ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

தாமரைத் தோட்டம், பழைய காவலர் குடியிருப்பு

அத்தியாயம்-4
மெது மெதுவா நண்பர்கள் வட்டம் விரிவடைஞ்சுச்சு. அந்தோணி,சம்பந்தம், அசோக் இந்த கால கட்டத்துல நண்பர்களாகி நெருங்கிய நண்பர்களாக இன்னைக்கும் இருக்காங்க.
படிப்புலே விடாம டாப் டெனனுக்குள்ளே இருந்தேன். ராஜன், முரளிதரன்லாம் எப்பவும் முதல் ராங்க் மாணவர்கள்.
படிக்கறது பெரும்பாலும் வீட்டுக்கு எதிர்லே நடராஜன் அவரோட முன் வராண்டால தான். காத்தோட்டமா இருக்கும். ஊர்லே இருந்து பாட்டி அப்பப்ப வந்துட்டு போவாங்க. அப்பாவோட சித்தியோட சண்டை சில நேரம். மகளோட நிலைய பாத்து அவங்களுக்குக் கோபம் வரும். தாத்தா இருந்திருந்தா இதெல்லாம் நடக்குமானு கேப்பாங்க. அப்பா தாத்தாவுக்குப் பயப்படுவார்.
நானும் சம்பந்தமும் ரவி அம்மா வீட்டுலே வசந்தாவோட கல்லாட்டம் ஆடுவோம். பொதுவா பெண்கள் ஆடுவாங்க. அவங்களோட உறவினர்கள் எல்லாரும் பழக்கம். சம்பந்தம் அண்ணன் வீட்டுலே தங்கி இருந்தான்.
அசோக் தங்கை வீட்டுலே. அந்தோணி அப்பாவும் போலீஸ்கார். மாடி மேலே போய் படிக்கறது,கதை பேசறது, வேடிக்கை பாக்கறதுலாம் நடக்கும்.
மாடியோட டிரெயின் பைப்பை பிடிச்சுகிட்டு மாடி மேலே ஏறிடுவேன். அது திருடன் போலீஸ் விளையாட்டப்ப. காத்தாடி விட மாஞ்சா நூல் ரெடி பண்றத ஒரு தனிக்கதையா எழுதலாம்.
தமிழ்லே எப்பவும் முதல் மாணாக்கனா இருக்கறதாலே தமிழ் ஆசிரியர்கள் சதாசிவம்,குருசாமிக்கு ரொம்பப் பிடிக்கும். சி செக்க்ஷனோட சேந்து தமிழ். என்னோட பேர் வி ஆங்கில எழுத்துலே இருந்ததாலே அப்படி பிரிஞ்சது. நண்பர்கள் ராம் மனோகர்,ஜி.சுரேஷ்,சுந்தரம்லா சி செக்ஷன்லே இருந்ததா ஞாபகம்.
குவார்ட்டர்ஸ்லே நல்லா படிக்கற பசங்கள விரல் விட்டு எண்ணிடலாம். 1973லே எஸ் எஸ் எல் சி. நிறைய ரிவிஷன் டெஸ்ட் நடக்கும். அப்பதான் பக்கத்து பங்களா நெல்லிக்காய் பறிக்க சுவர்லே ஏறி கீழே விழுந்து இடது கை எலும்பு முறிஞ்சது.
அப்பாவே எலும்பு முறிவுக்கு கட்டு போடுவார். ஆஸ்பிடல்லே போட்ட மாவுக்கட்ட அவுத்துட்டு அவரோட கட்ட போட்டார். அதுலே நல்லெண்ணெய், உளுந்து மாவு, வெல்லம், பச்சிலை எல்லாம் இருக்கும். அதையே குடிக்கவும் சொல்வார். வெல்லம் இருந்ததாலே குடிக்க முடிஞ்சது.
ரிவிஷன் எக்ஸாம் ஆன்ஸ்வர் பேப்பர்லாம் எண்ணெயாயிடும். கட்டோட போய் தான் எழுதுவேன். அந்த மார்க்ஸ் வச்சே தாம்பரம் கிறித்தவக் கல்லூரிலே அட்மிஷன் கொடுத்துட்டாங்க பப்ளிக் எக்ஸாம் முன்னாடியே. பக்கத்துலே இருக்கிற லயோலா விட்டு 25 கிமீ தள்ளி இருக்கிற காலேஜ்.
பப்ளிக் எக்ஸாம் எழுதிட்டு வழக்கம் போல சொந்த ஊர்களுக்குப் போயாச்சு. கணக்குப் பரீட்சைலே இங்கிலீஸ் மீடியம் பையனுக்கு கிராப் போட்டு X axis எழுதறதுக்கு பதிலா X அச்சுனு எழுதி அடிச்சு மாத்தி எழுதினது சிரிப்பு வருது.
எலெக்டிவ்ஸ்னு அல்ஜீப்ரா ஜாமிட்ரியும் ஒரு சப்ஜெக்ட். ரிசல்ட் வந்தப்ப பாஸானது எல்லாருக்கும் மகிழ்ச்சி. மெரிட்லே பாஸ் பண்ணிருக்கேன், ஸ்டேட்ல 40வது ரேங்க்னறது கூடுதல் மகிழ்ச்சி.
பிற்காலத்துல கல்லூரிலே அநத வருஷம் மாநில முதல் மாணாக்கனான மணி எங்களோட படிச்சான்.

கருத்துகள் இல்லை: