வெள்ளி, 8 ஜனவரி, 2021

இறுதிச் சுற்று

அது ஆறு டிசம்பர் காலை. ஏழு மணிக்கு ஜேபி நகரில், கிளம்பி கனகபுரா ரோட்டில், மைத்துனரின் தவறான வழி காட்டுதலில், பெரிய வட்டமடித்து, மைசூர் ரோட் அடைஞ்சப்ப ஒன்பதாகி இருந்தது.

தட்டை இட்லி சாப்பிடனும் என்ற தவறான ஆசையினால், பெரிய க்யூல நின்னு தட்டுலே ரெண்டு இட்லி ஒரு வடை,சட்னி சாம்பார் எழுபது ரூபாயென வாங்கி சூடாய் விழுங்கிய போது நன்றாகவே இருந்தது. திருவிழா போல சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அனைத்து கையேந்தி பவனிலும் கூட்டம்.
வார இறுதி நாட்களில் மைசூர் ரோடு செல்பவர்கள் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை தவறாமல் ஊர்வலம் போல் பார்க்கலாம்.
காப்பி சாப்பிட மண்டியா வரை காத்து ஹரிப்ரியாவில் நுழைஞ்சப்ப ஓட்டல் களை இழந்து போயிருந்தது. கரோனா தாக்கம் இன்னும் முடியலைனு தெரிஞ்சது.
பிடுதி, ராம்நகர்(silk city), சென்னபட்டினம(toy city),மண்டியா (sugar city) கடந்து ஸ்ரீரங்கப்பட்டிணம் அடைஞ்சப்ப மணி பதினொன்றுக்கு மேல்.
இடது பக்கம் திரும்பி கும்பஸ் என்ற ஹைதர் சமாதி வழியாக சங்கமத்தை அடைய நான்கு கிமீ தூரம்.
மூன்று திசைகளிலும் காவிரியின் நீர் என்று அங்கிருந்த காவலர் விளக்கம் தர, பல குடும்பங்கள் தங்கள் உறவினரின் உடல் எரியூட்டிய சாம்பலை பானைகளில் இட்டு பூஜை செய்து ஆற்றில் எறிந்தனர்.
நாங்களும் இறந்த என் மாமியாரின் உடல் எலும்புகளை கழுவி அபிஷேகம் செய்து மறுபடியும் பானையிலிட்டு மஞ்சளும் குங்குமமும் இட்டு பூஜை செய்த பின்னர் மைத்துனர் தனது பின்பக்கமாக திரும்பிப் பாராமல் ஆற்றிலே வீசப்பட்ட பானை சிறிது நேரத்தில் மூழ்கியது.
ஆற்றின் ஓட்டத்தில் காலங்காலமாக பல உயிர்களின் எரிந்த எலும்புகளைச் சுமந்து ஆரவாரமில்லாமல் காவிரியும் ஓடிக் கொண்டிருந்தது.
மனித வாழ்வு ஒரு சிறிய பானையில் எலும்பும் சாம்பலுமாய் முடிகிறது என்பது தெரியாமலே எவ்வளவு ஆட்டங்கள். புன்னகைத்தேன் மனதிற்குள்.



கருத்துகள் இல்லை: