சனி, 18 டிசம்பர், 2021

இயற்கைச் சுற்றுலா - 2

 டண்டேலி, இயற்கைச் சுற்றுலா

இன்றைய நாள் ஒரு டபுள் தமாக்கா நாள். என்னுடைய 65 வயது பிறந்த நாள் மற்றும் கண்ணுக்கும் மனதுக்கும் விருந்து. உறவினர் குழுவின் பிறந்த நாள் பாடலோடு தொடங்கியது. வாழ்த்து மழை பொழிந்த வண்ணம் இருந்தது. நட்பு மேகங்கள் நாள் முழுதும்.
இன்றும் நீச்சல் குளியலுக்குப் பிறகு, காலை உணவு முடித்து, தயாராய் இருந்த பசவப்பா டாக்ஸியில் பயணம் தொடக்கம்.முதல் பயணம் வியூ பாயிண்ட். மிக அருமையான அகண்ட ஆற்று நீர் தேக்கமும் மலை முகடுகளும், தீவுகளும்.விட்டு அகலவே மனம் வரவில்லை.
அடுத்ததாய் சுபா டேம். வாவ் காளி நதி ஆர்ப்பரித்து ஓடிக் கொண்டிருந்தது. அணையின் அருகே செல்ல அனுமதி இல்லை. எங்கெங்கு காணினும் காளியின் ஆர்ப்பரிப்பு. காவிரியைக் கண்ட கண்கள் காளியின் நர்த்தனம் கண்டது.
தூரத்தே தெரிந்த அணையைக் கிளிக்கி விட்டு, அடுத்த இடமான அணையின் பேக் வாட்டருக்குப் பயணம். இந்த இடமும் பிரமாண்டமாய் காண அழகான தோற்றத்துடன். அருண் மடமடவென சாய்வான தடுப்புச் சுவரில் இறங்கி நீருக்கு அருகில் சென்றது என்னுடைய இளமைக்காலங்களை நினைவூட்டியது. எங்கெங்கு காணினும் பசுமை, மலைகள்,ஆறு என அழகின் தொகுப்பு.
அடுத்த பயணம் ஆற்றுப் படுகை, டண்டேலி் சுற்றுலாவின் சிகரமான ரிவர் ராஃப்டிங்.ராஃப்டிங் என்னவென தெரியாதவர்கள் கூகுளிக்கவும். தண்ணீரில் நனைகிற அனைத்தும் பசவப்பாவிடம் கொடுத்து லைஃப் ஜாக்கெட் என் அளவுக்கு கிடைக்காமல் இறுக்கமாக அணிந்து, கயாக்கிங் செல்ல அனுமதிக்கப் படவில்லை, மற்றவர்கள் சிறிது நேரம் படகில் உலவி வந்தனர்.
அடுத்தது ராஃப்டிங்குக்கு வெயிட்டிங். அதற்கான படகில் எங்களுடன் மற்ற நான்கு நண்பர்களும் உட்கார்ந்த பிறகு படகு கேப்டன் கணேஷின் பிரீஃபிங் ஆரம்பம். போட்டோ, வீடியோவுக்கு் குழுவுக்கு ஆயிரம் ரூபா என முடிவாயிற்று. முதலில் ஒரு படகுச்சவாரி, நீரோட்டமில்லாத பகுதியில்.
அடுத்து விமான டேக் ஆஃப் போல,துடுப்பு பிடிப்பது எப்படி, விழாமல் இருப்பது எப்படி, தவறி ஆற்றில் விழுந்தால் மிதப்பது எப்படி,படகுக்கு அடியில் மாட்டிக் கொண்டால் வெளிவருவது எப்படி என ஒரு வகுப்பு எடுக்கப் பட்டது. துடுப்பு போட்டு கேப்டனின் ஆணைப்படி மெதுவாக முன்னேற்றம்.
படகு ஓட்டம் நீரோட்ட வேகத்தில் நுழைந்தது. வேகமாக அருவி விழும் இடம் நோக்கி.....அப்படியே ஆர்ப்பரிக்கும் அருவியில் இறங்கி வளைந்து நெளிந்து நீரில் மூழ்கி எழுந்து, திரில்லிங் அனுபவம்.மீண்டும் சில சுற்றுகள் அருவி விழும் இடத்தில் நுழைந்து. ஒரு இளம்பெண் ஆற்றில் விழுந்து, மற்ற படகினரால் மேலே இழுக்கப் பட்டார்.
எங்கள் படகு பாறைகள் நடுவே மாட்டிக் கொண்டது. நகர முடியவில்லை. பத்து சதவீதம் படகுகளே இப்படி ஆகுமென கேப்டன் சொன்னார். படகை சமன் செய்து, அங்கிருந்து மீள சில நிமிடங்கள் ஆனது. நான் நீரில் முக்கால் பங்கு மூழ்கி, விழாமல் இருக்க இடது பக்கம் சாய்ந்தேன்.நான் உட்கார்ந்து இருந்தது படகின் முன்பகுதியில். ஒரு வழியாக படகு வெளிவந்து மிதந்து, மரப்பாலம் வழியாக மேலே வந்தபோது மனதில் ஒரு திரில்லிங் பயணம் முடிவுற்றதை உணர முடிந்தது. போட்டோ, வீடியோக்கள் மொபைலில் காப்பி செய்து,ரிசார்ட்டுக்குத் திரும்பி மதிய உணவு சாப்பிட்ட போது மணி நான்கை நெருங்கியிருந்தது.
மறுநாள் பசவப்பாவை காலை பத்து மணிக்கு வரச்சொல்லி அனுப்பி, சீட்டாட்டம், கேரம்,நொறுக்குத்தீனி, ரெயின் டேன்ஸ் மற்றும் கேம்ப் ஃபையர் வேடிக்கை என நேரம் கடந்தது. இரவு உணவுக்குப் பின்னர் உறங்கச் சென்றாலும் நடுநிசி கடந்தும் வெளியே கூச்சல், வார இறுதியாதலால் கூட்டமும் அதிகமாயிற்று.
( தொடரும் )

கருத்துகள் இல்லை: