செவ்வாய், 13 அக்டோபர், 2020

கவலை

 கவலை இல்லாத மனிதன் இல்லை உலகத்திலே

கப்பல் ஓட்டினாலும் காரை ஓட்டினாலும் எவனுக்குமே
ஓட்டை ஏந்தி பிச்சை எடுத்தாலும் ஓட்டல் முதலாளியும்
நாட்டை ஆளும் அரசனும் நாடோடி மனிதனும்
உழவு செய்பவனும் உண்டு கொழுத்த முதலாளியும்
உண்மை சொல்பவனும் பொய்யில் மறைந்து வாழ்பவனும்
விதிவிலக்கு இல்லையடா
கவலை உன்னை உலுக்குமடா
வீதி எல்லாம் புலம்ப வைக்கும் சிலரையடா
இருந்தாலும் கவலை இல்லை என்றாலும் கவலை
இருப்பவன் காப்பாற்ற இல்லாதவன் தேவையென்று கவலை
வாழ்க்கை ஒரு வட்டமடா வருவது போகும்
வாடிக்கை இதுவென்று உணர்ந்தே வாழுபவன் ஞானியடா
வேடிக்கை உலகம் ஓடியாடிச் சேர்த்த செல்வம்
வேகின்ற தீயோடு வருவதில்லை சாம்பலே மிஞ்சுமடா !

சோதனைக் காலமிது

 மலையோரம் காத்து வீசுது மழை வரப் பார்க்குது

மனதோரம் காதல் சேருது மயங்குது பெண் மனசு
உன்னோடும் என்னோடும் உறவாகி உசுரான நட்பாகி நாளாகுது
உடலுக்கும் உணர்வுக்கும் இரை தேடுது உள்ளம் வாடுது
கரையோரம் நண்டு சத்தம் கேட்டு வலைக்குள் போகுது
கடலோரம் வந்த அலையில் மணல் காலைத் தழுவுது
காற்றோடு சேர்ந்து கீதம் காதுக்குள் இனிமை சேர்க்குது
நேற்றோட எண்ணக் கீற்று மனசோரம் நெருடிப் போகுது
பாட்டாலே பலகாலம் சொன்ன போதும் பாவிசனம் மாறலியே
ஒட்டாத மனுசனா சாதியத் தான் விட்டொழிக்க மாட்டானே
கூற்றுவன் கொண்ட உடல் நிறம் பாத்தா மண்ணாகுது
கூடுவிட்டு ஆவி போகு முன்னே திருந்தப் பார்ப்பானா?
சோதனைக் காலமிது சோர்வடைய வேண்டாமே மனசு சொல்லுது
வேதனைதான் என்றாலும் இதுவும் கடந்து போகும் அன்றோ !

வெட்கம் இன்றித் திரிவேன்

 ஊர் பற்றி எரியும் வேளை எனக்குப் பிடில் வாசிக்கப் பிடிக்கிறது

யார் என்ன சொன்னால் என்ன வெட்கம் இல்லை என்றும் எனக்கு
போர் தொடுத்து வென்று கடல் கடந்து சென்ற தமிழன் யாரோ
நேர் நின்று பேச முதுகு எலும்பு இல்லை என் செய்ய
கூர் அம்பு வார்த்தை எய்து ஏசினாலும் எனக்கு உரைக்காது ஐயா
பேர் புகழ் வேண்டாம் எனக்கு பெட்டி நிறையப் பணம் வேண்டும்
நார் இன்றி பூக்களை மனித நரம்பு கொண்டு கட்டித் தருவேன்
ஏர் கொண்டு உழுபவன் இருந்தால் என்ன இறந்தால் என்ன எனக்கு
பார் உள்ள வரைக்கும் பகல் வேடம் போடக் கற்று வந்தேன்
ஊர் மக்கள் என் முகத்தில் உமிழும் காலம் ஒன்று வரும்
வேர் ஊன்றி அதுவரை வெட்கம் இன்றித் திரிவேன் சிரிக்காதே மனிதா !

கோமாளிக் கூட்டம்

 ஆடுகள் மந்தையில் ஒன்று சேர்ந்து

ஆட்டம் இப்போது ஆடும் நேரமிது
கோமாளிக் கூட்டம் கும்மாளம் போடுது
கோவேறிக் கழுதைகள் சுமைகளைத் தாங்குது
ஊமைகள் உலகில் எத்தர்கள் ஆட்டம்
ஆமைகள் புகுந்து நாட்கள் ஆயிற்று
கொல்லைப் புரத்தில் நுழைந்த திருடர்கள்
கொண்டு போவது தெரியாத மூடர்கள்
முற்புரத்தில் தெருக்கூத்தைப் பார்த்துச் சிரித்தனர்
சொந்த வீடு தீப்பற்றியது தெரியாமல்
சொற்ப மூளையும் களவு போனது
இரவு முடிந்து விடியும் வேளை
இல்லாது போகும் இல்லம் அங்கு
விட்டில் பூச்சிகள் விளக்கில் மயங்கின
ஏட்டில் எழுதியா மயக்கம் நீங்கும் ?

தெரியும் ஆனா தெரியாது

கால ஓட்டத்தில் இட மாறுதல்கள் தவிர்க்க முடியாதவை பலருக்கும்.

சிறு வயதில் என்னைச் சுற்றியிருந்த நண்பர்களின் தாய்மொழி தெலுங்கு. அதனால் ஓரளவுக்குப் பேசுவதை புரிந்து கொள்ள முடிந்தது.
பள்ளித் தோழன் வீட்டில் உருது ஆனாலும் புரிந்து கொள்ள மனம் செலுத்தவில்லை. முதல் காதல் மலையாள மொழி என்றாலும் சந்தித்ததே ஒருமுறை அதனால் கற்க இயலவில்லை.
வேலை நிமித்தம் ஊர் ஊராகச் சுற்றிய போது பல மொழிகள் தெலுங்கு, கன்னடம்,இந்தி என்று, கற்றுக் கொள்ளவில்லை.
பிறகு பெங்களூரிலும் ஓசூரிலும் ஏழு வருடங்கள். கன்னடம் கொஞ்சமாய் கற்றுக் கொண்டேன். மனைவி படித்ததே கன்னடம். தமிழ் ஆர்வத்தால் அவள் தாத்தாவிடம் சிறிது கற்றாள்.
அதன் பிறகு பல ஆண்டுகள் சென்னை வாழ்க்கை, அலுவல் நிமித்தம் பயணம். அப்போது தான் சீன நாட்டிற்கு மூன்று முறை பயணம். மாண்டரின் மொழிப் பயிற்சி மூன்று வாரங்கள். ஓரிரு சொற்கள் தவிர மனதில் பதியவில்லை.
நாக்பூர் வாழ்க்கை ஒரே வருடம், மராத்தி கற்கவில்லை.
திரும்பவும் ஒன்பது வருடங்கள் பெங்களூர் வாழ்க்கை, வியாபாரம், இதனால் கன்னடம் ஓரளவிற்குப் பேச மட்டும் கற்றேன்.
எனது மனைவி முதல் உறவினர் அனைவரும் கன்னடமே பயின்றனர். எனது இளைய மகன் இந்தி தானாக முன் வந்து கற்றான்.
மொழி அவசியமாகிற போது நாமாக அதைக் கற்றுக் கொள்ள தூண்டப்படுகிறோம். எதற்குமே உந்துதல் தேவை, விருப்பமும் தேவை.
வெளி மாநிலத்தவர், சக அதிகாரிகள் சில நேரங்களில் தமிழை அழகாகப் பேசுவது கண்டு வியந்திருக் கிறேன். எனது ஒன்று விட்ட தமையனார் கன்னட மொழி வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றினார்.
மொழிகள் அறிவது தவறானது அல்ல, திணிக்கப்படும்போது ஒவ்வாமல் போகிறது.

தாய்மொழி

 தமிழ் அழிகிறது அழித்தார்கள் என்று சொல்வதை விட நாம் வளர்க்கப் பார்க்கலாம்.

முதலில் நம்மில் தொடங்கட்டும். தூய தமிழிலும், பிழையின்றி எழுதுதலும் நம்மில் குறைந்திருக்கிறது. பல ஊடகப் பதிவுகள் நண்பர்கள் பதிவிடும் போது முடிந்தவரை பிழையில்லாமல் எழுதப் பழகலாம்.
பெரும்பாலும் ர,ற ன,ண,ந போன்றவைகளும் சந்திப் பிழைகளுமே தமிழ் அறிந்த நாம் செய்வது.
இளம் தலைமுறையினர் மொழியை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. இன்னொரு மொழி கற்றுக் கொள்வதில் தவறில்லை. தாய்மொழியை நன்றாக பயன்படுத்தக் கற்றுக் கொள்ளுங்கள். வேற்று நாட்டினரே பேசிப் பழக ஆரம்பித்துள்ளனர். மொழி வளர பிழையற்ற பயன்பாடு தேவையாகிறது.

எங்க ஊரு சென்னை

 எங்க ஊரு சென்னை

எப்பவுமே சுறு சுறுப்பா
காத்து வாங்க கடற்கரை
சுத்திப் பாக்க மெட்ரோ
கத்திப்பாரா பிரிட்ஜ் ஜோரா
வாத்தியாரு வீடு மேற்கே
வடபழனி முருகர் கோயில்
வகை வகையா ஹோட்டலு
கோயம்பேடு மார்க்கெட் பஸ்ஸ்டாண்டு
மயிலாப்பூரு தெப்பக் குளம்
மவுண்ட் ரோடு அண்ணா சிலை
பாரிஸ் கார்னர் பானிபூரி
சென்ட்ரல் ஸ்டேசன் ஜிஎச்
காசிமேடு மீன் மார்க்கெட்
பஸ்லே குந்திக்கினு பாக்கலாம்

அரசியல் வாதிகளே !

 அரசியல் வாதிகளே !

உங்களுக்கான பதிவு இது
திருந்தப் பாருங்கள், இனியேனும்.
மக்களுக்கு நல்லது செய்யுங்கள். ஊழலை ஒழித்து நல்லவனாய் வாழுங்கள். அரசின் சலுகைகளோடு நிறுத்துங்கள். உங்களை காமராசர் போல வாழச் சொல்லவில்லை. கொள்ளையடிப்பதைக் குறையுங்கள்.
தீய வழியில் சேர்த்த பணம் உங்களை மட்டுமல்ல சந்ததியினரையும் பாதிக்கும்.
நல்ல தலைவர்கள் மக்கள் மனதில் என்றும் வாழ்வார்கள். உங்களைப் பார்த்தே சமுதாயம் சீரழிகிறது.
நாட்டு முன்னேற்றத்துக்கு உண்மையாய் பாடுபடுங்கள். மக்களை ஊக்குவியுங்கள். உழைக்கட்டும். ஓட்டுக்காய் இலவசம், பணம் கொடுத்தது போதும்.
நல்லதொரு சமுதாயம் இனியேனும் உருவாகட்டும். பொய் அரக்கு மாளிகைகள் கட்ட வேண்டாம்.
ஒரு சக மனிதனாகச் சமுதாயம் சுத்திகரிக்கச் சொல்கிறேன்.
செவிடனாக கடந்து செல்ல வேண்டாம்.

நினைவுகள் வளரும்

 நேற்றோடு போனாயே இருளுக்குள் மேகமாய்

காற்றோடு கரைந்து கடலுக்குள் புகுந்தாயோ
ஆற்றோடு மணலாய் கலந்து போனாயோ
சேற்றோடு சேர்ந்து தாமரையாய் மலர்ந்தாயோ
நாற்றாக மனதில் நினைவுகள் வளரும்
ஊற்றாக உறவிது நீரோடை விரியும்
வற்றாத நதியாய் சுழன்று செல்லும்
பற்றாத கரங்கள் பயனற்றுப் போகும்
கற்றதே உனக்காய் கவிதைகள் வடித்திட
சுற்றமே நட்பே சுகந்தானே சொல்
பற்றற்ற வாழ்க்கை பயனில்லை காண்பாய்
முற்றத்தில் அமர்ந்து முழுநிலவைப் பார்த்தேன்
முகமது அதனில் முறுவலிக்கக் கண்டேன்
முற்றும் இரவுக்கு முன்வந்து சேர்ந்திடு

எத்தர்கள் நாடகம்

 அணையும் முன்னே ஒளிர்விடும் விளக்கு

அலையும் காற்றில் கலந்த நச்சு
விளையும் நெல்லில் ஊடுருவிய புற்கள்
வளையாடும் பெண்ணின் இரத்தக் காட்டேரி
நெஞ்சம் பதறும் பாதகம் நாட்டில்
வஞ்சம் மனதில் வல்லூறு வானில்
பொய்மைச் சுடுகாட்டு பிணந்தின்னிப் பேய்கள்
வாய்மை கூறுபோட்டு வீதிகளில் குப்பையாய்
எரியும் நெருப்பாய் மனித உள்ளங்கள்
எத்தர்கள் நாடகம் முடியும் நாட்களுக்காய்

நல்விதைகள்

 தமிழென்ற மொழியறிந்து விழுகின்ற வார்த்தைகள்

தனையறிந்த வித்தகனாய் வந்திடும் நாளுமிங்கே
எனையாளும் தமிழ்த்தாயே உன்னாலே சிறந்தேன்
எனக்குள்ளே நீயிருந்து எழுத வைத்தாய்
கணக்கில்லா சொல்வரிசை கற்பனை உன்னாலே
கண்ணுக்குள் உறைந்தாய் கனவாய் மலர்ந்தாய்
விண்ணுக்கும் மண்ணுக்கும் காற்றுக்கும் கடலுக்கும்
விரைந்திட வைத்தாய் வித்தைகள் வார்த்தையில்
நீரின்றி உலகில்லை நீயின்றி நானில்லை
யாரின்றி வாழ்ந்திடினும் உன்பிரிவு இயலாது
நானென்ற அகங்காரம் எந்நாளும் எனக்கில்லை
நாவினில் உன்னாலே நல்விதைகள் என்றென்றும்
போகாது எனைவிட்டு உன்பெருமை பாடுவது
நோகாத சொற்களிலே ஊரார்நலம் பாடிடுவேன் !

நல்வினை செய்

 கூடு விட்டுப் பறக்கு முன்னே கூவுது குயிலே

காடு முழுக்கக் கேட்கும் குரலில் கர்ஜிக்கும் சிங்கம்
பாடு பட்டு உழுதாலே பயிர் விளையும் பூமியிலே
நாடு விட்டு நாடு போனாலும் தாய்நாடு மறவாதே
கோடு போட்டு புள்ளிகளை இணைத்தாலே கோலம் உருவாகும்
வடு மார்பில் தாங்கினாலே வீரனெனச் சொன்னார் முன்னோர்
நடு இரவில் விழித்தே இரை தேடும் சில உயிர்கள்
படு பட்டுத் திருந்து என்று சொல்லி வைத்தார்
சுடு சொற்கள் பேசுவதே சிலரின் வாடிக்கை பாவியவர்
கடு கடுவென்ற முகம் ரசிக்கத் தக்கது அல்ல
விடு அனைத்தும் போகட்டும் சாக்காடு அழைக்கு முன்னே
நாடு நல்லதே ஒவ்வொரு நாளும் நல்வினை செய்

எஸ் பி பி

 உன் பாட்டில் உருகிய நாட்கள்

உன் குரலில் மயங்கிய கணங்கள்
காதலில் திளைத்த துளைத்த வரிகள்
கானம் என்றாலே உன் குரலாய்
உன்னோடு மயங்கி உன்னோடு உறவாடி
தன்னை மறந்த நாட்கள் எத்தனை
பாசமா காதலா உறவா நட்பா
தொடாத பாவங்கள் உண்டா இல்லை
பாடல்கள் வாழ்ந்த நாட்களிலும் அதிகம்
கால்கள் கண்கள் கைகள் அனைத்தும்
கட்டுக்குள் வைத்தாய் உனது குரலாலே
எஸ்பிபி என்பதே இசையான வார்த்தை
எங்கே சென்றாய் நிலாவே இருளிலா
வருவாய் தானே மீண்டும் மேகத்தினூடே !

நல்லது நடக்குமா

 என்ன சொல்லி என்ன பயன்

சொன்ன சொல்ல காக்க வேணும்
வானம் திறந்து மழை கொட்டுது
வனம் எல்லாம் பசுமை சேக்குது
ஏரு ஓட்டி சேத்துலே நாத்து நட்டு
ஏழை உழவன் விதைச்ச நெல்லு
ஊரு முச்சூடும் உண்டு மகிழுது
அவன் வாழ உதவி செய்வோமா
எவனோ அவன் என்று சொல்வோமா
கூப்பாடு வேண்டாம் கூலி போதும்
சாப்பாடு அவன் வயிறு நிறைய
வேறென்ன கேப்பான் கோவணம் போதும்
வேட்டு இல்லாம பாத்துக்க அதுக்கு
நாட்டு நடப்பு புரியலே எனக்கு
ஓட்டு மட்டுமே போடத் தெரியும்
உழைப்பவன் உயர உத்திகள் உண்டா
உண்டு கொழுப்பவன் உயர வழியா
கண்டு சொல்ல யாரும் உளரா
நல்லது நடக்குமா நாளும் கேள்வி
சொல்வதைச் செய்வர் பெரியோர் ஆவர் !

நடுநிலை பேசு

 இசை பாடும் குயிலே எங்கே நீயே

வசை பாடும் மனிதா ஏனோ நீயே
பசை போட்டு வாயை மூடி வைப்பாய்
அசை போட நாட்டில் ஆயிரம் உண்டு
கசை அடி தாங்கும் கயவரும் உண்டு
ஓசை பெரிதா ஓலம் பெரிதா தெரியாது
காசை இறைத்தால் காகமும் கழுதையும் பாடும்
மீசை வைத்தவர் மேடையில் வீரம் பேசுவார்
பாசை பிடித்த பழங்கதை பேசுவது ஏனோ
தசை எலும்பு எரிந்து சாம்பல் ஆகும்
தனது என்ற ஆணவம் அழிந்து போகும்
உனது ஆன்மா இறையடி சேர நேரும்
நன்மை தெரிந்து நடுநிலை பேசு இப்போது
உண்மை தெரிந்து உள்ளம் தெளியும் அப்போது !

மனிதம் வாழட்டும்

 என் வீ்ட்டு தோட்டத்துக் காய்கறி

உன் வீட்டு சாம்பாராய் சுவைக்கும்
பாய் வீட்டு பிரியாணிக்கு குருமா
பக்கத்து வீட்டு அந்தோணி கடாயில்
பொங்கலை சுவைக்க கமீலா சட்னி
வாங்க சாப்பிடலாம் சிங் கூப்பிடறார்
கூட்டுக் குடும்பம் கபீர் வீட்டில்
பாட்டுப் பாடி பிறந்த நாளில்
சேட்டுப் பையன் வயது ஐந்து
கோட்டுப் போட்டு பாரதி போல்
என்ன அழகுக் காட்சி கண்குளிர
மனிதம் வாழட்டும் மற்றவை எதற்கு

கவிதைக் காதலி

 மாலை வரும் முன்னே மழை வந்ததே

காலை முதலே வானிலே கருமேகக் கூட்டம்
கதிரவன் வரவை மேகப் போர்வை மறைக்க
சதிராடும் மயில்கள் மட்டும் தோகை விரித்தாட
குளிரான இதமான காலை போர்வை விலக்காமல்
பளீரென மின்னல் கீற்று எங்கோ தொலைவில்
இடியொன்று முழங்கி அடங்க விடியல் தொடக்கம்
முன்னிரவு மழையின் ஈரக்காற்று சன்னலின் ஊடே
என்னோடு கவிதைக் காதலி மட்டும் கதகதப்பாய்
மெல்லச் சொன்னாள் அத்தான் காலை ஆயிற்று
செல்லப் பணித்தாள் செவிமடுத்து துயில் எழுந்தேன்

நெருப்பு சுடும்

 தொன்று தோன்றிய தமிழே

இன்று பணிகின்றேன் உன்னை
கன்று தேடிய பசுவை
சென்று சேர்ந்து குதித்தது
நன்று தாயோடு சேயும்
பாசம் மனதில் கசியும்
நேசம் மானுடம் ஆகும்
வீசும் தென்றல் குளிரும்
பேசும் சொல்லில் இனிமை
யாதும் ஒன்றே என்றே
ஓதும் உள்ளம் வேண்டும்
வந்தோம் வாழ்ந்தோம் சென்றோம்
வந்ததின் நோக்கம் என்ன
புரிந்தவர் புதிரெனச் சொல்லார்
தெரிந்ததே அன்பெனும் சொல்லே
என்னையும் உன்னையும் சேர்க்கும்
பின்னெதனால் பித்தனாய் பேசினோம்
நட்பை மறந்த நாடகம்
நல்லது அல்ல தெரிந்தும்
நெருப்பு சுடும் என்றாலும்
நெருங்கி உறவாடுதல் ஏனோ

காலம் கனியட்டும்

 மனம் காற்றினும் விரைவாக ஓடப் பார்க் கிறது

தினம் மாதமாய் வருடமாய் மாறத் தோன்றுகிறது
காலம் கனிய ஒவ்வொன்றாய் கடந்தாக வேண்டும்
ஞாலம் விதிகளை வகுத்தே வைத்து இருக்கிறது
பத்து மாதம். சுமந்த பின்பே குழந்தை
முத்து சிற்பியில் உருவாக நாட்கள் தேவை
நேரம் நமக்காக இல்லை அதற்காக நாம்
தூரம் காதமாயினும் பறவை கடந்து வரும்
ஆமைகள் கூட கடலில் மிதந்து கரைசேரும்
ஆக்கப் பொறுத்த மனது ஆறப் பொறுப்பதில்லை
கனியும் வரை காத்திருப்பதே சுவை சேர்க்கும்
இனியும் மனமே ஓடாதே உணர்ந்து செயல்படு

பாரதியென்ற கவிஞன்

 பாட்டாலே புரட்சி செய்தான்

பாரதியென்ற கவிஞன் அன்று
சாட்டையடி வார்த்தைகள் சம்மட்டியாய்
சாதிகள் இல்லையடி சாடினான்
மூடநம்பிக்கை விட்டொழி என்றான்
மூப்பு வருவதற்குள் மறைந்தான்
ஒற்றுமை ஓங்குக என்றவன்
சொன்ன வார்த்தைகள் மறந்தனர்
பொய்கள் பேயென எங்கும்
பொல்லாத மனிதர் மாறுவதில்லை !

ஜி டி சுந்தர்

 எனது நண்பர் சம்பந்தம் அவர்களின் தம்பி். எனக்கு நண்பரும். 1980-82களில் நானும் அவரும் அம்மாவோடு தங்கியிருந்த நாட்கள். ஒரு லே அவுட் ஆர்ட்டிஸ்டாக வாழ்க்கையைத் தொடங்கினார். பத்திரிகைகளில் முதலில் வரையத் தொடங்கினார். இதயம் பேசுகிறது மணியன், திசைகள் மாலன், நக்கீரன் கோபால் என அனைவரோடும் நெருங்கிய நட்புண்டு.

நானும் அவரும் ₹110 வாடகையில் தியாகப்ப முதலி தெரு, கீழ்ப்பாக்கத்தில் தங்கியிருந்த நாட்கள் மறக்க முடியாதவை. ஒரே தலைப்பில் நானும் அவரும் எழுதிய கவிதைகள் டைரியில் இன்றும் உள்ளது.
அவர் பத்திரிகை, சினிமா, தொலைக்காட்சி என்று மீடியாக்களைச் சுற்றியே இன்னமும் வலம் வந்து கொண்டிருக்கிறார். திரைக்கதைகளும் எழுதி, சினிமாத்துறையில் நுழைவதற்கு ஆவன செய்து கொண்டிருக்கிறார்.
அந்தக் காலத்தில் சினிமா போஸ்டர்களின் ஆர்ட்டிஸ்ட் பெயர்களுக்குப் பின்னால் இவரது உழைப்பு மறைந்திருக்கும். ஈஸ்வர், உபால்டு என்ற பெயர்கள் பிரபலமான காலமது.
நேரம் சரியாக அமையாததாலோ என்னவோ குடத்திலிட்ட விளக்காய் இன்றும். குன்றிலேறும் நாள் வெகு தூரமில்லை என்பது என் கணிப்பு. இவரது எதிரியென்றால் அது இவரது முன் கோபம் மட்டுமே.
சின்னத்திரையின் பல தொடர்களில் இவரது முகம் இன்றும் அவ்வப்போது தோன்றும். ஆனந்தம் சீரியலில் உதவி இயக்குனராகப் பணியாற்றி உள்ளார். கடந்த ஐம்பதாண்டுகளாக இவரோடு தொடர்பில் இருக்கிறேன்.
திறமையிருந்தும் உச்சம் தொட முடியாத நண்பர்களில் ஒருவர். எனது மற்றும் கலையின் கவிதை நூல்களின் அட்டை வடிவம் இவரது கை வண்ணம்.
நட்புப் படகில் பல்வகை மனிதர்கள். பழக இனிமையானவர், பரந்த நட்பு வட்டம் உண்டு, என் முகதூல் கவிதைகளுக்கு இவரது கமெண்ட் நிச்சயம் இருக்கும்.