சனி, 5 செப்டம்பர், 2020

இரவின் நாடகம்

 சிவந்த இதழ்கள் வெளுத்தது கீழ்வானம் சிவந்தது

சிரிப்பின் சிதறல்கள் கொஞ்சலாய் செவிகளில் துளைத்தது
இரவின் நாடகம் இனிதாய் முடிந்து திரைவிழுந்தது
இனிய உறவின் தொடக்கம் இன்றுதான் ஆரம்பம்
மஞ்சத்தில் பூச்சிதறல் நிறைந்திருக்க நேற்றைய கனவிதுவோ
மஞ்சள்முகம் வெட்கத்தில் கண்ணிமைகள் படபடக்கும் காட்சியது
கசிந்துருகும் இதயத்து வெளிப்பாடு புன்முறுவல் இதழ்கள்
பசித்துப் புசித்த மான்களின் மருண்ட பார்வையது
சிருங்கார நாடகம் சிந்தனையில் உறைவதும் இயல்பன்றோ
சின்னஞ் சிறுசுகள் சிலநேரம் சிரித்து மகிழட்டும்
எட்டிப் போவோமா ஏனிந்த கள்ளப் பார்வை
ஒட்டி உறவாடும் பைங்கிளிகள் காதல் மயக்கத்தில்
தனித்திருக்க விட்டுவிட்டு தாமரைக் குளம் தேடிப்போவோம்
இனித்திருக்கும் நேரமதில் இளஞ்சோடி இன்பம் துய்க்கட்டும் !

கருத்துகள் இல்லை: