வெள்ளி, 1 நவம்பர், 2019

முதல் காதல் (பாகம் 3)

இந்தக் கதை எழுதத் தொடங்கும்போது இத்தகைய ஒரு எதிர்பார்ப்பைத் தூண்டுமென்றோ, பலரது ஆவலான கேள்விகள் எழுமென்றோ நான் எதிர்பார்க்கவில்லை.பல‌விதமான ஊகங்கள். கைபேசி அழைப்புகள்.
பொட்டலத்த பிரிச்சு பாத்தப்ப பித்தளையா தங்கமா என்று தெரியாத வாழைப்பழ சீப்பு போல ஒரு டாலர்.‌ செயின்ல கோத்துக்கலாம். எனக்கு அது என்னன்னே தெரியலே.
யார் கிட்டே காட்டிக் கேக்கறது. எனக்கு பள்ளி, கல்லூரித் தோழர்களோடு மூன்று நெருங்கிய நண்பர்கள் உண்டு, அசோக், அந்தோணி, சம்பந்தம் என்ற இவர்கள் பொதுவாக என்னுடன் நெருக்கமான எல்லாருக்கும் தெரியும். கிட்டத்தட்ட ஐம்பது வருடமாய் என் வாழ்வோடு இணைந்து தொடர்பவர்கள்.
நண்பர்களிடம் அந்த டாலரைக்காட்டி விசாரித்தபோது அவர்களுக்கும் என்னவென்று புரியவில்லை. அந்தக் கடிதம் வரும்வரை இந்த மர்மம் தொடர்ந்தது.
இதுதான் அவளிடமிருந்து தபாலில் வந்த முதல் கடிதம். அவள் இப்போது அக்கா வீட்டிலிருந்து தந்தை வீட்டுக்குப் போய்விட்டாள். தந்தையும் போலீஸ் ஹெட்கான்ஸ்டபிள், கீழ்பாக்கம் நேரு பூங்கா பக்கத்துலே போலீஸ் குவார்ட்டர்ஸ்லே வீடு.
லெட்டர்லே கனவு கண்டத பத்தி எழுதி சினிமாப் பாட்டு வரியோட விவரமா காதல உருக்கமா விவரிச்சு, ஒரு நாள குறிப்பிட்டு மாங்காடு கோயிலுக்கு விடியற்காலைல போகத் தயாரா இருங்கனு சொல்லி எழுதி இருந்துச்சு.
மண்டைய உடைச்ச அந்த டாலர் விஷயம் கொஞ்சம் கொஞ்சமா விளங்க ஆரம்பிச்சது. தாலிலே கோக்கறதுக்கான டாலர் அதுன்னு. பழசா இருந்ததாலே ஒரு வேள அவங்க அம்மா கட்டியிருந்ததா இருக்கலாம்னு ஊகிச்சோம்.
இப்ப பெரிய குழப்பம் மனசுக்குள்ளே. நண்பர்களோட அட்வைஸ். எது செஞ்சாலும ்தங்கை வாழ்க்கை பாதிக்கும்னு. அப்ப தங்கையோட வயசு பதினாறு.
ஆனாலும் மனசு கண்ட்ரோலுக்கு வரலே. யார் பேச்சையும் கேக்கற நிலைமைலே நான் இல்ல. நண்பங்க திட்டறாங்க. இது காதல் இல்ல, காமம்னுலாம் சொல்றாங்க. ஆனாலும் என்னாலே அவ சொன்ன இடத்துக்குப் போய் அவளோட பேசணும். தங்கை வாழ்க்கை பத்தி சொன்னா புரிஞசிப்பானு. எனக்காக படிப்பு முடிஞ்சு தங்கை கல்யாணம் ஆகற வரை வெயிட் பண்ணச் சொல்லலாம்னு நானே நினைச்சுகிட்டேன்.
நாள் நெருங்கிடுச்சு. மனசு படபடப்பு,குழப்பம் மாறி மாறி. அந்த நாளும் வந்துச்சு. என்னலாம் நடக்கும்னு நான் நினைச்சேனோ அதெல்லாம் இல்லாம ஒரு பிரளய மாற்றம் நடந்துச்சு. வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுச்சு.
(இன்னும் வரும்)

கருத்துகள் இல்லை: