சனி, 20 ஜூலை, 2019

போலீஸ் குவார்ட்டர்ஸ் - 1

போலீஸ் குவார்ட்டர்ஸ் வாழ்க்கை மறக்க முடியாதது.‌ கொஞ்ச நாள் மீர்சாகிப்பேட்டை வாடகை வீட்டுக்கப்புறம்.அப்பாவுக்கு இந்த லோட்டஸ் கார்டன் பழைய போலீஸ் காலனிலே வீடு கிடச்சு வந்தோம்.
மைலாப்பூர்லே நல்லாங்குப்பம்னு போலீஸ் ஸ்டேசன்ல இருந்தப்ப இந்த மாற்றம். போலீஸ்ல அவர் சேந்ததே அம்மா வழி சின்ன தாத்தா மூலமானு சொல்வாங்க. அவர் ஸ்பெஷல் ஆர்ம்ட் போலீஸ்லே ஜமேதாரா இருந்தார். அம்மாவோட அப்பாவும் போலீஸ் தான். இன்ஸ்பெக்டர் மரியாதைக் குறைவா பேசினான்னு பெல்டை கழட்டி வச்சுட்டு வீட்டுக்கு வந்துட்டுரான்னு சொல்வாங்க. துரைசாமி நாயக்கர் ஆஞ்சனேய பக்தர். ஆஜானுபாகுவா நல்ல கலர். கோபம் வந்துட்டா அவரைப் பாக்கவே பயமா இருக்கும்.
இந்தாளுதான் காட்டுலே இருந்து உங்கப்பன புடிச்சுவந்து தேவதை மாதிரி பொண்ண கட்டி வச்சாருன்னு பாட்டி சொல்வாங்க. உண்மை தான் அப்பாவாலேதான் அம்மா நோய்வாய்ப்பட்டு முப்பத்தேழு வயசுலே என்னோட பதினெட்டாவது வயசுலே இயற்கை எய்தினாங்க.எப்பவும் கடவுளா என்னோட இருக்காங்க
எதுலேயோ ஆரம்பிச்சு டைவர்ட் ஆயிடுச்சு
1962லே இருந்து 1982 வரைக்கும் இந்தக் காலனி தான் என்னை வளர்த்தது.
தாயை இழந்தாலும் என்னை பலநேரங்களில்‌ தாயாகவும் தந்தையாகவும் பாதுகாத்தவர்கள் பலர்.
கெல்லீஸ் கீழ்பாக்கம் கார்டன் இடைலதான் இந்த குவார்ட்டர்ஸ். இன்னைக்கும் இருக்கு. எதிர்லே நியூடோன் ஸ்டூடியோ இப்ப பள்ளிக்கூடமா ஆயிடுச்சு
இரண்டு பிரிவு வீடுகள். ஓட்டுக்கூரையோட இருந்தது நாங்கள் இருந்த வீடு. ஃபிளாட் டைப் வீடுங்க மூன்றடுக்கு மாடிகள். அதிலும் நாங்க இருந்த எதிரெதிர் வரிசை வீடுங்க ஆறு ஆறா பன்னிரண்டு வீடுங்க. இந்த பன்னண்டு வீடும் கிட்டத்தட்ட ஒரு கூட்டுக்குடும்பமா.
தெலுங்கு, தமிழ், மலையாளம் மொழியும் கிறித்துவம், இஸ்லாம் , இந்து மதங்களும் கலந்த பாரத விலாஸ் போல.
இங்கிருந்து தான் என் பள்ளிப்படிப்பு முதல் கல்லூரிப் படிப்பும் பிறகு அம்பத்தூர் எஸ்டேட் வேலையும் எல்லாமே. திருமண வாழக்கைக்கு முந்தைய பகுதி.
போலீஸ்காரன் பசங்க பொரிக்கின்னு சொல்வாங்க பாதி உண்மை பாதி பொய். என்ன மாதிரி தப்பிச்ச பல பேரு இருக்காங்க.
ஆனாலும் கில்லி, காத்தாடி, கோலி, பம்பரம், திருடன் போலீஸ் விளையாட்டு,கிரிக்கெட்,புட்பால்,ஹாக்கினு எதையும் தொடாம விட்டதில்லே.
சில நேரங்கள்ளே சக‌வயசு‌ பசங்களோட அடிதடி சண்டையும் உண்டு. மொட்டை மாடி தான் மணிக்கணக்கிலே பேசறதுக்கான களம். படிக்கறதுக்கும் அப்பப்ப யூஸ் ஆகும். நல்லாப் படிக்கற பையன்னும் அப்பாகிட்டே அடி வாங்கின பையன்னும் காலனிலே பிரசித்தம்.
தொலைக்காட்சிப் பெட்டி கருப்பு வெள்ளை ஒரு ரூம்லே வச்சிருப்பாங்க. வெள்ளிக்கிழமையானா அதன் முன்னாடி இருக்கிற கட்டாந்தரைலே கூட்டம். சிலர் மடக்கு சேர் கூட கொண்டு வருவாங்க. ஒரு கிராமத்த போல காட்சி இருக்கும்.
வீட்டுலே எங்களோட அப்பப்ப கோழி,ஆடு,மாடு,முயல் இதெல்லாம் வளரும். ஞாயித்துக்கிழமைலே கீழ்பாக்கம் தெருக்கள்ளே ஆடுகள மேச்சத யாராச்சும் பாத்திருந்தா இரகிசயமா வைச்சுக்கோங்க.
(தொடரும்)

கருத்துகள் இல்லை: