலர் பெட்டியுடன். ஒரு கூட்டம் கிரிக்கெட் ஆடிக் கொண்டு, பாராசூட்டை கயிற்றால் கட்டி மேலுயர்த்தி சிலர், புல்வெளியில் போஸ் கொடுக்கச் சொல்லி நிழற்படம் காமிராவில் எடுத்துக் கொடுக்க சிலர், கடைகளில் துரித உணவு சுடச் சுட தயாரித்துத் தந்தபடி சிலர் என மிகவும் சுறுசுறுப்பாய் இருந்தனர். ஒரு முழுச் சுற்று முடித்து, பிரட் ஆம்லெட் சூடாய் வயிற்றுக்குள் தள்ளி் தேநீர் அருந்தி, மீண்டும் டல்ஹவுசி நோக்கிப் பயணம். இடையில் இரண்டு இடங்களில் நிறுத்தி பள்ளத்தாக்கு ஒன்றையும், ஆர்மி பள்ளி அருகே இருந்த ஜீப், போர்க்கப்பல், விமானம் முதலானவற்றோடு் போட்டோ எடுத்து, நகரை அடைந்து கடை வீதியைச் சுற்றி வந்தபோது கால்கள் வலிக்க ஆரம்பித்தன.
ஒரு கடையில் பிரட் மற்றும் பிஷ் டிக்கா ஆர்டர் செய்து சாப்பிட்டு முடித்து, ஓட்டலை அடைந்தபோது, இமாசலப் பிரதேசத்து எட்டு நாட்கள் சுற்றுலா முடிவடைந்ததை உணர்ந்தேன். நாளை ஒரு நீண்ட பயணம், சண்டிகரை நோக்கி, 340 கிமீ தூரம். சுமார் ஒன்பது மணி நேரமாகலாம்.

இமாசலப் பிரதேசம் நாள் ஆறு ( 16/03/24)

 இமாசலப் பிரதேசம்

நாள் ஆறு ( 16/03/24)
காலை உணவுக்குப் பிறகு பயணம் தொடங்கியது. Para gliding பற்றிய பேச்சு நமது சாரதியுடன் வந்த போது நான் அவ்வளவாக விருப்பம் காட்டவில்லை. அவர் கில்லாடி, குலுவுக்கு சில கிமீ முன்னணி, தமது நண்பரிடம் சில நிமிட வேலை இருப்பதாகக் கூறி ஆற்றோரக் கடையில் நிறுத்தினார். வேடிக்கை பார்த்து நின்றிருந்த என்னிடம் அவரது நண்பர் பேசிப் பேசியே Para gliding ஆசையைத் தூண்டி சம்மதிக்க வைத்து விட்டார்.
அங்கிருந்த திறந்த ஜீப்பில் மலை உச்சிக்குப் பயணம், குலுக்கு மலை பயணம் போன்றே இருந்தது. கீழே விழாமலிருக்க கம்பியைப் பிடித்த கைகள் மிக வலிக்க ஆரம்பித்தன. என்னோடு அதே ஜீப்பில் பயணித்த இளஞ் சோடியில் இளைஞன் இளைஞியை அணைத்துக் கீழே விழாமல் பார்த்துக் கொண்டான். வழியில் பெரிய கிட் பேக் ( kit bag) சகிதமாக நபருக்கு ஒன்றாக பைலட்கள் எனப்படும் வழிநடத்துனர்கள் ஏறிக் கொண்டனர். உச்சி 8000 அடி உயரம். அப்போது தான் ஒரு பெண் தவறுதலாக டேக் ஆஃப் செய்து கீழே சரிந்திருந்தாள். நல்ல சகுனம்.
எல்லாமே துரித கதியி்ல் ஏனோ இவர்கள் செய்கிறார்கள். ஆபத்தான இப்பயணத்தை போதிய விளக்கத்தோடு நடத்த அதிகாரிகள் இக்குழுவினருக்கு வலியுறுத்த வேண்டும்
எனது உடலைச் சுற்றி பல கிளிப்கள், இருக்கை என இணைக்கப்பட்டன. பைலட்டும் என்னோடு இணைக்கப் பட்டார். அச்சரிவில் கால்களை மடக்காமல் ஓடி டேக் ஆஃப் செய்ய வேண்டுமெனச் சொல்லி, நான் தயாராவதற்குள், இருவர் என்னை சரிவில் ஓட வைத்தார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் வானத்தில் பறக்க ஆரம்பித்தேன். சரியாக உட்கார்ந்திருக்கவில்லை. நான் டென்ஷன் ஆனது விட பைலட் அதிக டென்ஷன் ஆகி, கத்திக் கொண்டிருந்தார். அவர் சொன்னது புரியவே பல நொடிகள் ஆனது. ஒரு வழியாக அவரது உதவியுடன், பின்னோக்கி நகர்ந்து, சரியாக உட்காரவே சில நிமிடங்கள் ஆனது. என் வலது கையில் கோ புரோ எனும் கைப்பிடியுடன் கூடிய கேமரா வேறு, கைகளை வலிக்கச் செய்தது. பைலட் அவ்வப்போது அட்ஜஸ்ட் செய்தார். இந்த வீடியோவுக்கு தனிக் கட்டணம்.
முகத்தில் சிரிப்புடன் ஒரு வழியாக பறந்து கொண்டிருக்கிறோம் என்ற மகிழ்ச்சியில் சில உரையாடல்களைப் பதிவு செய்து கொண்டே, பைலட் காலை உயர்த்தி வைக்க வேண்டும் தரையைத் தொடும் போது என லேண்டிங் முறையைத் தெரிவித்தார். மெது மெதுவாக பறவை போல் வட்டமடித்து, ஸ்டண்ட் எதுவும் வேண்டாமெனக் கூறி, கீழே பெரிய இறங்கு தளமொன்றில் விமானம் போன்றே இறங்கிய போது, எல்லாம் இனிதே நிறைவேறிய மகிழ்வு மனதில். வீடியோ காப்பியை மொபைலில் பதிவிறக்கம் செய்து கொண்டு, மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்தாயிற்று. கீழே ஆற்றுப் படுகையில் இறங்கி, போட்டோ எடுத்த பிறகு பயணம் 160 கிமீ மேல் எனக் காட்டியது. நமது காரோட்டி சொன்னார், சில மாதங்களுக்கு முன்பு, ஒரு இளம்பெண் மேலிருந்து விழுந்து இறந்து விட்டாள் எனவும், அவளுடன் வந்த பைலட் லைசென்ஸ் இல்லாத இளைஞன் என்றும், அதனால் சில நாட்கள் Para gliding நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது எனவும் தகவல் சொன்னார்.
பயணம் முழுவதும் மலைப் பாதைகளிலேயே. மண்டி வரை் சிம்லாவிலிருந்து போன் அதே சாலை, மூன்று குகைப் பாதைகள், ஒற்றை சாலை வெட்டப்பட்ட பாறைகள் ஒரு புறம், வெகு ஆழத்தில் ஆற்று நீரோட்டம் என பயணம் தொடர்ந்தது. 16 deg C வெயில் சுட்டது உடலை. மதிய உணவு, டீ வழியில் அருந்தி , மலை ஏற்ற வழியில் அமைந்த ஓட்டலை அடைந்த போது, உயரம் குறைவான தர்மசாலா 13 deg C வெப்பம் காட்டியது. அறையை அடைந்த போது இருட்டியிருந்தது. தூரத்தே பனி மூடிய மலைகள், நகர ஒளிக் கீற்றுகள், சமீபத்தில் நடந்து முடிந்த கிரிக்கெட் மைதான சிவப்பு விளக்கு என அழகான காட்சிகள். நண்பர்களுடன் மொபைல் அரட்டை, இரவு உணவோடு இன்றைய நாள் நிறைவுற்றது.

இமாசலப் பிரதேசம் நாள் ஐந்து ( 15/03/24)

 இமாசலப் பிரதேசம்

நாள் ஐந்து ( 15/03/24)
இங்கு வந்த நாள் முதலே, கதிரவன் பகல் வேளைகளில் தன் முழுச் சக்தியையும், இம்மலைப் பகுதிக்கு வழங்கிக் கொண்டிருக்கிறான், குளிருக்கு இதமாக. வெளியே 2 deg C என்று அலைபேசி சொல்கிறது. முன்னர் பயந்தவாறு மைனஸ் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை.
இன்றைய முதல் பயணம் இடும்பாதேவி கோயில். மகாபாரதத்தில் பீமனின் மனைவியும், கடோத்கஜனின் அன்னையும் நினைவு கூறப் பட்டு மரத்தினால் கட்டப்பட்டுள்ள இக்கோயில் பழமையாய், பைன் மரக் காட்டுக்கு நடுவே அழகாக அமைந்திருந்தது. அருகிலேயே மகன் கடோத்கஜனுக்கும் கோயில் மரத்தடியில் காணப்பட்டது. மதங்கள் எத்தனையானாலும், கடவுளர் எண்ணற்றவர் ஆனாலும், இருந்தனரா இல்லையா என்ற விவாதத்திற்கு அப்பாற்பட்டு, மனிதரை நல்வழிப்படுத்தவே என்று கொள்ளலாம்.
அடுத்து வசிஷ்ட முனிவரின் ஆலயம், சிவன் மற்றும் இராமரின் ஆலயங்களில் வழிபாடு. சுமார் 500 மீ மலையேற்றப் பாதையில் நடந்து மூச்சு வாங்கி, தேநீர்அருந்தி, திரும்பிய போது, ஜோக்னி என்ற அருவி அருகில் உள்ளது, கரடு முரடான ஒரு கிமீ பாதை என்று கூகுள் சொன்னதால், காருக்குத் திரும்பி இப்போது மணாலி நகரில் உள்ள வன விகார் என்ற மிகப் பெரிய பைன் மரக்காடு, பார்வையிட, அனுமதிச் சீட்டு பெற்று உள்ளே நுழைந்த போது, இளசுகளின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. இளஞ்சோடிகள் விதம் விதமாக போட்டோக்கள் கிளிக்கினர். அங்கிருந்த மரப் பெஞ்சில் உட்கார்ந்து சாம் மற்றும் அசோக் இவர்களோடு வீடியோ காலில் அரட்டை அடித்து சில மணித்துளிகள் போனது. ஆட்டுக் குட்டி ஒன்று அழகாய் இருந்ததால் இருபது ரூபாய் கொடுத்து அதனுடன் படமெடுத்தது வாய்நிறைய பல்லாகத் தோன்றியது.
வனத்தை விட்டு வெளியேறி எதிரே சிலநூறு மீட்டர்களில் உள்ள புத்தக் கோயிலுக்குப் போனபோது கால்கள் அழுதன, பாடாய்ப் படுத்துகிறாயே என்று. உள்ளே சென்று புத்தரை வணங்கி, சிறிய நன்கொடையும் கொடுத்து, வெளியே வந்து பெஞ்சில் அமர்ந்த போது, எதிரே பனி மூடிய மலைகள் அழகாய்த் தோன்றின.
முன்னதாக இங்குள்ள கிளப் ஹவுஸில் சென்று, சில பரிசுப் பொருட்கள் விலை பேசி வாங்கிய போது, பலவித கைவினைப் பொருட்களைக் காண நேர்ந்தது. மதிய உணவை முடித்து நான்கு மணிக்கே அறைக்குத் திரும்பி, நாளைக் காலையில் தர்மசாலாவுக்குப் பயணிக்க அனைத்து துணிகளையும் அடுக்கி வைத்து, சன்னல் வழியாக, சிறுவர்கள் ஆடிக் கொண்டிருந்த கிரிக்கெட்டை வேடிக்கை பார்த்து பொழுது போனது.

இமாசலப் பிரதேசம் நாள் மூன்று & நான்கு ( 13/3, 14/3/24)

 இமாசலப் பிரதேசம்

நாள் மூன்று & நான்கு ( 13/3, 14/3/24)
காலை எட்டே காலுக்கு திட்டமிட்ட படி, ஓட்டலை விட்டுக் கிளம்பி NH 205 ல் மணாலி நோக்கிப் பயணம். 254 கிமீ சுமார் ஆறு மணி நேரம் ஆகலாம் என நமது சாரதி சொல்ல கார் மலைப் பாதைகளில் வளைந்து வளைந்து சென்றபடி இருந்தது. காலை ஒன்பதரைக்கு காலையுணவு முடித்து மீண்டும் பயணம் தொடர்ந்தது. சில இடங்களில் ஹைவே, சில இடங்களில் குறுகிய சாலை என்று பியாஸ் (Beas) நதியும் நம்மோடு 200 கிமீம் தொடர்ந்தது. இதுவரை பார்த்த ஆறுகளில் வேறுவிதமாகத் தோன்றியது. நீரோட்டம் குறுகி இருந்தது. ஜூலை 15 முதல் செப்டம்பர் 15 வரை மழைக்காலம் என்றார் நமது காரோட்டி. போன வருட மழை வெள்ளத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வீடுகளும், நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள், லாரிகள் அடித்துச் செல்லப்பட்டன என்ற தகவலும் சொன்னார். மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சிம்லாவில் இருந்து மணாலிக்கு, டூரிஸ்டுகளை அழைத்து வருவதாகக் கூறினார்.
வழி நெடுகிலும் சாலைப் பழுது, மாற்று வழி, மலைச் சரிவு என வெவ்வேறு காட்சிகள். பியாஸ் நதி பெரிய பாறைக் கற்களால் முழுவதுமாய் நிறைந்திருந்தது. இலட்சக் கணக்கான பாறைகளே ஆற்று ஓட்டத்தின் நெடுகிலும் மணல் இல்லை.
பல மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, குல்லுவை அடைந்த போது, பேரா கிளைடிங் காற்று வேகம் அதிகம் காரணமாக நிறுத்தப் பட்டுள்ளதாக, அங்கிருந்தவர் கூறினார். பாறைகள் நிறைந்த ஆற்றில் Rafting போக எனக்கு விருப்பமில்லை.
மதிய உணவுக்கு மூன்றரை மணியளவில் , மணாலிக்கு அருகில், நிறுத்தி, ஓட்டலை அடைந்த போது ஐந்துக்கு மேலாகி இருந்தது. கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரப் பயணம். செக் இன் செய்து, ஓய்வெடுத்து, இரவு உணவும் முடித்து உறங்கச் சென்ற போது மணி பதினொன்று.
இட மாற்றம், காரமான மதிய உணவு காரணமாக, உறக்கம் சரியாக இல்லையென்றே சொல்ல வேண்டும். அறை வசதியாக , ஹீட்டரின் துணையோடு கத கதப்பாகவே இருந்தது. காலை ஒன்பதரைக்குக் கிளம்பிய போது, மிகப்பிரகாசமான கதிரவன் ஒளி பனிமூடிய மலைகளின் உச்சியை வெள்ளித் தகடாக பளபளக்க வைத்தது.
பதினெட்டு கிமீ தூரத்தில் உள்ள சோலாங் பள்ளத்தாக்கை நோக்கிப் பயணித்த போது பனிமூடிய மலைகள் மட்டுமல்ல, வீடுகள், கார்கள், சாலைகள் என அழகிய தோற்றம். சீசன் அடுத்த மாதம் முதலே ஆனால் மக்கள் கூட்டம் அதிகமானதால், கார்கள் நிறுத்தப் பட்டு தாமதமாக அனுப்பப் பட்டன. பனி விளையாட்டுகளில் கலந்து கொள்ள ஏற்ற உடையும், ஷூவும், அட்வென்சர் விளையாட் டுகள் என ரேட்டைப் பேசி, கைடு சகிதமாக உச்சி நோக்கிப் பயணித்து இறக்கி விடப்பட்ட இடம் பனி முழுவதுமாக மூடிய மலைப் பிரதேசம்.
முதல் ரைட் ( Ride) பைக்கில், முதலில் தார்ச்சாலையில் ஓட்டிய பிறகு பனிப் பாதையில் ஓட்டச் சொல்லி உடன் வந்து வழி நடத்தினார், பைக் ஓட்டுனர். வீடியோ, போட்டோக்கள் தொடக் கம். அடுத்து ரப்பர் டியூப்பில் உட்காரந்து சறுக்கல். மூன்றாவதாக நான் தேர்ந்தெடுத்த ஸ்கீயிங் (skiing), முதலில் அதற்கான காலணியுடன் கூடிய பலகை அணிந்து, இரு புறமும், பனியில் ஊன்றி உந்திச் செல்ல ஊன்றுகோல் என பயிற்சி ஆரம்பித்தது. சற்றே நிலை தடுமாறி பனியில் விழுந்த போது சிரிப்பே வந்தது. ஆண், பெண்ணென விழுந்து எழுந்தனர்.மீண்டும் மீண்டும் சறுக்கி முயன்று ஓரளவுக்கு தானாக போக முடிந்த போது, வீடியோ எடுக்க ஆரம்பித்தார் கைட். டயர்ட் ஆகும் வரை விளையாடி, ஓய்வெடுக்க உட்கார்ந்த போது பிரட் ஆம்லெட், பேல் , டீ என மதிய உணவு அங்கேயே முடிந்தது. புறப்படலாம் என முடிவடுத்து, டிரைவருக்குப் போன் செய்த போது,
பார்க்கிங்கிலிருந்து வருவதற்கே, ஒன்றரை மணி நேரமாயிற்று. கார்கள், டெம்போ டிராவலர் என மக்கள் வந்த வண்ணமும், போன வண்ணமும் இருந்தனர். சாலை குறுகி இருப்பதால் போக்குவரத்து தாமதம் ஆனது. அரசு ஆவன செய்தால் நலம். இன்றைய சுற்றுலா இத்துடன் முடிவுற்றதால் ஓட்டலுக்குத் திரும்பி, சிக்கன் சூப் ஆர்டர் செய்து, அறையின் கண்ணாடி சன்னல் வழியாக, பனிமலைகளைப் பார்த்தபடி இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கியாயிற்று.

இமாசலப் பிரதேசம் நாள் இரண்டு (12/03/24)

 இமாசலப் பிரதேசம்

நாள் இரண்டு (12/03/24)
குளிரில் நடுங்கி, ஹீட்டர் வைத்தும் குளிர் குறையாத இரவில் தூங்கி, வழக்கம் போன்று ஆறரைக்கு உறக்கம் கலைந்தது. வெளியே பார்த்த போது கதிரவன் மெல்ல மேலேறி வந்து கொண்டிருந்தான். படுக்கையிலே முதல் நாள் தொடர் முடித்த போது மணி ஒன்பது நெருங்கியிருந்தது. குளியலுக்குப் பிறகு காலையுணவு சாப்பிட 9 45 ஆகி விட்டது. சுமாரான உப்புமாவும், ஆலு பரோட்டாவும், காப்பியும் உள்ளே தள்ளி, சந்தன் வந்தவுடன் சுமார் 20 கிமீ தூரத்தில் உள்ள குஃப்ரிக்குப் பயணம்.
அவ்விடத்தை அடைவதற்கு முன்பே இப்போது பனிப் பொழிவு இல்லையென்றார் நமது சாரதி.
மலை உச்சி அடைய நமது குலுக்கு மலை ஜீப் சவாரியை நினைவு படுத்திக் கொள்ளுங்கள். அதை விட மோசமான சகதி நிறைந்த பாதை. குதிரையில் போக வரப் பேசி சிரமத்துடன் ஏறி உட்கார்ந்த போது, எப்போது வேணாலும் சகதியில் விழுந்து விடுவேன் போல சவாரி. எதிரே சிலர் வேகமாக புரவிச் சவாரி செய்து வந்த போது நிச்சயம் ஒலிம்பிக் போகலாம் என்று நினைத்தேன். நடந்து போகக்கூட முடியாத அப்பாதையில் சுமார் மூன்று கிமீ பயணம் போகும் போது முன்னாடி சாய்ந்தும், வரும்போது பின்னாடி சாய்ந்தும், பேலன்ஸ் செய்து விழாமல் வரும் அனைவருக்கும், நிச்சயமாக எனக்கு, பரிசு கொடுக்க வேண்டும். ஆயிரக் கணக்கில் குதிரைகள் மேல் பெண்கள், ஆண்கள், பெரியவர்களோடு குழந்தைகள் எனப் பயமின்றிப் பயணிப்பது ஆச்சரியப் பட வைத்தது. 2800 மீக்கு மேல் உயரமான மலை உச்சியில் இருந்து பள்ளத்தாக்கின் அழகு மிகவும் கண்ணுக்கினிமை.
தொலைநோக்கியில் பார்ப்பது வேண்டாமெனச் சொல்லி, மலைப் பிரதேச வாழ் மக்களின் உடையணிந்து போட்டோக்கள் எடுத்த பிறகு, மீண்டும் படியேறி மாதா தரிசனம் முடித்து, கீழே இறங்கும் போது, சிறிய பனிக்கட்டிகள் சர்க்கரை உருண்டைகள் போல மேலே விழ ஆரம்பித்தன. சிறிது நேரத்தில் நமது குதிரை ஓட்டுநர் வரவும், மேலேறுவது விட கீழே இறங்கும் போது சிறுவனின் உதவி அடிக்கடி தேவைப் பட்டது. சாகசப் பயணம் எனக்கு. சூடாக சுவையான இஞ்சி டீ சாப்பிட்டு அடுத்த இடமான, institute of Advance studyக்குப் பயணம். இதைப் பற்றிய முழு விவரங்கள் கூகுளில் உள்ளது. 1888 ல் கட்டப்பட்டு, பிரிட்டிஷ் வைஸ்ராய்கள் அனைவரும் தங்கிய, 1947ல் பாகிஸ்தான் பிரிவினை விவாதம் நடந்த இடமும், ஜனாதிபதிகள் கோடைக்கால வாசம் செய்யும் மாளிகையுமாய் இருந்து, டாக்டர். இராதா கிருஷ்ணன் அவர்களால்,institute ஆக மாற்றப் பட்டது. அரண்மனை போலுள்ள மாளிகை, பல புகைப்படங்கள் உள்ளே உள்ளது என்ற செய்தியை அறிந்து கொண்டேன். உள்ளே போக அனுமதி ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை, போட்டோ எடுக்க அனுமதியில்லை.
எல்லோரும் வெளிப்புறப் பாதையில் வித விதமாய், புகைப்படங்கள் எடுத்தனர், நானும் எடுத்தேன், எடுத்துக் கொண்டேன். அடுத்தது ஜக்கு அனுமன் கோயில், அதற்கு முன்பு மாலை உணவு( late lunch).
சிம்லா ஏழு மலைகளால் ஆனது என்றும், ஒன்றின் உச்சியில் Advance Study Institute, இன்னொன்றின் உச்சியில் அனுமன் சிலை மற்றும் கோயில். இங்கிருந்து, நகருக்கு நடுவில் உள்ள கடை வீதி வரை கேபிள் கார் உண்டு, இந்தியாவின் மிக நீண்ட கேபிள் கார் இதுதான் எனத் தகவல். நான் காரில் சென்றதால் மலை அடிவாரம் வரை சென்று, படிக்கட்டுகளில் ஏறி, அனுமன் சிலையைக் கண்டபின், கோயில் உள்ளும் சென்று, கீழிறங்கி தேநீர் அருந்தி, ஓட்டலுக்குத் திரும்பிய நொடியில் மழை பெய்ய ஆரம்பித்தது. ஹீட்டர் இப்போது படுக்கைககு அருகில் உள்ள ஸ்விட்சில் வேலை செய்ய ஆரம்பித்தது. நாளை காலை எட்டு மணிக்கே கிளம்பலாம், மணாலி பயணம் ஆறு மணி நேரமாகலாம் என்பதாலும், போகும் வழியில் பார்க்க வேண்டிய இடங்கள் உள்ளதாலும், அவ்வாறு முடிவெடுக்கப் பட்டது. பயணம் இனிதாகவும் அட்வென்சரோடும் தொடர்கிறது.

இமாசலப் பிரதேசம் நாள் ஒன்று (11/03/24)

 இமாசலப் பிரதேசம்

நாள் ஒன்று (11/03/24)
வெகு நாட.களாய்க் கண்ட கனவு நிறைவேறப்போகிறது என்ற எண்ணத்துடன், காலை நான்கு மணிக்கு அலாரம் வைத்து எழுந்து தயாரான போது, Makemy trip ல் புக் செய்து, உறுதிப் படுத்தப் பட்ட கார் வரவில்லை, கொடுக்கப் பட்ட மொபைல் நம்பரில் பதிலும் இல்லை, பலமுறை முயற்சித்து, ஓலா ஆப்பில் மூன்றே நிமிடத்தில் டாக்ஸி வருமென தகவல் வர, போன் செய்து உறுதி செய்து, ஐந்து மணிக்குப் பதிலாக, ஐந்து பதினைந்துக்கு வீட்டிலிருந்து கிளம்பியாயிற்று. நாற்பத்தைந்து கிமீ கடக்க, ஒன்றரை மணி நேரம் ஆகும் எனக் கணக்கிட்டு, ஓட்டுநரின் கதையைக் கேட்டுக் கொண்டே பயணித்து, ஆறு இருபதுக்கே, ஏர்போர்ட் புறப்பாடு வாசலை அடைந்தாயிற்று.
செக் இன் செய்து, செக்யூரிட்டி சிக்கல் பல மாற்றங்கள். நான்கு பெட்டிகளில் தனித் தனியாக, லேப்டாப், சார்ஜர், பேக், பெல்ட்,பர்ஸ்,ஷூ அனைத்தும். எட்டு இருபதுக்குச் சரியாக கிளம்பி கோவா சேர்ந்த போது ஒன்பதரை. மூன்று மணி நேர காத்திருப்பு அங்கே. காலை உணவை பெங்களூர் ஏர்போர்ட்டில் ஏழு மணிக்கெல்லாம் முடித்ததால், பதினொரு மணிக்கே பசித்தது. பிஸிபேளா பாத்தும், மோரும் சாப்பிட்டு, கடைகளைப் பார்வையிட்டு, பொழுது போனது. இங்கும் செக்யூரிட்டி செக் வேறு விமானமானதால். சரியாக 12.35 க்கு விமானம் ஆகாயத்தில் உயர்ந்து 37000 அடியில் பறப்பதாக கேப்டன் சொல்ல துணை கேப்டனாக பெண் ஒருவர். நாற்பது விழுக்காடு பெண்களாம் இண்டிகோ பணியாளர்களில்.
இரண்டரை மணி நேரப்பயணம் கோவாவிலிருந்து சண்டிகருக்கு. மூன்றரை மணிக்கு, தயாராக இருந்த டிரைவர் சந்தன் காரில் ஏறி உட்கார்ந்த போது 28 டிகிரி செல்சியஸ். நெடுஞ்சாலை NH5 ல் பயணம், 117 கிமீல் சிம்லா. வழிநெடுக சாலை விரிவாக்கம் நடந்து கொண்டிருந்தது. பெட்ரோல் 96 க்கு விற்றது, பத்து ரூபாய் குறைவு பெங்களூரை விட. நடுவே நிறுத்தி பேல்பூரி, லெமன் டீ அருந்தி இமாசல்பிரதேச மலையேற்றம் ஆரம்பித்த போது குளிரின் தாக்கம் ஆரம்பித்தது. மாலைக் கதிரவன் செங்கதிராய் மேகங்கள் ஊடே, மலைகளின் தலையில் கிளிக்கி, மீண்டும் பயனித்து, pine view cottage ,சிம்லா அடைந்தபோது மணி எட்டு. வெப்ப அளவை சோதித்த போது, 9 டிகிரி எனக் காட்டியது. தரை சில்லிட்டது. ஹீட்டர் வேண்டுமென்று வாங்கி, அறைக்குள் வைத்த போதும், குளிர் குறையவே இல்லை. முகத்தை மூடித் தூங்கிப் பழக்கமில்லாத நான், ஸ்வெட்டர் போட்டு, கம்பளிக்குள்ளே புகுந்து உறங்க வேண்டியதாயிற்று. குளிரின் தாக்கம் தோலை ஊடுருவி, உடம்பு சி்ல்லென இருந்தது, இப்போது மெதுவான கத கதப்பில் உறக்கம் வந்நது. நாளை முதல் ஊர் சுற்றல் ஆரம்பம். சந்தன் சிம்லாவைச் சேர்ந்தவர் ஆதலால் காலை பத்து மணிக்கு வருவதாகச் சொல்லி, சென்ற பிறகு, சுவையுடன் சூடான இரவு உணவு முடித்து, உறங்கி ஆயிற்று. குளிரின் தாக்கத்தை எவ்வாறு பழக்கப் படுத்திக் கொள்வது என்ற யோசனையுடன் இந்த நாள் முற்றுப் பெற்றது, நாளை தொடரும்.

குணா குகை, கொடைக்கானல்

 குணா குகை, கொடைக்கானல்

1989 - 2003 இந்த காலக் கட்டங்களில் பலமுறை கொடைக்கானல் சென்றிருக்கிறோம். L&T ல் , மேலாளராக ஆன பிறகு , கெஸ்ட் ஹவுஸில் தங்க இரண்டாண்டுக்கு ஒரு முறை அனுமதி கிடைக்கும். அதற்குப் பிறகும் முன்பும் நண்பர்களோடு சென்று வந்த்து இதில் அடக்கமில்லை.
அவ்வாறு செல்லும் போது உணவு தயாரிப்பதிலிருந்து, துணி துவைப்பது வரை வேலையாட்களே பார்த்துக் கொள்வர். அதனருகில் ஜெமினி கணேசனின் வீடொன்றும், L&T founder லார்சன் வீடும் இருந்தன. ஏரியிலிருந்து உயரும் பாதையிலே உள்ளது.
மகன்கள் சிறுவராய் இருந்த போது சில நாட்கள், செப்டம்பர் விடுமுறையில் போய்த் தங்குவோம். சுற்றிப் பார்க்க ஜீப்பும் முன்னமே சொல்லி வைத்தால் டிரைவருடன் செல்ல அனுமதி கிடைக்கும்.
முதன் முதலாகச் சென்ற போது, டிரைவரின் துணையோடு நானும் மனைவியும் உள்ளே இறங்கிச் சென்ற போது இருட்டாக பயமாகவே இருந்தது. தண்ணீர்த்துளிகள் சொட்டிக் கொண்டிருந்தன. சிறிது தூரம் சென்ற பிறகு ஆக்ஸிஜன் சப்ளை இருக்காது போக வேண்டாமென டிரைவர் சொல்லி விட்டார். அப்போதே அதற்கு குணா குகை என்ற பெயர் ( Devil's Kitchen) வந்து விட்டிருந்தது. நாங்கள் சென்ற வருடம் நினைவில்லை. அப்போது தடை செய்யப் பட்டிருக்கவில்லை. பில்லர் ராக்ஸ் என்று சொல்லப் படும் அதன் உச்சிப் பாதையில் தான் பல புதை குழிகளும் ( மஞ்சுமோல் பாய்ஸ் குணா குகை குழி) இருந்தன. டிரைவர் கூடவே வந்து வழி காட்டிச் சென்றார். மேலே இருந்து கீழே பார்க்க தலை சுற்றியது.
படத்திற்காக அனுமதித்தார்கள் போல உள்ளது, ஏனென்றால் அதன் பின் சென்ற பல முறையும் அது தடை செய்யப்பட்டு விட்டது. இறந்தவர்கள் பலரது உடலை மேலே கொண்டு வருவதற்கென்றே சிலர் உண்டு என்றும், அவர்களுக்கு பல ஆயிரங்கள் கொடுத்தாலே உடலை மீட்க முடியும் என்றும் அவ்வூரில் வாழ்பவர் மூலமாக பிறகு அறிந்து கொண்டோம்.
இன்று அந்த மலையாளப் படம் பார்த்த போது பழைய நினைவு தூண்டப்பட்டு, எழுதத் தோன்றியது. இயற்கை அழகானது மட்டுமல்ல சில நேரங்களில் ஆபத்தானதும் கூட.

கல்வராயன் மலை

 திருவண்ணாமலைக்கு நண்பர் அசோக் வந்திருக்கிறார் என்றதும் மனதில் ஒரு பயணத்தின் தூண்டல் தோன்றியது. பதினேழாம் தேதி ( பிப்ரவரி 2024) பள்ளி நண்பர்கள் கூடும் நாளுக்கு வந்தே ஆக வேண்டுமென நெடுஞ்சேரனின் அன்பான அழைப்பு.

காதலர் தினமான பிப்ரவரி 14 பயணத்தைத் தொடங்க முடிவெடுத்த போது, பிரபாகரும் திருவண்ணாமலை வருவதாகக் கூற, மடிவாலா பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் காலை 9 1/2க்கு ஏறி ரமணாஸ்ரமத்தில் இறங்கிய போது மதியம் 2 மணி. மதிய உணவை முடித்து, முன்னதாக பதிவு செய்திருந்த ஓட்டலுக்குச் சென்ற போது புக்கிங் எடுப்பதில்லை என்ற தகவல் கோபத்தை வரவழைத்தது. Booking.com க்கு புகார் அளித்த பிறகு கோவிலுக்கு அருகில் வடக்கு வாசலில் ஓட்டல் அறை எடுத்து, ஓய்வுக்குப் பிறகு கோயிலுக்குச் சென்று, நல்லதொரு தரிசனம் முடித்துத் திரும்பி, இரவு உணவு நண்பர் அசோக்குடன் முடித்து, மறு நாள் பயணம் பற்றி விவாதித்து, டாக்ஸியும் புக் செய்தாயிற்று.
திருக்கோயிலூரில் உலகளந்த பெருமாளும், வீரட்டேஷ்வரர் கோயிலும் முடித்து, பிறகு கல்வராயன் மலைப் பிரதேசத்தின் இயற்கை அழகைக் காண முடிவெடுத்தோம். காலை சிற்றுண்டிக்குப் பிறகு, அசோக்கின் உறவினரின் டாக்ஸியில் பயணித்து உலகளந்தவரைத் தரிசித்த பிறகு, ஈஸ்வரனையும் தரிசித்த பிறகு, 80 கிமீ தூரம் பயணம் என கூகுள் சொன்னது.
முடிந்த வரை நெடுஞ்சாலையில் பயணிப்பது என்ற முடிவால், பாதை தவறி, U டர்ன் எடுத்து, சரியான பாதையில், கோமுகி ஆற்றைக் கடந்து, கோமுகி அணை பெரிதாய் எதிரே தோன்றியது. காரை நிறுத்தி அணைப் படிக்கட்டுகள் ஏறிப் பார்த்தபோது மலைகளுக்கிடையே நீர்த்தேக்கம் அழகாய்த் தோன்றியது. நீரின் அளவு குறைந்திருந்தது. போட்டோக்கள் கிளிக்கி, கீழே இறங்கி, தள்ளு வண்டியில், கம்பங் கூழைக் குடித்தபோது சற்று வயிறு குளிர்ந்தது. மீண்டும் பயனித்து பெரியார் அருவியை அடைந்த போது, குறைந்த அளவு நீர் வீழ்ச்சியைக் காண முடிந்தது. உள்ளே செல்லும் பாதை தடை செய்யப்பட்டு பழுது பார்க்கும் வேலை நடந்து கொண்டிருந்தது. அதனால் அருவிக்கு அருகில் செல்ல இயலவில்லை.
மீண்டும் பயனித்து கல்வராயன் மலை உச்சியில் உள்ள வெள்ளிமலை என்ற சிற்றூரை அடைந்து மதிய உணவுக்கு, மெஸ் ஒன்றில் நிறுத்தி மீன் குழம்பு, ஆம்லெட் சகிதம் சுவையான சாப்பாடு.
அங்கிருந்து திரும்பும் பாதையில், பராமரிப்பற்ற படகுக் குழாம், மற்றும் ஏரிக் கரையில் நிழலான இடம் பிடித்து, அனைவரும் இளைப்பாறிய போது, நாய்கள் உணவுக்கு பிஸ்கெட் வாங்கிப் பரிமாறினது பிரபாகர்.

இறைவன்

 எல்லாருக்கும் பொதுவானவன்

அவனே
வறியோருக்கும் வளமானவர்க்கும் அவனே
பொய்யான சொல்லுக்குப் பகையானவன்
மெய்யானவன் நெறியானவன் அவனே
கல்லான வடிவானவன் கருணையானவன்
விண்ணோடும் மண்ணோடும் உறவானவன்
எங்கும் நிறைந்தவன் இறைவன்
ஒன்றானவன் ஓராயிரம் உருவானவன்
சொல்லாத சொல்லுக்குப் பொருளானவன்
பிரிவில்லை அவனுள்ளே என்றானவன்
வர்ணங்கள் ஒன்றான வடிவானவன்
மனிதர்குலம் என்றுமே காப்பானவன்
வேணாமிந்த பிரிவென்றே சொல்வானவன்
வேற்றுமை களைந்திடச் செய்வானவன்
நேர்மையை நேர்படச் செய்வானவன்

கண்ணாமூச்சி

 கண்ணெதிரே தோன்றிய கனி முகத்தாள்

விண்ணேறிப் போனாளோ விலகிச் சென்றாளோ
பண்ணிசைத்துப் பாடல் படிக்க வருவாளா
வண்ணத்துப் பூச்சியாய் வலம்வரச் சென்றாளா
எண்ணத்தில் அவள்நினைவை பதித்துச் சென்றாளே
கிண்ணத்தில் பாலூற்றிச் சோறூட்ட வருவாளா
வண்ணக் கோலமிட வாசலுக்கு வருவாளா
கண்ணுக்கு மையெழுதி கால்கொலுசு அணிவாளா
சுண்ணநிறப் பல்திறந்து நகையாடி நிற்பாளா
கண்ணே கனியமுதே கற்கண்டே என்பாளே
கண்மூடி முகம் கண்டே நாளாச்சு
கண்ணாமூச்சி போதும் காதலியே வந்துசேர் !

நண்பர்கள் குழு

 நான் விட்டாலும் சென்னை என்னை விடுவதில்லை

ஏதோ ஒரு காரணம் கிடைக்கும், ட்ரெயினோ, காரோ அடிக்கடி விஜயம்.
நண்பர்கள் குழு மிகப் பெரியது. குழந்தைப் பருவ நட்பு, பள்ளி நட்பு, கல்லூரி நட்பு, அலுவலக நட்பு என பரந்து விரிந்து வேரூன்றிய ஒன்று.
அறுபது வருடங்களுக்கும் மேலாக வெவ்வேறு கால கட்டத்தில் இணைந்து தொடர் வண்டி போல் மிக நீண்டு பயணித்தவாறே.
நலம் விசாரிப்பதோடு நின்று விடாமல், சந்திக்க பல காரணங்கள். விருப்பு, வெறுப்பு, சண்டைகள், கொள்கை வேறுபாடு எல்லாமும் உண்டு. விவாக ரத்து ஆவதில்லை. குடிகாரன் போன்றே விடிந்தால் மறந்து விடும்.
கண்ணீர் சிந்தும் தருணங்களும் உண்டு. மரத்தின் இலைகள் ஒவ்வொன்றாய் உதிரும் போது மன வருத்தம் உண்டு.
காலச் சக்கர சுழற்சியில் வெவ்வேறு திசைகளில் சென்று வாழ்ந்தாலும் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் ஒன்று கூடி மகிழ்வது தவறாது.
வேலையே குறி என்று சிலரும், சோம பான மயக்கத்தில் சிலரும், ஊர், உலகம் சுற்றும் சிலரும், சமுதாய சிந்தனை உடையோரும், பகுத்தறிவு, பக்தி, அரசியல் என வெவ்வேறு மனப் பிரிவினைகள் இருந்தாலும் நட்புத் தொடர் பயணித்த வாறே இருக்கும்.
மற்ற உறவுகள் இருப்பினும் இது விலை மதிப்பில்லா வைரம் போன்றது, உறுதியானது. வாழும் நாளெல்லாம் மதித்துப் போற்றத் தக்கது.

நட்பு மறக்காத நண்பர்கள்

 வந்து நின்று சபைக்கு வந்தனம் சொன்னேனய்யா

அதாகப்பட்டது
தைப்பூசத் திருநாளில்
தெக்கு வடக்கு கிழக்கு மேற்கு
எல்லாத் திசைலிருந்தும்
வண்டியேறி வாராங்க
யாருன்னு கேக்கியளா
அதாங்க ஒண்ணாப் படிச்சவங்க
வருஷம் எத்தனை ஆனாலும்
நட்பு மறக்காத நண்பர்கள்
நாப்பத்தஞ்சு ஆச்சுதாமே
ஆத்தாடி
கூடி வந்து பேசித் தீக்க
நல்ல நாள் இதுதானாம்
என்னாத்த பேசுவாங்க
எங்கே நின்னு பேசுவாங்க
பல்லவ ராசா வாழ்ந்த
ஊராமில்ல
மாமல்லனாம் அவன் பேர தாங்கி
கடலும் கடல் சார்ந்த இடமும்
வண்ணக் கோலம்
வரவேற்க
கதிரவன் கட்டியம் கூற
நூறாகி வந்த சனங்க
பாட்டென்ன கூத்தென்ன
பலவும் உண்டாமில்ல
பசுமை நிறைஞ்ச நினைவுகளை
பகிர வாராங்களாம்
எம்மாடி ஆயிரமாயிரம் மைல்கள் தாண்டி
பறந்து வாராங்களாம்
இந்த நல்ல உள்ளங்க
சும்மா வரல
கோடி ரூவாய ஏழைப்
பசங்களுக்கு
படிக்க உதவியும் செய்யறாங்க
கடல் போலவே மனசும்
நல்லா வாழட்டும்
நோயில்லாம இன்னைக்கும்
என்னைக்கும்
எம்மக்காள் !
(45th year CEG79, Engineering Classmates meet at Mahabalipuram today )

25/01/2024

புதன், 17 ஜனவரி, 2024

கல்லூரித் தோழர்கள் சங்கமம்

 எட்டு ஏழாகி ஆறாகி ஒன்றாகும்

கூட்டுப் புறாக்கள் கூடிக் களிக்கும்
பாட்டுப் பாடியும் நடனம் ஆடியும்
சொட்டும் நட்பு மழையில் நனையும்
பழைய நினைவுகள் பரிமாறிக் கொள்ளும்
கழைக் கூத்தாடி போல குதிக்கும்
வண்ண மலர்கள் ஒன்று கூடும்
கண்கள் கலந்து கதைகள் பேசும்
திசைகள் பலவும் ஒருமித்து சேரும்
இசையும் கவியும் இணைந்து ஒலிக்கும்
கல்லூரி வளாகம் விழாக் காணும்
பல்வேறு கதைகள் பரிமாறிக் கொள்ளும்
நாற்பதும் ஐந்தும் சேர்ந்த கணக்கு
நால்திசை இன்று ஓரிடம் சேரும்
நாடுகள் பலவும் மாமல்ல புரத்தில்
நாடிய நட்பின் கூடிய சங்கமம்
சிகரங்கள் தொட்ட சிந்தனைச் சிற்பிகள்
முகவரி மாறிய முற்றிய முகங்கள்
தகவல் தொடர்பில் தொலையாத நட்புகள்
முகநகை மறையா அன்பு உள்ளங்கள்
பாட்டும் கூத்தும் பங்காளிச் சண்டையும்
ஓட்டம் குறைந்த வாலிப வயதில்
வட்டம் சதுரம் முக்கோணம் மறந்து
திட்டம் போட்டு சேர்ந்த கூட்டம்
இன்றும் என்றும் இந்த மகிழ்வே
இதயம் கலந்து இனிதே தொடரும்
பசுமை நினைவுகள் மனதில் பதியும்
விசும்பைத் தொட்டு உயர்ந்து நிற்கும்
நட்பின் வலிமை பறை சாற்றும்
நல்லதே எண்ணும் நன்மைகள் செய்யும்
உயர்த்திய ஏணிக்கு உதவிகள் செய்யும்
அயராத உழைப்பின் அடையாளச் சின்னம்
( நாற்பத்தைந்து வருடம், கல்லூரித் தோழர்கள் சங்கமம், ஜனவரி 25/26)
All reactions:
Singaravelan Thirumalaisamy

இனியதொரு வாழ்த்து

 உழவரைத் தலை வணங்கிப் போற்றுவோம்

உருவான நெல்மணிகள் புத்தரிசியாய் பொங்கட்டும்
கன்னலின் சுவையோடு மஞ்சளும் மங்கலமாய்
பின்னலிட்ட சிறுமியர் சிறுவர் மகிழ்ந்திட
முற்றத்தே தீயூட்டி புதுப்பானை வெண்பொங்கல்
சுற்றம் சூழ்ந்திட. வண்ணக் கோலமிட்டு
வணங்கி நின்று வாழ்த்திடுவோம் உளம்மகிழ
வளமான வயல்வெளி ஊருணி நீர்
கதிரோனின் ஒளிக் கீற்று அனைத்தும்
கருத்தில் இருத்தி தலை வணங்குவோம்
இயற்கை தெய்வமாய் போற்றும் இந்தாளில்
இனியதொரு வாழ்த்து சொல்லி இன்புறுவோம்

காலச் சக்கரம்

 உறக்கம் வராத விடியலில் எதைப் பாடுவது

உறங்க வைக்க யார் வருவாரோ அறியேன்
பறக்கும் புள்ளினங்கள் கூட்டைத் துறக்க நேரமுண்டு
சிறக்கப் பாடும் மார்கழி இறுதி நாளென்று
இமைகள் மூடினால் சிலநூறு காட்சிகள் திரையில்
சுமைகள் மனதில் சுற்றிய எண்ணக் கீற்றுகள்
காலைப் பனியின் குளிர் உடலில் ஊடுருவ
தொலைவில் யாதொரு இறைவன் எழுச்சிப் பாடல்
நாட்கள் மாற்றம் இரவு பகலாய் நிதமும்
நாளைய விடியல் இன்று போல் இல்லை
காலச் சக்கரம் நெடும் பாதையில் உருண்டே
காட்சிகள் மாறிய வண்ணம் உலகம் சுற்றும்

அரபிக் கடலோரம் நாள் ஆறு, ஏழு

 அரபிக் கடலோரம்

நாள் ஆறு, ஏழு
பயணங்கள் ஏதாவதொரு வகையில் தொடர்ந்து கொண்டிருக்கும். மூணாரில் இருந்து காலை உணவுக்குப் பிறகு புறப்பட்டு வாகமான் நோக்கிப் பயணம். வழியெங்கும் பசுமை போர்த்திய மலைத் தொடர்கள். அழகிய தோற்றத்துடன் அரண்மனை போன்ற வீடுகள். இத்தகைய வீடுகளில் பசுமைத் தோட்டம் நடுவே வாழ்வது உடல், உள்ளம் இரண்டுக்கும் மிக நலம்.
பல மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, மதிய உணவை மெஸ் போன்ற கடையில் முடித்து, கேரள பாரம்பரிய முறையில், மீண்டும் பயணித்து வாகமான் அடைந்த போது மழை பெய்து கொண்டிருந்தது. ஓட்டலில் செக் இன் செய்தபோது அழகான நீர்த்தேக்கத்தில் பல வண்ண மீன்கள் நிறைந்து, அழகாய் தோற்றமளித்தது. ஹனிமூன் அறையை உரிமையாளர் காட்டினார், நல்ல இரசனையோடு கட்டப் பட்டிருந்தது.
சிறிது நேர ஓய்வுக்குப் பின், மலைப் பாதையில், வார விடுமுறையாதலால், வேன்களும் கார்களும் இளைய தலைமுறையினரைச் சுமந்து மெதுவாக ஊர்ந்து சென்றன. கண்ணாடிப் பாலம் அடைந்த போது மழை வேகமாகப் பெய்தபடி, பலத்த காற்றும் கூட, குடை முதல் முறையாகப் பயன்பட்டது. ஆனாலும் நனையாமல் இருக்க முடியவில்லை. கண்ணாடிப் பாலத்தை தூரத்திலேயே நின்று பார்த்துவிட்டு, மெடோஸ் என்ற புல்நிறைந்த மலை முகடு ஒன்றில் மேலேறி, போட்டோக்கள் எடுத்து திரும்பினோம். மழை பெய்தபடியே இருந்ததால், அறைக்குத் திரும்பி, மறு நாள் காலை ஆறு மணிக்கே புறப்பட முடிவானது. மூணார் பார்த்த பிறகு வாகமான் மிகச் சாதாரணமாய்த் தோன்றியது.
ஆறரை மணிக்குக் கிளம்பி, வல்லப் புழா சென்று, பழைய நட்பொன்றை விசாரிக்க நினைத்து, பாதி வழியில், அந்த முகவரியில் வீடு விற்பனைக்கு என கூகுளில் அறிந்து, அங்கு போவதற்குப் பதில் அதிரப்பள்ளி அருவி போக முடிவானது. ரெனி அட்டைப் பூச்சியொன்று இருப்பதைக் கண்டு வெளியே எறிந்தார். சில நிமிடங்கள் கழித்து, என்னுடைய பேண்ட் கால் பகுதியில் தற்செயலாகத் தடவியபோது, சொரசொரவென இருந்தது. குனிந்து பார்த்தபோது அது இரத்தக் கறை, பேண்ட்டை மேலேற்றி பார்த்த போது இரத்தம் கணுக்காலுக்கு மேலே இரண்டு ரூபாய் நாணயம் அளவு உறைந்திருந்தது. அப்போதே உணர்ந்தோம், ரெனி வெளியே எறிந்த அட்டைப் பூச்சி சில மிமீ இரத்தத்தை உறிஞ்சியுள்ளது என. காரை நிறுத்தி, கால்களைக் கழுவி, சானிடசைரில் துடைத்த பிறகு பயணப் பட்டோம்.
அதிரப்பள்ளி அடைந்த போது, ஆற்று நீரோட்டம் மிகக் குறைவாகவும், அருவியின் தோற்றம் சிறிய இரண்டு நீர் வீழ்ச்சியாகவும் அழகு குறைந்து காணப்பட்டது. முந்தைய இரண்டு முறை வந்தபோது ஆர்ப்பரித்துக் கொட்டிய அருவி மிக அடக்கமாக. பாறையில் அமர்ந்து சிறிது நேரம் கழித்து, மீண்டும் பயணித்து, மதிய உணவுக்கு ஓட்டல் சென்று, சூடான மீன் வறுவலோடு முதன்முறை நாவிற்குச் சுவையாய், சாப்பிட்ட பிறகு, விமான நிலையம் நோக்கிப் பயணம். நான்கு மணிக்கே ஏர்போர்ட் வாசலில் இறக்கி விட்டு, அசோக் சென்னை பஸ் பிடிக்க கொச்சி நகருக்கு ரெனியோடு சென்றார். செக் இன் செய்து, பேக் டிராப் செய்து, செக்யூரிட்டி முடித்து, கேட் நான்கருகே அமர்ந்த போது விமான நிலையத்தின் அழகை இரசிக்க முடிந்தது. சமீபத்தில் திருமணமான ஜோடியொன்று வித விதமாய், போட்டோக்கள் எடுத்தபடி, பாரம்பரிய வேட்டி புடவை சகிதமாய், அழகாய் இருந்தனர்.
மற்றொரு பயணத் தொடர் முடிவுக்கு வந்தது.ஒரு மணிப் பயணம் என்ற அறிவிப்புடன், ஐந்து நிமிடங்களுக்கு முன்பாகவே அடைந்து டாக்ஸியில் வீட்டை அடைய ஒன்றரை மணியளவு ஆனது, முப்பத்தாறு கிமீ தூரம் கடக்க. பயணங்கள் தொடரும், மீண்டும் கட்டுரைகளும் தொடரும்.
( மலைத் தொடர் முடிவு)

All reacti