ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

பாதச்சுவடுகள

பால்மணம் மாறாப் பாலகன் நடையில்
பாவாடை சட்டையில் பாப்பாவின் துள்ளலில்
பள்ளிக்குச் செல்லும் மாணாக்கர் பாதையில்
பசுஞ்சாணம் தெளித்த கிராமத்துத் தெருக்களில்
கடற்கரை மணலில் காதலர் உறவில்
கல்லூரிச் சாலையில்
மரங்களின் நிழலில்
உழுகின்ற நிலத்தில் ஏர்க்காலின் வழியில்
தொழுகின்ற ஆலயத்தின் சுற்றுப் பிரகாரத்தில்
மலர்வனப் பாதையில் பூங்காவின் வரப்பில்
மலைப் பாதையில் மகேசனைத் தொழுதலில்
திரவியம் தேடிச் சுற்றும் நாட்களில்
திடமான நடைமறந்து ஊன்றுகோல் துணையில்
வாழ்க்கை வட்டத்தில் வலம்வரும் நாட்களில்
வாடிக்கையான பாதச்சுவடுகள் தொடர்ந்திடும் நம்முடன் !

காத்திருக்கேன் வந்துவிடு

கண்ணுக்கு மையெழுதி கால்கொலுசு ஓசையிட
பெண்ணுக்கு அணிகலனா போறவளே பொன்னுத்தாயி
சொல்லுக்குச் சுவையுண்டு பார்வைக்குப் பொருளுண்டு
சொக்க வைக்கும் உன்னழகு கண்படுமோ
கணநேரப் பார்வையிலே கட்டிப் போட்டாயே
காந்தக் கண்ணழகி கருங்கூந்தல் பின்னலடி
மெல்லநடை நடந்து இடையசைத்து செல்கையிலே
மெய்மறந்து பார்த்திருப்பேன் பேச்சேதும் வருவதில்லை
காணக் கிடக்கலையே கழனியிலும் வாரலியே
காய்ச்சலேதும் வந்ததுவோ நலம்தானே சொல்லடி பெண்ணே
மாமனிங்கே தவிச்சிருக்கேன் மறுவார்த்தை சொல்லிவிடு
மாங்காயை பறிச்சு பைநிறைய வச்சிருக்கேன்
காத்திருக்கேன் வந்துவிடு காலதாமதம் வேண்டாமடி
பூத்துவிடும் கண்ணெல்லாம் உன்னுருவம் கண்டாலே !

அரக்கி கரோனா

புது வருடம் முதன்முறையாக சிறிதே வருத்தமுடன்
புதிதாய் வந்த அரக்கி கரோனாவாம்
உருவமே இல்லை ஆனால் உயிரை ஆட்டுவிக்கும்
உனதில்லை இந்நாடு உறவாட நீவேண்டாம்
காடுமலை கடந்து கடலிலே கலந்துவிடு
கரிக்கும் உப்பொன்றே உனக்கு முடிவுரைக்கும்
நாடுகள் தோறும் நலமிழந்த மக்கள்
கேடுகள் இல்லாமல் நீங்க மாட்டாயா
புத்தாண்டில் ஒளிந்து மறைவாயா நிரந்தரமாய்
புதிய மகிழ்வோடு உலகோரே கொண்டாட !

கரோனா வீட்டுச் சிறை

அலுவலகத்தை விட்டு சனிக்கிழமை கிளம்பியபோது இப்படி மாற்றம் வருமென்று நினைக்கவே இல்லை.
ஒரு நாள் ஒத்திகை பெரிதாய்த் தெரியவில்லை. கிராசரியோ காய்கறியோ வாங்கி வைக்கவும் இல்லை.
முதல்வர் சொன்ன ஊரடங்கை பிரதமர் ஏப்ரல் பதினாலுக்கு மாத்தினப்ப மனசுக்குள்ள ஒரு சின்ன அதிர்ச்சி. ஆஹா என்ன பண்றதுனு.
சரி பெங்களூருக்கு கிளம்பலாம்னா அங்கேயும் ஊரடங்கு. சமாளிக்க வேண்டியது தான்னு மனசுக்குள்ளே முடிவு பண்ணியாச்சு.
உண்மையைச் சொல்லனும்னா ஆபீஸ் போறத விட அட்டவணை போட்டு வேலை செய்யணும்னு புரிஞ்சது. கொஞ்சம் சிஸ்டம் இம்ப்ளிமென்ட் பண்ண வேண்டிய கட்டாயம்.
வேலைக்கும் ஆள் வராத காரணத்தாலே எல்லா வேலையும் வடிவேலு பாஷைல பிளான் பண்ணியே ஆகணும். பாத்திரம் துலக்கல், காலை முதல் இரவு வரை சமையல் குறைந்த பட்சம் மூன்று முறை, நடுவே வீடு பெருக்கல், வாஷிங் மெஷின் துணி துவைச்சு காய வைத்தல் எல்லாம் லிஸ்ட் போட்டாச்சு.
வாரம் ஒருமுறை கடைக்குப் போகணும் அதற்கு கிச்சன்லே ஒவ்வொரு கப்போர்டா பாத்து லிஸ்ட் எழுதிட்டு , பிரிட்ஜ் திறந்து காய்கறி லிஸ்ட் எழுதி கடைக்குப் போய் அங்கே சோஷியல் டிஸ்டன்சிங் மெயின்டெயின் பண்ணி கர்சீப் முகமூடியாக்கி சேனிடைசர் கைகழுவி பையை தூக்க முடியாம தூக்கிட்டு வேர்த்து கொட்டி வீட்டுக்கு வந்து சோப்பாலே கை கழுவி உடையை துவைக்கப் போடற வரை ஒரு பிராசஸ்.
காலைலே இட்லியோ கஞ்சியோ மத்யானம் சாதத்தோட குழம்பு, இரவு தோசை,உப்புமா,சப்பாத்தி இதில் ஏதாவது ஒன்று, தொட்டுக்க வசதிக்கேத்த ஒண்ணு, சட்னி முதல் சட்னிப்பொடி நானே செய்தது.
இப்ப சொல்லுங்க காலம் காலமா இதையே செஞ்சுட்டிருக்கிற பெண்களுக்கு சலிப்பு வருமா வராதா. இது நடுவுலே கஷாயமோ காப்பியோ வேற.
இன்னைக்கு 21வது நாள் வீட்டுச் சிறைலே. காரை ஸ்டார்ட் பண்ணி வைக்கறது. கேட் வெளியே நின்னு அம்மா உணவகம் வரவங்கள வேடிக்கை பார்க்கறது. ரிலாக்ஸிங் டைம்.
கிட்டத்தட்ட பெண்களின் வாழ்க்கையை வாழ்ந்து பார்த்து விட்டோம்னு தோணுது. இன்னும் 20 நாட்களா நினைச்சாலே மலைப்பா இருக்கு.
ஆனா கரோனா டிவியும் சிஇஜி79 குரூப்பும் நம்மள உயிரோட வச்சிருக்கும்னு நம்பிக்கை இருக்கு.

நினைத்தபோது நினைக்குமிடம்

பறவையாய் மாறிட வரம் தருவாயா இறைவா
பறந்து வானில் வலம் வர ஆசை
நீலக் கடலில் நெடுந்தொலைவு பயணித்து தீவொன்றில்
நித்திரை கொள்ள வேண்டும் நிம்மதியாய் கண்மூடி
அமேசான் காடுகளின் அடர்ந்த மரங்களூடே அலையவேண்டும்
அண்டார்டிகாவின் பனிக்காற்றை சுவாசித்து ஆர்டிக் கடல் சேரவேண்டும்
இமயத்தின் சிகரங்களில் இளைப்பாறி எவரெஸ்ட்டை சேரவேண்டும்
ஆகாயத்தின் எல்லைக்கே சென்று. பூமியின் பரிமாணங்கள் காணவேண்டும்
கங்கையில் நீராடி காவிரி நீர்பருகி களைப்பாற வேண்டும்
சகாரா பாலைவனச் சோலைகளில் உலாவி உணவருந்த வேண்டும்
சீனத்துப் பெருஞ்சுவரின் நீண்ட தூரத்தை அளந்திட வேண்டும்
நைல்நதித் தீரத்தில் குளித்து காஷ்மீர் ஆப்பிளை உண்ண வேண்டும்
நினைத்தபோது நினைக்குமிடம் செல்வதற்கும் வரம் வேண்டும்

கானகத்துக் காட்சி

கானகத்துக் காட்சியின்று கண்ணில் தோணுது
யானையொன்று பிளிறி தன்கன்று அழைத்தது
முயலொன்று புதருக்குள்ளே ஓடி மறைந்தது
மயிலொன்று தோகை விரித்து நடனமாடியது
புலியொன்று குளத்து நீரை குடிக்க வந்தது
மானொன்று அதனைக் கண்டு மிரண்டோடியது
குரங்கொன்று மரத்தின் மீது தாவியோடியது
குயிலக்கா கூவியதன் வரவைச் சொன்னது
சிங்கராஜா கர்ஜனையில் காடே அதிர்ந்தது
பஞ்சவர்ணக் கிளியொன்று பழத்தைத் தின்றது
பாம்பைத் தேடி கீரிப்பிள்ளை பாய்ந்தோடியது
முள்ளம்பன்றி உடலைச் சிலிர்த்து உற்றுநோக்கியது
காட்டெருமை கன்றுக்கு பாலைத்தந்து புல்மேய்ந்தது
காட்சிகள் இவையாவும் கண்ணுக்குள் விரிந்தது

சொன்னபடி வருவாளா

என்ன‌ பாட்டுப்பாட ஏலேலோ ஐலசா
சொன்னபடி வருவாளா செண்பகம் பொழுதோட
மேகம் கருக்குதடி மேனியெல்லாம் சிலிர்க்குதடி
வேகமாய் வருவாளா வஞ்சகி வடிவழகி
கண்ணெல்லாம் பூத்திருச்சி காத்துக் காத்து
காதகி காணலியே எங்கே சென்றாளோ
கரும்புத் தோட்டத்தில் நீர்பாய்ச்சி நிக்கறேண்டி
சிறுக்கி மவளே சீக்கிரமா வந்திடடி
மாலைச் சூரியன் மறையப் போறாண்டி
மயக்கும் கண்ணழகி மாமனுக்காக வாடிபுள்ளே
புலம்ப விட்டுட்டு போனஇடம் எதுவோடி
புரியலியா என்ஏக்கம் சிங்கார சிரிப்பழகி
பட்டுப் புடவையொன்னும் காலுக்குக் கொலுசும்
பரிசா தருவேன் பாவிமவளே வந்துசேரு

யாரம்மா இனியெனக்கு

அன்னையின் குரல் கேட்க ஏங்குவையோ
அவள்மடி மீது தலைவைத்து உறங்குவையோ
வளர்ந்தாலும் சிறுபிள்ளையாய் உணவு ஊட்டுவாளோ
தளர்ந்தாலும் தாயாக தாலாட்ட மறப்பாளோ
உனக்காக உறங்காத விழியொன்று கொண்டாளோ
தனக்காக வாழாத தெய்வமே ஆனாளோ
தமிழூட்டி வளர்த்தவளே தாய்வீடு சென்றாளோ
அமுதூட்டி வளர்த்த கைகள் அசையாதோ
பாலூட்டி சீராட்ட மறுமுறை பிறப்பாளோ
பாராட்ட மகனேயென யாரம்மா இனியெனக்கு

ரிட்டயர்மென்ட்

ஐம்பத்து இரண்டு வயசுலே வேலையை விட்டு நாக்பூரிலே இருந்து கிளம்பி சென்னை வந்தப்ப வாழ்க்கையின் வேறு பரிமாணத்த பாக்கப் போறோம்னு நினைக்கலே.
2009 ன் ஆரம்பம். தொழில் அனுபவத்த வச்சு தொழில் தொடங்க நினைச்சு TiN வாங்கி பேர் வச்சு பலரோடு பேசி, நண்பர்களோட கலந்தாலோசித்து, ஆரம்பிக்க நினைத்த எதுவுமே சரியாகப் போகல.
வீட்டிலே உட்காந்தா பைத்தியம் பிடிச்சுடும்னு எண்ணம். ஓடிக் கொண்டே இருந்தவன உக்காருன்னா வீட்டுலே எப்படி முடியும்.
அப்படித்தான் நண்பர் ஜெய்சங்கர் கொடுத்த அட்வைஸ்படி பெங்களூர் ஷாக்கார்நகர்லே பர்னிச்சர் கடை ஆரம்பிச்சது.
நடுவிலே 2010லே மஸ்கட் போய் வேல பாத்து வந்தது. மலேசிய கோலாலம்பூருக்குப் போய் பர்னிச்சர்,திரைச்சீலைங்க,நாவல்டி பொருட்கள் மொத்த வியாபார கடைகளை பாத்துட்டு வந்தது.
2017 வருஷம் பிறக்கர வரை வெவ்வேறு வியாபாரம் செய்ய எத்தனித்து கைவிட்டு போதும் வியாபாரம் நமக்கானது அல்ல என்று விட்டது எல்லாம் முன்னமே கூறியிருக்கேன்.
இந்த ஒன்பது வருடத்துலே சுற்றுலாக்கள் போய் வந்தது அதிகம். கர்நாடகம்,கேரளா,தமிழ்நாடு,கோவா,மகாராஷ்டிரா,குஜராத்னு கார்லே ஆயிரக்கணக்கான கிமீகள் சுற்றி இயற்கை அழகை ரசிக்கற சந்தர்ப்பமும் கார் டிரைவிங் அனுபவமும் வளர்ந்தது.
2017 பிப்ரவரி போல சென்னைக்கு திரும்பவும் வந்தப்போ வீட்டுலே உட்கார முடியாது,வேவைக்குப் போறது நல்லதுனு முடிவெடுத்து வேலைக்குச் சேந்தப்ப ஒரு நிம்மதி.
மூணு வருஷம் ஓடிப்போச்சு சென்னைலே தனிமை வாழ்க்கை. ஆனா இந்த கரோனானு வைரஸ் வந்து இப்படி ஒரு பாடம் கத்துக் கொடுக்கும்னு நினைக்கவே இல்லை.
வீட்டுலே மட்டும் உட்கார வைக்கலே. வெளியே போகாமலே இருக்கவும் வச்சுடுச்சு. 16வது நாள் இன்னைக்கு. எதுவுமே நடக்கறப்ப தான் நம்மாலே இதை ஏத்துக்க முடியுமா இல்லையானு உணர முடியுது. இன்னும் எத்தனை நாளானாலும் சமாளிக்கலாம்னு நம்பிக்கை. இதுவும் கடந்து போகும்.
3 comments
Like
Comment
Share

Comments

View 1 more comment

எதுவென்று உரைப்பாயா

அண்ணே சொல்லண்ணே எது பெரியது
அன்பா காதலா அரவணைப்பா கருணையா
கொடியது எதுவென்று சொல்வாயா அண்ணே
வறுமையா முதுமையா நோயா ஊனமா
கடியது எதுவென்று உரைப்பாயா அண்ணே
உழவு நெசவு உருக்காலை கடலோடுதல்
அரியது எதுவாகும் அருமை அண்ணே
செழுமை வளமை புகழ் ஈகை
நெடியது சொல்வாயா மூத்தவனே அண்ணே
மலைமுகடு கோபுரம் மூங்கில் காட்டுமரங்கள்
உரியது கேட்பின் விளம்பிடுவாயா அண்ணே
நிலம் நீர் காற்று ஆகாயம்
விதையிலிருந்து செடியா செடியிலிருந்து விதையா
எண்ணத்தின் வேகத்தை அளந்து சொல்வாயா
வாழ்க்கை விதிவசமா இல்லை மதிவசமா
விடைகள் தெரிந்த பின்னே தமையனே
அழைத்திடு ஆயிரம் பொற்காசு தருவேன் !

பாழும் கிருமி

ஓடி விளையாடு பாப்பா இன்று
ஓடாமல் வீட்டில் இரு பாப்பா
கூடி விளையாடு பாப்பா இன்று
கூடாமல் தனித்து இரு பாப்பா
பள்ளிக்குச் சென்று படித்துவா இன்று
படிக்கப் போகாதே பரீட்சையும் இல்லை
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
கூடாதே கூட்டம் தவிர் அதுநன்று
அச்சமில்லை அச்சமில்லை என்றது இன்று
அஞ்சு அடுத்தவர் கண்டு ஒதுங்கு
அருகில் வந்து அணைத்துக் கொள்
அண்டாதே தூரமாய் நில் இன்று
அசையாத அகிலம் திறவாத ஆலயம்
அடுத்த வேளை வாழ்வதும் அதிசயம்
ஊதிய சங்குகள் உறங்கும் நேரம்
ஊழ்வினை மொத்தமாய் உலகை அடக்கி
பாழும் கிருமிகள் பட்டி தொட்டியெங்கும்
படித்தவன் பணக்காரன் பேதமே இல்லை
சமத்துவம் இப்போது சாவதில் வந்தது
சரித்திரம் படைத்தது மானிடர் மரணத்தில்

இயற்கை

இயற்கையை நேசிப்பதால் உன்னை சுவாசிக்கிறேன்
இடரான பாதையிலும் தொடர்ந்து வருகிறேன்
பனிக்கட்டி பந்தாய் விளையாடி மகிழ்கிறேன்
பசும்புல் வெளியில் புரண்டு பார்க்கிறேன்
மலைகளின் சிகரங்களில் மேகத்தைத் தழுவுகிறேன்
மலையருவித் தண்ணீரின் குளிரில் நடுங்குகிறேன்
பள்ளத்தாக்கின் உயரத்தில் கீழ்நோக்க அஞ்சுகிறேன்
குகைகளின் இருட்டில் வௌவால் சத்தம் கேட்கிறேன்
அடர்ந்த காட்டில் ஆளில்லா ஏகாந்தம் தேடுகிறேன்
படர்ந்த பனிமுகடுகளில் வலம்வரப் பார்க்கிறேன்
உன்னிலும் உயர்ந்தவள் பாரெங்கும் தேடினேன்
என்றாலும் உன்துணையே உன்னதமென உணர்ந்தேன் !

கவிதைக் காதலி

காலை மலருங்கால் கவிதை மலரும்
காதல் பாட்டுக்கு மெட்டு பிறக்கும்
களத்துமேடு முதல் கடற்கரை வரை
குளத்தங் கரையிலே விரால தேடும்
இல்லாத மாமன் மகளை அழைக்கும்
பொல்லாத மனமே பேராசை தானோ
ஊரோடும் உறவோடும் நாள்முச்சூடும் உரையாடும்
ஊறும் எண்ணங்கள் உருவாக்கும் கற்பனையை
காவியம் படைதத முன்னோரே வழிகாட்டி
ஓவியம் அழகாக தூரிகை ஓட்டம்
இன்பம் வார்த்தைகளில் இதயம் கொட்டும்
துன்பம் துடைப்பதுவே கவிதைக் காதலிதான்

எல்லாமே புதுமை

மண்ணிலே உதித்தபோது எல்லாமே புதுமை
மழலை மட்டுமே என் மொழியாய்
மதங்கள் தெரியாது அன்னை மடியில்
பெற்றோரை இறைவனோ இயற்கையோ தேர்ந்தது
கற்றவை யாவும் வளர்ந்த பின்னாலே
வர்ணங்கள் யாருக்காக வகுத்தவன் எவன்
வானமே எல்லை நாட்டின் எல்லையில்லை
பறவைகள் பறந்து கண்டம் கடக்கின்றன
உறவுகள் தேடி கூட்டைத் துறக்கின்றன
சுதந்திரக் காற்றை தினமும் சுவாசிக்கின்றன
எதனால் இத்தனை வன்மம் மானிடா
என்னையேனும் மறுபடி கருவிலே சேர்த்திடுவாயா
வஞ்சக உலகில் வாழ்ந்தது போதும்
வேறோரு உலகில் பிறக்கக் காத்திருப்பேன்

வேற்றுமையில் ஒற்றுமை

காலம் காலமாய்க் கட்டிக் காத்திட்ட ஒற்றுமை
காலனிடம் போக வேண்டாம் காப்போம் சகோதரத்தை
நெற்பயிர்களூடே களைகள் களையட்டும் அரசாங்கம்
மற்போர் வார்த்தைகளை அடுக்குவதை அறவே ஒழிப்போம்
அமைதியை உலகுக்கு போதித்த நாட்டிலே பேதமையேன்
அடுத்தவர் சிரித்திட ஏதுவாய் எதுவும் வேண்டாம்
மதங்களும் சாதியும் உனது எனது நம்பிக்கை
இயற்கையும் இறைவனும் அவரவர் விருப்பக் கொள்கை
வேற்றுமையில் ஒற்றுமையே நமது பலம் மறந்திடாதே
வேர்களை விட்டுவிடு அழுகிய இலைகள் களையப்படும்

தாமரைத்தோட்டம், பழைய காவலர் குடியிருப்பு

அத்தியாயம் ஐந்து
தொடரின் இப்பாகத்தை இன்று எழுதுவதே சிறந்தது. அன்னை உயிர் நீத்த நினைவு நாள் இன்று.
பள்ளி வாழ்க்கையை முடிச்சு கல்லூரி வாழ்க்கை ஆரம்பம். குவார்ட்டர்ஸ்லே இருந்து மெக்னிகல்ஸ் பிரிட்ஜ் வழியா நடந்து சேத்பட் ஸ்டேஷன்லே டிரெயின் பிடிச்சு தாம்பரத்துலே இறங்க 40 நிமிஷம் ஆகும். கிழக்கு பக்கமாக வெளியே வந்தா நேரெதிர் கல்லூரி. மிகப் பேரிய இடம்.
பக்கத்து ஏர்போர்ஸ் காம்பவுண்ட் கிட்ட தான் விளையாட்டு மைதானம். தமிழ் மீடியத்துலே இருந்து இங்கிலீஷ் மீடியம் சேந்தப்ப கொஞ்ச காலம் படிப்பே கஷ்டமாத்தான் இருந்தது.
அடுத்து என்ன படிப்புன்னு யோசிச்சு கணித குரூப் எடுத்தது அப்பா மெடிகல்லாம் செலவு பண்ண முடியாதுனு சொன்னதும் பயாலஜி மேலே எனக்கு ஆர்வம் இல்லாததும்.
இந்த ஒரு வருஷப் படிபபபுலே NSS லே சேந்து பக்கத்து கிராமங்களுக்குச் சேவை செய்யப் போனப்ப சுவர்ணலதானு ஒரு வருஷ சீனியர் பாடிய கண்களிரண்டும் உன்னைக் கண்டு பேசுமோ பாடலும் அவளோட அழகின் ஈர்ப்பும் ஞாபகம் வருது.
காலம் உருண்டோட அம்மாவின் உடல் நிலை மோசமா ஆயிட்டே வந்தது. பி யூ சி இறுதிப் பரீட்சையும் நெருங்கிடுச்சு. அம்மா உடல் உருகி கோமா நிலைக்குப் போயிட்டாங்க.
கவலையோடவே ஒவ்வொரு பரீட்சையும் எழுதிட்டு வருவேன். அன்னைக்கு ஏப்ரல் 1,1974 தமிழ் பரீட்சை. பரீட்சைலாம் மத்தியானம் தான்.
விடியற்காலைல அம்மாவுக்கு மூச்சு இழுக்க ஆரம்பிச்சுடுச்சு. பாட்டி பாலாடைலே பால் ஊத்தி வாயிலே ஊத்தச் சொன்னாங்க. அது முழுசா உள்ளே போறதுக்கு முன்னாடி உயிர் பிரிஞ்சிடுச்சு.
நான் கதறிய கதறல் குவார்ட்டர்ஸ் முழுசும் கேட்டிருக்கும். பரீட்சைக்குப் போகணும்னு எண்ணமே இல்ல எனக்கு. அடுத்த வீட்டுக்காரங்களாம் வந்து பரீட்சைக்குப் போய்ட்டு வானு சொல்லிட்டு இருந்தாங்க. எனக்கு காதுல விழலே.
ஜானகிராமன்னு மாமா அரும்பாக்கத்துலே வந்திருந்தார். அவர் என்னை ரெடியாகச் சொல்லி வற்புறுத்தி என்னோடவே காலேஜ்க்கு வந்து பரீட்சை ஹால்லே விட்டு வெளியேகாத்துட்டு இருந்தார்.
பரீட்சை எழுதி முடிச்சு வீட்டுக்கு வந்து அம்மாவோட இறுதிச் சடங்கு நடந்தது. கொள்ளி போடறப்பவும் கதறி அழுகை.
அதுக்கப்புறம் இருந்த பரீட்சைங்க, பிராக்டிகல்ஸ் எல்லாம் முடிச்சேன். அன்னைக்கு நான் தமிழ் பரீட்சைக்குப் போகாம இருந்தா இந்தக் குழுவிலே இருந்திருக்க மாட்டேன்.
ரிசல்ட் வந்தப்ப பஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணி இருந்தேன். கணக்குலே நூறறுக்கு நூறு. பிசிக்ஸ்லே டிஸ்டிங்சன் கெமிஸ்ட்டிரிலே மார்க் குறைவு. ஆச்சரியம் என்னண்ணா தமிழ்லே முதல் மார்க்.
எஸ்எஸ்எல்ஸிலேயும் கணிதத்துலே நூற்றுக்கு நூறு. அதனாலே BSc மேத்ஸ் அப்ளை பண்ணி அதே கல்லூரிலே சேந்துட்டேன்.

ஓய்ந்திடும் அந்நாள்

ஓடிய. கால்கள் ஓயும் ஒருநாள்
பாடிய வாயும் மூடிடும் ஒருநாள்
தேடிய செல்வம் தேய்ந்திடும் ஒருநாள்
ஆடிய ஆட்டமும் அடங்கிடும் ஒருநாள்
நாடியும் ஒடுங்கி நலிந்திடும் ஒருநாள்
செடியும் மரமாகி சருகாகும் ஒருநாள்
கொடியும் படர்ந்து காய்ந்திடும் ஒருநாள்
முடியும் இழந்து முதியவராவது ஒருநாள்
கடிது மானிட வாழ்வெனத் தெளிந்திட
நெடிது வளர்ந்து குறுகி நின்று
நாடித் துடிப்பு குறைந்து கூனாகி
பாடிய பட்டினத்தார் பாடல் வரிகள்
ஓடிடும் கண்முன்னே ஓய்ந்திடும் அந்நாள் !

தாமரைத் தோட்டம், பழைய காவலர் குடியிருப்பு

அத்தியாயம்-4
மெது மெதுவா நண்பர்கள் வட்டம் விரிவடைஞ்சுச்சு. அந்தோணி,சம்பந்தம், அசோக் இந்த கால கட்டத்துல நண்பர்களாகி நெருங்கிய நண்பர்களாக இன்னைக்கும் இருக்காங்க.
படிப்புலே விடாம டாப் டெனனுக்குள்ளே இருந்தேன். ராஜன், முரளிதரன்லாம் எப்பவும் முதல் ராங்க் மாணவர்கள்.
படிக்கறது பெரும்பாலும் வீட்டுக்கு எதிர்லே நடராஜன் அவரோட முன் வராண்டால தான். காத்தோட்டமா இருக்கும். ஊர்லே இருந்து பாட்டி அப்பப்ப வந்துட்டு போவாங்க. அப்பாவோட சித்தியோட சண்டை சில நேரம். மகளோட நிலைய பாத்து அவங்களுக்குக் கோபம் வரும். தாத்தா இருந்திருந்தா இதெல்லாம் நடக்குமானு கேப்பாங்க. அப்பா தாத்தாவுக்குப் பயப்படுவார்.
நானும் சம்பந்தமும் ரவி அம்மா வீட்டுலே வசந்தாவோட கல்லாட்டம் ஆடுவோம். பொதுவா பெண்கள் ஆடுவாங்க. அவங்களோட உறவினர்கள் எல்லாரும் பழக்கம். சம்பந்தம் அண்ணன் வீட்டுலே தங்கி இருந்தான்.
அசோக் தங்கை வீட்டுலே. அந்தோணி அப்பாவும் போலீஸ்கார். மாடி மேலே போய் படிக்கறது,கதை பேசறது, வேடிக்கை பாக்கறதுலாம் நடக்கும்.
மாடியோட டிரெயின் பைப்பை பிடிச்சுகிட்டு மாடி மேலே ஏறிடுவேன். அது திருடன் போலீஸ் விளையாட்டப்ப. காத்தாடி விட மாஞ்சா நூல் ரெடி பண்றத ஒரு தனிக்கதையா எழுதலாம்.
தமிழ்லே எப்பவும் முதல் மாணாக்கனா இருக்கறதாலே தமிழ் ஆசிரியர்கள் சதாசிவம்,குருசாமிக்கு ரொம்பப் பிடிக்கும். சி செக்க்ஷனோட சேந்து தமிழ். என்னோட பேர் வி ஆங்கில எழுத்துலே இருந்ததாலே அப்படி பிரிஞ்சது. நண்பர்கள் ராம் மனோகர்,ஜி.சுரேஷ்,சுந்தரம்லா சி செக்ஷன்லே இருந்ததா ஞாபகம்.
குவார்ட்டர்ஸ்லே நல்லா படிக்கற பசங்கள விரல் விட்டு எண்ணிடலாம். 1973லே எஸ் எஸ் எல் சி. நிறைய ரிவிஷன் டெஸ்ட் நடக்கும். அப்பதான் பக்கத்து பங்களா நெல்லிக்காய் பறிக்க சுவர்லே ஏறி கீழே விழுந்து இடது கை எலும்பு முறிஞ்சது.
அப்பாவே எலும்பு முறிவுக்கு கட்டு போடுவார். ஆஸ்பிடல்லே போட்ட மாவுக்கட்ட அவுத்துட்டு அவரோட கட்ட போட்டார். அதுலே நல்லெண்ணெய், உளுந்து மாவு, வெல்லம், பச்சிலை எல்லாம் இருக்கும். அதையே குடிக்கவும் சொல்வார். வெல்லம் இருந்ததாலே குடிக்க முடிஞ்சது.
ரிவிஷன் எக்ஸாம் ஆன்ஸ்வர் பேப்பர்லாம் எண்ணெயாயிடும். கட்டோட போய் தான் எழுதுவேன். அந்த மார்க்ஸ் வச்சே தாம்பரம் கிறித்தவக் கல்லூரிலே அட்மிஷன் கொடுத்துட்டாங்க பப்ளிக் எக்ஸாம் முன்னாடியே. பக்கத்துலே இருக்கிற லயோலா விட்டு 25 கிமீ தள்ளி இருக்கிற காலேஜ்.
பப்ளிக் எக்ஸாம் எழுதிட்டு வழக்கம் போல சொந்த ஊர்களுக்குப் போயாச்சு. கணக்குப் பரீட்சைலே இங்கிலீஸ் மீடியம் பையனுக்கு கிராப் போட்டு X axis எழுதறதுக்கு பதிலா X அச்சுனு எழுதி அடிச்சு மாத்தி எழுதினது சிரிப்பு வருது.
எலெக்டிவ்ஸ்னு அல்ஜீப்ரா ஜாமிட்ரியும் ஒரு சப்ஜெக்ட். ரிசல்ட் வந்தப்ப பாஸானது எல்லாருக்கும் மகிழ்ச்சி. மெரிட்லே பாஸ் பண்ணிருக்கேன், ஸ்டேட்ல 40வது ரேங்க்னறது கூடுதல் மகிழ்ச்சி.
பிற்காலத்துல கல்லூரிலே அநத வருஷம் மாநில முதல் மாணாக்கனான மணி எங்களோட படிச்சான்.

பேய்க்கதை

சின்ன வயசுலே பேய்க்கதை கேட்டாலோ படம் பாத்தாலோ ராத்திரி முச்சூடும் டாய்லெட் போகக் கூட பயம்.
பக்கத்து வீட்டு தாமு உண்மை சொன்னானானு இன்னும் ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கேன்.
மேகலா, சரவணானு புரசவாக்கத்துல தியேட்டர்ங்க சுடுகாடு பக்கத்துலே. அந்த தியேட்டர்ஸ்லே இரவுக் காட்சிங்க பாத்துட்டு சுடுகாட்ட கிராஸ் பண்றப்ப உயிர் போய் வரும்.
அப்படி ஒரு தடவ படம் பாத்துட்டு நள்ளிரவு திரும்பறப்ப தாமு பாத்த பேய்க்கதை தான் இது.
பொதுவா கெல்லீஸ், புரசவாக்கம்லாம் நடந்தே தான் போவோம். குவார்ட்டர்ஸ் ஒட்டி ஒரு பெரிய ஒப்பன் டிரெயினோஜ் கால்வாய் போகும். அது நியூட்டோன் ஸ்டூடியோ பக்கத்துலே போய் கூவம் ஆத்துலே கலக்கும். பெரும்பாலும் மழை வரப்ப வெள்ள நீர் அதுலே போகும்.
நண்பர் ஒரு நாள் படம்பாத்துட்டு நள்ளிரவு குவார்ட்டர்ஸ்லே நுழையறப்ப ரோட். கிராஸிங் கல்வெர்ட் கிட்டே வயசான பெண்மனி உக்காந்து இருக்கறத பாத்திருக்கார்.
மனசுக்குள்ள பயம் இருந்தாலும் மெதுவா கிட்ட போய் யாரும்மமானு கேட்டிருக்கார். அது இவர கண் திறந்து பாத்தப்ப கண்ணெல்லாம் சிவந்து பயங்கரமா இருந்திருக்கு. எழுந்து உயரமா காலே இல்லாம நின்னிருக்கு. அவ்வளோதான் தாமு ஓட்டம் பிடிச்சு குவார்ட்டர்ஸ் இன்னொரு ஸைட்லே சாக்கடை தண்ணி போயிட்டு இருக்கும். அது வழியா ஓடி வரப்ப அதுக்குள்ளே விழுந்து திரும்பிப் பாத்தா அது தூரத்துலே தெரிஞ்சிருக்கு.
கை விரல்லாம் நாம சினிமாலா பாக்கற மாதிரியே நீண்ட நகத்தோட. ஒரு வழியா வீட்டு பின்வாசலுக்கு வந்து தண்ணிய தலைக்கு ஊத்தி கோணிப்பைக்குள்ளே உடம்ப நுழைச்சு அப்படியே பாத்ரூம் பக்கத்துலே படுத்துட்டாரு.
மூணு நாள் ஜுரத்துலே படுத்து ஒவ்வொருத்தருக்கா இந்தக் கதைய சொன்னாரு. அதுலே இருந்து ராத்திரி நேரத்துலே அந்தப்பக்கம் கிராஸ் பண்றப்பலாம் பேய் இருக்காணு பாப்போம்.
வாழ்க்கைலே ஒரு முறையாவது பேயை பாக்கணும்னு தோணிட்டே இருக்கும். பேய்ப் பயம் மெது மெதுவா அப்புறம் தான் விலகுச்சு

நட்பு

எப்பவும் நண்பர்கள் தொடர்பு ரொம்ப முக்கியம்.
சின்ன வயசானாலும் முதியவரானாலும். நம்ம ஒவ்வொருத்தருக்கும் சில நட்புகள் மறக்க முடியாதவை.
ஆறிலிருந்து பதின்மூன்று வயது வரை இராஜேந்திரன், இஸ்மாயில், மூர்த்தி இவங்கள்ளாம். மத்தவங்களோட விளையாடினாலும் நண்பர்களா ஆகலே.
பெண்கள் எல்லாம் வயது குறைவா இருந்ததாலே எங்களோட பழகலே. அதுவில்லாம அப்பலாம் கட்டுப்பாடு அதிகம்.
பதினான்கு வயது முதல் நண்பர்கள் வட்டம் பெரிதானது. பள்ளியில் அதிகமா நட்பு வட்டம் இல்லை. சுகுமார்,இராஜரத்தினம் சில பேரோட நெருக்கம். தமிழ் கிளாஸ்ல ஜி.சுரேஷ். பத்மநாபன்,ரமேஷ்,ராஜன்,நெடுஞ்சேரன்,சார்லஸ்,ரவிச்சந்திரன்,ரமேஷ்குமார் இன்னமும் தொடர்பில். பெயர் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்.
குவார்ட்டர்ஸ் குடும்பங்களோடு படித்து முடிக்கும் வரை தொடர்பிருந்தது. குணசேகர்,அவரது மாமா நடராஜன்,இராஜேந்திரன்,மூர்த்தி, அசோக், அந்தோணி, சம்பந்தம், இரவி அம்மா இப்படி குடும்ப நட்புகள் மனம் துவண்டு விடாமல் பல காலம் காத்திருக்கின்றன.இவர்கள் தவிர கணபதி, கிருஷ்ணன் போன்ற பெரியவர்களும்.
கல்லூரி வாழ்க்கையில் சிறு குழுக்களாய் இருந்த நட்பு இப்போது பல்கிப் பெருகியதால் அனைத்து பெயர்களையும் சொல்ல இடமில்லை. சுரேஷூம் கந்தசாமியும் கல்லூரி விடுதியில் இருந்தபோது அடிக்கடி அவர்கள் அறைக்குச் செல்வேன். கந்தசாமியின் அண்ணன் வீட்டில் இரவு ஜாயின்ட் ஸ்டடி, நல்ல கவனிப்பு.
பல நண்பர்கள் என் வீட்டிற்கு வந்துள்ளனர். நான் அவர்கள் வீட்டிற்குச் சென்றுள்ளேன். பீச் போவதும் வழக்கம். இப்போதைய அண்ணா சமாதிக்குப் பின்புறம் பெரும்பாலும்.
படிப்பு முடித்து அம்பத்தூர் மார்ஷலில் மைக்கேல், சத்யநாராயணா, பெங்களூரு பீன்யாவில் லஷ்மிபதி, அடிகா, அசோக் லேலண்ட் ஓசூரில் மோகனசுந்தரம்,ஆரோக்யராஜ் பிறகு சென்னை வாசம்.
அட்கோ வால்வ்ஸில் பல நண்பர்கள். இராமன், சுரேஷ் நெருக்கமானாலும் ஒரு பெரிய லிஸ்ட் இருக்கு அவர்களெல்லாம் வாட்ஸப்பிலும் பேஸ்புக்கிலும் தொடர்பிலிருக்கிறார்கள். கோடை செல்வதற்கு ஷியாம்சுந்தர் (பாஸ்) அவரோட சொந்த காட்டேஜ் மிஸ்டி மவுண்டனில் தங்க இரண்டு வருடத்திற்கு ஒருமுறையாவது சுந்தர்,தவே,மனோகர் இவர்களுடன். மயில் மானசீகமாக.
எல் &டி யிலும் பல நண்பர்கள். அட்கோவும் அதனில் சேர்ந்ததே.
ஆலிவர் வால்வ்ஸ், நீகோ ஜெய்ஸ்வால், பிரிட்டிஷ் பெட்ரோலியம் இவையெல்லாம் வேலை செய்த இடங்கள்‌.
தற்போது நண்பன் சுரேஷ் மூலமாக அருண் எக்ஸல்லோவில்.
நட்புகள் பரந்து விரிந்தவை. அவ்வப்போது துவண்டு விடாமல் தாங்குபவை. பல நேரங்களில் வாழ்க்கைப் பாதையில் கூடவே பயணிப்பவை.