சனி, 18 டிசம்பர், 2021

அண்ணாமலையாரும் அழகிய அருவியும் - 2

நகைச்சுவையான பேய்க்கதை முடிந்து இரவு சிற்றுண்டிக்குப் பிறகு நண்பர் சக்திவேலை பள்ளிகொண்டாபட்டில் இறக்கிவிட்டு விடுதி அடைந்து,காலையில் விரைவாக கோயிலுக் குச் சென்று, தரிசனம் முடித்து பயணம் தொடர முடிவெடுத்து அசோக் கும் நானும் உறங்கினோம்.

காலை ஏழு மணிக்கு அண்ணாமலையார் கோவிலில் நுழைந்து, 20₹ டிக்கெட் எடுத்து கூட்டம் அதிகமில்லாததால் நன்றாக தரிசித்து, அண்ணாமலையாரிடமும், அன்னை உமையாளிடமும் பலருக்காக வேண்டி, விடுதி திரும்பி,காலையுணவு முடித்து, திட்டமிட்டபடி கிளம்பி ஆம்பூர் நோக்கிப் பயணம். வேலூருக்கு 81கிமீ சாலை நன்றாக இருந்ததால் வேகமாகப. போக முடிந்தது.
நண்பர்கள் அந்தோணி, இராஜேந்திரன் ட்ரெயினில் காட்பாடியை நெருங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை அங்கேயே இறங்கச் செய்து அமிர்தி வழியாக ஜவ்வாது மலை போக முடிவாயிற்று. முப்பது கிமீ பயணத் தூரமும் குறைந்தது.
பயணம் ஆரம்பித்து அமிர்தி நோக்கிப் பயணித்தபோதே, சாலையின் இருபுறமும் அழகிய தோற்றம், காட்டு வழிச்சாலை. அமிர்தி உயிரியல் பூங்கா கடந்து பயணிக்க ஆரம்பித்தபோது, மலையேற்றம் வரவேற்றது. மதிய உணவு தங்கப் போகும் விடுதியில் தயாரிக்கச் சொல்லியாயிற்று. எழுபத்தோரு கிமீ பசுமைப் பாதையில் பயணித்து, நடுவே ஓடைகளைக் கடந்து ஐமுனாமரத்தூர் சேர மதியம் ஒன்றுக்கு மேல் ஆனது.
லேக் வியூ கெஸ்ட் ஹவுஸ் ஏரிக்கரையிலே அமைந்திருந்தது. ரம்மியமான தோற்றம். மதிய உணவு தாமதமாய் வந்தாலும் ருசியான அசைவ சாப்பாடு. சிறிது நேரம் ஓய்வெடுத்து, படகுத் துறைக்குச் சென்று மோட்டார் படகில் ஏரி வலம். பெரிய ஏரிதான், பறவைகள் அதிகமில்லை. மீன் பிடிக்க வலை விரித்திருந்தார்கள். முன்னாடியே சொல்லியிருந்தால் எங்களுக்கும் கிடைத்திருக்கும்.
படகோட்டி நண்பரானார். சுற்று முடித்து ஏரிக்கரையில் உட்கார்ந்து அரட்டை. மெதுவாக இரவு தொடங்க, அந்தோணிக்கு சோமபானம் வாங்க வேண்டுமெனச் சொல்ல இருளில் சில கிமீ பயணித்து, அதற்கான அர்ச்சனைகளை அந்தோணிக்குக் கொடுத்து, விடுதி திரும்பி, முதலில் பானமும் பிறகு சுடச் சுட இட்லி சப்பாத்தி ஆம்லெட், சிக்கன் கறியென இரவு உணவு. சுவை அருமை.
இதற்குள் கேம்ப் பையரும் எங்களுக்காக. அசோக் காய்ச்சல் என்பதால் அறையில். சிறிது நேர ஆட்டத்திற்குப் பிறகு அறைக்கு வந்து, களைப்பு மிகுதியால், உறங்கப் போகும் முன் மறுநாள் பீமா அருவிக்குச் செல்ல விரைவாகச் செல்ல வேண்டுமென முடிவானது. புதிய இடமாதலால் தொடர்ச்சியான தூக்கமில்லை.
அதிகம் வளைவுகள் அற்ற சிறிய சாலைகள், இரு சக்ர வாகனங்கள் வளைவுகளில் திடீரென எதிர் கொள்ள நேரிட்ட அனுபவம். நீரோடையில் இறங்கி கால் நனைத்த அனுபவம், மனத் திரையில் ஓடியது.
( தொடரும்)

கருத்துகள் இல்லை: