ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

எங்கே போகிறோம்

புரையோடிய புற்றுநோயாய் அரசியல் அமைப்பு
நல்லவர் தீண்டவே அஞ்சும் நெருப்பு
விடியலே இல்லாத நீண்ட இருளாய்
விட்டில் பூச்சிகளாய் மக்களின் மனமும்
சதுரங்க வேட்டை அரங்கேறும் அடிக்கடி
புதுப்புது இலவசங்கள் பலிகடாக்களுக்கு உணவாய்
வெட்டுப்படும் தலையில் பூச்சூடல் அலங்காரம்
வெட்கமில்லாமல் பலிபீடத்தில் ஆடுகள்
நெஞ்சு பொறுக்குதிலை பாரதி சொன்னதன்று
வெஞ்சாமரம் வீசிய கட்டிலில் வேதாளம்
கூச்சம் யாருக்குமில்லை கூனிக் கும்பிட
கூசாமல் பொய்சொல்லி ஏமாற்றும் கூட்டம்
எங்கே போகிறோம் மக்களே மயக்கமா
எழுந்திருங்கள் தூங்கிய நாட்கள் போதும்
விழிப்போடு செயல்படுங்கள் களையெடுக்கும் நேரமிது
விளைந்த கதிர்கள் நிமிர்ந்து நிற்கட்டும்
தாளடித்து நெல்மணிகள் களம் சேரட்டும்
தரமில்லா பதர்கள் காற்றினில் ஒதுங்கட்டும் !

கருத்துகள் இல்லை: