திங்கள், 7 செப்டம்பர், 2020

ஆதியும் அந்தமும்

 பனி விழும் இரவு முடிந்து பகலவன் தோன்றினான்

கனவுகள் கலைந்து கண்கள் திறந்து உலகை நோக்கின
நேற்றைய இரவு இனிதே முடிந்து இன்றைய பொழுது நோக்கிய எண்ணங்கள்
கற்றது அறிவும் அனுபவம் அனைத்தும் என்றோ உதவும்
உற்ற நட்பும் உடன் மனையாளும் இனிமை சேர்க்கும்
சுற்றமும் சூழும் உறவுகள் தொடரும் நீண்ட வாழ்வில்
சுகமான சுமைகள் சுமந்திடத் தெரிந்தால் வாழ்வே இனிமை
அமைதியை அன்பைப் பெற்று விட்டாலே ஆனந்தம் என்றும்
ஆதியும் அந்தமும் இயற்கையின் நூலில் அத்தியாயங்கள்

நட்பென்ற உறவே

 நட்பென்ற உறவே இறுதி வரை தொடரும்

நலம் பேணும் நகையாடும் பிணக்குறும் பின்சேரும்
இணையில்லை இனிதான பந்தம் இன்னல் தீர்க்கும்
இலக்கற்று வானில் பறந்திடும் பறவைகள் இவை
கணக்கில்லை எள்ளி நகையாடல் சிறுபிள்ளை விளையாடல்
கற்கண்டாய் சிலநேரம் கசப்பாய் சிலநேரம் மாறிமாறி
மேகமென இருண்ட முகம் நிலவாய் குளிரும்
வேதனைகள் தீர்க்கும் சோதனைகள் தவிர்க்க உதவும்
வேதங்கள் போற்றும் பலனை எதிர்பாராப் பண்பு
நல்லதோர் குடும்பம் நாற்புரமும் பறந்து விரிந்து
சொல்லி முடியாத குண நலன் பலவுண்டு
சொந்தம் இதுவே சேர்ந்தே எம்மோடு எந்நாளும்

அம்மா இறந்த அன்று

 அம்மாவை நேசிச்ச அளவுக்கு அப்பாவை நான் நேசிச்சது இல்லை.

அவருடைய நடவடிக்கைகள் பலவும் கோபமூட்டுபவையாக இருந்ததே காரணம் . பல வருடங்கள் அவரோட பேசாமல் இருந்திருக்கிறேன்.
அவரை நான் நேசிச்சதுனு சொல்வதானால் சிறுவனாய் இருந்தபோது மட்டுமே.
அம்மாவின் இளவயது மரணத்திற்குக் காரணமானவர் என்ற நினைவும், அம்மாவின் மனநலம் பாதிக்கக் காரணமானவர் எனவும் ஆழமான எண்ணம் என் மனதில் பதிந்திருந்தது.
தாயின் அரவணைப்பு அதிகமாய் இல்லாமல் போனது பெருங்குறையாய் என்றும்.
இவ்வளவு வெறுப்போடு இருந்த போதும் ஒரு நெகழ்ச்சியான தருணம் ஓவியமாய் மனதில்.
அவர் அழுது நான் பார்த்ததே இல்லை. கல் நெஞ்சக்காரன், எதற்கும் கலங்காதவர் எனப் பெயர் பெற்றவர்.
அம்மா இறந்த அன்று உறவினர்கள், நண்பர்கள் வற்புறுத்தலால் தேர்வு எழுத மாமா ஒருவரின் துணையோடு நான் கிளம்பிய போது, தெருமுனை வரை வந்து அழுது என்னை வழியனுப்பி வைத்த போது புரிந்து்கொண்டேன், இந்தக் கல்லிலும் ஈரம் இருக்கிறது என்று. அந்தக் காட்சி மனதில் ஆழமாய் என்றும்.

தாமரைத் தோட்டம் பழைய காவலர் குடியிருப்பு

அத்தியாயம் - 9
இந்தத் தொடரை இந்த அத்தியாயத்தோடு முடித்துக் கொள்வதே நலம். 1981 வரையில் மட்டுமே காலனியில் இருந்தேன். அதற்குப் பிறகு சில மாதங்கள் தியாகப்ப முதலி தெரு ஒண்டுக் குடித்தனத்தில் நண்பர் சுந்தரத்தோடும் அம்மா ( சுந்தர், சம்பந்தம் இவர்களது தாயார்)வோடும் சில மாதங்கள். 1982ல் சென்னையைத் துறந்து பெங்களூர் சென்று விட்டேன்.
மார்ஷல்லே சேர்ந்த ஆரம்ப காலங்கள்ளே இங்கிலீஷ் பேச ரொம்ப தடுமாற்றம். மெது மெதுவா கத்துக்க ஆரம்பிச்சேன். ஆல்வா, ஜகன்னாதன் இவங்க தலைமைலே வேலை செஞ்சேன். எனக்கு காஸ்டிங்ஸ் வாங்கிக் கொடுக்கிற வேலை.
உட்டன் பேட்டன், அலுமினியம் பேட்டன்னு வேற வேற மெட்டீரியல் உபயோகிப்பாங்க. சப்ளையர் விஸிட்ஸ் ஆரம்பிச்சது. எனக்கு முன்னாடி அந்த வேலைல இருந்தவங்க கமிஷன் வாங்கினாங்கன்ற விவரம் தெரிய வந்தது. பிரைவேட் கம்பெனிலேயும் ஊழலான்னு யோசிச்சேன். அதனால் இன்னும் கவனமா இருக்க ஆரம்பிச்சேன். கிட்டத்தட்ட இருபது வருஷத்துக்கு மேலே மெட்டீரியல்ஸ் டிபார்ட்மெண்ட்லே இருந்தும் பேர் கெடாம கறை படியாம பாத்துகிட்டேன்.
ஒரு சின்ன ஒருதலைக் காதலும் உண்டு. ஸ்டெனோவா இருந்தவங்க டைப்பிங் பெர்சனல் லெட்டர. உதவி பண்ணுவாங்க. நல்லா பேசுவாங்க அழகா இருப்பாங்க. அப்புறம் தான் தெரிஞ்சது அக்கவுண்ட்லே இருக்கிற அவங்க ஜாதிப் பையனை காதலிக்கிறாங்கனு.
சென்னைலே இருக்குற காஸ்டிங் பவுண்டரி சுபாஷ் மெட்டல், சிவானந்தா,கோபால் நாயகர் கோயம்பத்தூர்லே அப்ப ஃபிளை வீல் சப்ளை பண்ற ஸ்ரீ வித்யா இஞ்சீனியரிங் விஜயவாடாலே பாரத் மெக்கானிகல் ஒர்க் ஹைதராபாத்லே வித்யுத் ஸ்டீல், பாம்பேலே காட்ரெஜ் ஸ்டீல் பவுண்டரினு பாலோ பண்ணி கிரஷருக்கு வேண்டிய பார்ட்ஸ் வாங்கித் தரணும்.
இதைப்பத்தியே தனியா ஒரு அத்தியாயம் எழுதலாம். என்னோட வேலை செஞ்ச சிலர் குவாரி தொடங்கி பல்லாவரம் மலை பக்கம் போயிட்டாங்க. எனக்கும் ஆசை இருந்தது, வெறுங்கைலே முழம் போட வேணாம்னு விட்டுட்டேன்.
இந்த மூணு வருஷத்துலே எர்த் மூவிங் இயந்திரங்க பத்தி தெரிஞ்சு கிட்டேன். ஸ்டோன் கிரஷர்ஸ், மொபைல் கிரேன், டீ டிரையர், பேவர் பினிஷர்னு.
டெய்லர்ஸ் ரோடுலே பஸ் ஏறி அம்பத்தூர் எஸ்டேட் பல நேரம் தொங்கிகிட்டு தான் 71 பஸ்லே. அங்கே இருக் கிற லக்கி ஓட்டல்தான் மீட்டிங் ஜாயின்ட். ஏசி ரூம்லே அங்கே சாப்பிட்ட டீ போல சுவையா எங்கேயும் கிடைக்காது.
இரவுகள்ளே நானும் சுந்தரும் ஒரே தலைப்புலே எழுதுவோம். அந்த டைரி இன்னும் இருக்கு. விஜயவாடா வெயில் மறக்க முடியாது.
நிறைய பயணங்கள். பெங்களூர் வேலை கிடைச்சு சென்னை விட்டு கிளம்புனப்ப ஒரே ஒரு ஸூட்கேஸ் தான் என்னோட சொத்து. கண்களில் கண்ணீரோடு அம்மா, நண்பர்கள், சென்னை விட்டு இரயில் நகர்ந்தது. நண்பரோட தாயார் என்றாலும் என்னை சொந்த மகனாகவே கவனிச்சு கிட்டாங்க. கிட்டத்தட்ட மூன்று மாசம் வயிற்று வலியால் இரவெல்லாம் துடிச்சப்ப தண்ணி காயவச்சு சூடு ஒத்தடம் கொடுப்பாங்க. பத்திய சாப்பாடு எண்ணை இல்லாம ஆவில வேக வச்ச சமையல்தான், என்னால அவங்களும் சாப்பிடுவாங்க.
நண்பர்கள் இத்தகைய உறவுகள் முற்பிறவிப் பயனென அடிக்கடி நினைவு கூர்வேன்.
( முற்றும்)
Ram Manohar M D and Selvaraj Selvaraj

பொல்லாச் சிறுக்கி

 கருக்கலில் கண் விழித்தேனடி

காணவில்லை எங்கே போனாய்
உருக்கமாய் பாடலைப் பாடினாயே
உயிருக்குள் நுழைந்த காதலியே
படுக்கையிலே தேடி நின்றேன்
பாதியிலே எங்கே சென்றாய்
செவிக்கு உணவளிக்க யாருமில்லை
செந்தமிழில் தேன்சேர்த்துத் தந்துவிடு
அருகினில் இருந்தாலே ஆனந்தம்
அணைத்திட தோள்சாய வந்துவிடு
ஏனிந்த விளையாட்டு பெண்ணே
நானிங்கு தவிப்பதை ரசிப்பாயோ
பொல்லாச் சிறுக்கி நீயன்றோ
பொழுது சாய்வதற்குள் வந்துவிடு

எங்கே அவள்

 மாலையும் வந்தது முகிலும் கருத்தது

காலையில் வந்த கதிரவன் மறைந்தான்
கோலங்கள் தெருக்களில் கலைந்து நின்றன
கோபுர உச்சியில் விளக்குகள் ஒளிர்ந்தன
கூடுகள் நோக்கிப் பறவைகள் திரும்பின
வீடுகள் அனைத்தும் வெளிச்சம் போட்டன
மங்கிய ஒளியில் மதிமுகம் தேடினேன்
பொங்கிய சிரிப்பை பொத்தினான் நண்பன்
முகமதில் கோபம் நிறைந்தே நோக்கினேன்
அகமதில் ஏளனம் அவனெனைப் பார்த்தான்
வருவேன் என்றாளே எங்கே அவள்
வாடிக்கை இவளது ஏமாற்றும் சொற்கள்
வருந்திய முகம் கண்ட தோழன்
கருத்திலிருத்து வருவாள் அவள் என்றனன்

தாயவள் மடி

 தாயெனும் பிறவி சேயினைக் காக்க

தாலாட்டும் பாராட்டும் இடுப்பில் சுமக்கும்
சுமக்கும் பாரம் பத்து மாதமல்ல
இறக்கும் வரைக்கும் இறக்கி வைப்பதில்லை
சுகங்கள் துறந்து சுமையென எண்ணா
முகங்கள் எல்லாம் தாய்மையின் வடிவம்
அன்பு அவளது அள்ளக் குறையாது
அல்லும் பகலும் தனக்கென வாழா
தெய்வப் பிறவி இல்லமே கோயில்
மற்றொரு பிறவி மானிடன் ஆதலின்
மனிதக் கடவுள் தாயவள் மடிதனில் !

காதலி வந்தாள்

 நடுநிசிப் போதில் காதலி வந்தாள்

நச்சென முகத்தில் முத்தம் தந்தாள்
ஈரம் உணர்ந்து விழிகள் திறந்தன
தூரமாய் இருந்தவள் அருகினில் வந்தாள்
அள்ளி எடுத்தேன் அணைத்துச் சிரித்தேன்
கள்ளி அவள் காதினைக் கடித்தாள்
உறக்கம் கலைத்தேனா செல்லமாய்க் கேட்டாள்
உனக்காகக் காத்திருந்து கனவினில் துயின்றேன்
இத்தனை நாளாய் எங்கேநீ சென்றாயோ
இரக்கம் இல்லையோ வினவினேன் அவளிடம்
இதழால் இதழ் மூடினாள் கண்களும்
வார்த்தைகள் வரவில்லை வண்ணங்கள் மட்டுமே
போர்த்திய அவளுடல் குளிருக்கு வெப்பமாய் !

அந்த நாள் நினைவுகள்

 ஆராரோ ஆரிரரோ கண்ணுறங்கு மகனே

ஆனை கட்டிப் போரடிச்ச ஊரிதுவே
ஏரு பூட்டி வயலுழுத ஊருமிதுவே
தேரு பூட்டி வீதியுலா வந்ததிங்கே
ஆண்டு தோறும் திருவிழா தவறவில்லே
ஆத்துத் தண்ணி வாய்க்கால்லே எப்போதும்
வயக்காடு பாய்ச்சலுக்கு வாலிப நீச்சலுக்கு
சாயங்கால மரத்தடி கூட்டம் தவறாது
ஆடுமாடு மணியோசை வீடு திரும்பும்
ஆத்தாவும் சூடாவே களிகிண்டி உருட்டுவா
கருவாட்டுக் குழம்போட ருசியான சாப்பாடு
கம்பங் கூழும் நீர்மோரும் மத்யானம்
தெருமுக்கு டீக்கடைலே சூடா வடையும்
தெரியாத சந்துகள்ளே சாராயம் காரக்கடலை
உறவுன்னா ஊரக்கார சனங்க முச்சூடும்
உருத்தெரியாம மாறிப்போச்சு வறுமை இப்போ
வயிறெல்லாம் ஒட்டிப் போச்சு வாடிப்போச்சு
பயிறெல்லாம் இங்கொண்ணு அங்கொண்ணா தண்ணியில்லே
யாரிதுக்கு காரணமோ புரியவில்லே நீயுறங்கு
மாரியாத்தா வருவாளோ மாத்தமொன்னு தருவாளா ?

காலம் மாறிப் போச்சு

 அன்று வீடு கட்டி கூட்டாஞ்சோறு

சின்ன கன்று போல் துள்ளல்
கோடி வீட்டு குட்டிப் பாப்பா
கோல மிட்ட குமரிப் பெண்கள்
தாவணி பின்னல் கொலுசுச் சத்தம்
தாவியேற மாமரம் புளிய மரம்
மாடிப் படியினுள் திருடன் போலீஸ்
பம்பரம் கில்லி காத்தாடி கோலிக்குண்டு
மழைநீர் குட்டையிலே நீச்சல் பயிற்சி
பம்பு குழாயிலே குளியல் குடிநீர்
ஆடியிலே தெரு வெங்கும் திருவிழா
ஆட்டம் போட மேடைக் கச்சேரி
ஊருக்கொரு திருவிழா வண்ணக் கோலம்
ஊர்க்கோடி கூட்டத்திலே தலைவர் பேச்சு
காசு கொடுத்தாலும் வாராது நண்பா
காலம் மாறிப் போச்சு காட்சிகளுமே !

கண்ணன் வந்தான்

 கண்ணன் வந்தான் வெண்ணெய் தின்றான்

கள்ளன் அவன் கன்னியர் தோழன்
காளிங்க நர்த்தனம் குழலூதும் வித்தகம்
காளைகள் கூட்டத்தில் கன்றாய் இவன்
குறும்பன் ஆனாலும் கரும்பாய் இனியவன்
குழந்தை கண்ணன் கோபியர் செல்லம்
குற்றங்கள் புரியும் விளையாட்டுப் பிள்ளை
வளர்ந்த கிருஷ்ணன் வம்பில் சூரன்
குளக்கரை கன்னியர் ஆடைகள் திருடன்
பாண்டவர் ஐவரின் மைத்துனன் ஆனான்
பாரதப் போரில் பாத்திரம் ஆனான்
தந்திரம் செய்தே எதிரிகள் சாய்த்தான்
தர்மம் வெல்லும் தரணியில் என்றான்

கருமேகங்கள்

 மனிதன் உறங்கட்டும் எழுவதற்கு நேரமுண்டு

மதவெறி விளையாட்டு மண்டைக்கு ஏறட்டும்
மொழிதனில் சித்து விளையாடி முடியட்டும்
மொத்தமாய் கடவுளை தம்மிடம் கொண்டனர்
வாய்மை யாதெனில் பொய்மையின் வார்த்தைகள்
வாசனை மலர்கள் காகிதப் பூக்களாய்
சொல்வது செய்வது வஞ்சகச் செயல்கள்
புவிதனில் கருமேகங்கள் குவிந்து இருண்டன
புத்தக ஏடுகள் சரித்திரம் படித்தன
பாதகம் செய்வதே சாதனை ஆனது
வேதனை மனதினில் வேறென்ன செய்வது
காலம் மாறுமா காட்சிகள் மாறுமா
கருமை மறைந்து வெளுக்குமா வான்வெளி
கேள்விகள் ஆயிரம் கேட்பது யாரிடம்

ஜெய் இந்த் !

 வாழ்க முன்னோர் வணங்குவோம் அவர்தம் தியாகமதை

வீழ்க வேற்றுமைகள் வீண் பேதங்கள் பிரிவினைகள்
காண்க ஒற்றுமையை வளமான தேசமிதை வணங்கிடுவோம்
வெல்க எதிரிகளை வீழ்த்தியவர் பகைமை விரட்டுவோம்
உணர்க நாமனைவரும் ஒருதாய் வயிற்று சகோதரரே
உண்மையும் பாசமும் உள்ளத்து உயர்ந்து ஓங்கட்டும்
உயர்வு தாழ்வு நம்மிடை மறைந்து ஒழியட்டும்
உறவினர் அனைவரும் எண்ணம் மனதில் நிறையட்டும்
உறக்கச் சொல்லுவோம் பாரதத்தாயின் பிள்ளைகள் நாமென்று
வந்தே மாதரம் ! ஜெய் இந்த் ! வாழ்க பாரதம் !

நல்லதே நினைப்போம்

 மனித இலக்கணம் கற்று வாழ்வோம்

புனிதப் பயணம் இன்று தொடங்குவோம்
பழையன பேசும் பண்பை மறப்போம்
புதிய உலகம் படைக்க நினைப்போம்
மதமெனும் மதத்தை ஒழிக்கப் போராடுவோம்
மனதுக்குப் பிடித்ததை செய்வதை மதிப்போம்
கடவுளர் அனைத்தும் ஒன்றெனக் கொள்வோம்
கடந்து போனது சரித்திரம் ஆகட்டும்
மொழிதனைக் கற்பது அவரவர் விருப்பம்
விழிதனில் கோபம் கொள்வது தவிர்ப்போம்
வாதங்கள் வேதனை தருவதை ஒதுக்குவோம்
பேதங்கள் அற்ற சமுதாயம் தோன்றட்டும்
நட்பு அன்பு நமதெனக் கொள்வோம்
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்

முடிவில்லாப் பயணம்

 இரு தண்டவாளங்கள் சம இடைவெளியில் பயணிப்பதால் இரயில் தடம் புரளாமல் செல்லும்

இருவேறு கோணங்களில் நாம் பயணிக்கிறோம். அதனால் முடிவில்லா விவாதங்கள் தொடர்ந்தபடி இருக்கும்.
ஒவ்வொரு மொழியும் மதமும் சிறப்பானதே. காலத்தால் அழியாத காவியங்களில் ஒரே இனத்தைச் சேர்ந்தவர் போரிடுதல், கொள்ளையடித்தல், பெண்டிரைக் களங்கப்படுத்தல் நடந்தவற்றைப் பதிவிட்டிருக்கின்றன.
நமக்கு உகந்தவற்றை மேற்கோள் காட்டுவது நமது இயல்பு.
இது முடிவில்லாப் பயணம். நாம் பச்சோந்திகள். நேரத்திற்கு ஏற்றாற்போல் மாறுவோம். அடங்குவோம். ஆர்ப்பரிப்போம். பம்முவோம், கொக்கரிப்பொம், வலைக்குள் இருப்போம், வீர வசனம் பேசுவோம்.
மனித இனமே காலங்காலமாய் அவ்வாறே. உமக்கு சரியெனப் பட்டது எனக்கு சரியாகத் தோன்றாது.
பழமையில் நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு. உண்மைதான் மனிதனே எல்லா வேற்றுமைக்கும் காரணம்.
சோழன் நாடுகள் கவர்ந்ததை போற்றும் நாம் சீனனைப் போற்றுவதில்லை. எனக்குப் பிடித்ததை உயர்வென்று எண்ணுவது இயல்பு.
மனித இனம் உள்ளவரை இது தொடரும் .
நான் நல்லவை எங்கிருந்தாலும் அதைச்சேகரித்து வைக்கப் பார்க்கிறேன். சில நேரங்களில் சாக்கடையிலும் வைரக்கற்கள் விட்டு விட மனமில்லை எனக்கு.
இருக்கும் சில காலங்களில் மனதிற்கு அமைதியும் சுகமும் தேடிப் பயணப்பட.டுக் கொண்டிருப்பேன். பயணம் நிற்கும் வேளை சுவாசம் நின்றிருக்கும்.

எதை நோவதோ

 மனக் குரங்கு மதி கெட்டு அலையுது

மரம் ஏறுது கிளை தாவுது குதிக்குது
சினங்கொண்டு குரல் வலுத்து கூப்பாடு போடுது
இனம் தெரியாமலே இறுமாப்பில் ஏதேதோ பிதற்றுது
குணம் ஆகுமா நிலை கொள்ளுமா நிற்குமா
கணம் ஒன்றிலே தன்னிலை அறியுமா தவிக்குமா
நிலை மாறிட நிஜம் உணர்ந்திட நினைக்குமா
நிழலோடு உறவாடவே தினம் விழையுமா மாறுமா
எதை நோவதோ யாரைக் கடிவதோ புரிகிலை
விதை போட்டதே யாரெனத் தேடியே களைத்தேனே

வா கணேசா

 வா கணேசா வந்திங்கு பார்

வகை வகையாய் பண்டங்கள் பார்
நிழல் குடை எருக்கு மாலை
வாழை மரம் தென்னையிலை தோரணம்
சுண்டலும் கொழுக் கட்டை பழவகைகளும்
இனிப்பு பலவும் உண்டு உனக்காக
மூஞ்சூறு வாகனனே ஆனை முகத்தோனே
கோடி கோடியாய் பக்தர்கள் உனக்கு
ஓடி வருவாய் உண்டு மகிழ்வாய்
குறையும் தீர்ப்பாய் குற்றம் மறப்பாய்
நிறைவான மனதோடு வேண்டி நிற்கும்
மக்கள் நலமாய் வாழ வரமளிப்பாய்

மௌனத்தில்

 யாரைத் தான் சொல்வதோ பேதமையோ

ஊரைத் தான் உன்னைத் தான்
பேரைத் தான் சொல்வேனோ என்செய்ய
உரைத்தேன் உருகினேன் கடிந்தேன் கதறினேன்
கரையும் காகத்தின் குணமும் உணரவில்லை
புரையோடிப் போனது புற்றுநோய் ஆனது
இரைச்சல் இன்சொல் இழிசொல் இத்தனையும்
வரைந்த கோட்டிற்குள் யாரும் நிற்பதில்லை
உள்ளம் வேதனை கொண்டது மௌனத்தில்
கள்ளம் மனதில் வைத்தே கருத்தா
தேனீக்கள் கட்டிய தேன்கூடு இதுவன்றோ
தேடியே பலமலரின் தேனின் இனிமையுண்டு
விட்டு விடுவீரோ வீண் பேச்சு
சுட்டு விடும் நெருப்பில் கலையாமல்
கூடு சிதறாமல் காத்து நிற்க !

நட்பு

 வாழ்வில் நட்பென்ற புனிதமான உறவு

வாலிபம் முதலாய் வயோதிகம் வரை
அதனிலும் மேலாய் வேறொன்று இல்லை
பொல்லாத சாதிமதமும் மொழியும் ஏனோகுறுக்கே
கல்லாத மனிதரல்ல யாரும் நம்மில்
சொல்லாத நாளில்லை ஒற்றுமை உயர்வை
நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும்
தூய்மை மனதில் தூர் வாரட்டும்
தூரத்தே போகட்டும் கசடுகள் கழிவாய்
காலம் பொன்னானது கடந்தவை திரும்பாது
காலன் வருமுன் கற்றிடப் பார்ப்போம்
உறவுப் பாலம் உறுதியாய் ஆகட்டும்
பிறந்தோம் வளர்ந்தோம் இணைந்தோம் நட்பில்
இதனினும் வேறென்ன வேண்டும் சொல்வீர்
இதமாய் இனிதாய் பழகுவோம் மகிழ்வோம் !

ஓசூர்

 அழகிய சிறு நகரம். மெட்ரோபாலிடன் நகரம் எனலாம். 1986 முதல் 1989 வரை இங்கே வசித்திருக்கிறேன். எனது முதல் மகனின் எல்கேஜி படிப்பு, இரண்டாம் மகன் ஓராண்டும் நிறையாத நேரத்தில் சென்னைக்கு வேலைமாற்றத்தில் சென்று விட்டேன்.

இப்போது 31 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த நகர வாசம். நன்றி வகுப்புத்தோழன் ரவிக்கு.
எத்தனை மாற்றங்கள். பரந்து விரிந்து நான்காம் தளத்திலிருந்து பார்க்கும் போது கட்டிடக் காடுகளை பார்க்க நேர்கிறது கண்ணுக்கெட்டிய தூரம் வரை.
இரு மாநில எல்லையில், தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் இருந்தாலும், தெலுங்கு பேசும் மக்கள் நிறைந்த நகரம். மும்மொழி இங்கே புழங்கக் காணலாம்.
மலைக்கோயில் சந்திரசூடேஸ்வரர் இந்த நகரின் மகுடம் போன்றது. இரு பெரிய ஏரிகள். சிறிய ஏரிகள் பலவும் வளர்ச்சியில் மறைந்து விட்டன.
அசோக் லேலண்டில் வேலை செய்த போது இங்கே டென்ட் கொட்டாய்களில் மலையாளப் படங்கள் பார்த்த நினைவு. எனது லேம்பி ஸ்கூட்டர் நண்பன் மோகனையும் என்னையும் சுமந்தே தேய்ந்து போனது.
படம் பார்க்கப் போவதானால் ஆபீஸ் வேலை அதிகமென்ற பொய். வீட்டு மனைகள் சில ஆயிரங்களில் வாங்க முடியும். ஆனால் மாதச் சம்பளமே இரண்டாயிரத்துக்கும் குறைவாய். அப்போது தந்தையின் உதவியோடு என் பணமும் சேர்ந்து வாங்கிய மனைகள் விற்க முடியாமல் இன்றும் உள்ளன.
பெங்களூரு போன்றே சீதோஷ்ண நிலை என்றாலும் நகர நெருக்கடி இல்லா அமைதி.
சென்னை பெங்களூர் நெடுஞ்சாலை, சென்னை சில்க்ஸ், ஜிஆர்டி, டி மார்ட், பிக்பஜார் என்று வணிக வளாகங்கள் ஊருக்குள்ளே நெருக்கடியான தெருக்கள், உயர்ந்த அடுக்கு மாளிகைகள்,உழவர் சந்தைகள், பூ மார்க்கெட் என ஜன நட மாட்டம் அதிகரித்து ஆரவாரமாய் மாறியுள்ளது. கரோனா என்பதால் பேருந்துகள் இல்லை,இன்னும் அதிக நடமாட்டம் விரைவில்.
இரு சக்கர வாகனங்கள் , கார்கள் குழப்பமான சாலை சந்திப்புகள் மாற்றத்தின் விளைவு. இரயில் போக்குவரத்தும் உண்டு இப்போது.
டென்னிஸ் பந்தில் இரவு நேர கிரிக்கெட் டி20ன் முன்னோடி. மாலூர், பாகலூர்,தளி,தேன்கனிக்கோட்டை என்ற சிற்றூர்கள், அப்படியே போனால் காவிரி ஆறும் ஒகேனக்கல் அருவியும் 100 கிமீகுள்ளாக வந்து விடும்.
கோடை தவிர எப்போதும் மிதமான வெப்பம், குளிர்காலத்தில் அதிகக் குளிர், பருவ மழை தவறாமல்.
தெற்கு நோக்கிப் பயணம் செய்யும் நுழை வாயில். சென்னை செல்லும் நெடுஞ்சாலை என்று பெருமைக்குரிய நகரமாய் தொழிற்சாலைகள் நிரம்பி பல நகரங்களிலும் இருந்து வந்து செல்வோருக்கு நட்சத்திர விடுதிகள் என்று் அனைத்து வசதிகளும் பெருகி விட்டாலும் பழைய ஓசூர் நினைவு மறக்க இயலவில்லை.

சுதந்திரப் பறவை

 நேற்று வந்த காற்றிலே நினைவுகள் கலைந்தன

ஊற்று வற்றியதா ஈரம் தொலைந்ததா நான்றியேன்
பாட்டுக் கட்டிப் பாட நான் புலவனல்ல
ஏட்டில் எழுதுவதே கவிதை யெனில் நானும் கவிஞன்தான்
கூட்டுக்குள் வாழாத சுதந்திர வான்வெளிப் பறவை
காட்டு மரங்கள் நீரோடை புள்ளினங்கள் ஓசை ஊடுருவும்
இயற்கை எனக்கு அணைபோட வேண்டாம் காட்டாற்று வழி
செயற்கை உணர்வுகள் தள்ளி வைத்தே வாழுமது
ஓடும் விளையாடும் தாவும் தத்தளிக்கும் சோகமுறும்
கேடொன்றும் நினையாது காதல் காமம் ஊடுருவும்
உள்ளம் தெளிவாகும் உணர்ச்சியின் வடிகால் ஆகும்
தெள்ளத் தெளிவோ தெரியாத பொருளோ கருத்திருக்கும் !

விடிந்தது

 மெல்லிய குளிர்காற்று தட்டி எழுப்பியது

சொல்லியது பறவையினம் காலையின் வரவுதனை
கதிரவன் தூரத்தே மெதுவாய் வெளிவந்தான்
புதிய நாளுமிங்கே விடியத் தொடங்கிற்று
கட்டியம் கூறியது குயிலின் குரலோசை
கருமேகம் மலைமுகட்டைத் தழுவிக் கொண்டது
நீர்மேலே பசுமைப் போர்வை ஆங்காங்கே
நீயென்ன இன்னும் படுக்கையிலே விடிந்ததுபார்
இருள்நீங்கி வெளிச்சக் கீற்று வந்ததுபார்
இனியதொரு நாளினை எதிர்கொள் எழுந்துவா

தற்கொலை மனநிலையில் இருப்பவர்களுக்கு

 தற்கொலை எதற்குமே தீர்வு இல்லை. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அதை ஒரு முடிவாக எடுக்கத் தேவையில்லை.

அப்படி ஒரு மன உளைச்சலான நிலை வருமாயின், உங்கள் இருப்பிடத்தை மாற்றுங்கள், வாழும் முறையை மாற்றுங்கள், யாரும் காணாத மலைப் பிரதேசம் செல்லுங்கள், புதிய மனிதனாய் பிறந்து வாழ்க்கையை மீண்டும் முதலிலிருந்து வாழுங்கள்.
யாருடனும் தொடர்பும் வேண்டாம். சாவதை விடவும் மேல். எழுதி வைத்து விட்டே செல்லுங்கள், எங்கேயோ போகிறேனென்று, நீங்கள் வாழ்கிறீர்கள் என மற்றவருக்குத் தெரியும். இறப்பதை விடவும் மேலிது.
குற்றம் புரிந்தவர்கள் திருந்தப் பார்த்தாலே போதும். சிறை வாசம் முடித்து மேற்கூறியவாறு வாழுங்கள். உலகம் பரந்து விரிந்திருக்கிறது.
உங்களை நம்பியவர்களை ஏமாற்றாமல் வாழுங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே.

[04/09, 2:31 PM] தற்கொலை மனநிலையில் இருப்பவர்களுக்கு முகநூலில் அடிக்கடி இப்போதெல்லாம்

ஆசிரியப் பெருந்தகை

 அம்மா தன்னாலே பிறந்து வந்த வார்த்தை

அப்பா அம்மாவாலே சொல்ல வந்த வார்த்தை
ஆத்திச் சூடி அல்ஜீப்ரா கால்குலஸ் ஜியாமிட்ரி
ஆடல் பாடல் அழகாய் ரைம்ஸ் நாடகம்
தாவரம் மகரந்தம் இனச்சேர்க்கை ஒலிவேகம்
தாவுதல் ஓடுதல் உதைத்தல் குத்துதல் எறிதல்
இயந்திரம் கணினி எண்களின் விளையாட்டு ரோபோ
இயற்கை மருத்துவம் இரணச் சிகிச்சை மனோதத்துவம்
எத்தனை எத்தனை பாடங்கள் பயிற்சிகள் தினம்தினம்
பித்தளை தங்கமாய் கரிக்கட்டி வைரமாய் தீட்டப்பட்டு
உழவிலே தொடங்கி உயிர்காத்தல் உயிர்க்காவல் வரையிலும்
உயர்த்தி விட்டு உயரப் பார்த்து பெருமைகொள்ளும்
ஆசிரியப் பெருந்தகையீர் ஆயிரமாயிரம் வணக்கங்கள் போதாது
ஆங்கோர் ஏழைக்கும் கல்வியூட்டும் உணர்வு வேண்டும்
எழுத்தறியா மனிதன் இல்லையென்ற நிலை வேண்டும்
எதையும் ஆராய்ந்து நல்வினைகள் புரிதல் வேண்டும்
கணக்கற்ற புதுத் தொழில்கள் விஞ்ஞான வளர்ச்சி
கண்முன்னே காண வேண்டும் களிப்புறவே கற்பித்தோர் !

என்னடா உன் தொல்லை

 என்னடா உன் தொல்லை ஏனிப்படி

சொன்னா கேக்க மாட்டே வம்புபண்றே
மொட்டை மாடி தண்ணீ தொட்டி
கொட்டக் கொட்ட விழிச்சு நடுநிசி வரை
பேசிப் பேசி தொண்ட காஞ்சி
பேசாமயும் முடியலே ஏண்டா இப்படி
பைத்தியமா அலையறேனே உன் நினைப்பா
வைத்தியம் தான் என்ன தெரியலே
காதலிச்சா இதெல்லாம் ஆகுமா சொல்லுடா
பேதலிச்சே போச்சு புத்தி இங்கே
பாக்காம ஒருநாளும தூக்கம் வரலே
ஏக்கத்துலே உடம்பே இளைச்சுப் போச்சு
எப்பத்தான் வருவியோ என்னப் பாக்க
இப்பவும் மாடிமூலையிலே ஒளிஞ்சே இருக்கேன் !

சனி, 5 செப்டம்பர், 2020

வாழ்வின் சுழற்சி

 கால மாற்றங்கள் வாழ்வின் சுழற்சி

கோலப் புள்ளியில் கோடுகள் வடிவம்போல்
கூடுகள் துறந்த பறவைகள் வான்வெளியில்
கூட்டமாய் பறந்து இடம் மாறுதல்போல்
மாற்றங்கள் மனிதனின் தினசரி நிகழ்வே
மாறிடும் சூழலும் சக்கர சுழற்சியே
மேடுகள் பள்ளங்கள் ஏற்றம் இறக்கம்
ஓடிடும் பாதையில் வருவதும் இயல்பே
கற்றலும் காணலும் பெற்றிடும் அனுபவம்
பற்றும் பந்தமும் கூடவே வருவது
எங்கோ தொடங்கி எங்கோ முடியும்
எதுவும் நிகழ்வது அவன் வசமில்லை

காதல் நோய்

 கண்ணுக்குள் அவளிருக்க கண்ணிமைகள் ஏன் திறக்க

பெண்ணுக்குள் பதுமையென இதயத்தில் பூட்டி வைத்தேன்
விண்ணில் மின்னும் தாரகை அவள் விழிகள்
எண்ணச் சிறையில் பூட்டி வைத்தேன் சிலநாளில்
வண்ணக் கனவுகள் வகையாய் தினம் ஒன்றாய்
பண்ணிசை பலவும் காதுக்கு இனிமை சேர்க்க
பரவசம் உடல் பரவ மயங்கி நின்றேன்
எங்கிருந்து வந்தாளோ யானறியேன் எனை ஆட்கொண்டாள்
பங்கொன்று கேட்டேன் பாவியவள் இதயக் கூட்டினில்
கொள்ளென்று சிரித்தாள் கொள்ளை கொண்டாள் மனதை
கொடியது காதல் நோய் வாட்டியது உள்ளமதை
வருவாளா இன்றாவது வழி பார்த்துக் காத்திருக்கேன்
தருவாளா அவள் மனதை எனதாக்கிக் கொள்ள !