வெள்ளி, 1 நவம்பர், 2019

தன்னலமற்ற நட்பு

என்ன நண்பா எழுந்தாயா உறக்கம் கலைந்தாயா
எத்தனை முறை தூக்கம் தொலைக்க வைத்தாய்
இருந்தாலும் உன் மீது கோபமில்லை சிரிப்பேன்
இருக்கிறேன் உனக்கென்ற வாஞ்சை அதில் தெரியும்
கண்ணயரும் நேரத்தில் சில நேரம் உன்னழைப்பு
கவிதை எழுதும் நேரமதில் கைபேசி அழைப்பு
திரைக்காட்சி அரங்கினில் பலநேரம் பவ்யமாய் சொல்லவைப்பாய்
திரையிட்ட கண்ணீரை வார்த்தைகளால் வடியச் செய்வாய்
எங்கிருந்து வந்தாயோ என் துணயாய் நீயே
எதிர்பார்ப்பு இல்லா உறவென்றால் இதுவே ஆகும்
தவம் செய்தாலும் கிடைக்காது 


தவற விடமாட்டேன் தரணியில் நானிருக்கும் நாள்வரையில் !


நீண்ட உறக்கத்தில்

உன் பிஞ்சு விரல் பிடிக்க நீயில்லை
ஏன் அவசரமோ எமை விட்டு விலக
அன்னை அணைப்பை ஏற்க இயலாமல் போனாயே
அன்பை உணராமல் குழிக்குள் போனது ஏனோ
கால்கள் நடனமாடி ஓய்ந்து போனதா மகனே
காக்க தாய் வருவாள் காத்திருந்து ஓய்ந்தாயோ
கண்கள் பனிக்க விடை தந்தோம் மகனே
கடவுள் உன்மீது மிகஅன்பு கொண்டான் போலும்
நீண்ட உறக்கத்தில் நிம்மதி தந்து விட்டான்
நிர்மலமான உன்முகமே எம்கண் முன்னே என்றும்


[29/10, 08:11] : சுர்ஜித்துக்கு சமர்ப்பணம்

தீபாவளி

விடிந்தால் தீபாவளி விடியட்டும் நல்காலை
வெடிச்சத்தம் குறையுமுன்னே வேதனைகள் மறையட்டும்
புத்தாடை உடுத்தி தின்பண்டம் இனிக்கட்டும்
பொத்தான் இல்லாத சட்டைகளும்் புதிதாகட்டும்
நரகஅசுரன் இறந்தானோ தீவினைகள் அழிந்தனவோ
ஊரகம் வளரட்டும் ஊருணி பெருகட்டும்
தீபங்கள் வாசலெங்கும் ஒளிரட்டும் மனமகிழட்டும்
கோபங்கள் விடுத்து சொந்தங்கள் சேரட்டும்
உயரே வானவெடியின் வெளிச்சம் சிதறட்டும்
பயிரே உயிரென்ற உழவும் வளரட்டும்
இன்பம் பெருகிட இத்திரு நாளதனில்
இல்லாதோர் இல்லாத நாளொன்று வேண்டிடுவோம் !

கண்ணாமூச்சி

ஓடி விளையாட வருவாயா தோழியே
ஓயாமல் கதை பேசித் திரிவோமா
காதோரம் நீபேசும் இரகிசயங்கள் எனக்குமட்டும்
காக்கா கடிகடித்த கமர்கட்டு மிகஇனிப்பு
மாங்காய் பத்தையிலே மிளகாய்உப்பு நாக்கில்சுவை
தேங்காயில் வெல்லம் சேர்த்து உனக்கொன்று
மயிலிறகு புத்தகத்தில் எந்தப் பக்கம்
குயில்பாட்டு தோப்புநடை மறக்க முடியுமா
காதோரம் லோலாக்கு கொள்ளை அழகு்
கருங்கூந்தல் மல்லிகை வாசம் மதிமயக்கும்
எங்கே நீ போனாயடி தேடுகின்றேன்
எழுதாத காவியத்தின் நாயகியே நீதானே
ஊரெல்லாம் தேடித்தேடி ஓய்ந்து களைத்தேனே
கண்ணாமூச்சி ஆடும் வயதா இது
கடிதில் வருவாயா கண்ணோரம் நீர்த்துளிகள் !

மற்றதொரு தலைப்பு

இயற்கையைப் பாடியாச்சு இனிய நண்பரையும்
கயல்விழி மாதரையும் கடற்கரை நதிநீரையும்
கிராமத்து அழகையும் கிழக்குச் சூரியனையும்
கிளிக்கீச்சு மயில்அகவல் அலையோசை அருவியோசை
சுட்டெரிக்கும் வெயிலும் சுகமான மழைநீரும்
சமூக அவலங்கள் சாக்கடை அரசியலும்
சாதிமதப் பிரிவினைகள் சரித்திர நிகழ்வுகளும்
காதலுக்கு மரியாதை தாயன்பு தனிப்பெருமை
காலத்தின் மாறுதல்கள் கல்லூரி நாட்கள்
மழலைப் பேச்சு முதுமைச் சுருக்கம்
மயக்கப் புன்னகை மதி மயக்கம்
இத்தனையும் கவிதைகளாய் இதுகாறும் எழுதிவிட
இனியென்ன நானெழுத என்றதொரு எண்ணமது
மனக் கண்ணின் முன்னே வட்டமிட்டு
மற்றதொரு தலைப்புக்காய் மனம் குழம்பி
தூக்கம் தொலைத்த காலையிிலே தேடிநின்றேன் !

தேடுக அமைதி

வாடாதே மனமே வாழ்க்கை ஒருவட்டம்
கூடாதே தீய நட்பு பகைமை பாசாங்கு
போடாதே பொய்வேடம் பொறுப்பாய் நடந்திடு
தேடாதே பெருஞ்செல்வம் பேரழிவு அதுவேயாம்
நாடாதே தீயசொல் தீண்டாமை ஏய்த்தல்
ஓடாதே பொறுப்பைத் துறந்து எந்நாளும்
சாடாதே சரித்திரத்தை சத்தியம் தவறாதே
பாடாதே பஞ்சப்பாட்டு புகன்றிடு உண்மைதன்னை
கேடாக வந்ததெல்லாம் ஓர்நாளில் மறைந்துபோகும்
ஊடகப் பொய்களும் மாயமாய் விலகிப்போகும்
நாடக உலகம் மாறிநின்று திரைவிலகும்
தேடுக அமைதிதனை தெளிந்த உள்மனதில் !

முதல் காதல் (பாகம் 3)

இந்தக் கதை எழுதத் தொடங்கும்போது இத்தகைய ஒரு எதிர்பார்ப்பைத் தூண்டுமென்றோ, பலரது ஆவலான கேள்விகள் எழுமென்றோ நான் எதிர்பார்க்கவில்லை.பல‌விதமான ஊகங்கள். கைபேசி அழைப்புகள்.
பொட்டலத்த பிரிச்சு பாத்தப்ப பித்தளையா தங்கமா என்று தெரியாத வாழைப்பழ சீப்பு போல ஒரு டாலர்.‌ செயின்ல கோத்துக்கலாம். எனக்கு அது என்னன்னே தெரியலே.
யார் கிட்டே காட்டிக் கேக்கறது. எனக்கு பள்ளி, கல்லூரித் தோழர்களோடு மூன்று நெருங்கிய நண்பர்கள் உண்டு, அசோக், அந்தோணி, சம்பந்தம் என்ற இவர்கள் பொதுவாக என்னுடன் நெருக்கமான எல்லாருக்கும் தெரியும். கிட்டத்தட்ட ஐம்பது வருடமாய் என் வாழ்வோடு இணைந்து தொடர்பவர்கள்.
நண்பர்களிடம் அந்த டாலரைக்காட்டி விசாரித்தபோது அவர்களுக்கும் என்னவென்று புரியவில்லை. அந்தக் கடிதம் வரும்வரை இந்த மர்மம் தொடர்ந்தது.
இதுதான் அவளிடமிருந்து தபாலில் வந்த முதல் கடிதம். அவள் இப்போது அக்கா வீட்டிலிருந்து தந்தை வீட்டுக்குப் போய்விட்டாள். தந்தையும் போலீஸ் ஹெட்கான்ஸ்டபிள், கீழ்பாக்கம் நேரு பூங்கா பக்கத்துலே போலீஸ் குவார்ட்டர்ஸ்லே வீடு.
லெட்டர்லே கனவு கண்டத பத்தி எழுதி சினிமாப் பாட்டு வரியோட விவரமா காதல உருக்கமா விவரிச்சு, ஒரு நாள குறிப்பிட்டு மாங்காடு கோயிலுக்கு விடியற்காலைல போகத் தயாரா இருங்கனு சொல்லி எழுதி இருந்துச்சு.
மண்டைய உடைச்ச அந்த டாலர் விஷயம் கொஞ்சம் கொஞ்சமா விளங்க ஆரம்பிச்சது. தாலிலே கோக்கறதுக்கான டாலர் அதுன்னு. பழசா இருந்ததாலே ஒரு வேள அவங்க அம்மா கட்டியிருந்ததா இருக்கலாம்னு ஊகிச்சோம்.
இப்ப பெரிய குழப்பம் மனசுக்குள்ளே. நண்பர்களோட அட்வைஸ். எது செஞ்சாலும ்தங்கை வாழ்க்கை பாதிக்கும்னு. அப்ப தங்கையோட வயசு பதினாறு.
ஆனாலும் மனசு கண்ட்ரோலுக்கு வரலே. யார் பேச்சையும் கேக்கற நிலைமைலே நான் இல்ல. நண்பங்க திட்டறாங்க. இது காதல் இல்ல, காமம்னுலாம் சொல்றாங்க. ஆனாலும் என்னாலே அவ சொன்ன இடத்துக்குப் போய் அவளோட பேசணும். தங்கை வாழ்க்கை பத்தி சொன்னா புரிஞசிப்பானு. எனக்காக படிப்பு முடிஞ்சு தங்கை கல்யாணம் ஆகற வரை வெயிட் பண்ணச் சொல்லலாம்னு நானே நினைச்சுகிட்டேன்.
நாள் நெருங்கிடுச்சு. மனசு படபடப்பு,குழப்பம் மாறி மாறி. அந்த நாளும் வந்துச்சு. என்னலாம் நடக்கும்னு நான் நினைச்சேனோ அதெல்லாம் இல்லாம ஒரு பிரளய மாற்றம் நடந்துச்சு. வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுச்சு.
(இன்னும் வரும்)

முதல் காதல் (பாகம் 2)

மறுநாள் சீக்கிரமே முழிப்பு வந்துச்சு. மனசு படபடப்பு அடங்கலே. குளிச்சு ரெடியாகி பின்வீட்டு கிருஷ்ணன் மாமா சைக்கிள் இரவல் வாங்கிட்டு கோயில் இருக்கிற ஃபிளவர்ஸ் ரோட்டுக்கு கரெக்ட் டைம் போய் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திட்டு வெயிட் பண்ணேன்.
கொஞ்ச நேரம் ஆச்சு எனக்கு டென்சன் அதிகமா ஆகிட்டே இருக்கு. சுமார் பதினைந்து நிமிஷ காத்திருப்புக்கு அப்புறம் அவள் வந்தா. இதயத்துடிப்பு ஸ்பீக்கர்லே போட்ட மாதிரி லப்டப் சவுண்டு.
கிட்டே வந்து சாரிங்க லேட்டாச்சுன்னு சொல்லிட்டு நல்லாருக்கீங்களானு கேட்டது எங்கேயோ தூரத்து குரல் மாதிரி கேக்குது. எனக்கு தொண்டைலே இருந்து வார்த்தைங்க வரவே நேரமாகுது. நல்லாருக்கேன் ஒற்றை வார்த்தை மட்டும்.
வாங்க போலாம்னு கோவில நோக்கி நடக்கறா. நான் பின்னாடியே நாய்க்குட்டி மாதிரி. பூசாரி காட்டுற தீபம். கடவுள் சிலை எதுவும் தெரிலே எனக்கு.
அவ கைய நீட்டி விபூதி எடுத்துக்கங்க சொல்றப்ப அசரீரி மாதிரி கேக்குது. விபூதி நெத்திலே வைச்சுக்கறேன்.
இப்பவும் அவ முகத்த சரியாப் பாக்காமலே பாரீவை வேறெங்கேயோ. அப்பதான் அவ என் கையில அந்த காகிதப் பொட்டலம் கொடுக்கறா. வீட்டுலே போய் பிரிச்சுப்பாருஙகனு சொல்றா. நான் தலையாட்டி படிலே அவளோட கீழே இறங்கறேன். நான் வரேன் வீட்டுலே தேடுவாங்கனு சொல்லிட்டுக் கிளம்பறா. அவ போறத பாத்துகிட்டு கொஞ்சநேரம் நின்னுட்டு பொட்டலத்த பேன்ட் பாக்கெட்லே போட்டுகிட்டு சைக்கிள எடுத்துட்டு ஏதோ மாயலோகப் பயணம் மாதிரி வீட்டுக்குத் திரும்பறேன்.
வீடு வந்து சேர்ந்து பெட்ரூமுக்குள்ளே போய் பொட்டலத்த பிரிச்சா உள்ளே இருந்த பொருள் புரியவே இல்ல.
(இன்னும் வரும்)

அந்தாதி

ஆற்றங்கரை ஓரம் அழகான குடிலிருக்கு
குடிலுக்குள்ளே கூட்டாளி கும்பல் இருக்கு
இருக்கும் நண்பருக்கு அறுபது வயசாச்சு
வயசாச்சா வாலிபன் தானென்று சொல்வார்
சொல்வது மட்டுமல்ல செயலும் குழந்தைபோல
குழந்தைபோல விளையாடி களித்திருப்பார் கவிபாடி
கவிபாடும் கவிஞர் பலருண்டு இவருள்ளே
இவருள்ளே கற்பனை ஊற்றாய் உறையும்
உறையும் மகிழ்வை சிங்காரக் கதைசொல்வார்
கதைசொல்லல் காட்சிப் படுத்தி ஓவியமாய்
ஓவியம் ஹாஸ்யம் நையாண்டி கலவையாய்
கலவையாய் சுவையூட்டும் கற்கண்டாய் சிறுகதைகள்
சிறுகதைகள் சொல்வதிலே அண்ணன் மன்னன்
மன்னன் அவரே சிஇஜி குழுவிற்கு
குழுவின் கூட்டம் இன்று பயணம்
பயணம் போவதோ ஆற்றங்கரையோர குடிலுக்கு
(முடியும் வார்த்தையில் அடுத்தவரி தொடக்கம்)

கசடுகள் கலைந்திடு

நிரந்தரமற்றது வாழும் காலம்
நினைவில் இருத்தி வாழ்வோம்
நேற்றிருந்த நண்பன் இன்றில்லை
நாளை என்பது விடிந்தபின்னே
கூட்டைத் துறந்த உயிர்
கூற்றுவன் கணக்கின் முடிவே
தேடிய உறவை சேர்த்துவை
தேகம் அழியும் நாள்வரை
பிரிந்த பின்னே அழுதென்ன
புரிந்து இப்போதே வாழ்ந்திடு
நல்லதும் தீயதும் கணக்கிடு
நல்வினைத் தட்டு தரைதொட
உள்ளம் கசடுகள் கலைந்திடு
உண்மை இன்பம் தேடிடு
பிரிவுகள் அனைத்தும் தொலைத்திடு
பிரியும்போது சுமைகள் அவையாவும்
வாழ்ந்திடும் வாழ்வு ஒருமுறை
வன்மம் விலக்கி வாழ்வோமே !

( வகுப்புத் தோழனை இழந்து நிற்கிறோம் )

முதல் காதல் (பாகம் 1)

வித்தியாசமான முதல் காதலை சொல்லுவோமானு தோணுச்சு. இப்பவும் சொல்லலேனா எப்படி.
அப்ப இஞ்சீனீயரிங் ஃபைனல் இயர் படிச்சுட்டு இருந்த நேரம். அம்மா இறந்து அஞ்சு வருசம். தங்கச்சி படிப்பு வரலேன்னு படிக்கலே. தம்பி ஸ்கூல் படிச்சுட்டு இருந்தான்.
முன்னாடி சொன்ன மாதிரி குவார்ட்டர்ஸ்லே கல்லூரிப் படிப்பு படிச்சவங்களே விரல் விட்டு எண்ணிடலாம். சுமார் நூத்தம்பது குடும்பம் மொத்தம்.
பாரத விலாஸ் மாதிரி பன்னண்டு வீடுங்கனு சொல்லி இருக்கேன். எதிர் வீட்டுலே மலையாளக் குடும்பம்.
நல்லா படிக்கிறேன்னு எல்லாருக்கும் என்ன பிடிக்கும். அம்மா இல்லாத பையன்னு சாஃப்ட் கார்னரும் உண்டு.
வீடு சிங்கிள் பெட்ரூம், சின்ன ஹால், கிச்சன், திறந்த டாப் பாத்ரூம்,டாய்லெட், வீ்டு நுழையற இடத்துல சின்ன வராந்தா இப்படித்தான் இருக்கும். பெரும்பாலும் இந்த வராந்தால தான் நான் படுத்துப்பேன். ஃபேன்லாம் அப்ப கிடையாது. மரத்தடி தான் படிக்கற இடம்.
இப்படியாக இருந்த ஒருநாள் ராத்திரி தூங்கி எழுந்து வழக்கம் போல பாயை மடிச்சுட்டே இருந்தப்ப கீழே படில ஒரு பேனா இருந்தது.
என்னோடது இல்ல அது. சரி யாரோடதோனு நினைச்சுகிட்டு மூடியைத்திறந்து பாத்தா நிப்போட இருக்கிற தலைய காணோம். என்னடானு இங்க் கொட்ட போதுனு உள்ளே பாத்தா பேப்பர்.
நான் பேப்பர கையில எடுக்கவும், எதிர் வீட்டு கதவு மூடற சத்தம் கேக்கவும் சினிமா போலவே. பேப்பர பிரிச்சா லெட்டர். என்ன சேத்துப்பட்டு ரெயில் ஸ்டேஷன்லே மீட் பண்ண டைம் குறிச்சு.
நெஞ்சு படபடக்க இனம் புரியாத ஒரு நிலை. எதிர் வீட்டுலே இருந்து தான்னு ஊகம் பண்ணிட்டேன், எதிர் வீட்டு அக்காவோட தங்கைனு. முகத்த கூட பாத்தது இல்லே சரியா. அவளுக்கு இன்னொரு குட்டித் தங்கை வேற.
அப்ப காலேஜ் ஸ்டடி லீவ் டைம். சரின்னு சொன்ன டைம் ரெடியாகி சேத்துபட்டு ஸ்டேஷன்லே போய் வெயிட் பண்ணேன். கொஞ்ச நேரம் கழிச்சு சின்னப் பொண்ணு தயங்கித் தயங்கி கிட்டே வந்து அக்கா கொடுக்க சொன்னாங்க அவங்களாலே வரமுடியலேன்னு ஒரு லெட்டர் திரும்பவும்.
ஆனா இந்த முறை விவரமா என்ன ஏன் விரும்பினேன்னு எழுதி மறுநாள் காலைலே, ஃபிளவர்ஸ் ரோடு,. பொன்னியம்மன் கோயிலுக்கு வாங்கனு சொல்லி இருந்தது...
(இன்னும் வரும் )

வருவதும் போவதும்

பயணங்கள் தொடரும் பாதைகள் மாறும்
பறவைகள் கூடுகள் பலவித திசைகளில்
நிரந்தரம் என்பதே நிச்சயம் இல்லை
நிற்பதோ நடப்பதோ நம்வசம் இல்லை
வருவதும் போவதும் வாழ்க்கையின் நியதி
வர்ணம் மொழிகள் மனிதனின் படைப்பு
எல்லைகள் பிரித்து எதிரிகள் தோன்றினர்
தொல்லைகள் போர்க்களம் யாவும் விளைந்தன
எய்ததும் நாமே அம்பும் நாமே
எதனை விதைத்தோமோ அதுவே விருட்சமாய்
நொந்து பலனில்லை நேர்வது நேரும்
விந்தை அதுவே வியப்பது ஏனோ
சிந்தனை செய்தே செயல் படுவீரே
சீரிய சமுதாயம் தோன்றிடும் நாளை !

சகோதரம்

கறை அற்ற வாழ்வு வேண்டி
இறை தொழல் நன்றே தினமும்
குறை யாவும் போக்கி குணமாகவும்
மறை கூறும் நன்னெறிகள் உதவும்
நிறைவான மனதோடு வேண்டி நிற்க
நிம்மதி நிலவிடும் நினைவினில் கொள்வீரே
உள்ளத்து உறையும் நல்வினை யாவும்
உயர்வான வாழ்வுக்கு உறுதுணை ஆகும்
கற்றலும் கேட்டலும் நல்லவை ஆகிடின்
பெற்றிடும் அமைதி மனமே பெருந்தகையோரே
வந்தவர் எல்லாம் சென்றிடும் நாளில்
வாழ்க்கைக் கணக்கில் பெருகிடும் புகழே
வாழ்வதே ஒருமுறை நடுநிலை கொள்வோம்
வாதங்கள் தவிர்த்து சகோதரம் வளர்ப்போம்

அழாதே கண்ணே

பூனையொன்று எலியைத் தேடி பரணில் பதுங்கியது
எலியோ தேங்காய் மூடி கூடைதேடி ஓடி வந்தது
நாயொன்று கீழே நின்று பூனை பார்த்து குர் என்றது
குழந்தையங்கே நாயைப் பார்த்து தவழ்ந்து வந்தது
அக்காளோ அவளின் பின்னே நடந்து வந்தாளே
எலி தேங்காய் கவ்வ பூனை அதைப் பிடிக்க
கீழே விழுந்த இரண்டையும் நோக்கி நாய் பாய
குழந்தை பயந்து பெருங்குரலில் அலறிக் கத்த
ஓடிவந்த அம்மா தாவி குழந்தையைத் தூக்கி
அழாதே கண்ணே அழாதே என்று அணைத்தாள்

மனிதம்

தீயவை அழிந்து நல்லவை ஓங்கட்டும்
தூயவை மனதினில் நிறைந்து நிற்கட்டும்
பாவங்கள் மறைந்து பாரதம் செழிக்கட்டும்
கோபங்கள் விடுத்து சாந்தம் நிலவட்டும்
பேதங்கள் யாவும் மறைந்து ஒழியட்டும்
மதங்கள் சாதிகள் பிரிவினை விலகட்டும்
மனிதம் என்பது மட்டும் நிலைக்கட்டும்
புனித எண்ணங்கள் புவிதனை ஆளட்டும்
இறைவனும் இயற்கையும் இணைந்தே இயங்கட்டும்
மறைநெறி வழுவா வாழ்வே நிறையட்டும்

நட்புக்கூடு

கனவுகளின் வரிகளில் காலை பூத்தது
நனவுகள் நகைச்சுவையாய் நண்பர்கள் மனங்களில்
அறுபதைக் கடந்த பின்னே நட்புக்கூடு
பெறுநல் பாக்கியம் உற்ற உறவுகள்
தனிமை போக்கிடும் தாலாட்டும் பாடிடும்
இனிமை வார்த்தைகள் இன்னலைப் போக்கிடும்
காலை மாலை இரவு நடுநிசி
காலம் பார்க்காது கருத்து பரிமாறும்
குரல்கள் உயரும் குசலம் கேட்கும்
விரல்களின் அசைவில் வித்தைகள் பலவும்
தவம் செய்தாலும் கிடைக்காத பந்தம்
தலை வணங்கி இதயம் சேர்ப்பேன்

தூர தேசத்துலே

அம்மையப்பனோ ஆண்டவனோ
அடுக்களையில் புகைநடுவில்
அரிசிச்சோறு ஆக்கியவளோ
ஆத்தா அவளோ. பெத்தவளோ
ஆராரோ பாடித் தொட்டிலிலே
அமைதியா தூங்க வைத்தவளோ
அணைத்தவளோ அமுதூட்டியவளோ
அழுதாக்கா பாக்கப் பொறுக்காத
அம்மாவுக்கு பாசம் பெருசப்பா
ரத்தத்த பாலாக்கி ஊட்டிவளத்தாளே
ரவநேரம் யோசிச்சுப் பாத்தாயா
உனக்கொன்னு வந்தாளே உசுரவிடுவா
உசரமா வளந்தாலே உறவும் அறுபடுமோ
உன்ன வளத்தவள தவிக்கவிட்டு
ஊரூராப் போனாயே உசிதம்தானா
ஊசலாடுதய்யா உறவத்த அவமூச்சு
தூரதேசத்துலே நீசேத்த சொத்து
பாரமான மனசுக்கு ஆறுதல தாராது

இரத்தமில்லா சுதந்திரம்

உத்தமர் வாழ்ந்த நாட்டில் உன்மத்தர்கள்
இரத்தமில்லா சுதந்திரம் வீதியில் குப்பையாய்
வேதாளம் மரமேறி சாத்திரம் பேசுகிறது
பாதாளம் நோக்கியே பயணம் பாவிகளால்
எதற்காகப் பெற்றாயோ சுதந்திரம் தந்தையே
எத்தர்கள் நாட்டினில் ஏளனம் பேசவா
புத்தனும் நீயும் போதித்தவை புத்தகத்தில்
புத்தி கெட்டோரே பீடத்தில் ஐயகோ
நாட்டுக்காய் உயிர் துறந்த உத்தமரே
நானிலத்து நன்மைக்கு வழியொன்று சொல்வாயா
அழிகின்ற சமுதாயம் தடுத்தாள என்செய்வேன்
பழியொன்றை உன்மீது சுமத்தும் பாதகர்கள்
மீண்டும் வந்திடு அகிம்சை வேண்டாம்
மிலேச்சரை களையெடுக்க ஆயுதம் வேண்டும்

சிறுகவி

பந்தமோ சொந்தமோ வந்ததோ சென்றதோ
எந்தையும் தாயும் என்னுயிர் தந்தனரோ
வந்தனம் தந்துநான் வணங்கிடும் குருமாரே
நொந்திடும் மனம் தேடும் நெருங்கிய மனமொன்றை
வந்திடும் வாழ்வினில் வசந்தம் மாறிமாறி
மந்தமாய் இருந்திடாமல் மகிழ்வுடன் புன்னகைப்பாய்
சந்தம் இல்லாக் கவிதையில் சத்தில்லை
சந்திப் பிழையின்றி தமிழ் பயிலுவோமா
சிந்தனை செய்தே சிறுகவிதை படைத்தேனே
நிந்தனை செய்யாமல் நினைவில் கொள்வீரா
துந்தனாப் பாடும் சிறுகவி நானேதான்
பாந்தமாய் பண்ணிசைக்க பாடலாய் வந்திடுமோ

கிராமத்து விடியல்

வீணையின் நாதம் காதுகளில் ரீங்காரம்
மெல்லிய விரல்கள் நர்த்தனம் கம்பிகளூடே
குயிலின் குக்கூ ஓசை காற்றினிலே
மூங்கில் இலைகளின் நுனியில் மழைத்துளி
அசையும் இலைகளின் சலசலப்பு ஓசை
தூரத்தே ஓடும் ஆற்று நீரோசை
அன்னையைத் தேடும் கன்றின் அழைப்பு
கதிரவன் கதிர்கள் சன்னலின் இடைவெளியூடே
வீட்டின் முகப்பில் மாக்கோலம் பூசணிப்பூ
கணகணவென மணியடிக்கும் பால்காரன் மிதிவண்டி
கழுத்தில் மணிஅசைவில் காளையின் ஓட்டம்
மனத்திரையில் காட்சிகளாய் கிராமத்து விடியல்
மகிழ்வாய் மற்றொரு நாளின் தொடக்கம்