சனி, 18 டிசம்பர், 2021

காதலே

 காதலே நீதான் எத்தனை வகை

காற்று வாங்கும் கடற்கரை முதலாய்
கரும்புத் தோட்ட கால்வாய் வரையில்
துருதுரு வென்ற வாலிப வயதில்
கண்ணோடு கண்நோக்கி காகிதம் சுமந்து
விண்ணிலே உலவி படகிலே அமர்ந்து
எண்ணிலா கற்பனை கனவுகள் சுமந்து
வெண்ணிலா வானில் உலவும் இரவுகளில்
தன்னிலை மறந்து உறக்கம் துறந்து
கன்னத்தில் கழுத்தில் உதடுகள் பதித்து
எத்தனை மாயங்கள் உன்னாலே உலகில்
எவரேனும் உண்டா உன்னை அணையாதார்
ஏனிந்த விளையாட்டு என்றே வினவினேன்
ஏக்கப் பார்வை பார்த்து கண்மூடி
விலகிப் போனது புரியாமல் நானும்
விடை தேடிச் சென்றேன் திரும்பவில்லை

அண்ணாமலையாரும் அழகிய அருவியும் - 2

நகைச்சுவையான பேய்க்கதை முடிந்து இரவு சிற்றுண்டிக்குப் பிறகு நண்பர் சக்திவேலை பள்ளிகொண்டாபட்டில் இறக்கிவிட்டு விடுதி அடைந்து,காலையில் விரைவாக கோயிலுக் குச் சென்று, தரிசனம் முடித்து பயணம் தொடர முடிவெடுத்து அசோக் கும் நானும் உறங்கினோம்.

காலை ஏழு மணிக்கு அண்ணாமலையார் கோவிலில் நுழைந்து, 20₹ டிக்கெட் எடுத்து கூட்டம் அதிகமில்லாததால் நன்றாக தரிசித்து, அண்ணாமலையாரிடமும், அன்னை உமையாளிடமும் பலருக்காக வேண்டி, விடுதி திரும்பி,காலையுணவு முடித்து, திட்டமிட்டபடி கிளம்பி ஆம்பூர் நோக்கிப் பயணம். வேலூருக்கு 81கிமீ சாலை நன்றாக இருந்ததால் வேகமாகப. போக முடிந்தது.
நண்பர்கள் அந்தோணி, இராஜேந்திரன் ட்ரெயினில் காட்பாடியை நெருங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை அங்கேயே இறங்கச் செய்து அமிர்தி வழியாக ஜவ்வாது மலை போக முடிவாயிற்று. முப்பது கிமீ பயணத் தூரமும் குறைந்தது.
பயணம் ஆரம்பித்து அமிர்தி நோக்கிப் பயணித்தபோதே, சாலையின் இருபுறமும் அழகிய தோற்றம், காட்டு வழிச்சாலை. அமிர்தி உயிரியல் பூங்கா கடந்து பயணிக்க ஆரம்பித்தபோது, மலையேற்றம் வரவேற்றது. மதிய உணவு தங்கப் போகும் விடுதியில் தயாரிக்கச் சொல்லியாயிற்று. எழுபத்தோரு கிமீ பசுமைப் பாதையில் பயணித்து, நடுவே ஓடைகளைக் கடந்து ஐமுனாமரத்தூர் சேர மதியம் ஒன்றுக்கு மேல் ஆனது.
லேக் வியூ கெஸ்ட் ஹவுஸ் ஏரிக்கரையிலே அமைந்திருந்தது. ரம்மியமான தோற்றம். மதிய உணவு தாமதமாய் வந்தாலும் ருசியான அசைவ சாப்பாடு. சிறிது நேரம் ஓய்வெடுத்து, படகுத் துறைக்குச் சென்று மோட்டார் படகில் ஏரி வலம். பெரிய ஏரிதான், பறவைகள் அதிகமில்லை. மீன் பிடிக்க வலை விரித்திருந்தார்கள். முன்னாடியே சொல்லியிருந்தால் எங்களுக்கும் கிடைத்திருக்கும்.
படகோட்டி நண்பரானார். சுற்று முடித்து ஏரிக்கரையில் உட்கார்ந்து அரட்டை. மெதுவாக இரவு தொடங்க, அந்தோணிக்கு சோமபானம் வாங்க வேண்டுமெனச் சொல்ல இருளில் சில கிமீ பயணித்து, அதற்கான அர்ச்சனைகளை அந்தோணிக்குக் கொடுத்து, விடுதி திரும்பி, முதலில் பானமும் பிறகு சுடச் சுட இட்லி சப்பாத்தி ஆம்லெட், சிக்கன் கறியென இரவு உணவு. சுவை அருமை.
இதற்குள் கேம்ப் பையரும் எங்களுக்காக. அசோக் காய்ச்சல் என்பதால் அறையில். சிறிது நேர ஆட்டத்திற்குப் பிறகு அறைக்கு வந்து, களைப்பு மிகுதியால், உறங்கப் போகும் முன் மறுநாள் பீமா அருவிக்குச் செல்ல விரைவாகச் செல்ல வேண்டுமென முடிவானது. புதிய இடமாதலால் தொடர்ச்சியான தூக்கமில்லை.
அதிகம் வளைவுகள் அற்ற சிறிய சாலைகள், இரு சக்ர வாகனங்கள் வளைவுகளில் திடீரென எதிர் கொள்ள நேரிட்ட அனுபவம். நீரோடையில் இறங்கி கால் நனைத்த அனுபவம், மனத் திரையில் ஓடியது.
( தொடரும்)

அண்ணாமலையாரும் அழகிய அருவியும் - 1

 அண்ணாமலையாரும் அழகிய அருவியும்

நீண்ட நாட்களாக தள்ளிப் போட்டு இனிமேலும் தள்ளிப்போட வேண்டாமென முடிவெடுத்த பயணம். காலை 7 மணி, 21/10/21, வியாழன், மீண்டுமொரு தனிமைப் பயணம்.
பெங்களூருவில் கிளம்பி, கிருஷ்ணகிரிக்கு முன்னால் , கிருஷ்ணாபவனில் காலையுணவு, காருக்கு HP பெட்ரோல் பங்க் டேங்க் நிரப்பல், 104+₹ , வைரமாய் காசுக்கு.
திருவண்ணாமலை சாலையில் திரும்பி பயணித்த போதே ஆரம்பம் பத்து வருடங்களுக்கு மேலாக போடப்பட்டுக் கொண்டு இருக்கும் நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி. புரியாத புதிராய் மனதில் கிரிவலம் செல்பவர்கள் அதிகம் பயணிக்கும் சாலை இவ்வளவு நாட்களாய் கிடப்பில் இருக்க யார் காரணம் !? விடை கிடைக்குமா?
செங்கம் வரை இப்படியே, அதற்குப் பிறகே ஒழுங்கான சாலை. அடி அண்ணாமலை அடைந்த போது மணி 11.20. நண்பர் அசோக்குடன் சுக்கு காபியும் பட்டர் பிஸ்கட்டும் சாப்பிட்டு,அறை எடுத்து, ஓய்வுக்குப் பிறகு, பள்ளிகொண்டாபட்டு பயணம். மழை பெய்து எங்கும் பசுமை. மதிய உணவுக்கு நண்பர் சக்திவேல் வீட்டில் ஏற்பாடு. தடபுடலாய் அசைவ உணவு, வெகுநாட்களுக்குப் பிறகு, கிராமத்து கைவண்ண சமையல். திருமதி சக்திவேல் அவர்களுக்கு நன்றி சொல்லி வந்த வேலை பார்க்க,நண்பரின் இருசக்கர வாகனத்தில் வயல்களூடே பயணம்.
இரண்டு ஏக்கரில் பயிரிடப்பட்ட மரங்கள் பணப் பயிராக. மலை வேம்பு பத்தடிக்கு மேல் ஏழு மாதங்களில். பூவரசு, தேக்கு, மகோகனி என்று பல மரங்கள். அவைகளின் வளர்ச்சி குழந்தைகள் வளர்வதைப் போன்று ஆர்வமாய் வீடியோவும் எடுத்த பின்பு, அசோக்கின் தந்தை தொண்ணூறு வயது இளைஞரைப் பார்த்துப் பேசிவிட்டு, ஊர் எல்லையில் அண்ணாமலையார் வருடந்தோறும் வந்து செல்லும் சம்பந்தியின் ஆற்றங்கரை விசிட். மழை பெய்து நீரோடிக் கொண்டிருந்தது.
சாத்தனூர் செல்ல முடிவெடுத்து நண்பர்களுடன் கொட்டும் மழையில் காரோட்டி அணையை அடைந்தபோது அனுமதி இல்லையெனச் சொன்னபோது மனம் ஏமாற்றமடைந்தது. திரும்பி நகரை அடைந்தபோது, அரண்மனை 3 படம் போக திடீரென முடிவெடுத்து அரங்கத்தில் நுழையவும் படம் ஆரம்பிக்கவும், பேய் மாளிகை கண்முன்னே விரிந்தது.
(தொடரும்)

நினைவுகள் பறவைகள்

 நினைவுகள் பறவைகள் போல் அவ்வப்போது பறக்கும்

நிழலாய் கூடவே பயணிக்கும் அருவமாய் உறையும்
சுமைகளாய் சிலவும் சுகங்களாய் சிலவும் கலவையாய்
சுழலும் பூமியில் இரவாய் பகலாய் மாறும்
இருளும் ஒளியும் வலம் வரும் பாதைபோல்
மருளும் மயங்கும் மதியினை இழக்கும் சிலநாள்
கண்களில் மிதக்கும் படகாய் மாறி பயணிக்கும்
விண்ணில் உலாவும் விட்டத்தை நோக்கி மௌனிக்கும்
சொல்ல மறந்த கதைகள் ஆயிரம் இருக்கும்
எல்லைகள் அற்ற பரந்த வெளியாய் பரவிடும்
எனக்குள்ளே புதைந்தே அமைதி கொண்டு உறங்கிடும்

மாற்றுவோம்

 வாடா நண்பா வலம் வருவோம் உலகை

வான வீதியில் தேரை ஓட்டி பயணித்து
புவியின் அழகை உயரப் பறந்து வியப்போம்
புரவிகள் மேகக் கூட்டத்தில் நுழைந்து செல்லட்டும்
ஆறுகள் வளைந்து நெளிந்து காடுகளூடே காண்போம்
ஆறுதல் மனதினில் இயற்கை அழகு அளிக்கும்
தாரகை தொட்டு நிலவை வலம் வருவோம்
தாழ்வாய்ப் பறந்து பறவைகளோடு பேசி மகிழ்வோம்
கதிரவன் சற்றே வெப்பம் தணிந்து இதமாய் இருப்பான்
கடலின் மீதே பலகாதம் கடந்து செல்வோம்
படகில் சென்று மீன்களோடு தோழமை கொள்வோம்
ஆழ்கடல் சென்று அற்புத உலகைக் காண்போம்
வாழ்வது வேறொரு உலகாய் மாற்றி வைப்போம்
அமைதி அன்பு அடக்கம் அணைப்பு பொறுமை
அனைத்து நற்குணம் கொண்ட உலகாய் மாற்றுவோம்

நினைவுகள் சுமந்தே !

 என்னுள்ளே ஏனோ வந்த இசைப் பாட்டு

உன்னோடு நானிருந்த நாட்கள் எங்கே போயின
கண்ணோடு கண்நோக்கி கதை பேசிய நாட்களெங்கே
விண்மீது பயணித்து நிலவுக்குள் புகுந்த மனமெங்கே
சொல்லாத சொல்லுக்கும் பொருள் எழுதிப் போனாயே
பொல்லாத பார்வைக் கணைகள் தொடுத்த வில்லெங்கே
கதைகள் காவியமாய் மாற்றியதும் நீதானே அன்று
விதைகள் முளைத்து விருட்சங்கள் உயர்வாய் இன்று
இதயம் சுமந்து சென்றவளே எங்கே தேடுவேன்
உதயம் வருவதே உன் நினைவுகள் சுமந்தே !

கற்பனை

 காலைக் கதிரவன் கீழ்த்திசை விட்டு எழவில்லை

காற்று குளிரூட்டி உடல் தழுவி ஓடியது
மேற்கத்தி மலையோரம் பசுமைப் போர்வை விரிந்தது
மேடுகள் பள்ளங்கள் தாண்டி ஆற்றுநீ்ர் அருவியானது
கொட்டும் மழையில் புள்ளினங்கள் கூடுகளில் அடைக்கலம்
எட்டுத் திக்கிலும் கருமேகக் கூட்டம் இடியுடன்
சொட்டச் சொட்ட நனைந்த படி ஆட்டுக்குட்டி
சொல்ல மறந்த கதையை அசைபோட்ட மூதாட்டி
மெல்ல எட்டிப் பார்த்து தொட்டிலிலே குழந்தை
குளிருக்குப் போர்வை முகம்மூடி தூக்கம் தொடரும்
ஒளிரும் கதிரவன் வரட்டும் அதுவரை கற்பனை

யாவும் உன்னுருவா

 பெண்ணே உன்னில் மட்டும் இத்தனை அழகா

கண்ணசைவே கோடி என்று சொன்னது யாரோ
நடையழகை அன்னமெனச் சொல்வது எதனாலே எவராலே
இடையழகோ ஒடிந்து விடுமென்று சொல்லி வைத்தாரே
பார்வையில் காந்தமுண்டோ கவர்ந்து செல்லும் மாயையோ
கார்முகில் கூந்தல் பாம்பாய் வளைந்து நெளிந்தா
நிலவைக் கொண்டு முகம் காண வைத்தாயோ
நித்திரை பலருக்கு மறக்கச் செய்து விட்டாயே
தாமரை மொட்டென்றும் சந்தனத் தேரென்றும் சொன்னாரே
பூமகள் நிலமகள் சந்திரன் அனைத்தும் நீதானோ
நளினம் அன்பு அன்னை
யாவும் உன்னுருவா
ஒளிரும் புன்சிரிப்பில் கட்டுண்டு போனேனே பெண்ணே !

தூக்கிப் போடுங்கள்

 நண்பனே முதலாம் ஆண்டு உணர நேரமானது

நல்லதோர் கல்லூரி மனது உள்ளுக்குள் குளிர்ந்தது
செல்வமும் வறுமையும் சேர்ந்தே வளாகத்தில் உலவியது
கல்லூரி அரங்கில் பேச்சு நாடகம் அனைத்தும்
கேன்டீனில் குழுக்களாய் விளையாட்டு மைதானத்தில் ஆர்ப்பரித்து
என்றுமே மதங்களை அரசியலைப் பேசியதாய் நினைவில்லை
சேர்ந்து படிப்பதும் சினிமா செல்வதும் அதிகமே
ஊர்ந்த நாட்களில் உற்சாக பானங்கள் சிலநாட்கள்
சீட்டாட்டம் வகுப்புத் துறப்பு ஊர்சுற்றல் அவ்வப்போது
கொட்டமடித்த நாட்கள் எங்கே போனது நண்பா
ஏனிப்போது மட்டும் நமக்குள்ளே இத்தனை பிரிவுகள்
ஏக்கம் மனதில் வயது கடந்த காலத்தில்
தூக்கிப் போடுங்கள் அனைத்தும் தூரமாய் சிலகாலமே
தூக்கம் நிரந்தரமாய் வரும்காலம் வெகுதூரம் இல்லை

வேடதாரி

 நான் மனிதன் ஆடையற்றவன் பிறப்பிலும் இறப்பிலும்

சாயம் பூசுவேன் தினம் ஒரு வேடதாரி
மொழி பல பேசுவேன் உருவம் மாறி
ஆத்திகம் ஒருநாள் நாத்திகம் மறுநாள் என்று
ஆயினும் நான் மனிதன் இரத்தம் சிவப்பே
எதுவும் என்வசம் இல்லை என்பதே உண்மை
இன்று இருப்பவன் நாளை பிணம் ஆகலாம்
ஆணவம் இன்று ஏனோ எனக்கு குறைவில்லை
எனது மதம் மொழி மண் சாதி
பேசிக் கொண்டே இருப்பேன் ஓய மாட்டேன்
நான் பெரியவன் அவன் தாழ்ந்தவன் கூறுவேன்
சாயம் பூசிய வேடதாரி மேடையில் நாடகம்
அம்மணத்தில் மட்டுமே மனிதனாய் என் உருவம்

மாறிடுமா காட்சி

 எல்லாமே மாறிப் போச்சு கணேசா

கல்லா கட்டும் கூட்டமே ஆச்சு
மக்கள் சேவை என்னாச்சு கணேசா
மருந்துக்குக் காசு கல்விக்குக் காசு
இலாபம் எல்லாம் யாருக்கோ கணேசா
உலகம் எங்கே போகுது தெரியலே
சுரண்டரவன் சுரண்டி கிட்டே இருப்பான்
கரண்டிலே வருமா சட்டிலே இல்லாம
உயிர் மூச்சுக்கும் விலை வருமோ
மயிர் நீப்பின் வாழாத மான்எங்கே
ஒண்ணுமே புரியலே உலகத்துலே கணேசா
கண்ணும் குருடா போச்சு கணேசா
குழிதோண்டி இருக்கு கும்மிருட்டும் ஆச்சு
பழிசொல்ல யாரை பாமரன் நீதானோ
மாறிடுமா காட்சி எல்லாம் கணேசா
கூறிடுவாயா கூப்பிட்ட குரலுக்கு வருபவனே !

பழைய நினப்புடா

 அறமென்றால் என்னன்னு கேப்பாங்க இப்ப.

சின்ன வயசுலே கிராம வாழ்க்கைய வெகுவாக உள்வாங்கியதாலே ஞாபகம் இருக்கு
தெரு முச்சூடும் உறவுகள் தான். கரடின்னு அப்பாவ மாமனுங்க கூப்புடுவாங்க. தெருக்கூத்து நாடக ஆசிரியரா, கொஞ்சம் படிச்ச மனுசனா, போலீஸ்காரர்னு, அவரோட மூத்த பிள்ளையா என்ன புடிக்கும்.
யார் வீட்டில் சாப்புடறதுனு குழப்பம் வரும். களி, கூழுன்னு சாப்பிடறவங்க பட்டணத்துப் பையனுக்கு கைக்குத்தல் அரிசியும், முள் கத்தரிக்காய் சாம்பாரும் தேக்கு இலைலே சாப்பிடறது சுவை. எல்லாமே கிராமத்து விளைச்சல்.
கோடைன்றதாலே நுங்கு, மாங்கா எல்லாமுண்டு. ஆட்டுப் பால் மோரு, வேர்க்கடலை, இளநீரு கிடைச்சுட்டே இருக்கும்.
ஏரிலேயோ (கடல் போல) கிணத்துலேயோ மீனை புடிச்சு, காஞ்ச தென்னை மட்டைல சுட்டு, அங்க விளையற பச்ச மிளகாவ நசுக்கி, உப்பு சேத்து சப்புக் கொட்டி சாப்பிடறது சுகம்.
தண்ணி ஓடற ஓடைக் கரையோரம் பெருசுங்க சாராய ஊறல குடிக்கறத இரகசியமா செய்வாங்க. அதுக்கு தொட்டுக்க உடைச்சகடலை,பூண்டு, மிளகாய்த்தூள் கலந்த ஒரு கலவை.
இப்படி எத்தனையோ, பழைய நினப்புடா பேராண்டி.

மனுச தெய்வம்

 நேத்து வர காத்து வாங்க திண்ணைப் பேச்சு

காத்து வாக்குல வந்த கதை பேசி ஆச்சு
சொத்து சுகம் தேவை இல்ல சொந்தம் போதும்
பெத்த அம்மா அன்புக்கு இணை ஏதும் இல்ல
நாத்து நட்டு கதிர் அறுத்த உழவன் தெய்வம்
வெத்து வேட்டு வாய்ச் சவடால் வேண்டா மண்ணே
பித்து பிடிச்ச பைத்தியமா உளறும் வாய மூடு
சேத்துல தாமரையா மனுச தெய்வம் வாழ விடு
பத்துல பதினொன்னா பாக்க வேணாம் சொல்லிப் புட்டேன்
வித்து விட்ட புத்திய கொஞ்சம் தீட்டிப் பாரு
சத்தியம் தர்மம் மறஞ்சு
மனிதமும் காணாம போச்சு

பாடாத பாட்டா

 ஏதோ ஒரு பாட்டுப் பாட ஆசை

தோதா ஒரு ராகம் கிடைத்தால் நலமே
ஏதோ ஒரு பாட்டுப் பாட ஆசை
தோதா ஒரு ராகம் கிடைத்தால் நலமே
பாடாத பாட்டா பட்டணத்து பாட்டா சொல்லு
வாடாத மலருக்கா வண்ண மயில் நடனத்துக்கா
சோடனை பெரிதா சொந்தக் கருத்தா நண்பா
சோதனை ஏதும் இல்லை தானே காதுக்கு
பூபாள இராகமா மோகனமா சந்தமா சிந்துவா
பூவோடு சேர்ந்த நாராய் மணம் வீசுமா
மெல்லிய தென்றலாய். காது மடல் தீண்டுமா
சொல்லில் பொருளுண்டா சோர்வைப் போக்க மருந்தா
சிந்தித்தே நேரம் கடந்தே போனதே தோழா
வந்தனம் சொல்லி வார்த்தை கோர்த்து மாலையாக்கு சொல்லு
வாடாத மலருக்கா வண்ண மயில் நடனத்துக்கா
சோடனை பெரிதா சொந்தக் கருத்தா நண்பா
சோதனை ஏதும் இல்லை தானே காதுக்கு
பூபாள இராகமா மோகனமா சந்தமா சிந்துவா
பூவோடு சேர்ந்த நாராய் மணம் வீசுமா
மெல்லிய தென்றலாய். காது மடல் தீண்டுமா
சொல்லில் பொருளுண்டா சோர்வைப் போக்க மருந்தா
சிந்தித்தே நேரம் கடந்தே போனதே தோழா
வந்தனம் சொல்லி வார்த்தை கோர்த்து மாலையாக்கு

பொக்கை வாய்க் கிழவர்

 உத்தமர் ஆவது உன்னத நிலையே

உடையைத் துறப்பது உயரிய பண்பே
உலகம் போற்றுவது அகிம்சை வழியே
உண்மை சத்தியம் ஆனது அவராலே
சொல்லால் அவரை மறுமுறை சுடாதீர்
பொல்லாத மனிதரும் தலைவராய் ஏற்றனர்
இந்திய தேசமே இவரால் உயர்ந்தது
பொக்கை வாய்க் கிழவர் பெருமானார்
யாக்கை வருத்தி அமைதியைத் தேடினார்
பிறந்த நாட்டுக்கு ஆவி துறந்தார்
இறந்தும் இந்தியர் மனதில் நிலைத்தார்

இயற்கை அன்னை

 சோலையிலே பூத்த மலர்கள் சிரித்தன

சோடிப் புறாக்கள் கூடி மகிழ்ந்தன
ஓடியது புள்ளிமான்கள் தோட்டம் எங்கும்
பாடியது குயிலொன்று கானம் ஒன்றை
வண்ண மயில் தோகை விரித்தாடியது
எண்ணம் எல்லாம் சிந்தனைப் பூக்கள்
தொடுக்கவோ கோர்க்கவோ மாலை ஒன்றை
தொடுவானில் கதிரவனோ சிவந்து நின்றான்
ஒன்றிடவோ இயற்கை அன்னை மடிமீது
என்றெனக்குத் தோன்றுவது இயல்பு தானே

இயற்கைச் சுற்றுலா -3

 டண்டேலி (இயற்கைச் சுற்றுலா)

இன்றே கடைசி, காலையில் வழக்கம் போல நீச்சல் குளம். முந்திய நாளே ஓரளவு பேக்கிங் முடிஞ்சதாலே, குளித்து ரெடியாகி, டெண்ட்டை வெகேட் செய்து, காலை உணவை முடித்த போது பத்தே கால் ஆயிற்று. ரிசார்ட் விட்டுக் கிளம்பி கரடு முரடான பாதையில் டாக்ஸி போக, ஹார்ட்லியில் அருண் தொடர, ஈகோ பார்க் விஜயம்.
இது குழந்தைகளுக்கான பார்க் போல ஊஞ்சல், தொங்கு பாலமென மரங்களினூடே அமைந்திருந்தது. நிறைய நாட்கள் மூடி இருந்ததால் பொலிவிழந்து காணப்பட்டது.்காளி ஆறு வேகத்துடன் ஓடிக் கொண்டிருந்தது். எங்கெங்கு காணினும் சக்தியடா என்பது போல காளியாறு டண்டேலியை தன் வசம் வைத்திருந்தது. இந்த பார்க் காதலர்களுக்கும் தனிமை விரும்பிகளுக்கும் ஏற்ற இடம்.
நாங்களும் சிறியவர்களாக மாறி ஊஞ்சலில் ஆடிவிட்டு, கீழே இறங்கி ஆற்றின் ஓட்டத்தைப் பார்த்து ரசித்து, வெளியே வந்தோம். காரமான மசாலா மோரைக் குடித்து விட்டு, பரத்தை வழியனுப்பத் தயாரானோம். ரைடிங் கியர். அணிந்த பிறகு கிளிக்கி வழியனுப்பி வைத்தோம்.அவ்வப்போது மெசேஜ் அனுப்பு புனே சேரும் வரைனு சொல்லி அனுப்பினோம்.
நால்வர் மூன்றாகி முதலை பார்க் அடுத்த விஜயம். இருபத்தைந்து ₹ ஆளுக்கு கொடுத்து எங்கோ தொலைவில் ஆற்றுப் படுகையில் ஒளிந்திருந்த ஐந்து முதலைகளைக் காண இது தேவையா என மனதில் கேள்வி. வெளி வந்து கரும்புச் சாறு அருந்தி, டண்டேலி நிசர்கா ஆபீஸில் ரிசார்ட் ஃபீட் பேக் கொடுத்து பசவப்பாவுக்கும் விடை கொடுத்து தார்வாட் பஸ்ஸில் மறுபடி கரடு முரடான சாலையில் சில இடங்களில் பயணித்து, மதிய உணவு முடித்து,தாகூர் பேடா வாங்கிக் கொண்டு, பேருந்துப்பயணம் ஹூப்ளி நோக்கி.
இந்தப் பயணம் அழகானது. மெட்ரோ ரயில் போலவே பஸ் நிலையங்களில் பஸ் நிற்க, கதவுகள் திறந்து பயணிகள் ஏறவும் இறங்கவும்,பார்க்க புதுமையாக இருந்தது. BRT என்று அழைக்கப்பட்டு தனிப்பாதையில் பேருந்துகள் வருவதும் போவதும், நல்லதொரு அமைப்பு, வெளிநாடுகளில் கூடப் பார்த்ததில்லை. தார்வாட் ஹூப்ளி பயணம் அருமை.
இரயில் நிலையத்தில் லக்கேஜ் குளோக் ரூமில் வைத்து விட்டு, இரயில் புறப்படும் நேரம் இன்னும் ஐந்து மணிக்கு மேல் இருந்ததால், IRCTC கேண்டீனில் காப்பி அருந்தி, இரவு அங்கேயே இட்லி சாப்பிட முடிவெடுத்து, ஆட்டோவில் பயணித்து ஓயாசிஸ் ஷாப்பிங் மாலில், சினிபோலிஸ் திரையரங்கில் Jungle Cruise 3D படம். விறுவிறுப்பான பேன்டசி படம், உலக மக்களுக்கு நோயற்ற வாழ்வளிக்கும் ஒருவகை பூ அமேசான் காட்டில் பல இடையூறுகளுக்குப் பிறகு அடையும் காதல் ஜோடி.
மீண்டும் இரயில் நிலையம் அடைந்து, இரவு உணவருந்தி, இரயில் 06590 பயணித்து, யெஷ்வந்த்பூரில் இறங்கி, (குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே அடைந்த இரயில்) விடை பெற்று அவரவர் வீடு நோக்கிப் பயணித்தோம். மீண்டும் குடும்பத்திருடன் சாலை மார்க்கமாகப் பயணித்து டண்டேலி செல்ல வேண்டுமென முடிவுடன்.இயற்கையோடு ஒன்றிய பயணங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
( முற்றும் )

இயற்கைச் சுற்றுலா - 2

 டண்டேலி, இயற்கைச் சுற்றுலா

இன்றைய நாள் ஒரு டபுள் தமாக்கா நாள். என்னுடைய 65 வயது பிறந்த நாள் மற்றும் கண்ணுக்கும் மனதுக்கும் விருந்து. உறவினர் குழுவின் பிறந்த நாள் பாடலோடு தொடங்கியது. வாழ்த்து மழை பொழிந்த வண்ணம் இருந்தது. நட்பு மேகங்கள் நாள் முழுதும்.
இன்றும் நீச்சல் குளியலுக்குப் பிறகு, காலை உணவு முடித்து, தயாராய் இருந்த பசவப்பா டாக்ஸியில் பயணம் தொடக்கம்.முதல் பயணம் வியூ பாயிண்ட். மிக அருமையான அகண்ட ஆற்று நீர் தேக்கமும் மலை முகடுகளும், தீவுகளும்.விட்டு அகலவே மனம் வரவில்லை.
அடுத்ததாய் சுபா டேம். வாவ் காளி நதி ஆர்ப்பரித்து ஓடிக் கொண்டிருந்தது. அணையின் அருகே செல்ல அனுமதி இல்லை. எங்கெங்கு காணினும் காளியின் ஆர்ப்பரிப்பு. காவிரியைக் கண்ட கண்கள் காளியின் நர்த்தனம் கண்டது.
தூரத்தே தெரிந்த அணையைக் கிளிக்கி விட்டு, அடுத்த இடமான அணையின் பேக் வாட்டருக்குப் பயணம். இந்த இடமும் பிரமாண்டமாய் காண அழகான தோற்றத்துடன். அருண் மடமடவென சாய்வான தடுப்புச் சுவரில் இறங்கி நீருக்கு அருகில் சென்றது என்னுடைய இளமைக்காலங்களை நினைவூட்டியது. எங்கெங்கு காணினும் பசுமை, மலைகள்,ஆறு என அழகின் தொகுப்பு.
அடுத்த பயணம் ஆற்றுப் படுகை, டண்டேலி் சுற்றுலாவின் சிகரமான ரிவர் ராஃப்டிங்.ராஃப்டிங் என்னவென தெரியாதவர்கள் கூகுளிக்கவும். தண்ணீரில் நனைகிற அனைத்தும் பசவப்பாவிடம் கொடுத்து லைஃப் ஜாக்கெட் என் அளவுக்கு கிடைக்காமல் இறுக்கமாக அணிந்து, கயாக்கிங் செல்ல அனுமதிக்கப் படவில்லை, மற்றவர்கள் சிறிது நேரம் படகில் உலவி வந்தனர்.
அடுத்தது ராஃப்டிங்குக்கு வெயிட்டிங். அதற்கான படகில் எங்களுடன் மற்ற நான்கு நண்பர்களும் உட்கார்ந்த பிறகு படகு கேப்டன் கணேஷின் பிரீஃபிங் ஆரம்பம். போட்டோ, வீடியோவுக்கு் குழுவுக்கு ஆயிரம் ரூபா என முடிவாயிற்று. முதலில் ஒரு படகுச்சவாரி, நீரோட்டமில்லாத பகுதியில்.
அடுத்து விமான டேக் ஆஃப் போல,துடுப்பு பிடிப்பது எப்படி, விழாமல் இருப்பது எப்படி, தவறி ஆற்றில் விழுந்தால் மிதப்பது எப்படி,படகுக்கு அடியில் மாட்டிக் கொண்டால் வெளிவருவது எப்படி என ஒரு வகுப்பு எடுக்கப் பட்டது. துடுப்பு போட்டு கேப்டனின் ஆணைப்படி மெதுவாக முன்னேற்றம்.
படகு ஓட்டம் நீரோட்ட வேகத்தில் நுழைந்தது. வேகமாக அருவி விழும் இடம் நோக்கி.....அப்படியே ஆர்ப்பரிக்கும் அருவியில் இறங்கி வளைந்து நெளிந்து நீரில் மூழ்கி எழுந்து, திரில்லிங் அனுபவம்.மீண்டும் சில சுற்றுகள் அருவி விழும் இடத்தில் நுழைந்து. ஒரு இளம்பெண் ஆற்றில் விழுந்து, மற்ற படகினரால் மேலே இழுக்கப் பட்டார்.
எங்கள் படகு பாறைகள் நடுவே மாட்டிக் கொண்டது. நகர முடியவில்லை. பத்து சதவீதம் படகுகளே இப்படி ஆகுமென கேப்டன் சொன்னார். படகை சமன் செய்து, அங்கிருந்து மீள சில நிமிடங்கள் ஆனது. நான் நீரில் முக்கால் பங்கு மூழ்கி, விழாமல் இருக்க இடது பக்கம் சாய்ந்தேன்.நான் உட்கார்ந்து இருந்தது படகின் முன்பகுதியில். ஒரு வழியாக படகு வெளிவந்து மிதந்து, மரப்பாலம் வழியாக மேலே வந்தபோது மனதில் ஒரு திரில்லிங் பயணம் முடிவுற்றதை உணர முடிந்தது. போட்டோ, வீடியோக்கள் மொபைலில் காப்பி செய்து,ரிசார்ட்டுக்குத் திரும்பி மதிய உணவு சாப்பிட்ட போது மணி நான்கை நெருங்கியிருந்தது.
மறுநாள் பசவப்பாவை காலை பத்து மணிக்கு வரச்சொல்லி அனுப்பி, சீட்டாட்டம், கேரம்,நொறுக்குத்தீனி, ரெயின் டேன்ஸ் மற்றும் கேம்ப் ஃபையர் வேடிக்கை என நேரம் கடந்தது. இரவு உணவுக்குப் பின்னர் உறங்கச் சென்றாலும் நடுநிசி கடந்தும் வெளியே கூச்சல், வார இறுதியாதலால் கூட்டமும் அதிகமாயிற்று.
( தொடரும் )

இயற்கைச் சுற்றுலா - 1

 டண்டேலி (23/6 to 27/6)

குடும்பச் சுற்றுலா போக வேண்டுமென்றால் 2019ல் , அந்த வருட அதிக மழை பெய்து போக முடியாமல் போனது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு நான்கு பேர் போவதாக சுருங்கிற்று.
காரில் போவதா, ஃபிளைட்ல ஹூப்ளி போய் அங்கிருந்து டாக்ஸில போவதா, டிரெயின்ல போவதா என விவாதத்திற்குப் பிறகு, ட்ரெயின் டிக்கட் 23/9 இரவுக்கு அனைவரின் அனுமதியோடு புக் பண்ணியாச்சு ராணி சன்னம்மா (மீரஜ்) எக்‌ஸ்பிரஸ்லே.
பெங்களூரிலிருந்து சுமார் 475 கிமீ தொலைவில் உள்ளது டண்டேலி. எனது இளைய மகன் புனேவிலிருந்து வருவதாக முடிவானது. அங்கிருந்தும் அதே தூரம். அவன் பைக்லே( ஹார்லி டேவிட்சன்) வருவதாய் முடிவானது.
அடுத்து சில ஆய்வுகளுக்குப் பிறகு, டண்டேலி நிசர்கா என்ற டிராவல் ஆர்கனைசர் மூலமாக டஸ்கர் டிரயில்ஸ் (Tusker Trails) என்ற ரிசார்ட்க்கு அட்வான்ஸ் பேமென்ட்டும் பண்ணியாச்சு.
வியாழன் இரவு (23/9), 10 30 க்கு முன்னதாகவே ஸ்டேக்ஷன் போனாலும், கோச் B1 , பிளாட்பாரத்தில் முன்கோடியில் இருந்ததால், உறவினர் முரளி உதவியுடன், ஓடிப் போய் ஏற வேண்டியாதாயிற்று. கோவிட் காரணமாக படுக்கை கொடுப்பதில்லை. கொண்டு சென்ற ஏர் பில்லோ ஊதிய ஐந்து நிமிடத்தில் இறங்கியதால், டவல், போர்வை முதலானவற்றைத் தலையணையாக மாற்றி உறங்க முயற்சித்து, உறக்கம் சரியில்லாமலே, மறுநாள் காலை, ஐந்து மணிக்கெல்லாம், அரை மணி நேரம் முன்னதாக அடைந்த, டிரெயினை விட்டு இறங்கி வெளியே வந்து, உறங்கிக் கொண்டிருந்த நகரத்து, ஆட்டோ பிடிச்சு ஹூப்ளி புது பஸ் ஸ்டேண்ட் பயணிச்சு, காபி அருந்தி மறுபடி பஸ் பிடிச்சு தார்வாட் சென்று, தட்டை இட்லி,சாம்பார் மிக ருசியாகச் சாப்பிட்டு, மறுபடி டண்டேலிக்குப் பயணம். ஹூப்ளி டூ டண்டேலி தூரம் 75 கிமீ.
வழி நெடுக பசுமைப் போர்வை, காடுகள், மலைகள் கடந்து சுமார் பத்து மணியளவில் நிசர்கா ஆபீஸ் சென்று, பணம் கட்டி, டாக்ஸி பேசி ரிசார்ட் அடைந்து, முன்னமே முடிவெடுத்த படி அன்றைய தினம் ரிசார்ட் ரிலாக்ஸ் டேவாக முடிந்தது. நீச்சல், சீட்டாட்டம், கேரம் எனவும், இரவு பின்னர் டைம் ரெயின் டான்ஸ், கேம்ப் பயர் வேடிக்கையென கழிந்தது. ரிசார்ட் அழகிய பசுமைச் சூழலில்.
பரத் புனேவிலிருந்து காலை நான்கரை மணிக்குக் கிளம்பி, ரிசார்ட் வந்தடைய (470 கிமீ), பதினொன்று ஐம்பது. டிரைவிங் கியர் எனப்படு்ம், முழுப் பாதுகாப்புடன், நடிகர் அஜித் பைக் பயணம் செய்வது போல. மூன்றாக இருந்த (நான், பிரபாகர், அருண்) நாங்கள் நால்வரானோம்.
மறுநாள் ஆக்டிவிடீஸ் டே என்பதால் டாக்ஸி காலை ஒன்பதுக்கு வரச் சொல்லி அனுப்பினோம். ருசியான இரவு உணவுக்குப் பிறகு சிறிது நேர சீட்டாட்டம் முடிந்து நல்ல உறக்கம், பயணக்களைப்பால்.
(தொடரும்)

ஏழை உழவன்

 என்ன சொல்லி என்ன பயன்

சொன்ன சொல்ல காக்க வேணும்
வானம் திறந்து மழை கொட்டுது
வனம் எல்லாம் பசுமை சேக்குது
ஏரு ஓட்டி சேத்துலே நாத்து நட்டு
ஏழை உழவன் விதைச்ச நெல்லு
ஊரு முச்சூடும் உண்டு மகிழுது
அவன் வாழ உதவி செய்வோமா
எவனோ அவன் என்று சொல்வோமா
கூப்பாடு வேண்டாம் கூலி போதும்
சாப்பாடு அவன் வயிறு நிறைய
வேறென்ன கேப்பான் கோவணம் போதும்
வேட்டு இல்லாம பாத்துக்க அதுக்கு
நாட்டு நடப்பு புரியலே எனக்கு
ஓட்டு மட்டுமே போடத் தெரியும்
உழைப்பவன் உயர உத்திகள் உண்டா
உண்டு கொழுப்பவன் உயர வழியா
கண்டு சொல்ல யாரும் உளரா
நல்லது நடக்குமா நாளும் கேள்வி
சொல்வதைச் செய்வர் பெரியோர் ஆவர் !

கார் போன போக்கிலே - 8

 இன்றைக்கு கைட் இல்லை, பாக்க வேண்டிய இடங்கள் அதிகம். காலை உணவுக்குப் பிறகு முதலில் பகோடா பாயிண்டுக்குப் பயணம். பள்ளத்தாக்கு அழகிய காட்சிகள். மக்கள் இன்னும் சுற்றுலாத் தலங்களுக்கு பயணம் செய்ய ஆரம்பிக்கவில்லை. கடைகளும் அதிகம் திறக்கலே. பலூனை துப்பாக்கியால் சுடும் போர்ட் மூன்று சிறுவர்கள் வச்சிருந்தாங்க. போட்டோலாம் எடுத்துட்டு முதல்லே துப்பாக்கி சுடுதல், ஆறு குண்டுலே மூணு பலூனை உடைச்சுது. அடுத்தது வில்,அம்பு புல்ஸ் ஐலே ஒண்ணும் படலே, அதுக்குப் பக்கத்திலே இரண்டு, மற்றதெல்லாம் வெளியே.

அடுத்தது லேடீஸ் சீட். போற வழியிலே மலைப் பிரதேச கிராம்பு,பட்டை,ஏலக்காய்,ஹோம் மேட் சாகலெட்லாம் வாங்கிட்டு அங்கே சென்றப்ப பசுமையான பள்ளத்தாக்கு இங்கும், அதைப் போன்றே ஜென்ட்ஸ் சீட், சில்ட்ரன்ஸ் பாரக் அருகாமையில் மலையுச்சியில் இருந்து கீழே அழகான காட்சிகள்.
முந்தைய நாள் அனுமார் கோயிலுக்குச் சென்றப்ப அது மூடியிருந்ததால் அங்கேயிருந்த தியான மண்டபத்துலே ஐந்து நிமிடம் தியானம்.
அடுத்தது ரோஸ் கார்டன். பூக்கள் மிகக்குறைவு, ஏன் என்று கேட்டேன்.்நீண்ட நாட்கள் மூடித்திறந்திருந்ததால் பராமரிப்பு இல்லாமல் பல செடிகள் பட்டுப் போச்சுனு சொன்னார். இப்ப பராமரிப்பு வேலை செய்ய ஆரம்பிச்சிருக்காங்க. ஏற்காடு பூங்கா இறக்க ஏற்றம் அதிகம், இரண்டு வருடங்களுக்கு முன்பு பார்த்திருக்கிறேன் என்பதால் உள்ளே போகலை.
அத்தோடு அன்றைய பயணத்த முடிச்சுட்டு அறைக்குத் திரும்பிய சில மணி நேரத்துல மழை.
கடைசி நாளான ஒன்பதாவது நாளில் காலைல நம்ம பரோட்டா கடைல சூடா தோசை சாப்பிட்டு பார்க்காத கிள்ளியூர் அருவிக்குப் பயணம். பல வருடங்கள் முன்பு வந்தப்ப இலகுவாக இறங்கிப் போன அந்த இடம் இப்போது மிக அதில் பாதாளத்தில் இருப்பது போல ரொம்ப ஸடீப்பா படிகள். பாதி வழிலே ஒரு சிறுவர் குழு குளிக்காம திரும்பிட்டு இருந்தாங்க. கேட்டபோது தண்ணி கலங்கலா வருது, புதுமழை பெஞ்சுனு சொன்னாங்க, குளிச்சா கோல்ட் புடிச்சுக்கும்னு வேற சொல்லவே, கீழே இறங்கி ஏறது கஷ்டம் வேணாம்னு முடிவு பண்ணி பாதில திரும்பிட்டேன். அதுக்கே மூச்சு முட்டி வேர்த்துக் கொட்டி கார்ல உட்கார்ந்து சிறிது ஓய்வெடுத்து அறைக்குத் திரும்பினேன்.
ஓட்டல் அறையைச் சிறிது ஓய்வுக்குப் பிறகு காலி செய்து, ஏற்காடு மலையிலிருந்து இறங்க ஆரம்பிச்சப்ப பதினொன்றரை. ஒரு நெடும்பயணம் முடிவுக்கு வந்தது. எங்கும் நிற்காம ஓசூருக்கு அருகே பெட்ரோல் நிரப்பி, பெங்களூரு வீட்டை அடைஞ்சப்ப நாலே கால்.
இரண்டாயிரம் கிமீ பயணம் தனி ஒருவனாய் பயணித்த அனுபவம். நண்பன் அந்தோணி சொன்னது போல தனிமையிலே இனிமை காணலாம்னு ஒரு ஃபோல்டர்லே போட்டோக்களை சேமிச்சேன். பயணம் முழுதும் சிங்கப்பூரிலிருந்து மானசீகமாக என்னோடு பயணித்த சம்பந்தம், வருகிறோம் என்று சொல்லி வராமல் போன அந்மோணி, இராஜேந்திரன், வீட்டிலே விசேஷங்கனு வராம விட்டுட்டுப் போனதுக்கு கோபப்பட.ட அசோக், அப்பப்ப பயண டிப்ஸ் கொடுத்த பங்ஸ் சிவராஜ் இவங்கலாம் எனக்கு ஊக்க மருந்து.
இந்தப் பயணம் முடிந்தாலும் மற்றொரு பயணம் இன்று இரவு தொடக்கம், அது என்னவென்று தெரிய ஐந்து நாட்கள் பொறுத்திருக்கவும். பயணங்கள் முடிவதில்லை.
(முற்றும்)

கார் போன போக்கிலே - 7

பயணத்தின் ஏழாவது நாள். காலைச் சிற்றுண்டி முடித்து, படகு இல்லம் சென்றபோது மக்கள் கூட்டம் இன்னும் சேரவில்லை. ரோவிங் படகுக்கு அனுமதிச் சீட்டு வாங்கி உள்ளே சென்றபோது படகோட்டிதான் துடுப்பு போடுவார், நமக்கில்லை என்றார். என்னோட துடுப்பு போட்டு படகோட்டும் ஆசை பறிக்கப் பட்டது.

மிகவும் அழகான இயற்கைச் சூழலில் ஏரியை வலம் வந்து கொண்டே படகோட்டியிடம் பேசி வந்த போது தெரிந்தது, அவரே கைடாகவும் செயல்படுவார் என்பது. அவர் ராமர் தனது பெயரென்றார். முருகன், ராமன், ராமர் கைடுகள் பெயர் மூன்றிடங்களில்.
ஏரி வலம் முடித்து வெளிவந்து படகோட்டிக்கு நான் சாரதியாக, நல்லூர் நோக்கிப் பயணம். போகும் வழியில் ஓரிடத்தில் மிக அருமையான இயற்கைத் தோற்றம்.சுற்றி மலைகள் நடுவிலே நாங்கள். பனோரமிக் வியூ எடுக்கலாமென முயற்சித்தோம். தெரியலே. அங்கே நிலம் விலைக்குக் கிடைக்குமானு விசாரிச்சா கிடைக்கும்னார். மழை பெய்து மிகவும் பசுமையாய் போகவே மனமில்லாமல் அவ்விடத்தை் விட்டுக் கிளம்புனோம். வழி நெடுக ஓங்கி வளர்ந்த மரக்காடுகள்.
நல்லூர் சுமார் 23 கிமீ தொலைவில் ஏற்காட்டிலிருந்து. காரை பார்க் செய்து விட்டு ஒற்றையடிப் பாதையில் அருவியில் குளிக்கத் தேவையான உடைகளுடன் இறங்கிய போது களிமண் பாதையில் மழை பெய்தால் இறங்குவது கடினமெனத் தோன்றியது. கீழே சென்றபோது அருவியை நெருங்கவே முடியாதது போல வழுக்குப் பாறையும், பாசி படிந்தும் அச்சுறுத்தின. எப்போதும் போல ரிஸ்க்தான் ரஸ்க்கென (வட இந்தியர் கால் மிதிபட்ட ரஸ்க் இல்லை) நமது கைட் உதவியோட அருவியை அடைஞ்சு சுகமான குளியல். குற்றாலத்துல விட்டத இங்கே பிடிச்சாச்சு. இருந்தாலும் அருவிக்கு நடுவிலே போகலே பாசி அதிகம். நல்ல குளியல் முடிச்சு வெளியே வந்தப்ப உடல் குளிர்ச்சியோட மனமும் குளிர்ந்தது. திரும்ப சறுக்குப் பாதைலே ஏறி மேலே வந்து, அங்குள்ள டீக்கடையில் தேநீர் சுடச்சுட அருந்தி வெயில் உடம்பில் சூடேற்ற மறுபடி பயணம்.
வந்த பாதையில் திரும்ப வேண்டாமென வேறு சாலையில் ஒரு வட்டப் பாதையில் பயணம். மழைக்காலங்களில் மலைப் பிரதேசங்கள் தான் எத்தனை அழகு. பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல. ஓங்கி வளர்ந்த மரங்களூடே பயணித்த படியே ராமரோட பல விசயங்களைப் பேசிக் கொண்டு அவரோட படகுத்துறையை அடைஞ்சு அவருக்கு விடை கொடுத்து முடிஞ்சா அடுத்த நாளும் சந்திக்கலாம்னு சொன்னேன் . இதற்குள் பிற்பகல் ஆகி இருந்தது. நான் அங்கு இருந்த மூன்று நாட்களும் பிற்பகலில் மழை பெய்தது. ஓரிரண்டு நாட்கள் தவிர மதிய உணவு தவிர்க்கப் பட்டது, பசியில்லை.
அறைக்கு வந்து நல்ல ஓய்வு. இரவு உணவுக்கு பரோட்டா சாப்பிட்ட அதே ரோட்டோரக் கடைலே தோசை சுடச்சுட சாம்பார், சட்னியோட எவ்வளவு சாப்பிட்டாலும் அறுபது ரூபாக்கு மேலே ஆகலியேனு ஆச்சர்யம். ருசியும் நல்லாத்தான் இருந்துச்சு. எட்டு மணிக்கெல்லாம் கடைகள் அடைத்து இருட்டாகி இருந்தது. யாரும் மாஸ்க் அணியாமலே உலவினர். கரோனா பாதிப்பு அங்கு அதிகமில்லையென தகவல் தெரிவித்தனர்.
(நாள் ஏழு,

கார் போன போக்கிலே - 6

காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து மினி பஸ்ஸில் பயணித்து மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு வாசலில் இறங்கி, அவ்வளவாக கூட்டமில்லாத கோயிலுக்குள் நுழைஞ்சப்ப மனசுக்கு ஒரு நிம்மதி. நிதானமாக சிறிய வரிசையில் சென்று மீனாட்சி அம்மனையும் சுந்தரேசுவரரையும் தரிசித்த போது மகிழ்வாக இருந்தது. வெகு நாட்களுக்குப் பிறகு போங்க போங்க என்ற கூச்சலற்ற கடவுள் வழிபாடு.

கிழக்கு வாசல் மிகப் பழையதாய் காட்சியளித்தது. ஏன் புதுப்பிக்கப் படவில்லையெனத் தெரியலே. அங்கிருந்து ஆட்டோவில் பயணித்து ஓட்டலுக்கு வந்து சேர்ந்து, சிறிது ஓய்வெடுத்து, ஏற்காடு சென்று தங்க ஆன்லைனில் ஓட்டல் புக் பண்ணி, அறையைக் காலி செய்து, பயணம் சேலத்தை நோக்கித் தொடர்ந்தது.
நெடுஞ்சாலையில் கார் ஓட்டுவது சிரமமற்ற ஒன்று, விரைவாகவும் பயணிக்கலாம். சேலம் சிட்டியில் நுழையாமல் ஏற்காடு போகும் சாலையில் பல நிமிடங்கள் காத்திருப்புக்குப் பின் கார் நுழைந்தது. அந்த ஜஙஷன் குழப்பமான பல முனை வண்டிகள் டிராபிக் ஜாமைக் கடந்து.
ஏற்காடு மலைப்பாதையை விசாரிச்சு மேலே ஏறத் தொடங்கிய போது மழை பெய்து கொண்டிருந்தது. பசுமையான மலை முகடுகள் கண் முன்னே. கண்களுக்குக் குளிர்ச்சியாய், கொண்டை ஊசி வளைவுகள் இருபது என்பது 1/20 என்ற வளைவைக் கடந்த போது தெரிந்தது. இதற்கு முன்பும் வந்திருந்தாலும் புதிய இடம் போன்றே மனதிற்குத் தோன்றியது.
மெல்ல மெல்ல மேலே போகப் போக நண்பன் சாம் சொன்னது போல் ஒரு நீண்ட பயணத்திற்கு ஓய்வெடுக்கச் சரியான இடமென்று தோன்றியது. பல இடங்களில் மழையினால் திடீரென்று தோன்றிய அருவிகள்,டூ வீலர்களில் வந்த இளைஞர் இளைஞிகள் அங்கே நின்று போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர்.
வளைவுகள் ஒவ்வொன்றாகக் கடந்து ஏற்காட்டை அடைந்து,ஓட்டலை அடைஞ்சப்ப பேருந்து நிலையம் அருகிலும், ஏரி ஒன்றின் எதிரிலும் அது இருந்தது. அறையை அடைஞ்சப்ப இதுவரை தங்கிய ஓட்டல்களிலே சிறந்தது இதுவென்று தோன்றியது.
கொஞ்ச நேரத்தில் மழை மிக வேகமாகப் பெய்ய ஆரம்பித்தது. மனது குளிர்ந்து நண்பன் சாமுக்கு விவரிச்சப்ப இரண்டு நாட்கள் தங்குவதாக இருந்த முடிவை மூன்று நாட்களாக மாற்றியது மட்டுமல்லாமல், மூன்றாவது நாள் தங்கும் செலவு தனதென்று சொல்லி உடனே பணத்தை என் பேங்க் அக்கவுண்டுக்கு டிரான்ஸ்பரும் பண்ணிட்டான். நண்பனுடைய உற்சாகம் அவனோட உற்சாகமாம். அந்த நாள் இனிதே பரோட்டா குருமா உணவோட நிறைவுக்கு வந்தது.
(நாள் ஆறு

கார் போன போக்கிலே - 5

மதுரைக்குப் போக முடிவானது என்று முடித்திருந்தேன். அது குற்றாலம் வழியாகப் போவதாக முடிவெடுத்து ஒட்டல் காலி செய்து, குற்றாலம் அடைஞ்சப்ப மணி காலை பதினொன்று. இட்லிகள் ரோட்டோரக் கடைலே சாப்பிட்டு மெயின் பால்ஸ் வழி கேட்டு பயணிச்சப்ப ஐந்தருவி சென்று விட்டேன். ஆனாலும் அருவிக்கு செல்ல அனுமதி இல்லை.

சைக்கிள் காரர் விற்றுக் கொண்டிருந்த பதநீரில் ஊறவைத்த நுங்கைக் குடிச்சுட்டு திரும்பினப்ப தான் ராமன் கைட் தானாக வந்து பேசினார். பிரைவேட் பால்ஸ் போகலாம்னு சொன்னார், மிக அதிகம் அவர் சொன்ன அமவுண்ட்னு யோசிச்சேன். அவர் பால்ஸ்ல குளிக்கறது மட்டுமல்ல, போட்டோ எடுக்க அருமையான இடங்களைக் காட்டறதா சொன்னார்.
சரியென்று ஒப்புக் கொண்டு அவரோட பதினைந்து கிமீ பயணம் செஞ்சு பின் நிறைய கார்களும் பைக்குகளும் இருப்பதைப்பார்த்து என்ன இது கூட்டத்துலே வர முடியாதுனு சொன்னதாலே, அவரே வேறொரு வீடு போன்ற இடத்துக்கு கூட்டிட்டு போனார். அங்கே அவர்களாகவே செயற்கை அருவி உருவாக்கி இருந்தாங்க. ஏற்கனவே ஒரு குடும்பம் குளிச்சுட்டு இருந்தாங்க. அவங்க. வந்த பிறகு நான் குளிக்கப் போனேன். ஒரு மணி நேரம்னு அவர் சொன்னாலும் பதினைஞ்சு நிமிசத்துலே வெளியே வந்துட்டேன். அருமையான தனியான குளியல்.
உடை மாத்திகிட்டு அவருடன் போட்டோ ஷூட் இடத்துக்கு அடுத்த பயணம். மழை விட்டு விட்டு பெய்துட்டே இருந்தது. மிக அழகான பாதை, பசுமை சூழ்ந்த மலைப் பிரதேசம், கண்ணுக்குக் குளிர்ச்சியா. படங்கள் நிறைய எடுத்துக்கிட்டு மீண்டும் குற்றாலத்துக்குத் திரும்பினோம். அவரை இறக்கி விட்ட இடத்துலே ரோட்டோரக் கடைலே ஊறுகாயும்(செரிமானம் நன்றாக ஆகுமென்றார்) பழமும் வாங்கிட்டு அவரோட நம்பர் வாங்கிக் கொண்டு, மதுரைச் சாலையில் பயணம் தொடர்ந்தது.
திருமங்கலத்தைக் கடந்து மதுரையில் நுழைஞ்சு அவுட்டர்லே முதல்லே கண்ணுலே பட்ட ஓட்டல்லே விசாரிச்சு தங்கினா ரொம்பவும் சுமாரான ஓட்டலுக்கே 1700₹. அதற்குள் மாலை ஆகிவிட்டதால் வேறு எங்கும் போகவேண்டாமென முடிவெடுத்து, குளிச்சு இரவு உணவு ரூம்லே தர வச்சு சாப்பிட்டேன்.
இந்த ஓட்டல் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்துக்கு மிக அருகில். மறு நாள் காலைலே மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போக முடிவெடுத்து, கணக்கெழுதி முடித்து உறங்கச் சென்றாயிற்று.
(நாள் ஐந்து

கார் போன போக்கிலே - 4

காலை ரெடியாகி டிபன் சாப்பிட்டு அம்பா சமுத்திரம் பயணம். திட்டமிட்டபடி கன்யாகுமரி செல்லுதல் முதல் மாற்றம். ஏற்கனவே பல முறை சென்றதால் போக வேண்டாமென முடிவெடுக்கப்பட்டது.

அம்பாசமுத்திரம் பயண தூரம் 41 கிமீ மட்டுமே. மாஞ்சோலை போகணும்னா இங்கேயுள்ள பாரஸ்ட் ஆபீசில் அனுமதி பெற்றே போகவேண்டுமெனச் சொன்னார்கள். அம்பாசமுத்திரம் அடைந்து மெயின்ரோடுல இருக்கிற பாரஸ்ட் ஆபீசில் நுழைஞ்சப்ப அதிகாரி யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். அங்கிருந்த கிளார்க் உடன் பேசிக் கொண்டிருந்தப்ப மாஞ்சோலை அனுமதி இன்னும் வரலைனும் இன்னும் சில நாட்களில் வரலாமுன்னும் சொன்னார்.
அவ்வனுமதி கிடைத்தால் மணிமுத்தாறு அணை, அருவி,மாஞ்சோலை இவையனைத்தும் பார்க்க முடியும். சிறிது நேரத்தில் ஆபிசர் அழைக்க அவருடன் பேசிய போது அனுமதி தற்போது ஹெட் ஆபீசில் கொடுப்பதாகவும் இன்னும் சில நாட்களில் கொடுக்க வாயப்பிருப்பதாகவும் கூறினார்.அனுமதி தினமும் ஐந்தே வண்டிகளுக்கு மட்டுமெனச் சொன்னார். நல்ல மனிதர் அமைதியாகப் பேசினார். முதல் ஏமாற்றம்.
வெளியே வந்து காபி சாப்பிட்டப்ப அந்த தெருக்கோடிலே ஆறு ஓடுகிறதெனத் தகவல். காரைக் கிளப்பி அங்கே கோயிலொன்றைச் சுற்றி போனபோது தாமிரபரணி ஆறு அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது. நிறைய ஆண்களும் பெண்களும் குளிச்சுட்டு இருந்தாங்க. ஏனோ எனக்கு குளிக்கத் தோணலே. போட்டோக்கள் எடுத்துட்டு அங்கே பாறைமேல் உட்கார்ந்து கால்களை நனைச்சுட்டு கிளம்பிட்டேன்.
அடுத்தது காரையார் ் அணை மற்றும் பாணதீர்த்த அருவி போகலாம்னு நண்பன் சிவராஜ் சொல்ல சுமார் பத்து கிமீ பயணம் செஞ்ச பின் மலை அடிவாரத்துலே காவலர் நிறுத்தி போக அனுமதி இல்லேனு சொல்லிட்டார். இரண்டாவது ஏமாற்றம். இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாதுண்ணு ஓட்டலுக்கே போக முடிவெடுத்து திரும்பியாச்சு. கயத்தாறு, பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்ட பொம்மன் இடங்களுக்குப் போகலாமானு யோசிச்சு அங்கேயும் அனுமதிக்கலேன்னா போறது வேஸ்ட்னு விட்டாச்சு. ஓட்டல் அறைலே ஓய்வெடுத்துட்டு மாலை ஐந்து மணி போல கிளம்பி நெல்லையப்பர் கோயில் வாசலையாவது பாக்கலாம்னு பஸ்லே பயணிச்சு வாசல்லே நிண்ணு பாத்துட்டு, இருட்டுக்கடை அல்வா வாங்கிக்கிட்டு பஸ்லே ஓட்டலுக்குத் திரும்பி போற வழிலே டிபன் வாங்கிட்டு ரூமுக்குப் போய் சாப்பிட்டு, மறுபடி டிஷ்கஷன்லே மேகமலை போவது வேணாமுன்னு முடிவாச்சு. சிறுமலை போல தான் அதுவும்னு நண்பன் சொன்னதாலே அந்தப் பயணமும் கட்.
மறுநாள் காலை மதுரைக்குப் பயணிப்பதாய் முடிவானது. உறக்கம் கண்களைத் தழுவ அன்றைய நாள் ஏமாற்ற நாளாக முடிந்தது.
(நாள் நான்கு)