சனி, 20 ஜூலை, 2019

நினைவுகள்

காலங்கள் மாறாத நிலையொன்று உண்டா
காற்றோடு கலந்த நினைவுகள் எங்கே
ஓடோடி உறவாடி உருண்ட நட்பே
காற்றாடி பந்தாடி குண்டாடிய தெருவெங்கே
வற்றாத ஏரிநீரில் முங்கிய நீச்சலெங்கே
காலணாக் காசில் தேநீரும் சுட்டதே
காற்றோடு காதலிக்க கடற்கரை நட்புதானே
கதைகதையாய் பலவும் பேசிய காலமெங்கே
கற்பனைக்குள் புதைந்த புதையலாய் எல்லாமே !


Image may contain: sky, tree, cloud, outdoor and nature

காவிரி அழைப்பாளா

காவிரி என்றாலே போட்டிதான்
அவள் அழகில் மயங்கி
மெல்லிய அவள் நடையில்
வளைந்தும் நெளிந்தும் வனப்பாய்
நீண்ட பயணம் கால்கடுக்க
காடு மேடெல்லாம் கரைதழுவி
நதியாய் கடலாய் அருவியாய்
எண்ணற்றோர் அவள் அடிமை
ஆரத் தழுவி அள்ளிடவும்
தோள்மீது சுமந்து சுகித்திடவும்
தலையோடும் உடலோடும் குளிர்ந்திடவும்
வயலோரம் நீர்பாய்ச்சி செழித்திடவும்
அணைகட்டி நீர்தேக்கி வைத்திடவும்
அவளுக்காய் போட்டிதான் நாள்தோறும்
அவள்மடியில் உறங்கிடவே ஆசையுண்டு
அழைப்பாளா அணைத்திடவே காத்திருப்பேன்!

நம்புகிறேன் மாறுமென்று

வேதனைதான் மாற்றேதுமில்லை விடிவில்லை இருள்விலகவில்லை
போதனைகள் பயனில்லை மதம்பிடித்த யானைகள்தான்
சாத்திரம் படித்தென்ன சரித்திரம் மாறவில்லை
பாத்திரம் அறிந்தே பிச்சையிடல் வேண்டும்
கூக்குரல் எத்தனையெத்தனை காசுக்கே மதிப்பிங்கே
பாக்களும் பாரதியும் பழங்கதையாய்ப் போயிற்று
மாறிவிடும் என்றோஒருநாள் நம்பினோம் ஏமாந்தோம்
மாக்களாய் மனிதமனம் மடையர்களே மந்திரிகள்
சாக்கடையாய் அரசியல் சொல்லில் உண்மையில்லை
பூக்கடையிலும் நாற்றமென்றால் எம்நாடே உவமையாகும்
இளைய தலைமுறையோ ஓடுகிற திசையேவேறு
இன்னமும் நம்புகிறேன் இவையாவும் மாறுமென்று !

எங்கிருந்தோ வந்த பறவைகள்

எங்கிருந்தோ பறந்து வந்த பறவைகள்
இங்கே கூடின பாடின படித்தன
இளைப்பாறி இனிதான நட்பாகி இசைபாடின
களைப்பாறி கதைபேசி கல்விகற்றன
மான்களோடும் மரங்களோடும் மணல்வெளியோடும் உறவாடின
மனங்கள் கலந்தன சிலபறவைகள் மணமுடித்தன
பொற்காலம் பொறுப்பில்லை சுதந்திரமாய்ப் பறந்தன
பொறியியல் என்றதோர் பட்டம் பெற்றன
மீண்டும் உலக வெளியெங்கும் பறந்தன
கண்டம் அனைத்தும் கடந்தன கடமையாற்றின
துணையொன்று இணைந்து கூடுகள் சேர்ந்தன
பறவைக் குடும்பம் பல்கிப் பெருகின
காலச்சக்கர சுழற்சியில் மீண்டும் சந்தித்தன
ஆலமரமாய் விழுதுகள் மரமிப்போது பெரியது
ஆயினும் அன்பால் அவ்வப்போது கூடின
ஆஹா எத்தனை அழகு எங்கள்கூட்டம்
புள்ளினங்கள் மீண்டும் அதேமரக் கிளைகளில்
பூபாளமும் மோகனமும் ராகங்களாய் தினந்தோறும் !

காற்றே

காற்றே உனது பிறப்பிடம் எங்கே
நேற்றோ கடல் ஓசையோடு ஆர்ப்பரித்து
இன்றோ அசைந்தாடும் மரங்களில் இலைகள்ஊடே
அன்றோ ஓவென்ற புயலாய் இரைச்சலிட்டு
புல்வெளியில் மெல்லிய தென்றலாய் மற்றொருநாள்
பங்குனியில் வடக்கிருந்து வாடைக் காற்றாய்
மற்றோர் முறையோ காட்டுத்தீயாய் பரவினாய்
விசிறிக் காற்றாய் சிலநேரம் உடல்மீது
பார்த்து விடத் துடித்தேன் உன்னுருவம்
பரிகசித்துச் சிரித்தாய் மூங்கில் காற்றில்
மூச்சுக் காற்றாய் மூக்குத் துவாரத்தில்
சேலை முந்தானை பறந்து சிறகடிக்க
விந்தைதான் வியக்கிறேன் உயிராய் வாழ்கிறாய் !

வாழ்க்கைச் சரித்திரம்

மாடியிலே காத்தாடி விட்ட நாட்கள்
மரத்தடியில் கோலியாடிய தினங்கள்
மாமரத்தில் மாங்காய் பறித்த நாட்கள்
மழைநீரில் நனைந்து களித்த நாட்கள்
கடலோரம் காத்தோடு காதல்பேசிய நாட்கள்
கதைகதையாய் இரவெல்லாம் பேசிய நாட்கள்
சோகம் மகிழ்ச்சி மாறிமாறிப் பகிர்ந்த நாட்கள்
சோதனைகள் வெற்றிகள் கடந்த நாட்கள்
கால்நடையாய் கடைத்தெருவில் திரிந்த நாட்கள்
காதலிக்காய் கவிதை படைத்த நாட்கள்
இரண்டுசினிமாவில் தூக்கம் தொலைத்த நாட்கள்
இருளில் பேயென்று பயந்த நாட்கள்
அண்ணாச்சி கடை தேன்மிட்டாய் பர்பி
டீக்கடை சிங்கிள்டீ பட்டர் பிஸ்கட்
கடற்கரை பட்டாணி சுண்டல் பஜ்ஜி
காலம் சுழன்று கால்கள் தடுமாற
கண்கள் பனிக்க காட்சிகள் கண்முன்னே
எண்ணிப் பார்த்திட வாழ்க்கைச் சரித்திரமாய் !

நீயின்றி வாழ்கின்ற நினைவுகள்

இழையோடும் நூலோடும் சேர்ந்த உறவே
இதழோடும் இமையோடும் உரசும் உயிரே
தோளோடும் சிரசோடும் சாய்ந்தாடும் நட்பே
உள்ளாடும் உயிராடும் நீயெந்தன் துணையே
கண்ணோடும் கருத்தோடும் உரையாடும் சொல்லே
காலங்களோடும் கனவுகளோடும் வாழ்கின்ற வாழ்வே
நிமிடங்களோடும் நாட்களோடும் கடந்தோடும் முள்ளே
நீயின்றி வாழ்கின்ற நினைவுகள் பொய்யே !

சிகாகோ உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஜுலை 4,2019

உலகெங்கும் பரவி இருக்கும் தோழரே தோழியரே
உயர்ந்த சிந்தனைகள் தொன்று தொட்டே நம்சொத்து
காலத்தால் அழியாமல் கடல் கடந்து வாழும் 
காப்பவர் யாவரும் தமிழரே வணங்கிடுவோம் அவர்தம்மை
தாய்நாட்டிலன்றி பிறநாட்டிலும் புலம்பெயர்ந்து மொழிவளம் காத்து
தாயின்கரம் பிடித்தே வாழ்விக்கும் தகை சான்றோரே
சொல்ல ஆயிரம் வார்த்தைகள் போதாது மொழிவளர்க்கும் பேரரிவாளரே
சோர்விலர் சொல்லின் செல்வர் பெருமை சேர்த்தீர்
தோண்டிட ஊறிடும் மணற் கேணியாம் உரைத்திடுவர்
தொலைந்த ஏடுகள் பலவாம் நம்மொழியில் புதையலாய்
தங்கம்போல் வைரம்போல் அதற்கும் மேலாய்
ஓங்கிய மொழியாய் மூத்த மொழியாம் முதல் மொழியாம்
நம்மோடு நில்லாமல் புவியுள்ள மட்டும் வாழும்
எம்மோடு கலந்து உயிர்நாடியாய் தமிழன்னை என்றுமிருப்பாள் !

பூமித் தாய்

பூமித்தாயை வணங்கி உறுதிமேற் கொள்வோம்
புவிதன்னில் இனியேனும் இயற்கையை வாழவைப்போம்
காடுகள் அழித்த வளர்ச்சி தேவையில்லை
குளம் ஏரி ஆறுகள் மாளிகையாக தடைசெய்வோம்
மழைநீர் வீணாகப் போகாமல் தேக்கிவைப்போம்
மாசுநீரை நன்னீரில் கலப்பு அனுமதியோம்
தொழில்புரட்சி எனக்கூறி பசுமை அழிதல் ஒழிப்போம்
ஊர்தோறும் நீர்நிலைகள் மரங்கள் நடுவோம்
ஊரணி நீரை உணவுக்கு மட்டுமே உபயோகிப்போம்
மனதில் கொள்வோம் மனிதன் இல்லா வளர்ச்சி எதற்கு
நீரும் காற்றும் மாசுபட்டு மனிதன் மாய்ந்து போனபின்
சுடுகாட்டுப் பேய்களும் நரிகளுமே நாட்டையாளும்
சிந்தனை செய்மனமே சீர்தூக்கிப் பார்
நிந்தனை செய்த வாய்க்கு வாய்க்கரிசி கிட்டாது
நிறமில்லை மொழியில்லை நீயும் நானுமில்லை
பூமித்தாயே மக்களற்ற உன்வீட்டைக் காணஇயலுமா ?

எதுவுமே உன்வசமில்லை

காலம்தான் எத்தனை வேகம் காற்றினும் விரைவாய்
பாலமாய் பாசமாய் உறவுகள் நண்பர்கள் மனைவியும்
மாற்றங்கள் நிரந்தரம் மனத்தோற்றங்கள் மாறிடும்
நேற்றைய நினைவுகள் நெஞ்சில் நெருடலாய் வருடலாய்
கனவுகள் கற்பனைகள் கண்களின் காட்சித் திரையில்
இன்பமும் துன்பமும் இருவேறு துருவமாய் இதயத்தில்
ஓட்டம் நிற்பதில்லை ஓய்வும் அதற்கில்லை ஒருநொடியும்
காலத்தே பயிர்செய்ய ஆசையுண்டு நிகழ்வதோ வேறேஎன்றும்
எதுவுமே உன்வசமில்லை எதிர்கொண்டே ஆகவேண்டும்
வாழப் பழகிக் கொள் வசப்படும் உன்மனது
சோகச்சுமை இறக்கிவை சோர்வை விலக்கிவை அமைதிகொள்
போகும்பாதை கவனம்தேவை போதிமரமே உனக்குள்ளே

போலீஸ் குவார்ட்டர்ஸ் - 1

போலீஸ் குவார்ட்டர்ஸ் வாழ்க்கை மறக்க முடியாதது.‌ கொஞ்ச நாள் மீர்சாகிப்பேட்டை வாடகை வீட்டுக்கப்புறம்.அப்பாவுக்கு இந்த லோட்டஸ் கார்டன் பழைய போலீஸ் காலனிலே வீடு கிடச்சு வந்தோம்.
மைலாப்பூர்லே நல்லாங்குப்பம்னு போலீஸ் ஸ்டேசன்ல இருந்தப்ப இந்த மாற்றம். போலீஸ்ல அவர் சேந்ததே அம்மா வழி சின்ன தாத்தா மூலமானு சொல்வாங்க. அவர் ஸ்பெஷல் ஆர்ம்ட் போலீஸ்லே ஜமேதாரா இருந்தார். அம்மாவோட அப்பாவும் போலீஸ் தான். இன்ஸ்பெக்டர் மரியாதைக் குறைவா பேசினான்னு பெல்டை கழட்டி வச்சுட்டு வீட்டுக்கு வந்துட்டுரான்னு சொல்வாங்க. துரைசாமி நாயக்கர் ஆஞ்சனேய பக்தர். ஆஜானுபாகுவா நல்ல கலர். கோபம் வந்துட்டா அவரைப் பாக்கவே பயமா இருக்கும்.
இந்தாளுதான் காட்டுலே இருந்து உங்கப்பன புடிச்சுவந்து தேவதை மாதிரி பொண்ண கட்டி வச்சாருன்னு பாட்டி சொல்வாங்க. உண்மை தான் அப்பாவாலேதான் அம்மா நோய்வாய்ப்பட்டு முப்பத்தேழு வயசுலே என்னோட பதினெட்டாவது வயசுலே இயற்கை எய்தினாங்க.எப்பவும் கடவுளா என்னோட இருக்காங்க
எதுலேயோ ஆரம்பிச்சு டைவர்ட் ஆயிடுச்சு
1962லே இருந்து 1982 வரைக்கும் இந்தக் காலனி தான் என்னை வளர்த்தது.
தாயை இழந்தாலும் என்னை பலநேரங்களில்‌ தாயாகவும் தந்தையாகவும் பாதுகாத்தவர்கள் பலர்.
கெல்லீஸ் கீழ்பாக்கம் கார்டன் இடைலதான் இந்த குவார்ட்டர்ஸ். இன்னைக்கும் இருக்கு. எதிர்லே நியூடோன் ஸ்டூடியோ இப்ப பள்ளிக்கூடமா ஆயிடுச்சு
இரண்டு பிரிவு வீடுகள். ஓட்டுக்கூரையோட இருந்தது நாங்கள் இருந்த வீடு. ஃபிளாட் டைப் வீடுங்க மூன்றடுக்கு மாடிகள். அதிலும் நாங்க இருந்த எதிரெதிர் வரிசை வீடுங்க ஆறு ஆறா பன்னிரண்டு வீடுங்க. இந்த பன்னண்டு வீடும் கிட்டத்தட்ட ஒரு கூட்டுக்குடும்பமா.
தெலுங்கு, தமிழ், மலையாளம் மொழியும் கிறித்துவம், இஸ்லாம் , இந்து மதங்களும் கலந்த பாரத விலாஸ் போல.
இங்கிருந்து தான் என் பள்ளிப்படிப்பு முதல் கல்லூரிப் படிப்பும் பிறகு அம்பத்தூர் எஸ்டேட் வேலையும் எல்லாமே. திருமண வாழக்கைக்கு முந்தைய பகுதி.
போலீஸ்காரன் பசங்க பொரிக்கின்னு சொல்வாங்க பாதி உண்மை பாதி பொய். என்ன மாதிரி தப்பிச்ச பல பேரு இருக்காங்க.
ஆனாலும் கில்லி, காத்தாடி, கோலி, பம்பரம், திருடன் போலீஸ் விளையாட்டு,கிரிக்கெட்,புட்பால்,ஹாக்கினு எதையும் தொடாம விட்டதில்லே.
சில நேரங்கள்ளே சக‌வயசு‌ பசங்களோட அடிதடி சண்டையும் உண்டு. மொட்டை மாடி தான் மணிக்கணக்கிலே பேசறதுக்கான களம். படிக்கறதுக்கும் அப்பப்ப யூஸ் ஆகும். நல்லாப் படிக்கற பையன்னும் அப்பாகிட்டே அடி வாங்கின பையன்னும் காலனிலே பிரசித்தம்.
தொலைக்காட்சிப் பெட்டி கருப்பு வெள்ளை ஒரு ரூம்லே வச்சிருப்பாங்க. வெள்ளிக்கிழமையானா அதன் முன்னாடி இருக்கிற கட்டாந்தரைலே கூட்டம். சிலர் மடக்கு சேர் கூட கொண்டு வருவாங்க. ஒரு கிராமத்த போல காட்சி இருக்கும்.
வீட்டுலே எங்களோட அப்பப்ப கோழி,ஆடு,மாடு,முயல் இதெல்லாம் வளரும். ஞாயித்துக்கிழமைலே கீழ்பாக்கம் தெருக்கள்ளே ஆடுகள மேச்சத யாராச்சும் பாத்திருந்தா இரகிசயமா வைச்சுக்கோங்க.
(தொடரும்)

கருமேகமே கண்ணைத் திற

கருமேகமே கண்ணாமூச்சி ஆடும் நேரமாயிது
கண்ணைத் திற மழைநீர் மண்ணில் விழட்டும்
ஆனந்தக் கண்கள் காண ஆவலில்லையா
ஆர்மீது கோபம் உனக்கு அமைதிகொள்
குடம்குடமாய் தெருவெங்கும் மக்கள் சுமந்து
குடிக்க குளிக்கவும் அவதியுற்று கவலையுற்று
எதிலும் அரசியல் லாபம்தேடும் மனிதரைவிடு
எதற்கும் முடிவுரை உன்னாலே முடியும்
வாட்டியது போதும் வந்துசேர் வறட்சிபோக்கு
வாழ்வே கேள்வியாகும் நீயின்றி நீரின்றி
முக்காடு விலக்கி முழுமுகம் காட்டு
மூச்சுக் காற்றும் மழைநீரும் உயிர்நாடி
ஆண்டுதோறும் வெள்ளமாய் வருவாயின்
ஆட்சியர் உன்னிருப்பிடம் உருவாக்கித் தருவர்
ஊழிக்காற்று வரும்வரை உன்மத்த மனிதருக்கு
உன்னருமை தெரிவதில்லை உணர்த்திடு உன்னருமை !

அமைதி கொள்

வாழ்க்கை விடைகாண முடியாப் புதிர்
குழம்பாமல் தெளிவான நீரேயில்லாத குளம்
பஞ்சு விற்றால் புயல் காற்றும்
உப்பு விற்றால் பெருமழையும் பெய்யும்
நிம்மதி தேடிஓடும் மனிதர்கள் நிரந்தரம்
நினைவலைகள் வண்ணம் மாறுதல் தினம்தினம்
தேடுதல் வேட்டை சாகும் வரையில்
தேய்ந்து ஓய்தல் நிரந்தர தூக்கத்தில்
தங்கமுலாம் பூசிய அணிகலன் அனைவரும்
தேய்த்துப் பார்த்தால் பித்தளை தகரம்
மிருகமும் தெய்வமும் கலந்த கலவைதான்
மானிடம் மட்டும் அவ்வப்போது தோன்றும்
நெல்வயலில் நெல்நாற்றே களையெடுக்க நேரும்
நெஞ்சம் பதைக்கும் கவலைகள் பெருகும்
நேர்மை கண்ணெதிரே கொலையுறும் காட்சி
வீரம் விவேகம் சமாதியில் உறக்கம்
உலகம் யுகஅழிவுக்காய் காத்திருக்கும் நேரம்
மாற்றம் அப்போதே வரும் மற்றொரு வடிவில்
மனதைத் தள்ளிவை அதுவரை அமைதிகொள் !

வாழ்க்கை வட்டம்

ஆணென்றும் பெண்ணென்றும் கருவிலே உருவாகி
ஆலமர விழுதாய் வளர்ந்து வேரூன்றி
காதல் வசப்பட்டு காமமுற்று உடல்கலந்து
கருவுற்ற பெண்ணொருத்தி வயிற்றில் சுமந்து
மாதங்கள் கடந்து மகவொன்றை ஈந்து
மணியே கண்ணேஎன கொஞ்சி வளர்த்து
பாலூட்டி படிப்பூட்டி பட்டமும் பெறச்செய்து
படிகள் பலஏறி பணியொன்றைப் பெற்று
கண்ணில் பட்டதொரு கன்னியின் மனம்தேடி
காலத்தே மணமுடித்து இல்வாழ்வு தொடங்க
பெற்றோரோ கடமை முடிந்த பெருமூச்சில்
பேரனோ பேத்தியோ வேண்டுமென காத்திருந்து
பிறந்த மகவுக்குத் தோழனாய் தோழியாய்
பிரியும் நாள்வரையில் மீண்டும் குழந்தையாய்
வாழ்க்கை வட்டமென வயோதிகம் வளைத்துவிட
வானத்தைப் பார்க்கும் பார்வை ஒருபுள்ளி !

அப்பா

நல்ல விதைகள் நன்மரங்கள் ஆகும்
நல்ல வாழ்வு நமக்களித்தவர் ஆரோ
தோளுக்குச் சுமையாய் உடல் சுமந்த உயிரே
தோழனாய் மாறி தோளோடும் உரசினாயே
மௌனமாய்க் கண்ணீரை துடைத்த கரங்கள் உனதே
மெள்ளக் கரம் பிடித்து நடை பழக்கினாயே
காலங்கள் தோறும் மற்றவர்க்காய் வாழ்ந்தாயே
காற்றோடு கரைந்து போனாயோ இன்று
இருக்கும் நாளெல்லாம் உன்னருமை தெரியாதே
இறைவன் மனிதனாய் இயங்கிடும் உன்னுருவில்
அப்பா என்ற வார்த்தை எத்தனை அழகு
அன்போடு ஒருமுறை அப்பா....அணைக்கட்டுமா ?

உணர்ந்து செயல்படு

என்னவாயிற்று மண்ணின் மைந்தர்க்கு
எங்கோ எதுவோ‌ பாதைமாறிச் செல்கிறது
முன்னோக்கும் பார்வை பின்னோக்கிப் போனதேன்
முண்டாசுக் கவியின் வார்த்தைகள் பொய்யாகுமோ
முரண்பட்ட மனங்கள்புற்றீசல் போல்
முடிந்த கதைகள் பேசி முத்தெடுப்பீரோ
சாதீயம் மதவெறி யாருக்கு வேண்டும்
சாத்திரங்கள் சொல்வது அவைகள் அல்ல
விட்டுவிடுங்கள் மனிதர்களே மயக்க நிலையிது
நீரில்லாத வறண்ட நாக்கு பேசாமல் போகும்
நிலையில்லாத வாழ்வில் மேம்படுதல் முயல்
நிலவுக்குப் போகும் நேரத்தில் பழங்கதை ஏன்
வாழ்வின் வழிதேடு வசை பாடாதே
வேற்று கிரகங்கள் செல் நீரைத்தேடு
வேதனை கொள்கிறது மனது நச்சு விதைகள் கண்டு
வேர்விட்டாலே கூண்டோடு அழியும் உன்இனம்
உணர்ந்து செயல்படு உணர்ச்சி தவிர்

கொதிக்கும் கோடை

எரிந்தே சாம்பலாகி விடுவோமா
எங்கே போயின மேகக்கூட்டங்கள்
நெருப்பாய் கொதிக்கும் கோடையே
நெடுநாட்கள் நீமட்டும் வாழ்வதேன்
நீரைக் கொண்டுவரும் மழையெங்கே
நீவிலகிப் போய் நீராவி அனுப்பு
பாவங்கள் பெருகியதால் பழிதீர்க்காதே
பாவிமனிதன் திருந்திடுவான் விட்டுவிடு
மேற்கே பெய்யும் மழைமேகம்
கிழக்கேயும் சற்று வரட்டும்
நிலம் குளிரப் பெய்து
நிம்மதி தருவாய் இன்றே !

போதிமரம்

வா நண்பா கால்நடையாக காடுமேடு செல்லலாம்
வாதங்கள் வளமானவை தான் வாசலில் விட்டு. விடு
வேதங்கள் யாவும் நல்லவை போதிக்கும் போதிமரம்
வேதனை கொள்ளாதே எதுவும் நமது சொந்தமில்லை
வந்தது பூமியில் வாழ்ந்து பார்க்கவே வசைபாடஅல்ல
வாழும் காலமதில் வறியவர்க்கு உதவு வன்மம் வேண்டாம்
நீயும் நானும் நிரந்தரமில்லை நீர்க் குமிழிகள்
நீண்ட பயணத்தில் யார்துணை இறுதி வரை அறியோம்
காலங்கள் விரையும் நம் கடமைகள் செய்வோம்
காழ்ப்பு கயமை கள்வம் கசடு நீக்குவோம்
மனதில் அமைதி மாசற்ற நினைவுகள் நிறையட்டும்
மறந்திடு மற்றவை மௌனம் பழகு தவநிலையாகும்
வாயேன் வானூர்தியேறி உலகம் சுற்றுவோம்
வாரம் வருடம் பாராமல் வகைவகையாய் உண்போம் !

கோவா 1

கார்ல‌‌ லாங் டிரைவ் போறதுனா ரொம்ப பிடிக்கும். கோவா நிறைய தடவ போயிருக்கேன் பெஙகளூருலே இருந்து.
பெங்களூரு,தும்கூர்,சித்ரதுர்கா,ஹூப்ளி,தார்வாட் வழியா ஹைவேலே போய் இடது பக்கம் மலைப்பாதைல நுழைஞ்சு சுமார் 130 கிமீ பார்டர்லே நுழையலாம். அதுக்கப்புறம் கோவாக்குள்ள தங்கற பீச் பொறுத்து பயணதூரம். எப்பவும் நான் போறது வடக்கு கோவாலே இருக்கற மோர்ஜிம் பீச் தான். அமைதியான ஆட்கள் குறைவான பீச்.
சிமோகா,சாகர்,ஹொன்னாவர்,கார்வார் வழியாகவும் போகலாம். அழகான மலைப்பாதை 45 கிமீ கடக்கனும். வேகமாகப் போக முடியாது கார்வார் வரைக்கும். கார் டயர் பங்சர் ஆகி ஸ்டெப்னி தனியாளா மாத்தின அனுபவம் இருக்கு.
கடற்கரையோரமா மங்களூர்,பட்கல்,முருடேஸ்வர்,கோகர்னா இப்படியும் போகலாம். எப்படிப் போனாலும் 650 கிமீ மேலே தான். சுமார் 12லே இருந்து 14மணி நேரம் ஆகும். காலைலே கிளம்பி இரவுக்குள்ளே போயிடலாம்.
சிமோகா வழியாகப் போனா ஜோக் பால்ஸ்,உச்சனஹள்ளி நீர் வீழ்ச்சிங்க இருக்கு. பயணம் பிரேக் பண்ணிப் போகலாம். கார்வார் பீச் அழகா இருக்கும். டால்ஃபின்கள் பாக்கனும்னா போட்லே போய்ட்டு வரலாம். சின்னத்தீவுங்கள்ளே தங்கற விடுதிகள் இருக்கு. இங்கே நேவல் ( naval) பேஸ் இருக்கறதாலே டூரிசம் டெவலப்மண்ட் அதிகமில்லே. மலை ஒண்ணு இருக்கு அதன் உச்சிலே தங்கும் விடுதி இருக்கு. கார் போற அளவுக்கே சரளைக் கற்கள் நிறஞ்ச ரோட்லே ஓட்டறேதே திரில்தான். மீன் பிரியர்களுக்கு இங்க நல்ல உணவகங்கள் இருக்கு. ஆழமில்லாத கடல், அலைகளும் குறைவே. அழகான சிறிய நகரம்.
அருவி பற்றி சொல்றப்ப உச்சனஹள்ளி கண்ணுக்கினிய அருவி மழை காலத்துல கிட்டே நெருங்கவே முடியாது, கர்நாடகாவின் அதிரப்பள்ளி அருவின்னு சொல்லலாம். அருவிகள் பார்க்க ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்கள் உகந்தவை. தென்மேற்குப் பருவ மழைக்குப் பிறகு.
பிற இடங்களை அடுத்த தொடர்லே பாக்கலாம்

அந்நியன்

எனக்கொரு வரம் வேண்டும் இறைவா
என்னில் ஓர் அசுரன் வேண்டும்
அந்நியன் போல் அநியாயம் அழிக்க
அடுத்தவர் குடிகெடுக்கும் கயவர் களையெடுக்க
அரசியல் ஊழல்வாதி அடுப்பில் எரிக்க
அரசுப் பணியாளர் அக்கிரமர் ஒழிக்க
பெண்கள் சிசுக்கள் சிதைப்பவர் சிரசுகொய்ய
பேராசை கொண்ட பெருமுதலைகள் கொல்ல
அக்கிரமம் அநியாயம் அறவே ஒழித்திட
வக்கிர மனம் வஞ்சகம் கலைந்திட
நல்லவர் உளரேல் அவர்துணை போக
நானிலம் செழித்திட நற்பண்பு வளர்ந்திட
தவமேதும் செய்ய வேண்டின் சொல்
தாமதம் வேண்டாம் இனியும் இறைவா !

செயலென்றால் ஒளிவேன்

அனைத்தும் தமிழ்நாட்டுக்கே அடுத்தவர்க்கு இல்லை
ஹைட்ரோ கார்பனால் செழிக்கும் பசுமை
ஸ்டெரிலைட் தாமிரம் தயாரிப்பின் தூய்மைக்காற்று
எட்டு வழிச்சாலையால் வளம்கொழிக்கும் விளைநிலங்கள்
கூடங்குள அணுக்கழிவு சேமிப்புக் கிடங்கு
கங்கை கோதாவரி இணைப்பு வளமானதஞ்சை
எத்தனை திட்டங்கள் எல்லாமே நமக்கு
இந்திய துணக்கண்டத்தில் தமிழ்நாடே முன்னிலை
இணைந்து கைகோர்த்து இந்திமொழியில் வரவேற்போம்
என்தோட்டம் என்வீடு அப்படியே இருக்கும்
எவரோ எங்கோ அழிவுற்றால் எனக்கென்ன
புயல் மழை பூகம்பம் எனக்கொன்றுமில்லை
புரட்சி நகரவாசி நான் நுனிநாக்கில் ஆங்கிலம்
தமிழ் நன்றாகத் தெரியாவிடினும் இந்தி வேண்டும்
தாய் வயதானேலே ஆசிரமம் சேர்ப்பவன்நான்
பேசுவேன் கத்துவேன் செயலென்றால் ஒளிவேன்
பேடியாய் வாழ்வதே தொன்றுதொட்டு என்வழக்கம் !

சுகமான சுமை

தோள்மீது சாய்ந்திருக்க தோதாக நீவருவாய்
தோழியே காலங்கள் சென்றாலும் காத்திருப்பேன்
மாறிடும் பருவங்கள் மனதினில் மாற்றமில்லை
மாசற்ற தோழமைக்கு மனச்சான்று போதும்தானே
கணக்கின்றி கற்பனைகள் கடந்து போனாலும்
காதோரம் நீசொன்ன வார்த்தைகள் வலம்வரும்
பொன்னுக்கும் பொருளுக்கும் ஆசையில்லை உன்மனதில்
பொருள் பொதிந்த பார்வைக்கு ஏக்கமுண்டு
சொல்லில் தொக்கி நிற்கும் பொருளுக்கு
சொல்லகராதி தேவையில்லை உள்ளஅகராதி உண்டு
உணர்வுகள் அலைகளாய் அடிக்கடி கரைசேரும்
உறக்கம் மறந்தாலும் உன்நினைவு மறவாது
தென்றலைத் தூதாய் தெற்குத்திசை அனுப்பினேன்
தெளிவான உன்பதிலை விரைவில் சொல்லிவிடு
காத்திருக்கும் நொடிகூட சுகமான சுமைதானே
காலம் கடந்தாலும் நெஞ்சத்தில் உன்நினைவே !

பெண்மை

எண்ணிலடங்கா ஆசை உண்டு பெண்ணே
ஏனோ உன்னால் உயிர்ப்பிக்க இயலவில்லை
கண்ணில் ஏக்கங்கள் கலையாத கனவுகள்
காலமெல்லாம் உன்னோடே உறைந்து போகிறது
பெண்ணாய்ப் பிறந்தாலே பெரும்பாவம் என்றாயோ
பெண்மைக்கு அணிகலன் தாய்மை ஒன்றேதான்
ஆணாய்ப் பிறந்து சுதந்திரமாய்த் திரிய ஆசை
ஆயினும் மறவாதே இக்கரைப் பச்சை
உன்னிலும் உயர்வாய் ஒருபிறவி உண்டா
உன்னதம் என்பதே உன்னுள்ளே கருணை
வலிகள் சுமந்து வாழ்ந்திருந்தாலும் தாயே
வாழும் தெய்வம் நீதானே அம்மா !

மனிதம் வாழட்டும்

எல்லாத்தையும் விட்டு வெளிய வாங்க
எப்பத்தான் மனுசனா மாறுவீங்க
சாதி மதம் மொழி எல்லை நிறம்
சாக்கடையா உங்க மனசு நாறுது
பழையத கொளுத்தி போகிலே எரிச்சாச்சு
பறையன் பாப்பான் எல்லாம் போயாச்சு
மனச‌ அமிலம் ஊத்தி கழுவு
மக்கள் மாக்களை விட கேவலமா
நமக்கு யாரும் வேண்டாம் அறிவிருக்கு
நல்லா புத்திய கூர்தீட்டு அதவச்சு
எவனாவது சாதிமத வேறுபாட பேசினா
எதிலிருந்து எதையாவது மாறச் சொன்னா
ஊரை விட்டே விரட்டி அடிங்க
உலகமே ஒண்ணுன்னு ஓங்கிச் சொல்லுங்க
ஒன்று படட்டும் எதிர்மறை இல்லாமல்
ஓரினம் மட்டுமே அது மனித இனம்
மாறிக் கூறுபவன் மனநலக் காப்பகம் செல்லட்டும்
மனிதம் வாழட்டும் மனங்கள் மகிழட்டும் !

உழைப்பாளி தினம்

உற்றாரைத் துறந்து ஊர்ஊராய்த் திரிந்து
உச்சி வெயில் கொட்டும் மழை
புயல் காற்று புழுதிக் காற்று
புறநகர் காடுமேடு மலைப்பாதை
இதுவே உன் வாழுமிடமாய் தினமும்
வசதியற்ற வாழ்விடம் கிடைப்பதே உணவு
தாய்நாடென்றும் தரணியில் எங்கெங்கும்
தன்சுகம் துறந்து பிறருக்காய் உழைக்கும்
உத்தமனே நீயும் போர்வீரனே களம்தான்வேறு
எல்லை காப்பவன் அவனென்றால் நீயோ
நாட்டு வளம் செழிக்க தொழில் முனையில்
வணங்குவதற்கு நீயும் கடவுள் தான்
வாழும் கடவுள் தொழில்களின் தெய்வம்
உழைப்பாளி தினம் மட்டும் அல்ல
என்றுமே உன் தினம் தான்
நீயின்றி மாட மாளிகை கோபுரங்கள்
ஏன் தெய்வங்களே வாழ இடமில்லை !

சனி, 13 ஜூலை, 2019

காலம் செய்த கோலமிது

மலர் பூத்த மனமாய் மலர்ந்தாய்
மகிழம்பூ வாசமாய் பரவி நின்றாய்
திரை போட்டு மறைக்காத சிந்தனைகள்
தித்திக்கும் மனக் கேணி நினைவுகள்
காலம் செய்த கோலமிது கண்ணுறங்கு
ஞாலம் பெரிது நம்பிக்கை கொள்
வானமும் பூமியும் வாழும் கண்களுக்கு
வண்ணத்துப் பூச்சியாய் பறந்து திரிந்திடு
கோலங்கள் போடவே புள்ளிகள் வரிகளாய்
கோர்வையாய் வரிகளே கவிதையின் தோன்றலாய்
வாழ்க்கையின் வரவும் செலவும் பலவகையானவை
வகுத்தலும் பெருக்கலும் கணக்கில் அடங்கிடும்
வருவதும் போவதும் இயற்கையின் நியதி
வாழும் வகைக்கு வழியிது கண்டுகொள் !

உரைத்திடுவாயா தோழி

எங்கிருந்தாய் இத்தனை நாட்களாய்
எண்ணங்கள் சுமந்த மனதோடு
நினைவுகள் தான் நீண்டவை
நித்திரையும் தள்ளிப் போகும்
காலம் கடந்த கனவுகள்
நிலம் நீர் வான் முழுதும்
பரந்து விரிந்து பரவிநிற்கும்
இரவும் பகலும் தூரம் குறையும்
உள்ளம் துள்ளும் மகிழும்
உண்மை இன்பம் அதுவே !
தோன்றும் மன ஓசை தூதாய் வருமா
தோளுக்குச் சுமையாய் சிரம் சாய்க்குமா
காற்றில் பாடல்கள் காதோரம் வருமா
கவிதை வரிகளாய் கண்கள் காணுமா
நேற்றைய தொடர்ச்சி இன்றும் நேருமா
நெஞ்சுக்கினிய வரிகளில் நினைவு மூழ்குமா
உள்ளம் உருகுமா இதயம் நிறையுமா
உரைத்திடுவாயா தோழி நடுநிசி நிலவாய் நீ !

தந்திர நரிகள்

என் நாட்டிலேதான் இது நடக்கும்
தன் மக்களை தானே தரம் தாழ்த்தும் செயல்
பண்பற்ற வார்த்தை பழிச்சொல் பலவும்
எண்ணற்ற நற்செயல்கள் எத்தனும் ஏமாற்றுதலும்
கண்மூடித் தனமான கழிசடை வார்த்தைகள்
உன்குலத்தைத் தூற்றி உன் முகத்திலும் கரிபூசினாய்
தங்கமுலாம் சாயப்பூச்சு சதுரங்கம் வெளுக்கும்
தந்திர நரிகள் நாட்டில் மீண்டும்
மாயவலை மறைந்து மனம் திருந்தும் வேளைவரும்
மயக்கம் தெளியும் மனம் குமுறும்
தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்
தர்மம் மறுமுறை வெல்லும் வேதனைதீரும்

காலமொன்றே கணக்கை முடிக்கும்

எழுபதாண்டுகளாய் புதைந்திருந்த நூல்கள்
எங்கிருந்தோ புற்றீசல் போல் கண்முன்னே
ஓலைச்சுவடிகள் உயிர் பெற்று ஊரெங்கும்
ஓராயிரம் புதுத்தகவல்கள் ஊடகம் எங்கும்
பெருஞ்சுவர்கள் அங்கங்கே நாளை உனைக் காண்பேனா
பெரியவர் பலரும் பெருமுயற்சி ஆராய்ச்சி
எரிமலைக் குழம்பு பூமிபிளந்து வரலாம்
என்நாட்டில் பூகம்பம் வரலாம்
சுனாமியின் சீற்றம் ஊரெங்கும் உணரலாம்
சுயமரியாதை விலைபோனதால் சுயமே மறையலாம்
சூழ்ந்திடும் கருமேகங்கள் சிவப்புமழை பெய்யலாம்
இவையாவும் இல்லாமலே மறைந்து போகலாம்
இருட்டில் தோன்றிய கனவாய் ஆகலாம்
காலமொன்றே கணக்கை முடிக்கும் கூட்டிக்கழித்து

மூடர்களின் கூடம்

செவிடன் காதில் ஊதிய சங்கு
செய்வ தறியா மூடர்களின் கூடம் 
தலை விரித்தாடும் சாதி மதப்பேச்சு
பொய்கள் முகமாற்றங்கள் உளறல்கள் உதாசீனங்கள்
போவது எங்கே என்றே தெரியாப்பாதை
உண்மை மறைக்கும் ஊடகங்கள் நாளிதழ்கள்
உயிரோடு புதைக்கப் படும் ஒற்றுமையுணர்வு
நான் பிறந்த நாடு இதுதானா
நல்லவர் கொலைகாரராய் கொலைஞன் நல்லவனாய்
மாற்றங்கள் பயமாய் மனதில் அலைகளாய்
சரித்திரம் சாக்கடைக்குள் சாகக் கிடக்க
சந்தேகம் எனக்கு இவை ஓய்வதெப்போது

மனித மனம் மாயக் கருவூலம்

எனக்குள்ளே உறங்கிக் கிடக்கும் எண்ணங்கள்
ஏட்டினிலே எழுதாத வண்ணக் கோலங்கள்
கண்மூடி மனத்திரையில் ஓடும் பிம்பங்கள்
கலைந்திடும் கனவுச் சிதறல்கள் கற்பனைகள்
காட்டாற்று வெள்ளமாய் கட்டுக்கு அடங்காமல்
காட்சிகள் கதம்பமாய் அர்த்தமற்ற தோற்றங்கள்
உணர்வோடு உறவாடும் உறைந்த ஊற்றுக்கள்
மணமுள்ள மலர்களாய் காகிதப் பூக்களாய்
சொல்லோடும் பொருளோடும் சேராத நினைவுகள்
சொல்லாத சொற்களில் ஆயிரம் மர்மங்கள்
மனித மனம்தான் மாயக் கருவூலம்
மனங்களைப் படித்திட மயனுக்கும் இயலாது
இருளுக்கும் ஒளிக்கும் இடையே ஊசலாடும்
இதனை மர்மதேசம் எனவும் கொளலாம் !

College of Engineering, Guindy - 225 years of existence

ஓங்கி உயர்ந்த கம்பீரத் தோற்றம்
ஓராயிரம் ஆண்டுகளாயினும் குறையாத அழகு
பிள்ளைகள் பெறுவதில் காந்தாரியின் தமக்கை
பிறக்கும் செல்வங்கள் அத்தனையும் முத்துக்கள்
நாடுகள்‌ தோறும் தம் வசமாக்கிடுவர்
நானிலம் புகழ்ந்திட நன்மக்கள் இவராவர்
இருநூற்றிருபத்தைந்துஆண்டுகள் கடந்தும் இளமையாய்
இருவேறு கருத்தில்லை உன் வளமைக்கு
திக்கெட்டும் புகழ் பரப்பும் செல்வங்கள்
திசையெல்லாம் புகழ்பாடும் திறனும் தீர்க்கமும்
உன் வயிற்றில் உதித்த நாங்கள்
உள்ளம் குளிர வாழ்த்துகிறோம் உயர்வடைய
இன்றுபோல் என்றும் உலகெலாம் புகழ்மணக்க
இமயமாய் உயர்ந்திருப்பாய் உறுதியாய் சொல்வோம் !

(College of Engineering, Guindy starts celebrating its 225 years of existence. Its year long celebration started in May 2019)

நல்லோர் எவரும் இலரோ

நல்லோர் எவரும் இலரோ நானிலத்தில்
வான் பொய்ப்பினும் தான்பொய்யாத காவிரி எங்கே
மணற்கேணிகள் மழை நீரின்றிப் போயினவே
செம்புலப் பெயல் நீரும் காண்கிலையே
சப்த ஸ்வரங்கள் இசையெழுப்ப வருமோ
சண்டாளர்கள் பெருகியதால் வருணன் கோபித்தானோ
நீரின்றி அமையாத இவ்வுலகு பாலையாகுமோ
பூமித்தாயை சிதைத்த நமக்கு தண்டனைதானோ
மாறிடுமோ இந்நிலை மயானமாய் மாறாமல்
கூறிடுவாய் இறைவா கூக்குரலுக்கு பதிலை

யூகே பாகம் 2

2003
நாங்க தங்கி இருந்த பப் ( pub) ரூம் அளவானது. டிவிலே நாலே லோக்கல் சேனல் தான். முன்னாடியே தெரிஞ்சதாலே பிளாஸ்டிக் மக் கொண்டு போயிருந்தோம்.எதுக்குன்னு உங்களுக்குப் புரியும்.
தினமும் இரவு உணவு வெளியேதான் சாப்பிடனும். முதல் நாள் மட்டும் தங்கி இருந்த தெருவுலே ஓட்டல்லே சாப்பிட்டோம். நாளைக்கு 100 பவுண்டு அலவன்ஸ், ரெண்டு பேரா இருந்ததாலே ஷேர் பண்ணி சாப்பிட்டு கொஞ்சம் சேமிக்கவும் முடிஞ்சது, பின்னாடி ஷாப்பிங் பண்ண. தினமும் ட்ரெயின் புடிச்சு ஒரு ஊர்லே இறங்கி டின்னர் சாப்பிட்டு ஊர் சுத்திட்டு திரும்பிடுவோம். நட்ஸ்போர்டு செங்கல்பட்டு மாதிரி சிட்டிலே இருந்து தூரம், ட்ரெயின் டைமிங் பாத்து பிளான் பண்ணனும்.
இந்தியன் ரெஸ்ட்டாரென்ட் தேடிப் போவோம்,நடத்தறது பாக்கிஸ்தானியரா இருக்கும். நாண் ஆர்டர் பண்ணா திக்கா ரொட்டி மாதிரி இருக்கும்.சில நாட்கள்ளே பப் கிச்சன் லே சமையல் ட்ரை பண்ணோம். சாதம் செஞ்சு,ரசம் வச்சு அப்பளம் அங்கே இருக்கிற ஆயில் ஃபிரை பண்ற கிரில் தொட்டிலே போட்டு எடுப்போம். பார்லே குடிக்க வரவங்க ரசிச்சு சாப்பிடுவாங்க.
வார இறுதி நாட்கள்ளே தூரமா இருக்கிற ஊருங்களுக்குப் பயணம். மான்செஸ்டர்,லண்டன்,செஸ்டர் இப்படி ஒவ்வொரு இடமா. ஓல்டு டிரஃப்போர்ட்லாம் வார நாட்கள்ளே.
லண்டன் இரண்டு நாட்கள்,இரவு தங்க நண்பர் ராமலிங்கத்தோட மச்சானோட ஃபிளாட். வேக்ஸ் மியூசியம்,ஜியன்ட் வீல்,தேம்ஸ் நதி, பக்கிங்காம் பேலஸ், பிக் பென் இப்படி எல்லா இடமும். கேமிரால கிளிக்கினது சுமாரா வந்தது.
லண்டன்லே ஒரு நாள் வுட்லண்ட்ஸ் ஓட்டல்லே தோசை,இட்லி,காபி சாப்பிட்டதே மூணு பேருக்கும் 400பவுண்டு,நம்ம ஊரு காசுக்கு 30000, அப்பதான் நண்பர்
சொன்னார் கம்பேர் பண்ணக்கூடாதுனு. அவர் கொடுத்த வாடகை மாசத்துக்கு 750*76.
செஸ்டருக்கு மட்டும் ஸ்டீவ், மார்க் கூட வந்தாங்க. சின்ன டவுன் அழகா ஒரு பக்கம் ஆறு, ஊர சுத்தி சின்னதா ஒரு கோட்டை. ஊர் சுத்தி பாத்துட்டு ஓட்டல்லே போய் பிரியாணி ஆர்டர் பண்ணப்ப ஸ்டீவ் இந்தியன் ஸ்பைசினு சொல்ல அவன் கொண்டு வந்த பிரியாணி காரம் வாயில் வைக்கவே முடியலே. திரும்ப வேற கொண்டு வர‌ சொல்லி சாப்பிட்டோம்.
கார்லே 40கிமீ பயணம் போறப்ப இரண்டு பக்கமும் பச்சைக் கம்பளம் போல புல்வெளி கண்ணுக்கெட்டிய தூரம் வரை, கண்ணுக்கு குளிர்ச்சி.

யூகே பாகம் 1

2003
ஜெமினி மேம்பாலத்து பக்கத்துலே இருக்கிற பார்க் ஓட்டல்லே தான் அந்த நேர்முகத் தேர்வு நடந்தது. ஸ்டீவ் மற்றும் மார்க் தான் வந்திருந்தாங்க. குவாலிட்டி மற்றும் பிளானிங் தலைமை அவங்க. பின்னாடி தெரிஞ்சது சுந்தரம் கிளேடன்லேருந்து டூலிங் துறைலேருந்து சிவாவையும் அவங்க பாத்தாங்கனு.
எல் & டிலே பதினாலு வருஷம் கடந்த நேரம். கம்பெனிங்களே இருக்கிற பாலிடிக்ஸ் இங்கும் நிறையவே உண்டு. ரிசைன் பண்ணனும்னு நினைச்சப்ப சரியா இந்த ஆஃபர் வந்தது. மார்ச் 2003லே ஆலிவர் வால்வ் யூகே  கம்பெனிலே சேர முடிவெடுத்தேன்.
மூணு வாரம் யூகே ஃபேக்டரி லே இன் ஹவுஸ் டிரெய்னிங். நானும் நண்பர் சிவாவும் மூட்டை கட்டிப் புறப்பட்டோம். விசா வாங்கறது கடினமா இல்லே.
மான்செஸ்டர்லே இறங்கி, அங்கேருந்து நட்ஸ்ஃ போர்டு என்ற இடத்துக்குப் போகனும். அது ஒரு இன்ட்டஸ்டிரியல் டௌன். சுமார் 15 கிமீ தூரம். மார்க் வந்திருந்தான், ஏர்போர்ட்டுக்கு. டௌன்லே ஷாப்பிங் பண்ற தெருலே ஒரு பப் (pub)அது மேலே இருக்கிற 4 ரூம்லே எங்களுக்கு இரண்டு. அப்ப 13 டிகிரி, குளிராத்தான் இருந்துச்சு.
பிரேக்ஃபாஸ்ட் ஃபிரீதான். பிரட் ஆம்லெட், பன், ஜூஸ் இதான் காலை உணவு. சரியா எட்டு மணிக்கு ஸ்டீவ் கார் வரும். நம்ம ஊரு சான்ட்ரோ மாதிரி. எட்டரைக்கு சங்கு ஊதும்.
லஞ்சுக்கு முன்னாடி ஒண்ணு சாயங்காலம் 3 மணிக்கு ஒண்ணு இலவசமாக வென்டிங் மெஷின்லே கப்புசினோ , நிறைய ஆப்ஷன் இருக்கும் ஆனால் இதான் நம்ம ஊரு காப்பிக்கு குளோஸ். லஞ்சுக்கு தினமும் பர்கரும் கோக்கும் தான், மாற்றமில்லாதது.
மத்த‌ நேரமெல்லாம் மேனுஃபாக்சரிங் ஏரியாலே சுத்தறுது, சக தொழிலாளியோட வேலை செய்யறது, சேர்மனோட மீட்டிங் இப்படிப் போகும். ஷாப்லே அவங்க எங்கள பாத்து அப்பப்ப கிண்டல் பண்ணுவாங்க. கண்டுக்காம விட்டுடு வோம். இருக்கப் போறதே கொஞ்ச நாள்தானேனு.
நான் தேர்வு செய்யப்பட்டது அவங்களோட இந்தியன் ஆபரேஷனுக்குத் தலலமையா. அதனாலே மீட்டிங் லே எடக்கு முடக்கா கேள்வி கேப்பாங்க, அவங்க பேசற ஆங்கிலமே பாதிதான் புரியும். நம்ம இங்கிலீஸ் படம் பாக்கற மாதிரி அவங்கள உன்னிப்பாக கவனிக்கனும்.
பாகம் 1
7/5/19

வருணன் வரட்டும்

சுட்டும் சுடர் கதிரவனே
சூடாகிப் போனாய் ஏனோ
வாட்டி வதைக்க வந்தாயோ
வாடிக்கை இதுவே உனக்கு
வேடிக்கை மனிதர் இவர்
வேகட்டும் என்பாயோ வேதனையால்
பகலவன் இப்போது பகைவனா
படட்டும் என்பதோ எண்ணம்
காடழித்து குளமழித்த குலமே
காணுங்கள் என்கோபம் என்றாயோ
திருந்தாத மனிதருக்கு தீயாக
தணலாக தகிக்க வந்தாயோ
சற்றே கருணை காட்டு
சகோதரன் வருணன் வரட்டும்
மழை நீரில் எம்மை நனைத்து
மன்னித்து விட்டுவிடு மகிழ்வோம் !

சீரிளமைத் தலைவன்

உண்மைகள் பொய்யாகவும் பொய்மைகள் உண்மையாகவும்
உரசிப் பார்த்தால் தங்கம் போலவும்
மாயமான்கள் தேடிச் செல்ல நாமுமிஙகே
மதிமயங்கி காடுமேடெல்லாம் ஓட்டம் ஓய்வில்லை
குடிலிலே இருக்கும் மாதவளை கவரக்கள்வன்
குற்றமற்ற அவளோ வெளிப்பூச்சில் ஏமாந்தாள்
கொண்டவனைப் பிரிந்தாள் பேதலித்தாள் பேதை
கண்டவனும் இவள் மீது காமமுற்றான் அய்யகோ
சிறைப்பட்ட நங்கையவள் தவித்தாள் மெலிந்தாள்
சிறகடித்து வருவானா சீரிளமைத் தலைவன்
சிதைப்பானோ சூழ்ச்சியரை மகுடம் தரிப்பானோ ?

ஆதவன் கோபம்

உறக்கம் துறந்த இரவா
கிறக்கம் ஏதும் உண்டோ
பறக்கும் பறவை கூடு சேரும்
பசித்த வயிறுதான் உறங்காது
பகலெல்லாம் உழைத்த உடலுக்கு
இரவொன்றும் இருளும் தேவை
இறைவனின் படைப்பே அதுவாகும்
அவன் உறங்கட்டும் அமைதியாக
அன்பரே வாரும் தேநீரருந்த
ஆதவன் கோபம் கொண்டான்
ஆதலால் இளங்காலையிலே சுடுகின்றான்

சைனா அனுபவம் 2

2008
Jan 2008 - Dec 2008 ,நாக்பூர்லே ஜெய்ஸ்வால் குரூப் கம்பெனிலே ஆப்பரேஷன்ஸ் ஜிஎம். வால்வ் தயாரிக்கிற பிரிவுக்கு. ஸ்டீல் காஸ்டிங்ஸ் ஃபவுண்ட்ரி, பித்தளை வால்வ்ஸ் மெஷின் ஷாப் இதெல்லாமும் இருந்தது.
100 கோடிலே வால்வ் தயாரிக்க தனியா ஒரு பிராஜக்ட் அதுக்கும் நான்தான் தலை. அப்பப்ப மீட்டிங் உண்டு.
எல் & டி விட்டு இங்கே சேர்ந்ததே ஒரு சோகக் கதை. சைனாலே ஒரு‌ பெரிய வால்வ் கம்பெனி ஜியாங்சூலே அதுக்கு தலைவரா போகச் சொல்லி, எல் &டி விட்டு வரச்சொல்லி, அங்கே போன பிறகு கான்ட்ராக்டர் லோக்கல் கம்பெனி கொடுத்துட்டாங்கனு, நாக்பூர்லே உக்கார வச்சுட்டாங்க.
நம்ம கதைக்கு வருவோம். ஜேவி பார்ட்னர் தேடி சைனாவுக்கு போன‌ சமயம். குவாங்சூல வால்வ் பொருட்காட்சி பாத்துட்டு ஷாங்காய் போயாச்சு. அங்கேருந்து ஜியாங்சு போகனும். ரிக் (oil rigs) தயாரிக்கற தொழிற்சாலை பாக்க.
ஷாங்காய்லே பல இடங்கள்ளே இந்திய உணவகங்கள் இருக்கும். அன்னைக்கு
விசிட் எதுவும் இல்லாததாலே காலைல அரிசிக்கஞ்சி குடிச்சிட்டு மால் ஒரு ரவுண்ட் அடிச்சு பரிசுப்பொருள்கள் வாங்கிட்டு ஓட்டல் அறைலே எல்லாத்தையும் வச்சுட்டு டாக்ஸி பிடிச்சு ரெஸட்டாரென்ட்போய் நான் வெஜ் சைட் டிஷ்
ஆர்டர் பண்ணிட்டு‌ உக்காந்து ஏதோ யோசனைல மூழ்கிட்டேன்.
பக் 1
அப்பத்தான் ஞாபகம் வந்தது பர்ஸ் பணத்தோட ரூம்லே விட்டுட்டு வந்தேன்றது. சட்டைப்பை தொட்டுப் பாத்து கொஞ்சம் காசு இருக்குனு சந்தோஷப்பட்டேன்‌. இருந்தாலும் பில் எவ்ளோன்னு தெரியாது சர்வர் கூப்பிட்டு கேட்டேன். அவன் சொன்ன தொகை‌ 205.பணமா இருந்ததோ 180 RMB.
பக் 2
மேனேஜரை கூப்பிட்டேன், ஆர்டர் பண்ண சில ஐட்டம்ஸ் கேன்சல் பண்ணமுடியுமானு கேட்டேன். ஆல்ரெடி தயாரிக்க ஆரம்பிச்சாச்சு இப்ப முடியாதுன்னு சொல்லிட்டான். சில்லறை எண்ணிப்பாத்தா பத்து RMB குறைஞ்சது. மேனேஜர் கிட்ட சொன்னேன். ஒருத்தர் ஓட்டலுக்கு கூட அனுப்புங்க மீதி கொடுத்தனுப்புறேன்னு் சொன்னேன். அது ஒரு பஞ்சாபி ஓட்டல். யாரும் பதில் சொல்லலே.
சப்ளையர் கொண்டு வந்ததை முழுசா சாப்பிட முடியலே. ஒரு வழியா பாதி சாப்பிட்டு இருந்த பணமெல்லாம் தட்டுலே வச்சுட்டு யார் வராங்க என்னோடுனு கேட்டா, பரவாயில்லை பத்து RMBதானேனு சொல்லிட்டான். ஓட்டல் விட்டு வெளியே வந்து டாக்ஸிக்கு வெயிட் பண்றேன்.
பக் 3
ஒரு வழியா டாக்ஸிலே ஏறியாச்சு, இப்ப பாதிலே ரிப்பேர் ஆனா என்ன பண்றதுனு மனசு படபடக்க, தெய்வங்கல்லாம் கண்ணு முன்னாடி. ஓட்டலை சேந்து ரிஷப்சன்லே விளக்கம் சொல்லி டாக்ஸி பணம் கொடுத்தப்ப தான் படபடப்பு அடங்குச்சு.