திங்கள், 15 ஏப்ரல், 2024

இமாசலப் பிரதேசம் நாள் மூன்று & நான்கு ( 13/3, 14/3/24)

 இமாசலப் பிரதேசம்

நாள் மூன்று & நான்கு ( 13/3, 14/3/24)
காலை எட்டே காலுக்கு திட்டமிட்ட படி, ஓட்டலை விட்டுக் கிளம்பி NH 205 ல் மணாலி நோக்கிப் பயணம். 254 கிமீ சுமார் ஆறு மணி நேரம் ஆகலாம் என நமது சாரதி சொல்ல கார் மலைப் பாதைகளில் வளைந்து வளைந்து சென்றபடி இருந்தது. காலை ஒன்பதரைக்கு காலையுணவு முடித்து மீண்டும் பயணம் தொடர்ந்தது. சில இடங்களில் ஹைவே, சில இடங்களில் குறுகிய சாலை என்று பியாஸ் (Beas) நதியும் நம்மோடு 200 கிமீம் தொடர்ந்தது. இதுவரை பார்த்த ஆறுகளில் வேறுவிதமாகத் தோன்றியது. நீரோட்டம் குறுகி இருந்தது. ஜூலை 15 முதல் செப்டம்பர் 15 வரை மழைக்காலம் என்றார் நமது காரோட்டி. போன வருட மழை வெள்ளத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வீடுகளும், நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள், லாரிகள் அடித்துச் செல்லப்பட்டன என்ற தகவலும் சொன்னார். மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சிம்லாவில் இருந்து மணாலிக்கு, டூரிஸ்டுகளை அழைத்து வருவதாகக் கூறினார்.
வழி நெடுகிலும் சாலைப் பழுது, மாற்று வழி, மலைச் சரிவு என வெவ்வேறு காட்சிகள். பியாஸ் நதி பெரிய பாறைக் கற்களால் முழுவதுமாய் நிறைந்திருந்தது. இலட்சக் கணக்கான பாறைகளே ஆற்று ஓட்டத்தின் நெடுகிலும் மணல் இல்லை.
பல மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, குல்லுவை அடைந்த போது, பேரா கிளைடிங் காற்று வேகம் அதிகம் காரணமாக நிறுத்தப் பட்டுள்ளதாக, அங்கிருந்தவர் கூறினார். பாறைகள் நிறைந்த ஆற்றில் Rafting போக எனக்கு விருப்பமில்லை.
மதிய உணவுக்கு மூன்றரை மணியளவில் , மணாலிக்கு அருகில், நிறுத்தி, ஓட்டலை அடைந்த போது ஐந்துக்கு மேலாகி இருந்தது. கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரப் பயணம். செக் இன் செய்து, ஓய்வெடுத்து, இரவு உணவும் முடித்து உறங்கச் சென்ற போது மணி பதினொன்று.
இட மாற்றம், காரமான மதிய உணவு காரணமாக, உறக்கம் சரியாக இல்லையென்றே சொல்ல வேண்டும். அறை வசதியாக , ஹீட்டரின் துணையோடு கத கதப்பாகவே இருந்தது. காலை ஒன்பதரைக்குக் கிளம்பிய போது, மிகப்பிரகாசமான கதிரவன் ஒளி பனிமூடிய மலைகளின் உச்சியை வெள்ளித் தகடாக பளபளக்க வைத்தது.
பதினெட்டு கிமீ தூரத்தில் உள்ள சோலாங் பள்ளத்தாக்கை நோக்கிப் பயணித்த போது பனிமூடிய மலைகள் மட்டுமல்ல, வீடுகள், கார்கள், சாலைகள் என அழகிய தோற்றம். சீசன் அடுத்த மாதம் முதலே ஆனால் மக்கள் கூட்டம் அதிகமானதால், கார்கள் நிறுத்தப் பட்டு தாமதமாக அனுப்பப் பட்டன. பனி விளையாட்டுகளில் கலந்து கொள்ள ஏற்ற உடையும், ஷூவும், அட்வென்சர் விளையாட் டுகள் என ரேட்டைப் பேசி, கைடு சகிதமாக உச்சி நோக்கிப் பயணித்து இறக்கி விடப்பட்ட இடம் பனி முழுவதுமாக மூடிய மலைப் பிரதேசம்.
முதல் ரைட் ( Ride) பைக்கில், முதலில் தார்ச்சாலையில் ஓட்டிய பிறகு பனிப் பாதையில் ஓட்டச் சொல்லி உடன் வந்து வழி நடத்தினார், பைக் ஓட்டுனர். வீடியோ, போட்டோக்கள் தொடக் கம். அடுத்து ரப்பர் டியூப்பில் உட்காரந்து சறுக்கல். மூன்றாவதாக நான் தேர்ந்தெடுத்த ஸ்கீயிங் (skiing), முதலில் அதற்கான காலணியுடன் கூடிய பலகை அணிந்து, இரு புறமும், பனியில் ஊன்றி உந்திச் செல்ல ஊன்றுகோல் என பயிற்சி ஆரம்பித்தது. சற்றே நிலை தடுமாறி பனியில் விழுந்த போது சிரிப்பே வந்தது. ஆண், பெண்ணென விழுந்து எழுந்தனர்.மீண்டும் மீண்டும் சறுக்கி முயன்று ஓரளவுக்கு தானாக போக முடிந்த போது, வீடியோ எடுக்க ஆரம்பித்தார் கைட். டயர்ட் ஆகும் வரை விளையாடி, ஓய்வெடுக்க உட்கார்ந்த போது பிரட் ஆம்லெட், பேல் , டீ என மதிய உணவு அங்கேயே முடிந்தது. புறப்படலாம் என முடிவடுத்து, டிரைவருக்குப் போன் செய்த போது,
பார்க்கிங்கிலிருந்து வருவதற்கே, ஒன்றரை மணி நேரமாயிற்று. கார்கள், டெம்போ டிராவலர் என மக்கள் வந்த வண்ணமும், போன வண்ணமும் இருந்தனர். சாலை குறுகி இருப்பதால் போக்குவரத்து தாமதம் ஆனது. அரசு ஆவன செய்தால் நலம். இன்றைய சுற்றுலா இத்துடன் முடிவுற்றதால் ஓட்டலுக்குத் திரும்பி, சிக்கன் சூப் ஆர்டர் செய்து, அறையின் கண்ணாடி சன்னல் வழியாக, பனிமலைகளைப் பார்த்தபடி இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கியாயிற்று.

கருத்துகள் இல்லை: