வெள்ளி, 8 ஜனவரி, 2021

பாட்டு ஒண்ணு

 பாட்டு ஒண்ணு பாடச் சொன்னேன்

கேட்டு மகிழ காது குளிர
பாடிய அவள் கண்ணுலே கண்ணீர்
வாடிய மலர் போல முகமும்
ஏனோ மனசு உருகிப் போச்சு
ஏதோ பழைய நினைவு ஏக்கமாய்
பாவி மனசுக்கு மறக்க முடியலை்யோ
பாச உணர்வுக்கு பாதை தெரிவதில்லை
ஒட்டி ஒட்டாமலே இதயத்து ஓரத்தில்
ஒருத்தியோ ஒருவனோ ஓவியமாய்ப் பதிவாக
காலத்தால் அழியாத காதலின் வலிமையது
காட்சி கண்முன்னே விரியும் விடைதேடும்
காவியம் பிறக்கும் கதைகள் உருவாகும்
ஓவியம் மலரும் ஒளிரும் வண்ணத்தில்
தொடரும் நெடுங்கதையே முடிவே இல்லாமல்
தொல்லைதான் பலர்வாழ்வில் இன்பமாய் அசைபோட

முத்தமிட அவள் வருவாள்

 மெல்லிய குளிர் காற்று உடல் தழுவ

மெதுவாக கதிரவனும் கீழ்திசை விடுத்து உயர
விடுமுறைச் சோம்பல் உடல் முழுதும் பரவ
விடியல் இருள் விலகி ஒளி அறையெங்கும் நிறைய
அடுக்கடுக்காய் வந்த செய்தித் துகள்கள் கண்சிமிட்ட
படுக்கை துறக்க மனமில்லை பலவித எண்ணங்கள்
நண்பர்கள் கவிதைகள் நிழற்படங்கள் சொல்விளையாடல் துணுக்குகள்
பண்பட்ட பெரியோர் நல்வார்த்தை நையாண்டி நகைச்சுவை
இன்று மட்டும் காலைப் பொழுது நீண்டதாய் இருக்கட்டுமே
இரவானால் களைத்து இனிய உறக்கம் களையவில்லை
வருவாளா காத்திருந்து காலமும் கடந்த்து பின்னிரவில்
தெருவெங்கும் உறங்கிவிட நான்மட்டும் விழித்திருக்க தினமுமிங்கே
காப்பதிலும் சுகமுண்டு இன்றோ நாளையோ ஒருநாள்
மூப்படைந்தால் என்ன முத்தமிட அவள் வருவாள்

புத்தாண்டு

 புத்தாண்டு என்றாலே மகிழும் உள்ளம்

புளகாங்கிதம் கொள்ளும் துள்ளும் துடிக்கும்
வண்ணக் கோலம் வான வேடிக்கைகள்
எண்ணச் சிதறல்கள் எழுத்துக்கள் வாழ்த்தாய்
பழையன மறந்து புதிய நினைவுகள்
பகைமையும் மறந்து நட்புக் கரங்கள்
நாடுகள் தோறும் நாளெல்லாம் மகிழ்வலைகள்
வீடுகள் தோறும் இனிப்புச் சுவைகள்
இனியது மட்டுமே இதயம் சுமக்கும்
கனியது சுவைக்கும் கற்கண்டாய் நாவில்
எந்நாளும் இந்நாள் போன்றே இருந்திட
என்மனம் விழைகிறது எங்கும் அமைதியாய்
உடல்நலம் உற்சாகம் உளமகிழ்வு உயர்வுள்ளல்
உலகெங்கும் இவ்வாண்டில் இனிமை நிறையட்டும் !

மாற்றுவது உன்விரலே

 இதுவும் இன்று கடந்து போகும்

எதுவும் நிரந்தரம் இல்லை உண்மை
தீயவை விலகி நல்லவை சேர்க
நீயதை மனதில் நிறுத்தி உணர்க
மாசது மனதில் உறைய விடாதே
காசது வாங்கி வாக்கதை விற்காதே
நல்லவர் நாட்டை ஆள்வது மகிழ்வே
நன்கது தெரிந்து தேர்வது உரிமை
ஊழலும் பொய்யும் புரையோடிய சமுதாயம்
உழலும் உருக்குலையும் உழவுத் தொழில்
மாற்றம் வேண்டும் மனதினில் மதியுடன்
மாற்றுவது உன்விரலே மயக்கம் விடுத்திடு

விடுதலை உண்டா

 விடியலுக்குக் காத்திருக்கும் விலகாத பனிமூட்டம்

விடியாத இரவுகளில் விலைபோகும் உள்ளங்கள்
தெளியாத மனங்களில் தெரிகின்ற குழப்பம்
தெரிந்தே அழிகின்ற சமுதாயக் கூட்டம்
தொலைந்து போகின்ற சுதந்திரக் காற்று
வலைக்குள் எலியாய் வறியவர் வேதனை
வஞ்சகம் தலைமையில் வாழ்க்கைச் சாக்காடு
நல்லவர் எங்கே தேடியே நானிலம்
நசிந்தவை பலவும் நல்வழி என்றோ
விடைகாணா குழப்பத்தில் விடுகதை பலரிடம்
விடுதலை உண்டா கேள்விகள் மட்டுமே

இனியவை செய்கவே !

 பணம் பந்தியிலே குணம் குப்பையிலே

பாடியவன் மறைந்தான் பகன்றது மறையலே
வேடிக்கை மனிதர்கள் மாறிடுதல் அரிதாமோ
வாடிக்கை வாழ்விலே பணமே முதன்மையாம்
பண்டைய மனிதன் பண்டம் மாற்றினான்
இன்றைய மனிதன் இதயம் மறந்தான்
காசுக்காக கோயிலும் வியாபாரத் தலமாயிற்று
கூசுவதில்லை பகட்டான வாழ்க்கை பாவமென்று
பந்தம் நட்பு பரிவு காற்றோடு
சொந்தம் செல்வமென்று சேர்த்து வைத்தார்
அடைகாத்த கோழியாய் அனுதினமும் அதனை
கடைசிவரை வாராது தன்னோடு தெரிந்துமே
மனிதம் மரணித்து மனங்களில் புற்றுநோய்
புனிதம் எதுவென்று புரியாத மானிடர்
வருவதும் போவதும் வாழ்வின் நாடகம்
இருக்கும் காலத்தே இனியவை செய்கவே !

உழவுக்கு வந்தனை செய்வோம்

 நெல் விதைச்சு நாத்து நட்டு கதிரறுத்து

புல் களஞ்சு புதுக் காயும் வளரவிட்டு
பசு சாணம் தெளிச்சு கோலம் இட்டு
பாலோடு தேனோடு பச்சரிசிப் பொங்கலிட்டு
படையல் இட்டு கற்பூர ஆரத்தி கதிரவனுக்கு
பட்டாடை உடுத்தி பக்கத்தே உறவோரும் குழும
பொங்கிடும் மகிழ்வுக்கு ஈடில்லை கண்டீரோ மக்களே
உழவுக்கு வந்தனை செய்வோம் உயர்வுக்கு வழியதுவே

காண்பேனோ

 தேமதுரத் தமிழோசை தேனாகக் காதினிலே

தெம்மாங்குப் பாடலும் திகட்டாத குரலோடு
கானகத்தே கழனி மேட்டினிலே கேட்டிருக்க
காதலுடன் கனிவுடன் இசைப்பாட்டு எங்கிருந்தோ
வரப்பு மேட்டினிலே நடைபோட்டு நானிருக்க
வந்ததே குயில் பாடும் குரலோடு
யாரந்த குரலுக்குச் சொந்தக்காரி தெரியலியே
ஏரோட்டும் என்மனசு குளிருதே இசைகேட்டு
காண்பேனோ அவள் முகத்தை இன்றாவது

மறக்கலே ஆத்தாயி

 என்ன விட்டு போனவளே எங்கேனு சொல்லுவியா

எத்தனை வருஷம் போச்சு காலமும் உருண்டோடி
சோளக் கொல்லையிலே கதிர் அறுத்துத் தந்ததுவும்
களத்து மேட்டுலே நிலாச் சோறு தின்னதுவும்
கழனிக்கு நீர் பாய்ஞ்ச கிணத்து தண்ணியிலே
விழுந்து எழுந்தத பாத்து நான் சிரிச்சதுவும்
கரும்பு தோட்டத்துலே கடிச்சு நீகொடுத்த சக்கையும்
விடிஞ்ச நேரத்துலே தெருவுக்கு தெளிக்கும் தண்ணீய
விளையாட்டா என்மேல தெளிச்சு களுக்குன்னு சிரிச்சதுவும்
வேகவைச்ச வேர்க்கடல ஒண்ணொன்னா உரிச்சு கொடுத்ததுவும்
போகவச்சு முகம் பாத்து திண்ணயிலே நின்னதுவும்
யாருமில்லா இரவினிலே மடிமேலே படுக்க வைச்சதுவும்
மோரும் கூழும் கலந்து சொம்பிலே கொடுத்ததுவும்
c மறஞ்சு போனது தாங்கலியே
மறுபடி வருவாயா மாமனுக்குச் சேவைசெய்ய !

இறுதிச் சுற்று

அது ஆறு டிசம்பர் காலை. ஏழு மணிக்கு ஜேபி நகரில், கிளம்பி கனகபுரா ரோட்டில், மைத்துனரின் தவறான வழி காட்டுதலில், பெரிய வட்டமடித்து, மைசூர் ரோட் அடைஞ்சப்ப ஒன்பதாகி இருந்தது.

தட்டை இட்லி சாப்பிடனும் என்ற தவறான ஆசையினால், பெரிய க்யூல நின்னு தட்டுலே ரெண்டு இட்லி ஒரு வடை,சட்னி சாம்பார் எழுபது ரூபாயென வாங்கி சூடாய் விழுங்கிய போது நன்றாகவே இருந்தது. திருவிழா போல சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அனைத்து கையேந்தி பவனிலும் கூட்டம்.
வார இறுதி நாட்களில் மைசூர் ரோடு செல்பவர்கள் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை தவறாமல் ஊர்வலம் போல் பார்க்கலாம்.
காப்பி சாப்பிட மண்டியா வரை காத்து ஹரிப்ரியாவில் நுழைஞ்சப்ப ஓட்டல் களை இழந்து போயிருந்தது. கரோனா தாக்கம் இன்னும் முடியலைனு தெரிஞ்சது.
பிடுதி, ராம்நகர்(silk city), சென்னபட்டினம(toy city),மண்டியா (sugar city) கடந்து ஸ்ரீரங்கப்பட்டிணம் அடைஞ்சப்ப மணி பதினொன்றுக்கு மேல்.
இடது பக்கம் திரும்பி கும்பஸ் என்ற ஹைதர் சமாதி வழியாக சங்கமத்தை அடைய நான்கு கிமீ தூரம்.
மூன்று திசைகளிலும் காவிரியின் நீர் என்று அங்கிருந்த காவலர் விளக்கம் தர, பல குடும்பங்கள் தங்கள் உறவினரின் உடல் எரியூட்டிய சாம்பலை பானைகளில் இட்டு பூஜை செய்து ஆற்றில் எறிந்தனர்.
நாங்களும் இறந்த என் மாமியாரின் உடல் எலும்புகளை கழுவி அபிஷேகம் செய்து மறுபடியும் பானையிலிட்டு மஞ்சளும் குங்குமமும் இட்டு பூஜை செய்த பின்னர் மைத்துனர் தனது பின்பக்கமாக திரும்பிப் பாராமல் ஆற்றிலே வீசப்பட்ட பானை சிறிது நேரத்தில் மூழ்கியது.
ஆற்றின் ஓட்டத்தில் காலங்காலமாக பல உயிர்களின் எரிந்த எலும்புகளைச் சுமந்து ஆரவாரமில்லாமல் காவிரியும் ஓடிக் கொண்டிருந்தது.
மனித வாழ்வு ஒரு சிறிய பானையில் எலும்பும் சாம்பலுமாய் முடிகிறது என்பது தெரியாமலே எவ்வளவு ஆட்டங்கள். புன்னகைத்தேன் மனதிற்குள்.



இயற்கை விளையாட்டு

 உளமகிழும் ஊர்மகிழும் நீரெங்கும் நிரம்ப

குளம் ஏரி கிணறு ஆறு
வழிந்தோட வந்தது பெருமழை நன்றே
வடியாத நீர்தேக்க அணைகள் தேவை
பாலாறு வைகையில் நீரென்றால் அதிசயமே
பலகாலம் மணலாறு மடைதிறந்த வெள்ளத்தில்
இன்னொரு புயலாம் இடியுடன் மழையாம்
இயற்கை விளையாட்டு இனியும் தொடருமாம்
இன்னல் வறியவர்க்கு இருப்பிடம் இல்லார்க்கு
வருமுன் காக்க வழிகள் நலமே

அமைதியும் அழிவும்

 கொட்டும் மழைநீரே பெருக்கெடுத்தால் வெள்ளம்

கொதிக்கும் தீக்குழம்பு பீறிட்டால் எரிமலை
கட்டுக்கடங்கா கானகத்து நீரோடை காட்டாறு
கடலிலே தோன்றிய காற்றழுத்தம் புயலாய்
வரம்பு மீறுவதால் இயற்கையின் சீற்றங்கள்
வரப்புக்குள் செல்லும் நீரதுவே வயலுக்கு
வாடிவாசல் திறந்தாலே காளையின் கோபம்
வாழ்க்கை எல்லைக்குள் இருக்கும்வரை அமைதி
புயலுக்குப் பின்வரும் பேரழிவுத் துயரம்
புரட்சிக்கு வித்தாகும் புல்லுருவிக் கூட்டம்
அமைதியும் அழிவும் அருகருகே உலகில்
அதைத் தெரிந்து தேர்வதே சமுதாயநீதி

காதல் என்பது

 காதல் என்பது கனிந்து வருவது

மோதல் ஒன்றிலும் காதல் உள்ளது
வயது கடந்தும் வாழ்க்கை தருவது
வண்ணக் கனவுகள் பட்டாம்பூச்சி பறந்திடும்
சோகமும் சுமையாகா வினோத உணர்வு
சோர்வில்லா சிந்தனை கவிதை வடிவில்
நினைவுச் சுருளாய் வட்டமிடும் வானில்
நின்ற இடத்தில் பலகாதம் செல்லும்
விந்தை மனிதர் விட்டில் பூச்சியாய்
விளக்கு சுடுமென்று தெரிந்தே தொடுவது
கல்தோன்றி மண்தோன்றாக் காலம் தொட்டே
மண்ணில் மாயம் புரிந்தே மயக்கிடும்
ஏனிந்த விளையாட்டு யாரும் அறியார்
ஏதோ ஒன்றைத் தேடியே பயணம்
தொடர்வதும் முடிவதும் அறியாத முடிச்சு
தொடர்கதை உலகில் முற்றும் இல்லாதது

குழுவாய் மகிழ்வோம்

 வானத்தை கடலை வண்ணக் கோலத்தை

வாசிக்கத் தெரிந்த காமிராக் கோணம்
மேகத்தை மழைத்துளியை ஒளிக்கீற்றை மணல்வெளியை
ராகத்தால் இசைபாட வைக்கும் நிழற்படங்கள்
புலரும் காலைதனில் புத்துயிர் மனதிற்கு
புல்லும் கவிபாடும் புரவியும் ஓவியமாய்
கவிதையாய் கதையாய் விடியலில் விதைக்கும்
கவிஞர்கள் கலைஞர்கள் கற்பனையாளர் கருத்தோவியர்
கல்லூரி நட்பில் அறிஞர் அனைவரும்
பார்க்கவும் கேட்கவும் படிக்கவும் பகுத்தறியவும்
பாசத்தைத் தெளித்த வாரத்தைகள் பலப்பல
நட்பிற்கு இதைவிட மகுடம் வேறெது
நல்லதே நினைப்போம் குழுவாய் மகிழ்வோம்

வண்ணக் கோலங்கள் வான வீதியில்

 வண்ணக் கோலங்கள் வான வீதியில்

வரைந்தவர் யாரோ ஓவியன் தானோ
கண்ணுக்கு விருந்து படைப்பவன் அவனோ
விண்ணுக்குத் தூரிகை யாரது செய்தது
மழைமேகம் மணல்வெளி கடல்நீர் காற்று
இழையோடும் இயற்கையின் விந்தை ஓவியம்
கடலின் அலைகளும் கரைசேரும் மனிதனும்
ஓடத்தில் அமர்ந்த படகோட்டி ஒருவனும்
ஓடும் புரவியின் ஒளிரும் உருவமும்
காலைப் பொழுதின் வண்ண விளையாட்டு






அந்த நாட்கள் வந்திடுமா

 சிறுவயதாய் உருமாறி பட்டம் விடுவோமா

சில்லென்ற மழையில் சிரித்து மகிழ்வோமா
பம்பரம் கோலிக்குண்டு கில்லி எதுவேண்டும்
பக்கத்து தோட்டத்தில் பச்சரிசி மாங்காய்
பறிக்கப் போவோமா காவலுக்கு யாருமில்லை
பகலென்ன இரவென்ன கால்களுக்கு ஓய்வில்லை
அகல்விளக்கு வெளிச்சத்தில் அரையாண்டுத் தேர்வுக்கு
அவசரமாய் மனப்பாடம் அத்தனையும் கண்முன்னே
காசுக்கு கமர்கட் கடலை மிட்டாய்
காலணா தேநீரில் ஊறவைத்த பட்டர்பிஸ்கட்
கால்கடுக்க நின்றேனும் கடைசிக் காட்சி
வாலொன்று இல்லையென வாத்தியார் கிண்டல்
தெருவெங்கும் சொந்தம்தான் கொண்டாட்டம் எப்போதும்
பருவத்தில் தோழியவள் அருகாமை ஆனந்தம்
அசைபோட்டுப் பார்த்த மனம் அடுக்கடுக்காய்
அந்தநாட்கள் வந்திடுமா மீண்டும் ஒருமுறை

வந்தென்னை பற்றிக்கொள்

 எனக்கெனப் பிறந்தவளே இசைபாடும் குயிலே

உனக்கென்ன தூரத்தே நகையாடி நின்றாய்
பிணக்கெதற்கு என்மேல் பிழையாது செய்தேன்
கணக்கொன்று வைப்பாய் கடைசியில் பார்க்க
குரல்கேட்டு நாட்களும் பலவாயிற்று பெண்ணே
விரல்கோத்து நடந்திட ஓடோடி வருவாயா
கடற்கரை மணல்வெளி கால்தடம் கேட்குது
உடலதன் மீதிலே உப்புக்காற்றும் வீசுமாம்
படகிலே அமர்ந்து பக்கத்தில் உட்கார்வா
பசுமைக் காட்சிகள் பார்த்தே இரசித்திருப்போம்
பிரிவுக்கு விடைகொடு உறவுக்குக் கைகொடு
பரிவுகொள் பறந்தோடி வந்தென்னை பற்றிக்கொள்

நானொன்றும் மானில்லை

 பெண்ணாகப் பிறந்தது என் தவறா

மண்ணாகிப் போவதற்கே மானுடம் அன்றோ
கடவுளின் படைப்பினிலே உன்னதமே பெண்மையன்றோ
கற்பென்ற ஒன்றை வைத்ததும் நீயன்றோ
உத்தமனாய் வாழ்வதற்கு உரைத்தவன் நீதானே
பித்தமனம் கொண்டென்னை சிதைத்தது ஏனிங்கே
சின்னப் பெண்ணென்று சிரித்தாலே தப்பாமோ
என்ன வயதென்றும் பார்ப்பது விட்டாயே
மிருகமாய் நீயங்கே சதைப்பசி கொண்டாயே
மிதித்து அழித்து உயிரை மாய்த்தாயே
தாய்க்குப் பிறந்த மகன் தறுதலையா
தாசியென நினைத்தாயா தரம்கெட்டுப் போனாயே
விட்டுவிடு நானும் உன்போன்ற மனிதன்
வேட்டையாட நானொன்றும் மானில்லை இங்கே !

புலம்பாதே

 சுட்டெரிக்கும் வெயிலென்றாய் கதிரவனைச் சபித்தாய்

விட்டொழித்து மேகமாய் மழையானேன் கோபமுற்றாய்
சாக்கடைகள் சந்தெல்லாம் நீரென்றாய் நிந்தித்தாய்
போக்கற்ற மனிதா பொறுப்பற்றவன் நீதானே
சுத்தமாய் எதையும் வைத்தாயா இல்லையில்லை
சத்தமாய்ப் பேசும்நீ குப்பையைக் கொட்டினாயே
சாக்கடைகள் போகும் வழிதனை மறித்தாயே
பூக்களையும் கொட்டி அதில் அடைத்தாயே
புலம்பாதே இப்போது அழிவதே உன்னாலே
கலங்கி என்ன பயன் கற்றுக்கொள்
அதனதனை அதனதன் இடத்தில் சேரத்தாலே
அடைமழை ஆனாலும் வெள்ளம் பெருகாது

சூட்சுமம்

 எல்லோரது மனதிலும் கீழடி உண்டு

எப்போது அகழ்வாராய்ச்சி அவரவர் விருப்பம்
அரசாணை தேவையில்லை அகத்தாணை போதும்
சிரசுக்குள் புகுந்து சிந்தனை விரியும்
பற்பல புதையல்கள் தோண்டத் தோன்றும்
கற்பனை அல்ல காண்பது நிஜமே
ஒவ்வொரு அடுக்கிலும் வெவ்வேறு சரித்திரம்
ஒன்பது வாசல் உடம்பின் இரகசியம்
இலக்கண வரம்பில் சிக்காது இவை
இலக்கற்ற எல்லையில் சுற்றும் சூட்சுமம்
இவனோடு இணைந்து இவனோடு மறையும்
இயற்கையின் விளையாட்டில் இதுவும் ஒன்றாகும்

இவையெல்லாம் மாறுமா ?

 என்னோடு கூடவே வருபவை மாறவில்லை

எழுகின்ற ஞாயிறு கீழ் திசையில்
இரவென்றும் பகலென்றும் இன்பமும் துன்பமும்
இல்லாத மனிதர்கள் இரந்துண்டு வாழ்தல்
உழைக்கும் வர்க்கம் உயராத சோகம்
உழவன் வீட்டில் இருக்கும் வறுமை
காசுக்காக விலை போகும் மனிதர்கள்
பேசும் பேச்சில் பொய்கள் ஆயிரம்
ஊழல் மலிந்த சமுதாயச் சாக்கடை
ஊராரை ஏய்த்து உண்ணும் பிசாசுகள்
மண்ணில் பிறந்ததே மானக் கேடு
எண்ணில் அடங்கா எத்தர்கள் அரசியல்
என்றோ ஒருநாள் மண்ணுக்குள் நானும்
இன்றோ நாளையோ இவையெல்லாம் மாறுமா ?
விடியும் காலை தூயதாய் ஒளிருமா ?
விடை பெற யாரிடம் செல்வேன் ?

காலை விடிந்தது

 பனிப் போர்வையில் விடிந்த இந்நாள்

பகலவன் குளிரில் உறக்கம் கலையவில்லை
ஏரி நீரில் தோன்றுது நீராவி
ஏதோ அவசரம் காக்கைக்கு காலையில்
சேவல் விடியலின் வரவை கூவிச்சொல்ல
கூவும் குயிலின் இசையோ தொலைவில்
மலை முகட்டில் இன்னமும் பனிமேகங்கள்
காலை விடிந்தது கதிரவா எழுந்திரு
ஆகாய அன்னை அழைப்பது கேட்கலியோ
ஆம் பாவம் களைத்துப் போயிருப்பான்
ஆதவா பரவாயில்லை மெதுவாக எழுவாய்
ஆயிரம் கரங்களும் அணைக்க நாங்களுண்டு