புதன், 31 மார்ச், 2021

சூரத் பயணம் (4)

மறுநாள் காலையுணவுக்குப் பின் மகாபலேஷ்வர் ஷாப்பிங் விசிட். ஒரு நீண்ட தெருவே ஷாப்பிங் ஏரியா. பழவகைகள் முதல் காஷ்மீர் சால்வைகள் வரை ஒரே தெருவில்.

பெர்ரி பழங்கள் பல நிறங்களில் விளையும் என்பது முதன் முறை அறிந்தேன். கைவினைப் பொருட்கள் விதம் விதமாய். வியாபாரமும் பேசினேன், காஷ்மீர் போர்வைகளை மொத்த விலையில் பெங்களூருக்கே சப்ளை செய்வதாகச் சொன்னார். விசிட்டிங் கார்ட் பெற்றுக் கொண்டேன். உறவினர்க்கு கொடுப்பதற்கு போர்வையும் வாங்கிக் கொண்டேன்.
அருகிலுள்ள அழகிய பள்ளத்தாக்கு அடுத்த விசிட் . காய்ந்த மலைச்சிகரங்கள்,ஆழமான பள்ளத்தாக்கு, மலை உச்சியிலிருந்து பார்க்க நன்றாக இருந்தது. பார்வையாளர்கள் மலைமீது நின்று கேமிராக் கோணங்களில் போட்டோக்களைச் சுட்டனர்.
இந்த இடம் மழைக்காலங்களில் பார்த்தால் இன்னும் அழகாகத் தோன்றும் என எண்ணினேன்.
பயணத்தை மறுபடி தொடங்கி அடுத்த நகரான பெல்காமை அடைந்தபோது இரவாகி விட்டது. குளித்து அறையிலே உணவு சாப்பிட்டு களைப்பில் உறக்கம் விரைவில்.
மறுநாள் காலையில் பெங்களூர் பயணம். ஹைவே என்றாலும் ஒருவித dry பயணமே, எல்லாம் காய்ந்து போனது போல். அவ்வப்போது ஓய்வு, அதுவும் மதிய உணவுக்குப் பின் கண் அசதி அதிகமானால் காரை நிறுத்தி பத்து நிமிடம் கண் மூடி உறங்கி முகம் கழுவி மீண்டும் பயணம். நவம்பர் மாதமானாலும் வறட்சியான வெப்பம்.
ஏழு மணி நேரப் பயணத்திற்குப் பின் பெங்களூர் புறநகரைத் தொட்டு நைஸ் ரோடு வழியாகப் பயணித்து வீட்டை அடைந்த போது மாலை விடை கொடுத்து இரவுக்கு வரவேற்பு அளித்தது இயற்கை. ஒரு நீண்ட பயணம், சுமார் 3000 கிமீ, முடிவுக்கு வந்தது. வியாபார உலகின் இன்னொரு அனுபவமாய் இந்தப் பயணம்.
( முற்றும்)

கருத்துகள் இல்லை: