புதன், 31 மார்ச், 2021

தாத்தா

 பழைய நினைவுகளை அசை போடுவது ஒருவித மன மகிழ்வு. அன்னை வழி தாத்தாவின் ஒன்று விட்ட தம்பி ஜமேதாராக(Special Armed Police) இருந்த அதே குடியிருப்பில் பின்னாளில் எங்கள் குடும்பம் குடிபெயரும் என்பதை அறிந்திருக்கவில்லை. அவர் டூட்டியில் இருந்தபோதே மாரடைப்பால் இறந்தார் என்பதும் அப்போது எனக்கு மூன்று வயது என்பதும் பின் நாட்களில் தெரிய வந்தது.

எனது தந்தை ஜவ்வாது மலைக்காட்டில் காட்டிலாகா காவலராக இருந்து, அம்மாவைத் திருமணம் செய்த பிறகு, மேலே சொன்ன தாத்தா சிபாரிசால் சென்னை நகரக் காவலராகச் சேர்ந்தார் என்பதும் பாட்டி சொல்லக் கேட்டிருக்கிறேன்.
அம்மாவின் தந்தையும் தலைமைக் காவலர் பணியிலிருந்து பாதியில் இன்ஸ்பெக்டர் அவரை மரியாதையில்லாமல் பேசியதால் விலகியவர்.
தந்தையோ எட்டாம் வகுப்பே படித்திருந்தாலும் தூரத்துச் சொந்தமென்று திருமணம் செய்து கொடுத்துள்ளார்கள். அம்மாவும் அப்பாவும் பொருத்தமான ஜோடிகள், அழகானவர்களும். பிற்காலத்தில் ஏனோ எல்லாம் மாறிப்போனது. அம்மாவும் இளம் வயதிலே (36) இயற்கை எய்தினார்.
வாலாஜாபேட்டை கச்சால நாயக்கர் தெரு, ஆஞ்சனேயர் கோயில் பஜனை கோஷ்டியில் தாத்தா பிரபலமானவர். ஆஜானுபாகுவான அவர் கோபத்தில் கண்கள் சிவக்க பலமுறை பார்த்திருக்கிறேன். ஆஞ்சநேயரை நேரில் பார்ப்பது போலவே இருக்கும்.
தாத்தா வீட்டில் கழித்த நாட்கள் மறக்க முடியாதவை. மங்களூர் ஓட்டுக் கூரையுடன் நீண்ட வீடு. நடுவில் முற்றம். அந்த முற்றத்தில் சிட்டுக் குருவிகளும் சில நேரங்களில் குரங்கும் விசிட்டர்ஸ்.
பரணையில் மத்தளம் முதலான வாத்தியங்கள் இருக்கும் பின் கொட்டடியில் கிணறும், மாடும் கன்றும், சமையலறை, அதனையொட்டி வைக்கோல் அறையென்றும் இருக்கும். அந்த வைக்கோல் அறையில் புதையலொன்று வெள்ளிக்காசுகள் நிறைந்த பாத்திரம் கிடைத்தது என பாட்டி எனக்கு இரகசியம் சொல்லி இருக்கிறார்.
மகாபாரதம், இராமாயணக் கதைகள் பலவும் சொல்லக் கேட்ட காலம். அதே தெருவில் வசித்த தூரத்து மாமா பாலுவிடம் சிலம்பம் சுழற்றக் கற்றுக் கொடுக்கச் சொல்வேன். கடைசி வரை நிறைவேறவில்லை. கம்பை கையில் வைத்து தூரமாய் நின்று பார்த்ததோடு சரி.
வேர்க்கடலை அறுவடை சமயங்களில் பச்சையாக சாப்பிடுவதும், காராமணி போன்ற காய்களை சுட்டு சாப்பிடுவதும், சின்னக் கொட்டகையொன்றில் உட்கார்ந்து காவல் காப்பதும் ஆண்டு தோறும் நடக்கும்.
துவரை மண்டை எனச்சொல்லும் பயிறு அறுக்கப் பட்ட செடிகள் கட்டாகக் கட்டி தலையில் சுமந்து வீட்டிற்கு வந்து உலர்த்தப்பட்டு அதுவே சமையல் விறகாக்கப் படும்.
உழவுத் தொழிலுக்கும் எனக்கும் தொடர்பு இருந்து கொண்டே இருந்திருக்கிறது. ஏர் ஓட்ட முயலும்போது கலப்பை நேராகப் பிடிக்கத் தடுமாறியது நினைவில் இருக்கிறது. வயலில் நீர் பாய்ச்ச மடை மாற்றம் செய்வதில் அவ்வளவு ஆர்வம்.
மீர்சாகிப் பேட்டை வாடகை வீட்டிலிருந்து, அப்பா மைலாப்பூர் நல்லாங்குப்பம் காவல் நிலையத்தில் காவலராக, கீழ்பாக்கம் குடியிருப்புக்கு மாறிய வருடம் 1962. கல்வி வாழ்க்கையின் ஆரம்பம்.


மதம் கொண்டாயா

 இன்றோ நாளையோ இருப்பதோ போவதோ

என்றோ எங்கோ பிறந்த உயிரே
சொல்லிடு உண்மை மனிதன் தானே
சொந்தமா இந்த மண்ணும் உனதா
மதம்தனைப் பிடித்து மதம் கொண்டாயா
மரணம் வருங்கால் ஆறடியோ அக்னியோ
எதுவரும் உன்னோடு அறுதியாய் கூறுவாயா
எத்தனை காலமாய் பித்தம் உனக்கு
இரத்தம் எலும்பு சதையால் ஆனதே
இறைவன் படைப்பில் இல்லை வேற்றுமை
திருந்தவும் திருத்தவும் இயலாத் திமிருனக்கு
தீர்ப்பு நாளில் தீயால் பொசுங்கிடுவாய் !

புதிரோநீ !

 எனக்குள்ளே உறைவாயோ எங்கிருந்து வந்தாயோ

எதற்காக சொல்வாயா என்னவென்று நினைப்பேனோ
கண்ணுக்குள்ளே முத்துக்களோ காதோரம் பேசுவையோ
கண்ணான கண்மணியோ கள்ளமற்ற அன்புருவோ
வருவதும் தெரிவதில்லை வாழ்வதும் புரியவில்லை
உருவம் உனக்கில்லை உருகவைக்க தெரியுமானால்
சிரிப்பது சிலநேரம் சிந்திப்பது பலநேரம்
சிந்தும் கண்ணீரும் குறையாது உன்நினைவால்
யாரென்ற கேள்விக்கு யாதொரு பதிலில்லை
பேரொன்று உண்டோ சொல்வாயோ புதிரோநீ !

தினமொரு செய்தி

 விடிவதைக் கட்டியம் கூறின வானவேடிக்கை

விடுகதை போலொரு கவிதை கருக்கலில்
பலவகைப் பாடலும் பலரது சரிதமும்
கடலது படகு சுமக்கும் ஓவியம்
கருநிற மேகமும் கதிரவன் வரவும்
கருத்துடன் காலை வணக்கம் சொல்லும்
எதிரணி என்று சிலவகை அரசியல்
புதிராய் சிறுசிறு தகவல் பரிமாற்றம்
வகைக்கொரு ஓவியம் வார்த்தை விளக்கம்
நகைப்பது போலவே துணுக்குகள் சிலவும்
துப்பறிவு செய்து விளக்கிடும் போலிச்செய்தி
எப்போதும் அமைதியாய் விளங்கிடும் சிலரும்
நண்பர்கள் பலவகை நானுமந்தக் குழுவினில்
நல்மனதோடு தினமொரு செய்தி சொல்வோம்

பண்பாளர் கடன்

 வார்த்தைகள் விளையாடும் வந்தொரு கவிநாளும்

வாதங்கள் தொடரும் வளமான தமிழதனில்
யாருக்கு வெற்றியென போராடும் குணமில்லை
ஊருக்கு நல்லதொன்று நடந்தாலே போதுமென்று
சேற்றிலே செந்தாமரை பூத்திடும் நாளுக்காய்
காற்றில் தூதுவிடும் கவிஞர் நாமெல்லாம்
சேருமென்று செவிகளில் நாளுக்கொன்றாய் நல்கவிதை
கருத்து சுமந்து இதயத்தைத் தொடுவதுண்டு
நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும்
கல்லான மனதுக்கும் சேருமென்ற நப்பாசை
செயல் செய்வது எம் கடன்
பயன் தருவது பண்பாளர் கடன்

ஓட்டை வித்துப் புடாதீங்க

 ஏலே முத்து எலெக்‌ஷன் வருதாம்ல

என்ன சொல்றாவ கட்சிக் காரவ
அடுக்கடுக்கா அள்ளி உட்ரானுவ இப்ப
ஏம்லே ஆட்சில இருக்கப்ப பண்ணலே
இவனுக இப்படித் தானே செய்வாக
பொய்ய பேசி கால்ல விழுந்து
கோட்டைய பிடிச்சு கொடிய ஏத்தி
சொன்னது எல்லாம் காத்துலே பறக்கும்
தலைவனுங்க நல்லவனே இல்லையா முத்து
மகராசன் காமராசர் போல எவனுமில்ல
மக்கள முன்னேற்ற நாதி இல்ல
கேடு கெட்டு போச்சுடா எல்லாமே
ஓட்டு கேட்டு வருவானுவ இளிச்சுகிட்டு
பாவி மக்கா பணம்காசு வாங்கி
ஓட்டை வித்துப் புடாதீங்க மறுவாட்டியும்
இருக்கிற பொறுக்கிலே சுமாரான பொறுக்கிக்கு
ஓட்டைப் போட்டு நாட்டை காப்பாத்துவம்

நாலும் மாறிடும்

 நாளை நடப்பது அறிந்தவர் எவருளர்

நாலும் மாறிடும் நல்லதே நடக்கும்
வீணர் போவதும் தீ்ரர் வருவதும்
கோணங்கள் மாறிடும் கோலங்கள் தோன்றிடும்
ஆறுதல் சொல்வது அடுத்தவர் செயலாம்
தேறுதல் தெரிதல் புத்திக் கூர்மையாம்
சொல்வதும் செய்வதும் ஒன்றே ஆகுமா
நல்லவர் வல்லவராதலின் நன்றே நடக்குமாம்
வளமைகள் பெருகிட வறியவை அழியுமாம்
வகுத்திடும் திட்டங்கள் வரைபவர் திறமையால்
பொய்களும் மாயையும் பொசுங்கிப் போகுமாம்
உண்மை பேசுதல் உயர்வைத் தந்திடும்
கடமை மட்டுமே கருத்தில் கொண்டவர்
உடனே செய்வர் உயரும் சமுதாயம்

பெண்ணெனும் பிறவி்

 ஆடி வரும் அசைந்து வரும்

ஓடி வரும் ஒய்யாரமாய் வரும்
தேடி வரும் தென்றலாய் வரும்
நாடி வரும் நளினமாய் வரும்
போடி என்ற சொல்லில் சிணுங்கும்
கோடி கொடுத்தாலும் கிடைக்காத அன்பு
வாடி என்றதுமே வந்து ஒட்டும்
அடியே என்றழைக்க அழகாய்ச் சிரிக்கும்
வடிவாய் முகத்துடனே வலம் வரும்
சேடியாய் சேயாய் தாயாய் மாறும்
பாடிய காவியங்கள் பலவும் அவள்புகழை
பெண்மைக்கு விழாவெடுக்க ஒருநாள் போதுமா
பெற்றவள் உற்றவள் உடன்பிறந்தாள் தோழியென
உடன் வருவாள் வாழ்வு முழுதும்
உன்னதமே பெண்ணெனும் பிறவி் நன்றே !

சூரத் பயணம் (4)

மறுநாள் காலையுணவுக்குப் பின் மகாபலேஷ்வர் ஷாப்பிங் விசிட். ஒரு நீண்ட தெருவே ஷாப்பிங் ஏரியா. பழவகைகள் முதல் காஷ்மீர் சால்வைகள் வரை ஒரே தெருவில்.

பெர்ரி பழங்கள் பல நிறங்களில் விளையும் என்பது முதன் முறை அறிந்தேன். கைவினைப் பொருட்கள் விதம் விதமாய். வியாபாரமும் பேசினேன், காஷ்மீர் போர்வைகளை மொத்த விலையில் பெங்களூருக்கே சப்ளை செய்வதாகச் சொன்னார். விசிட்டிங் கார்ட் பெற்றுக் கொண்டேன். உறவினர்க்கு கொடுப்பதற்கு போர்வையும் வாங்கிக் கொண்டேன்.
அருகிலுள்ள அழகிய பள்ளத்தாக்கு அடுத்த விசிட் . காய்ந்த மலைச்சிகரங்கள்,ஆழமான பள்ளத்தாக்கு, மலை உச்சியிலிருந்து பார்க்க நன்றாக இருந்தது. பார்வையாளர்கள் மலைமீது நின்று கேமிராக் கோணங்களில் போட்டோக்களைச் சுட்டனர்.
இந்த இடம் மழைக்காலங்களில் பார்த்தால் இன்னும் அழகாகத் தோன்றும் என எண்ணினேன்.
பயணத்தை மறுபடி தொடங்கி அடுத்த நகரான பெல்காமை அடைந்தபோது இரவாகி விட்டது. குளித்து அறையிலே உணவு சாப்பிட்டு களைப்பில் உறக்கம் விரைவில்.
மறுநாள் காலையில் பெங்களூர் பயணம். ஹைவே என்றாலும் ஒருவித dry பயணமே, எல்லாம் காய்ந்து போனது போல். அவ்வப்போது ஓய்வு, அதுவும் மதிய உணவுக்குப் பின் கண் அசதி அதிகமானால் காரை நிறுத்தி பத்து நிமிடம் கண் மூடி உறங்கி முகம் கழுவி மீண்டும் பயணம். நவம்பர் மாதமானாலும் வறட்சியான வெப்பம்.
ஏழு மணி நேரப் பயணத்திற்குப் பின் பெங்களூர் புறநகரைத் தொட்டு நைஸ் ரோடு வழியாகப் பயணித்து வீட்டை அடைந்த போது மாலை விடை கொடுத்து இரவுக்கு வரவேற்பு அளித்தது இயற்கை. ஒரு நீண்ட பயணம், சுமார் 3000 கிமீ, முடிவுக்கு வந்தது. வியாபார உலகின் இன்னொரு அனுபவமாய் இந்தப் பயணம்.
( முற்றும்)

சூரத் பயணம் (3)

மும்பாய் நகருக்குள் சுற்றுவதற்கு ஆட்டோக்களையே பயன்படுத்தியது எதனால் என அனைவருக்கும் தெரியும். மும்பாய் விட்டு சிற்றுண்டிக்குப் பின் கிளம்பி சூரத் நெடுஞ்சாலை அடைய நண்பகல் ஆகிவிட்டது.

GPRS மேப் நிறையவே பயன்பட ஆரம்பித்த காலம். கவனமாக இரு்க்கவேண்டும், சில நேரங்கள்ளே சுத்தி விட்டுடும். சூரத் அடைந்தபோது இருட்டி விட்டது. புக் செய்த ஓட்டலை அடைந்து அடையாள அட்டை காண்பித்து அறையிலேயே உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டு அன்றைய பொழுது முடிந்தது.
மறுநாள் புடவை மற்றும் சுடிதார் மெட்டீரியல் ஆர்டர் செய்ய முடிவு செய்து விடுதியினரிடம் விசாரித்து ஆட்டோவில் பயணித்து மொத்த வியாபார இடத்தை அடைந்து கடைகளில் நுழைந்தபோது தெரிந்தது, குவியல்களாகக் குவிக்கப் பட்ட புடவைகள் மேல் நடந்துதான் செல்ல வேண்டுமென்று.
குறைந்த விலையாய் நூற்றைம்பது ரூபாயிலுருந்து வகை வகையாய் சேலைகள் மற்றும் சுடிதார் துணிகள். சேலைகளும் சுடிதாரும் பல வகைகளில் தேர்வு செய்யப் பட்டு சுமார் ஒரு லட்சத்துக்கு மேலாக ஆர்டர் செய்து ஐம்பது விழுக்காடு அட்வான்ஸ் மீதம் துணிகள் டெஸ்பாட்ச் ஆவதற்கு முன்பும் எனப் பேசப் பட்டது. செலக்ட் பண்ணது ஒன்றும் அவன் அனுப்பியது வேறுமாய் வந்து சேர்ந்தபோதே தெரிந்தது. இது ஒரு வகையான மோசடியே.
மோடியின் குஜராத் பற்றி அதிகமாகப் பேசப்பட்ட நேரம். பல எதிர் பார்ப்புகளோட நகரத்தைப் பார்த்தபோது ஒன்றும் பெரிதாக மாற்றம் தெரியவில்லை, பேருந்துகளுக்கென்ற தனியான பாதைகள் மட்டுமே ஒரு மாற்றமாய்.
மறுநாள் காலையில் சூரத்திலிருந்து புறப்பட்டபோது மகாபலேஷ்வர் அடுத்த இலக்காய் முடிவானது. நெடுஞ்சாலையில் பயணித்து மும்பாய் நகருக்குள் நுழையாமல் சென்றாலும் லாரிகளின் அணிவகுப்பைக் கடந்து பூனாவைக் கடந்தபோதே போக்குவரத்து நெரிசல் குறையத் தொடங்கியது.
இப்போது மகாபலேஷ்வர் பிரியும் சாலையைக் கவனமாய்ப் பாரத்துக் கொண்டே சதாரா மலைக்குன்றுகளைக் கடந்த போதே மாலையாகிவிட்டது.
ஹைவேயில் பிரிந்து சுமார் நாற்பது கிமீ கடந்து மகாபலேஷ்வர் அடைந்த போது இரவு ஏழு மணியாகிவிட்டது.
சிறிய நகரமானாலும் நிறைய தங்கும் விடுதிகள். சுற்றுலாத்தளமென பார்த்தவுடன் தெரிந்தது. ஆனாலும் ஊட்டி, கொடைக்கானல் போல உயரமான இடத்தில் இல்லை. அறையில் சென்று சூடாகக் குளித்து இரவு உணவு முடித்து படுக்கையில் விழுந்தபோது இந்நகரம் எவ்வாறு இருக்கும் எனப் பார்க்கும் ஆவலோடு கண்ணுறக்கம் தழுவியது
(தொடரும்)

சூரத் பயணம் (2)

மறுநாள் காலை மகாலட்சுமி கோயிலுக்குச் சென்ற போது சிறிய வரிசையில் பல் வயது மனிதர்கள். மிகவும் பிரபலமான ஆலயம், மராட்டிய சிவாஜி வழிபட்ட ஆலயம் என்பர். தரிசனம் முடித்து காலையுணவு முடித்து மீண்டும் பயணம்.

இரண்டாவது இலக்கு பம்பாய் என முதலே முடிவெடுத்தது.
நெடுஞ்சாலை நன்றாக இருந்த சில இடங்களில் ஸ்பீட் டெஸ்ட் நூற்றைம்பது கிமீ வரை. சதாரா குன்றுகளைக் கடந்து, பூனாவையும் கடந்து, ஹைவே தொட்டபோதே இருட்ட ஆரம்பித்து விட்டது. இந்த ஹைவே அனைவரும் அறிந்தது, வேகமாகப் பயணிக்க ஏதுவானது.
பம்பாயை அடைந்து போக்குவரத்து நெரிசலில் ஓட்டுவது ஒரு அனுபவமே.
ஓரிடத்தில் சிக்னலைக் கடக்கும் போது ரெட் சிக்னல் விழவும், நின்றிருந்த போலீஸ்காரர் மடக்கவும் சரியாக இருந்தது.
அவரிடம் வேறு வழியில்லாமல் முந்நூறு ரூபாய் தண்டம் கட்டிவிட்டு முன்னமே புக் செய்த ஓட்டலைச் சேர்ந்து குளியல்போட்டு உணவருந்தி படுத்தபோது சுகமான தூக்கம்.
மறுநாள் காலையில் மங்கள்தாஸ் மார்க்கெட் பிறகு பேன்சி ஐட்டம்ஸ் மொத்த வியாபார இடங்களில் விலைகள் விசாரிப்பும் ஸேம்பிள் ஐட்டங்கள் வாங்குதலும் நடந்தது.
முந்தைய கட்டுரைகளில் சொல்லியிருந்த பர்னிச்சர் வியாபாரம் சரியாகப் போகாததால் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் பேன்சி பொருள்கள் வியாபாரம் செய்யலாம் என்ற ஐடியாவில் இந்த விசிட்.
பம்பாய் சுற்றுதல் முடிந்து ஹோட்டல் அறையில் வந்து தங்கிய போது மறுநாள் காலை சூரத் பயணம் போகவேண்டும் என்ற நினைவோடு உறக்கத்தில் ஆழ்ந்து கனவுகளில் நுழைந்த்து மனது
( தொடரும்)

சூரத் பயணம்

நவம்பர் 2013

செப்டம்பர் 2013, 25ம் தேதி எனது மூன்றாவது கார் வாங்கியபோதே சூரத் போகணும்னு எண்ணம் வந்தது. 57 முடிந்து 58 தொடங்கியபோது நானே கொடுத்துக் கொண்ட பரிசு. சான்ட்ரோ எக்சேஞ்சில் (9 வருடமாகியிருந்தது, 117000 கிமீ) ஒரு லட்சம் போக மீதிப் பணம் செலுத்தி I20 Asta மாடல் வாங்கியாச்சு.
ஒர் சுபயோக சுப தினம் காலை ஏழு மணிக்கு பெங்களூரை விட்டுக் கிளம்பியாயிற்று. முதல் ஸ்டாப் கோலாப்பூர் என முடிவானது.பெல்காமைக் கடந்து மாலைக்குள் அடைந்து விடலாம். கொஞ்சம் வறண்ட்நெடுஞ்சாலை தான் ஆனால் வேகமாய்ப் பயணிக்க வசதியான சாலை. இளைப்பாறவும் தேநீர் உணவு விடுதிகளும் உண்டு.
நீண்ட தூரப் பயணங்கள் ஏற்கனவே 2009ல் இருந்து பழகியதால் சிரமம ்தெரியவில்லை. காரும் புதியது. நல்ல பிக்கப், மைலேஜ் குறைவு தான், பெட்ரோல் கார்களில். 13கிமீலிருந்து 14கிமீக்குள்.
சித்ரதுர்கா மலைகளில் காற்றாலைகளைக் கடந்து், மணிக்கு அறுபதிலிருந்து எழுபது கிமீகளை விழுங்கி கோலாப்பூர் அடைய மாலை சுமார் ஆறு ஆகி விட்டது.
களைப்பானதால் மறுநாள் மகாலட்சுமி கோயில் போக முடிவெடுத்து, சூடான நீரில் குளியல் போட்டு படுத்தபோது புது உற்சாகம் தோன்றியது. 600 கிமீ கடந்து விட்டோம் என்ற மகிழ்ச்சி மனதில்.
(தொடரும்)

தேடுதல் தொடரும்

 வாழ்க்கை அப்பப்ப பேலன்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கும். உயரப் பறக்குறது கீழேயும் கீழே இருக்குறது மேலேயும் போற ராட்டினம் மாதிரி.

எதிர்காலம் இப்படித் தான்னு தேர்தல் ரிசல்ட் மாதிரி வாழ்க்கையை சொல்ல முடியாது. இரயில் சிநேகம்னு சொல்ற மாதிரி வண்டி மாறி சனங்களும் மாறிக்கிட்டு இருக்கும்.
வடக்கே போறமா தெற்க நோக்கி போறமா எந்த ஸ்டேஷன் வந்தா இறங்கனும்னு குழப்பம் கூட வரும். பேச்சு கொடுக்க ஒருத்தர் கிடச்சா காலம் முழுக்க அவரோட இருக்கப் போற கணக்கா பேசிட்டு, இறங்கறப்ப வரேங்க பாக்கலாம்னு சொல்றப்ப, வாழ்க்கைலே இனிமே அவர பாப்பமான்னு தெரியாது.
ஞானம் பிறக்கும் சில வேளைலே, இனிமே இப்படிச் செய்யவே கூடாதுன்னு, விடிஞ்சா போச்சு குடிகாரன் பேச்சு கணக்கா திரும்ப அதே தப்பை செஞ்சுட்டு கைய பிசையறப்ப தன்னையே திட்டிக்கத் தோணும்.
உலகம் ரொம்ப கெட்டுப் போச்சுப்பா, நல்லதுக்கே காலமில்லை சொல்லிட்டே இருப்போம், செவ்வாய் கிரகத்துக்கா போக முடியும். இருக்கறவங்க மேலே மேலே சேக்கறதும் இல்லாதவன் அத பாத்து ஏங்கறதும் வறுமையின் வரம்.
எல்லாமே மாறும்னு கனவு மட்டும் நிறைய காணுவோம். இன்னொரு தடவ தண்ணிலே உலகம் அழியப் போதுன்னு யாரோ சொன்னது நினைவு வருது.
ஓடிட்டே இருக்கனும் ஓய்வில்லாம எதையோ ஒன்று தேடிக்கிட்டு, திருப்தி இல்லாத, மனசு அமைதியில்லாம, காலமெல்லாம்.
யாராவது ஒருத்தனையாவது பாத்துரவோமா, இந்தப் பயணம் முடியறதுக்குள்ளனு, தேடுதல் தொடரும்.
உருண்டையா இருக்கறதாலே தேட ஆரம்பிச்ச இடத்துக்கே திரும்பவும் வருவோம். தேய்ந்த உடம்பும் சோர்வான உள்ளமும் ஞானி போன்ற எண்ணங்களும் மட்டுமே மிஞ்சும்.

இயற்கை அழகு

 இயற்கையை ரசிப்போம் இரவின் நிலவொளியில்

வயல்கள் தோறும் பசுமை போர்த்தி
வான்வெளி வண்ணக் கலவை வேடிக்கை
வாசமலர்கள் தோட்டம் வண்டுகள் ரீங்காரம்
நெளிந்து வளைந்து நெடுதூரம் நதிகள்
நெடிதுயர்ந்த மலைச் சிகரம்
களிநடனம் புரியும் மயிலும் கானகமும்
துள்ளும் மானும் துரத்தும் புலியும்
பள்ளம் நோக்கிப் பாயும் அருவியும்
மேகக் கூட்டம் முழங்கும் இடியும்
போகும் வெள்ளம் பெருமழை பெய்தால்
கண்ணுக்கினிய காட்சிகள் கடலும் சேரும்
எண்ணிலடங்கா அதிசயமே இயற்கை அழகு

புனிதமான உறவு

 நாம் ஞானிகள் அல்ல அனுபவசாலிகள்

வாழ்க்கை பலவற்றை நமக்கு போதிக்கிறது
தூய்மையான மனதோடு வாழப் பழகுவோம்
நட்பு புனிதமான உறவு உறவுகளுக்குள் மேன்மையானது
திறந்த மனதோடு பழகுவோம் விமர்சனங்களை ஏற்போம்
மதம் சாதி மொழி கடவுள் எல்லாமே நாம் உருவாக்கியவை
அதுவே இன்று மனபேதங்கள் பொறாமை சண்டைகளை புகுத்தியது
வாழுகின்ற சில நாட்கள் மன அமைதியோடு வாழப் பழகிக் கொள்
திருந்தப் பார்ப்பது உண்மை நட்பு உதவும் எண்ணம் ஒற்றுமை ஓங்கட்டும்
பணம் வருவதும் போவதும் இயற்கை மனங்களை காயப்படுத்த பணத்தைப் பெரிதாக எண்ணாதே
நெல் விளையும் வயலில் தான் புல்லும் விளையும் களையெடுத்து நல்ல நெல்மணிகளைக் கண்டு மனம் மகிழப்பார்

குழப்பம் மனதில்

 நல்முத்துக்கள் காணற்கரியவை கிளிஞ்சல்கள் மணல்வெளியெங்கும்

சொல்வதொன்றும் செய்வதொன்றும் வாடிக்கையாய்ப் போயிற்று
விதைகள் தவறாய்ப் போனதால் விளைவதும் பதராயிற்று
கதைகள் பலவும் மயக்கும் வார்த்தைகளில்
நல்லது எங்கேயென தேடுதல் வேட்டையானது
பொல்லாதது ஆட்சிக் கட்டிலில் கபடநாடகம்
எங்கே போகிறோம் அறிவதே கடினமாய்
எங்கும் மாயவலைகள் மனிதர்கள் மயக்கத்தில்
மாறிடுமா இந்நிலை வளமுறுமா வாழ்க்கை
கூறுவதற்கு யாருண்டு குழப்பம் மனதில்

எனக்குப் பிடித்த நகரம்

 எனக்குப் பிடித்த நகரம்

என்னோடு வளர்ந்த நகரம்
வந்தாரை வாழவைக்கும் நகரம்
வளமான நாகரீக நகரம்
சென்னை அதன் பெயராம்
என்ன இல்லை இங்கே
பழமையும் புதுமையும் கலந்தே
ஏழ்மையும் செல்வமும் சேர்ந்தே
கற்றலின் சிறப்பும் இங்கே
கல்லூரிகள் பலவும் உண்டே
கடற்கரைக் காற்றின் பெருமை
கற்பிக்கும் காதலும் சேர்ந்து
கோயி்ல்கள் கோபுரங்கள் பலவும்
கோலங்கள் சுமந்த தெருக்களும்
மாதாகோவில்கள் மசூதிகள் என்றும்
மதங்களைக் கடந்த ஒற்றுமை
மொழியொன்றும் உண்டு தனியாக
வழிவழியாகவந்த சென்னைத் தமிழதுவே
வலம்வர இடங்கள் பலவும்
வசதிக்குக் குறைவில்லை இங்கே
வணக்கம் சென்னை வசப்பட்டேன்
வண்ணக் கலவைகள் வானவெளியில்

இரங்கற் பா

தலை குனிய வைத்த குடிசை

கலை நயம் யாதும் இல்லை
மின் விளக்கும் வாராத காலம்
என் பெரிய அன்னை குடில்
கிழக்கு வாசல் மஞ்சம்புல் கூரை
வழக்கில் உண்டு சாணப் பூச்சு
தரை எங்கும் அறை இரண்டும்
வாசல் முச்சூடும் சாணத் தெளிப்பு
வாசனை உண்டு செம்மறி ஆடு
விடுமுறை நாட்கள் ஒவ்வொரு ஆண்டும்
வடுவாய் மனதில் பதிந்த இளமை
கண்ணே என்றழைத்து சூடாய் இட்லி
களியோடு சிலநாளும் கைக்குத்தல் அரிசிச்சோறு
வார்த்தையில் குளிரூட்டும் அன்பும் ஊட்டும்
வாராது போனநாட்கள் போனாளே அவளுமின்று
பெரியம்மா அழைப்பதற்கு அவளில்லை இன்று
பெரிதான இழப்பதுவே இறையடி சென்றடைந்தாள்
நாய்க்கனேரி கிராமத்து கடையான மூத்தஉறவு
வாய்க்குமா மறுவாழ்வில் அவளன்பின் அணைப்பு !
இறந்த நாள் .12/02/2021

கற்பனை உலகம்

 நீரூற்று நிலமதை பாதையாக்கி ஓடையானது

நீலவானில் நிலவதுவோ புவியதனைச் சுற்றிவந்தது
காற்றோடு உறவாடி மரங்களங்கே சலசலத்தன
நாற்றம் சுமந்த மலர்கள் நாசிக்குள்
பனித்துளிகள் புல்நுனியைப் புகலிடமாய்க் கொண்டன
பகலவன் கதிரலைகள் விடியலைக் கொணர்ந்தன
மலையுச்சி மேகமதைத் தழுவி மகிழ்ந்தது
அலைகள் அடுத்தடுத்து கரைசேர்ந்து கரைந்தது
கூடுவிட்டுப் புள்ளினங்கள் இரைதேடிப் பறந்தன
காடுவிட்டு காடுகடந்து விலங்கினமோ இரைதேடின
பாடுபட்டு உழைத்தவனோ களத்து மேட்டில்
பகற்கனவில் கற்பனை உலகம் கண்டான்

எதுவெல்லாம் காதல்

 எதுவெல்லாம் காதல் எடுத்துச் சொல்வாயா

எவரோடு எவருக்கு காதல் வருமய்யா
அன்னையின் காதல் அழகு மகவோடு
தந்தையின் காதல் பிள்ளைகள் உயர்வில்
நண்பனின் காதல் தன்னலமற்ற ஒன்று
நகரத்தார் காதல் தாமரைஇலைத் தண்ணீர்
உத்தமர் காதல் உண்மை சொல்வதில்
பித்தனின் காதல் பிதற்றும் சொற்களில்
கற்றவர் காதல் கற்கண்டாய் பேச்சினில்
சொற்களில் செய்கையில் சோர்விலர் செயல்வீரர்
பற்றுதல் பக்தியில் பரமன்மேல் காதல்
கொற்றவன் காதல் குடிகளின் நல்வாழ்வு
கற்களைச் சிலையாய் வடிப்பவன் சிற்பி
சிற்றுளி படைக்கும் காதலின் சின்னம்
காதல் வருவது எவ்வழி அறியோம்
காவியக் காதலில் சோகத்தின் இழைகள்
மோதலில் காதலும் முகிழ்ப்பது உண்டு
மோகத்தில் வருவது காமத்தின் காதல்
எண்ணற்ற வகைகள் காதலில் உண்டு
எண்ணிப் பார்த்திட தினமொன்று வேண்டுமோ?

முதல் காதல் நாயகி

 என் இரண்டு கண்களிலே பூத்தவளே

பண் பாடி தாலாட்டி உறங்க வைத்தவளே
சொல்லாத ஊருக்கு பயணித்துப் போனாயோ நீ
பொல்லாத பெண்ணே நீயில்லாத தவிப்பில் நான்
கல்லாக உன்மனதோ கருணை இல்லாமல் போனதுவோ
காலங்கள் கடந்தோடி கால்களும் சோர்ந்து விட்டதடி
அன்று போனவளே அக்கரையை சேர்ந்தாயோ சொல்
என்று உன்முகம் காண்பேன் விடை சொல்வாயா
தெருக் கோலம் போட்ட நாட்கள் நினைவுண்டா
தெரியாமலே போனவளே தேடி நான் வரவா
முதல் காதல் நாயகியே முகம் காணமுடியாதா
முற்றும் எழுதவோ முடிந்த கதை இதற்கு

வல்லூறு

 நல்லதோர் வீணை தேடி நாடெங்கும் பயணம்

நலிந்தோர் நலம் நாடி வீதியெங்கும் போராட்டம்
சொல்லும் பொய்களுக்கு அளவில்லா தலைமைப் புளுகர்கள்
வெல்லும் உண்மையென காத்திருக்கும் எங்கள் உள்ளம்
வஞ்சகம் தலை விரித்தாடும் அவலம் நாட்டிலே
கொஞ்சமும் வெட்கமின்றி உலா வரும் உன்மத்தர்
நெஞ்சு பொறுக்குதிலை நிலையற்ற சமுதாய நிலைகண்டு
அஞ்சிச் சாவதொன்றே வழியாமோ விடியல் இல்லாமல்
நல்லோர் உலகில் மறைந்து போயினரோ ஐயமுண்டு
வல்லூறு வட்டமிடும் வானில் வாழ்வே கேள்வியாய்
குவியும் செல்வமெலாம் ஓரிடத்தில் குற்றம் இதுவன்றோ
குடிகள் சோகமுற கும்மாளம் இவர் உலகில்
வேதனை மாறுமோ வேடிக்கை மனிதர் ஒழிவரோ
வேதாளம் ஆட்டத்தில் நாடிங்கே பாதாளம் நோக்கி !

காத்திருக்கும் காலமெல்லாம்

 பற்பல வர்ணங்கள் பற்பல மதங்கள்

பாரத தேசமென்று பெயர் அதற்கு
கற்பதும் பலமொழிகள் காண்பது பலநிறங்கள்
என்றாலும் ஒற்றுமை ஓங்கி நிற்கும்
வளமான நாடென்ற பெயரும் இதற்குண்டு
வந்தோரை வரவேற்கும் விருந்தோம்பல் உண்டு
கனிம வளங்கள் காடுகள் தன்னகத்தே
பனிச் சிகரம் பாய்ந்தோடும் நதிகள்
நீண்ட கடலோடு இயற்கை எழிலுமுண்டு
பண்டைய நாகரீகம் பலவும் தோன்றியதிங்கே
எதிலும் குறைவில்லை என்றேன் இறுமாப்பாய்
ஆணவக் கொலைகள் அழிந்ததா எனக்கேள்வி
ஆள்கின்ற வர்க்கம் ஊழலற்றதா வினாக்கள்
உழவன் உயர்ந்தானா வறியவன் ஏற்றமுண்டா
உனதென்ற எனதென்ற
சண்டைகள் மறைந்ததா
விலைகள் மலிந்தனவா வீதிகளில் அமைதியுண்டா
விழுக்காடு வளர்ச்சியிலே உயர்வுண்டா உண்மையிலே
கனவுகள் கண்ட கலாமின் கற்சிலை
கற்பனைகள் நிஜமாக காத்திருக்கும் காலமெல்லாம்

அழகிய மனமே

 நல்ல மனமிருந்தால் நல்லதே நடக்கும்

சொல்லில் செயலில் உண்மை மிகுந்திருக்கும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாது
கள்ளமற்ற சிரிப்பை கண்களும் உதிர்க்கும்
கபடம் தெரியாது கள்வம் அறியாது
விகடம் பேசும் வியக்க வைக்கும்
சொல்லும் சொல்லில் சொக்க வைக்கும்
நல்ல எண்ணங்கள் நன்மை பயக்கும்
வறுமை போக்கும் வளமை சேர்க்கும்
பொறுமை மனதில் பொல்லாப்பு இல்லை
அரியது ஆனது ஆங்காங்கே ஒன்றாய்
அழகிய மனமே அன்பின் இருப்பிடம்

Love is felt

 Will return soon to see you

While my soul travels to you every day
Across the mountain to touch you feel you
Alas you are far off south to north east to west
Words carry the message to you hold it close
Wisdom destiny will bring the hearts together
Love is felt in the air which comes from nowhere
Lonely I feel at times your words console me
Gazing in the dark at night sky
Glittering stars tell that you are smiling at a far off place
Waiting to hold your hand walk with waves in ocean

இந்தியன்

 எம்நாடு போல் எந்நாடு உண்டு

எழில் நிறை இயற்கைச் செல்வங்கள்
மொழிகள் பலவாகும் மதங்களும் பலவுண்டு
வழிகள் வழிபடல் வேறாய் ஆயிரமாய்
இந்தியன் என்றொரு இதயம் இரும்பாய்
எந்தையர் பெற்ற சுதந்திரம் பேணுவோர்
எல்லையைக் காத்திடும் எம்வீரத் திலகங்கள்
தொல்லைகள் பொறுத்து தொலைவினில் உறவுகள்
பகலிரவு பனிச்சிகரம் பிணிகள் துச்சமாய்
புகமுடியா அரணாய் தூண்களாய் காலமெல்லாம்
வணக்கத் திற்குரியோர் வந்தேமாதரம் என்போம்
இணக்கம் இதிலுண்டு இந்தியக் குடியரசில்

வாழ்வில் அமைதி

 உலகில் அரியது நல்ல நட்பு

உண்மைப் பாசம் தாயின் அன்பு
பலனை எதிர்பாராது கற்பிக்கும் ஆசிரியர்
நலன்நாடி குடும்பம் காப்பது தந்தை
வறுமையிலும் உழுது உணவளிக்கும் உழவன்
பொறுமை காக்கும் குடும்பத் தலைவி
பருவத்தே வருகின்ற வான் மழை
உருவம் இல்லாத உயிர்க் காற்று
கடமை தவறாத கதிரவன் கீற்று
வளைந்து நெளிந்து ஓடும் நதிதீர்
வயலில் விளையும் நெல்லும் காய்கனியும்
இத்தனை இருந்தாலே
இதனினும் பெரிதாய் ஏதுமில்லை உலகில்

பனிக்காற்று

 மெல்லிய மேகம் தழுவும் மலைமுகடு

கல்லுக்கும் குளிரும் காலைப் பொழுது நடுக்கம்
பரவிய தேயிலைத் தோட்டங்கள் பாக்கு மரங்கள்
வரவுக்கு கட்டியம் கூறும் சூரியக் கிரணங்கள்
வளைந்து உயர்ந்து செல்லும் சாலைகளின் ஊர்வலம்
களைப்பின்றி கண்கள் காணக் கிடைக்கும் காட்சிகள்
உயிர்க் கூடாய் உடலிருக்க உள்ளம் குளிர்விக்கும்
இயற்கையோடு இணைந்த வாழ்வு இன்பம் சேர்க்கும்

கரிநாக்கு

 ஊர்க்குருவி ஒண்ணு உலகெல்லாம் பறந்ததாம்

பேர்சொல்ல நல்லதா தகவல தேடுச்சாம்
யார்செஞ்ச பாவமோ தேறுனது எதுவுமில்லே
கழுதை தேஞ்சு கட்டெறும்பா ஆச்சுதோ
விழுது விட்ட ஆலமரம் பழுதாச்சோ
புரியாத புதிரா ஊரெங்கும் மாயவலை
எரிகின்ற நெருப்புலே எண்ணெய் ஊத்துனாப்போல
பரியேறிப் போனவன் பரதேசம் போய்விட்டான்
கரிநாக்கு சொன்னதுவோ சரியாத்தான் போச்சுதிப்போ
நரிக்கூட்டம் நாடெங்கும் நல்லமான் காணலியே
பழகித்தான் போச்சோ பாவிமக்கா பாழும்வாழ்வு
உழவுக்கும் தொழிலுக்கும் நிந்தனை செய்தோம்
பாதையும் தெரியாம பரிதவிச்சு தடுமாறி
பேதையா போனோமடா நல்லவழி எங்கேயடா ?