திங்கள், 22 ஏப்ரல், 2019

குழந்தையாய் மாற வரம்

குழந்தையாய் மாற வரம் வேண்டும்
கருப்பை உடைத்து பிறக்க வேண்டும்
பெயரில்லாத நிலை மீண்டும் வேண்டும்
பெற்றெடுத்த தாய் தந்தை வேண்டும்
மொழியில்லாத மதமில்லாத நிலை வேண்டும்
நிற்க உலகில் எவ்விடமும் வேண்டும்
நீண்ட வேலிகள் இல்லாநாடு வேண்டும்
அனைவரும் சமமாய் ஆள்பவர் வேண்டும்
அடிமையற்ற சமுதாயம் அமைந்திட வேண்டும்
உழைப்பவர் யாவரும் உயர்ந்திட வேண்டும்
கோழை‌ சோம்பேறி ஒழிந்திட வேண்டும்
அரசியல் அழிந்து அமைதி வேண்டும்
அதுவரை குழந்தையாய் நானிருக்க வேண்டும்


21.04.2019

களை எடுப்போம்

பேதமை அழிந்து பெருமனிதர் ஆவீரோ
வேதனை வர்ணங்கள் வெந்து போகுமோ
காகங்கள் நாய்கள் சாதிகள் பார்க்குமோ
மோகத்தீயே. இதுவும் அணைத்திடு மனிதா
பாரதி அவன்தாசன் பாடியது காணீரோ
பாசத்தில் நேசத்தில் பண்பில் உயர்வீரோ
நெல்லுக்கு மட்டுமே நீர் வேண்டும்
புல்லைப் பிடுங்கி களை எடுப்போம்
காலம் நிச்சயம் மாற்றி விடும்
காலன் வரும் நாளில் சமமாகும்
வீணுக்குப் பேசி விலை போகாதீர்
விண்ணில் ஓர் உலகம் உருவாகும்

தூதுசெல்வீரா?

ஆடி வரும் காற்றினிலே அசைந்தாடும் மூங்கிலே
ஆலமரக் குயில் ஓசை கேட்டாயோ
நதியோர‌ நாணல் பெண்ணே நாணித் தலைகுனிந்தாயோ
பதியாக வருவான் குளிரூட்ட தென்றல் காதலனவன்
ஓயாத அலைமகளே ஓடிநிதமும் கரைசேர்வாயோ
ஓடிவருவானோ கட்டி அணைப்பானோ கள்வன் கதிரோனே
மலை மகளே யாருக்காய் உயர்ந்து நிற்பாயோ
மாலையில் வருவானோ முகிலவன் தழுவிடுவானோ
மலர்க்கூட்ட மங்கையரே மயக்கம் ஏனோ உமக்கிங்கே
உம்உதட்டில் வண்டவன் தேன் பருகிச் செல்வானோ
வெள்ளிப் பனிநீராய் வீழும் அருவி அணங்கே
உன்உடல் பட்டு சிறுகச் சிறுக மணலானான் உன் பாறைக்காதலன்
நீவிரெல்லாம் காதல் கொண்டீர் களித்திருப்பீர்
பாவியனானேனோ என்துணை கண்டீரா தூதுசெல்வீரா?

கூடி வாழ்வோம்

நிரந்தரமாய் எதுவுமே இல்லையடா நண்பா
நிமிடத்தில் நின்றுவிடும் மூச்சே நண்பா
காசு பார்க்காதது நட்பே நண்பா
காலம் கடந்தும் கோபமேன் நண்பா
சாதி மதம் நமதில்லை நண்பா
சதையும் இரத்தமுமே நமது நண்பா
ஆறடி நிலம் மட்டுமே நண்பா
அதுவும் இப்போது சாம்பலே நண்பா
குழந்தையாய் சண்டையிட்டோம் நண்பா
குமரி பின்னால் சுற்றினோம் நண்பா
பாடித் திரிந்த பறவைகள் நண்பா
பாசறை வந்து நின்றோம் நண்பா
பாடையிலே போகின்ற நாளிலே நண்பா
பாழும் மதம் வாராது நண்பா
உள்ளத்தைக் கழுவி விடு நண்பா
உற்ற நட்பை உள்வாங்கு நண்பா
ஆடை களைந்தாலே மனிதனே நண்பா
ஆதலினால் கூடிவாழ்வோம் என்றும் நண்பா !

தமிழ்த்தாயே

எத்திசையும் புகழ் மணக்க வந்த தமிழ்த்தாயே
புத்துயிர் பூக்கும் என்றும் உன் மொழி கேட்டு
மூப்பில்லாத உன் இளமை வியந்தோம் தொழுதோம்
மூவிலக்கியமாய் மூச்சுக் காற்றில் எம்முடன் நீ
கடலினும் ஆழம் மூழ்கி திரவியங்கள் கண்டோம்
கற்றவை கடுகளவே காலமெலாம் போதாது உனைஅறிய
என்றும் எம்நாவில் இனிமை சேர்ப்பாய் தாயே
உன்அமுது உள்வாங்கி உயிர்த் திருப்போம் யாமே

புரிந்து கொள்

வாழ்க்கையைப் புரிந்து கொள்ள துணை தேடிப்பார்
வறுமையைப் புரிந்து கொள்ள நகரத்து நடைமேடைகளைப் பார்
உறவுகளைப் புரிந்து கொள்ள உதவி கேட்டுப்பார்
உன்னைப் புரிந்து கொள்ள தனிமையில் இருந்து பார்
நட்பைப் புரிந்து கொள்ள நாலும் துறந்து பார்
அன்பின் வலிமையை அன்னை மடியில் பார்
அனைத்தையும் மறந்திட அழகுக் குழந்தையின் நடையைப் பார்
சுதந்திரக் காற்றின் இனிமையைச் சிறையினில் பார்
சுழலும் பூமியின் சூட்சுமம் சூரியக் குடும்பத்தில் பார்

காத்திருப்போம் !

என்னை உறங்க விடு எப்படியோ போகட்டும்
பாட்டனும் பூட்டனும் பெற்ற சுதந்திரம் பாழாகப் 
போகட்டும்
ஊர் இரண்டு படட்டும் சாதிவெறி வளரட்டும்
பெருந்தலைவர் என்ன பெரியாரென்ன மூடநம்பிக்கை வாழட்டும்
வெட்டி மடியட்டும் வெறும் குருதி ஓடட்டும்
நீருக்கும் நிலத்துக்கும் பேசும் மொழிக்கும் போரிடட்டும்
தீண்டாமை வன்கொடுமை வஞ்சகம் வாய்ச்சவடால் பரவட்டும்
யாருக்கு வேண்டுமிந்த சுதந்திரம் சுயமரியாதை
வெள்ளைக்காரனோ வேலைக்காரனோ எவனோ ஆளட்டும்
வேடிக்கை பார்க்கவும் கைகட்டி நிற்கவுமே நாங்கள்
வேதாளம் மீண்டும் முருங்கை மரம் மீது
இன்னொரு காந்தியும் கோட்சேவும் வரும்வரை காத்திருப்போம் !

புதுத்தலைமை தேடு

மணி அடித்து ஓய்ந்தாலும் மனம் ஓயவில்லை
பேசுவது ஒன்றும் செய்வ தொன்றுமாய் அரசியல்
இன்றைய எதிரி நாளைய நண்பன் வெட்கமில்லை
கொள்கை காற்றில் கொழுத்த பணம் வீட்டில்
வெட்டி மடிபவன் வேதனை பகை மனநோயாளி
சொல்லித் தெரிவதில்லை பட்டாலும் புத்தியில்லை
புறமொன்று பேசும் தலைவன் அகத்தில் வேறொருவன்
யாருக்கும் வெட்கமில்லை பதவிக்காய் பணத்துக்காய்
புத்தியைத் தீட்டு திருந்து இனியேனும் நண்பா
புல்லுருவி வேண்டாம் புதுத்தலைமை தேடு
நல்லவன் ஆளட்டும் நன்றே யோசி மாற்று !

விடிவதெப்போது

கனியொன்றைக்‌ கொடுத்து சுவைக்கச்
சொன்னேன்
இனிப்பு நாவில் படுமுன்னே பறவைக்குப் பறி் 
கொடுத்தான் 
அமுதக் கலசம் தந்து பருகச் சொன்னேன்
ஆலகால விஷமாய் மாற்றி நீரில் கலந்தான்
காதுக்கு இனிமையாய் கானம் தந்தேன்
காகத்தின் குரலாய் மாற்றி நின்றான்
உயிர் மூச்சுக் காற்றைத் தந்தேன்
உதவாத நச்சுக் காற்றாய் மாற்றி விட்டான்
நல்ல வாழ்வுக்கு வழிகள் பல சொன்னேன்
நடைப் பிணமாய்ப் பாதைமாறி பரிதவித்தான்
நல்லவை வைத்து தீயவை தவிர்க்கும்
நற்குணம் மறந்தான் நசித்துப் போனான்
விழிக்க மறுத்து விட்டில் பூச்சியானான்
விடிவதெப்போது விடைகாண இயலவில்லை

நடைப் பயிற்சி

இப்பல்லாம் நடைப் பயிற்சி பண்ணுறவங்க அதிகமாகிட்டு இருக்காங்க. சில மாதங்கள் சோம்பேறியா தள்ளிப் போட்டு,ஒரு வழியா உடம்பை குறைக்கனும்னு நடைப்பயிற்சி போக ஆரம்பிச்சிருக்கேன்.
1969லே இந்த டவர் உலக வர்த்தகப் பொருட்காட்சி நடுவுலே இருந்தப்ப இப்படியொரு பெரிய பார்க் இங்கே அமையுமுன்னோ,அண்ணாநகர்னு ஒரு நகரப்பகுதி உருவாகுமுன்னோ நினைச்சே பாத்ததில்லே. காங்கிரஸ் ஆட்சி மாற்றம்,அண்ணாவின் மறைவு ஒன்னொன்னா நடந்து முடிஞ்ச நேரம் அது.
பழைய நினைவுகளை பின்னோக்கித் தள்ளிட்டு இப்போதைய காட்சிய பாக்குறேன். எவ்வளோ மாறிப்போச்சு. அய்யப்பன் கோயில் இருக்கிற தெருவிலே நுழைஞ்சா ஏதோ கடைவீதிக்கு வந்த மாதிரி தோற்றம்.
ஒரு பக்கம் மருந்துக்கடை முதல் சிற்றுண்டி உணவகம்னு நிறைய கடைகள். காலையில் சுறுசுறுப்பா காற்றுள்ள போதே தூற்றிக் கொள்கிற தள்ளு வண்டிக்கடைகள். காய்கறி, இளநீர், தேநீர், மூலிகைச் சாறு, சூப், கற்றாழை உட்சோறுடன் மோர் கலந்த பானம்,பூக்கள் எல்லாமே இங்கொன்றும் அங்கொன்றுமாக.
இதைக் கடந்து உள்ளே நுழையும்போது ஓட்டளிக்கச் சொல்லும் காகிதமும்,சென்னைக்கு மிக அருகிலுள்ள திருத்தணி குடியிருப்பு அடுக்கு மாடி வீடுகள் குறைந்த விலையில் பிரசுரமும் கையில் திணிக்கப்படும்.
உள் நுழைந்ததும் நடையின் வேகம் தானாக அதிகரிக்கும். இளைய வயது ஆண்பெண் வயதான ஆண்பெண் எங்கும் இறைந்து காணப்படுவர். நடை மற்றும் எட்டும் போட்டு முடித்து சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்து பார்வையைச் சுற்ற விட்டால் பல விதங்களில் காட்சிகள்
காதல் ஜோடிகள்
கம்பு சுழற்றும் பயிற்சி
உரக்கச் சிரிக்கும் பயிற்சி
மூச்சடக்கும் பயிற்சி
யோகாசனப் பயிற்சி
சிறுவர்கள் சறுக்கு விளையாட்டு
இன்னும் பலவும்.
நடந்து கொண்டே தகவல் பரிமாற்றங்கள், அரசியல், நாட்டு வீட்டு நடப்புகள் எல்லாமே நாடகம் போல். சரியாக எட்டு மணிக்கு டவரிலிருந்து கடிகாரம் அடித்து முடித்து அன்றைய‌ திருக்குறளையும் அதன் பொருளையும் சொல்லி முடிக்கும்.
நானும் அதைக்கேட்டு முடித்து முழுதாய் வேர்வையில் நனைந்த கைக்குட்டையால் மற்றும் ஒருமுறை முகத்தைத் துடைத்து, புறப்படத் தயாராவேன். இன்னொரு டம்ளர் மூலிகைச்சாறு வயிற்றில் இறங்கும். வாழைத்தண்டு, பாகற்காய்,நெல்லிக்காய்,புதினா முதலான கீரைகளின் சாறுகள் கலந்த கலவை அது.

என் கருத்துக்கள்

ஓர் ஐம்பத்தைந்து வருடங்கள் பின்னோக்கிப் போகலாம்
காமராசர்,பக்தவச்சலம் தலைமையிலான ஆட்சி நன்றாகவே நடைபெற்றுக் கொண்டிருந்ததது. அப்படியிருந்தும் மாற்றத்தை ஏன் மக்கள் விரும்பினர்.
காலம் காலமாய் சாதி வெறியும் தீண்டாமையும் தலைவிரித்தாடிய நேரம். சுதந்திரத்திற்குப் பிறகு யாரும் அதனை பெரிதாகக் கொள்ளவில்லை.
ஆங்கிலேயர் காலம் முதலே உயர் பதவிகளில் பெரும்பாலும் அந்தணர்களே கோலோச்சினர். உண்மையில் மற்ற சாதியினரின் பிள்ளைகள் வாய்ப்பின்மையால் மேல் படிப்பிலும் தொழில் படிப்பிலும் முன்னேற இயலவில்லை.
பெரியாரின் தலைமையில் மாற்றத்தைக் காண திராவிடம் பிறந்தது. உடனடி தீர்வுக்கு அறுவை சிகிச்சையே தீர்வு என தீர்மானித்து அவர் தீவிர அந்தணர் எதிர்ப்பிலும் கடவுள் மறுப்பிலும் ஈடுபட்டார். மக்களின் மீதுள்ள மாய வலையை அறுத்தெரிய வழியாக அது உருவாயிற்று.
பின்னாளில் பிறந்த திராவிடக் கட்சிகள் பிற்பட்ட சாதியினர் முன்னேறவும்,வறுமைக் கோட்டின் கீழ் உள்ளோர் முன்னேறவும் பல‌நல்ல திட்டங்கள் கொண்டு வந்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை. ஊழல் செய்வதும் கூடவே வளர்ந்தது.
காங்கிரசும் திராவிடமும் தீயவை மட்டுமே செய்தனர் என்பது அப்பட்டமான பொய். அதே போல் அவர்களது சொந்த வாழ்க்கையைப் பற்றி எழுபதாண்டுகளுக்குப் பிறகு பேசுவது நியாயமல்ல. அதுவல்ல தீர்வு. எப்போதோ நடந்து முடிந்த விசயங்களை இப்போது ஆராய்வதில் எந்த பயனுமில்லை.
நடக்க வேண்டிய நாட்டு முன்னேற்றம் பற்றி கவலைப்படுவதை விட்டு சாதி மத வேறுபாடுகளை மேலும் மேலும் பேசிக் கொண்டிருப்பது தேவையற்றது.
முன்னேற்றம் என்பது எல்லா மட்டத்திலும் எல்லாத் துறைகளிலும் சமமாக செயல் பட வேண்டும்.
இனியேனும் சிந்தனை மாற்றம் வந்தால் நலம். பிரித்தாள நினைப்பது புரட்சி எனும் பூகம்பம் தோன்ற வழி வகுக்கும்

சொற்களில் உண்மை

ஒற்றை ரோசாவில் காதல் சொல்வேன்
ஒன்றே குலமென்று வாதம் செய்வேன்
கற்றது கேட்டது கவிதை சொல்வேன்
பெற்றது தாயென பெருமை கொள்வேன்
பேதமை ஒழித்தவர் பெரியோரே என்பேன்
பெறுதற்கு அரிதாம் நட்பென்றே பகர்வேன்
போதனை செய்தவன் ஆசான் ஆவான்
வேதங்கள் ஓதியவன் குருவென்று கொள்வேன்
சாத்திரம் சத்தியம் காந்தியம் ஏற்பேன்
கோத்திரம் இல்லா சமுதாயம் மதிப்பேன்
சொல்லிடும் சொற்களில் உண்மை இருப்பின்
சொக்கனே நீயென வணங்கி நிற்பேன் !

ஸ்டைபண்டு

நாலாமாண்டு பரீட்சை முடிஞ்சு லீவுக்கு ஊருக்கு போகலே. பொறுப்புள்ள பையனா, யூனிவர்சிடிலே அப்ளை பண்ணி ,லீவுலே வேலை செய்ய அம்பத்தூர் எஸ்டேட்ல NS Krishna Rao Body works லே எனக்கு ஒதுக்கினாங்க.
சும்மா இல்லே ஒரு நாள் ஸ்டைபண்டு அஞ்சு ரூபா வீதம் எத்தனை நாள் வேலை பாக்கறமோ அத கணக்கு பண்ணி மாசக் கடைசிலே கொடுப்பாங்க.
அசோக் லேலண்டு வண்டிங்களுக்கு ஃபிரண்ட் கேபின் சப்ளை பன்னாங்க, இங்க ஒண்ணு கிண்டிலே ஒண்ணு. 71 பஸ் டெய்லர்ஸ் ரோட்டுல புடிச்சி எஸ்டேட்ல இறங்கி போகணும். நான் இருந்த போலீஸ் குவார்டர்ஸ் ஈகா பின்னாடி அது ஒரு நடை. எட்டு மணிக்கு உள்ள இருக்கணும்.
பாடி பில்டிங் பத்தி கொஞ்சமா கத்துக்கவும் பின்னாடி லேலண்ட் சேந்தப்ப அது உதவுச்சு. டைம் ஸ்டடினா என்னனு அப்ப தான் தெரிஞ்சது. ஒவ்வொரு ஆபரேசனா ஸ்டடி பண்ணி ரிப்போர்ட் கொடுக்கணும்.
ஷீட் கட் பண்றதுலே இருந்து வெல்டிங் பண்ணி முழுசா கேபின் ரெடியாகற வரைக்கும். தினமும் 32 கேபின் ரெடியாகும். வேலை செஞ்ச தொழிலாளிங்க என்ன எதிரி மாதிரி பாப்பாங்க.
ஷியரிங்,நிப்ளிங்னு என்னென்னவோ சொல்வாங்க. லீவு இப்படித்தான் கழியும். அப்ப தெரியாது, காலேஜ் முடிஞ்சு மூணு வருஷம் அம்பத்தூர்ல தான் வேலை செய்யப் போறேன்னு.
ஆன்டி கிளைமாக்ஸ் என்னனா எனக்குக் கொடுத்த ஸ்டைபண்ட்லே ஃபர்ஸ்ட் டைமா நான் ஒரு பேன்ட் துணி வாங்கி தைக்க கொடுத்துட்டு அப்பாகிட்டே சொன்னேன். சம்பாதிக்க ஆரம்பிச்ச உடனே என்ன கேக்காம செலவு செஞ்சிட்டே இல்ல‌னு அப்பா சொன்னாரு, அதோட போகலே, ஃபைனல் இயர் செலவுக்கு காசே கொடுக்கலே, பக்கத்து வீட்டுக்காரங்க கிட்ட வாங்கி செலவு பண்ணிட்டு, மெரிட் ஸ்காலர்ஷிப் பணம் வருஷத்துக்கு ஆயிரத்து இருநூறு வரும் அதுலே கொடுத்துடுவேன்.
இது கூட ஒரு சம்பளம் தானோ அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சேன், ஊருக்குப் போய் அப்பாக்கு செலவு வைக்காம நாம லீவுக்கு வேலைக்குப் போனதே தப்போன்னு நினைச்சேன்.இஞ்சீனீயரிங் படிப்பு அப்பலாம் அஞ்சு வருஷம்

அஞ்சு வருஷம்

ஆட்டை பலி கொடுத்த மனிதா
ஆட்டையைத் தான் போட்டான்டா அவன்தான்
கூழும் குடிச்சு குடிசையிலே நீயோ
கூத்தடிக்க பலவும் உண்டு அவனுக்கு
ஓட்டு மட்டுமே உனக்குச் சொந்தம்
ஓட்டாண்டி ஆனாயே எங்கே பந்தம்
பாடுபட்டு பெற்ற சுதந்திரம் பாழாப்போச்சு
பாவிங்க பணம் சேக்க உதவியாச்சு
பாதாளம் வரையில் குவிச்சான் தங்கம்
வேதாளம் முருங்கை மரம் ஏறும்
வருவாண்டா உன் வாசல் தேடி
வாக்குறுதி வாயாலே சுடுவான்
நல்லவன் தான் யாரும் இல்லை
நடுநிலையா யோசிச்சு பட்டனை அமுக்கு
அஞ்சு வருஷம் அவன்தான் ஆள்வான்
அதனாலே ஆராஞ்சு செஞ்சிடு நீதி !

வலம் வரும் வாழ்வு

தாய்மை தந்தை அன்பு பிறவி
கல்வி ஆசான் பாடம் பள்ளி
தோழமை பணிவு காதல் கனிவு
பதவி பண்பு பரிசு உதவி
மனைவி குழவி உறவு இளமை
கடமை கருணை பரிவு பாசம்
மகன் மகள் மேன்மை புகழ்
அகம் புறம் அமைதி ஆன்மா
மூப்பு முதுமை மனம் சோர்வு
முதல் முடிவு சோகம் சுகம்
வலம் வரும் வாழ்வு முடிவு !

முடிவில்லை இதற்கு

மாற்றுக் கருத்துகள் 
மாறாக் கருத்துகள்
மனக் கசப்புகள்
மறைமுகப் பகை
மனித நேயமற்ற
மாற்றானின் உந்துதல்
இதனை அறியாத இனமாய்
நம்மில் சிலர்
இருண்ட வாழ்க்கையின்
விதைகள் ஊன்றப்படுவதை
ஊமையாய் ஏற்கும் சிலர்
உண்மை அறியாமல்
உணர்வுப்பிழம்பாய் பலர்
யுக மாற்றமோ என்ற கேள்வி
முடிவில்லை இதற்கு ..

திருவிழா

வாழ்க்கைலே சில விஷயங்க புரியாமலே இருக்கும். சித்திரை பிறந்தா பாட்டி வீட்டுக்கு பரீட்சை‌‌ முடிஞ்ச கையோட.எனக்குத் தெரிஞ்சு நான் தான் பாட்டி, பெரியம்மா, அப்பா ஊருன்னு வருஷா வருஷம் போவேனே ஒழிய அவங்க யாரும் வரமாட்டாங்க. சில நேரம் அது நினச்சு ஒரு மாதிரி இருக்கும்.நாளடைவிலே பழகிடும்
காப்புக் கட்டறதுனு சொல்வாங்க.அது கட்டிட்டா திருவிழா முடியற மட்டும் ஊர விட்டு போகக்கூடாதுனு சொல்வாங்க.
திருவிழாக்கு ஒரு வாரம் இருக்கும்போதே அங்கங்கே பயிற்சி நடக்கும். ஒரு பக்கம் கோல் சுத்தறது,கால்ல கட்ட கட்டி ஆடுறது, புலி மாதிரி ஆடறது,தெருக்கூத்து வசனங்க பேசறது இப்படி ஊரே திடீர்னு களை கட்டும்.
நானும் ஒவ்வொரு முறையும் கோல் சுத்த கத்துக்க பாப்பேன் அது நமக்கு வராது. வேடிக்கை பாக்கறதோட சரி.
கூழ்ப்பானைய தலை மேல் சுமந்து போய் ஊர் எல்லைலே கோயில்லே வச்சிருக்க டிரம்லே ஊத்துவாங்க, பூசைலாம் ஆன பிறகு அவங்கவங்க வந்து பாத்திரத்துலே வாங்கிட்டு போவாங்க, பிரசாதம் மாதிரி.
திருவிழாக்கு முன்னாடி நாள் ராத்திரி அவங்க அவங்க வேண்டி கிட்டபடி வேஷம் கட்ட ஆரம்பிப்பாங்க. புலி மாதிரி உடம்பெல்லாம் பெயின்ட், ஒரு சின்ன ஜட்டி மட்டும் இது ஒரு கும்பல்.
உடம்பெல்லாம் ஊசி குத்தி நூல் கோத்து அதுல  எலுமிச்சம்பழம்,இவங்க தான் கால்ல கட்ட கட்டி ஆடறவங்க,வித விதமான வேஷம் போட்டு இன்னொரு கும்பல், இப்படி ராத்திரி முச்சூடும் தூக்கமில்லாம.
காலைல ஊர்வலம் ஆரம்பிச்சுடும், சாமித்தேர் கூட வேஷம் போட்டவங்க ஆடிட்டே தெருத்தெருவா,முடியறதுக்கு மத்தியானம் ஆயிடும்.
எப்படித்தான் இதல்லாம் தாஙகறங்கனு யோசிக்கறப்ப உச்சகட்டமா ஒருத்தர் முதுகுலே கொக்கிமாட்டி அதுலே உடம்பு தொங்கிட்டே போய் சாமிக்கு மாலை போடுவார், பாக்கவே கஷ்டமா இருக்கும், பக்தியின் உச்சம் அது.

பட்ட கடன்

நான்‌ பட்ட கடனை திருப்புவது எப்போது
நாலாறு பிறவி நாற்பது யுகமும் போதாது
தாயென்ற‌ தெய்வம் தான் சுமந்த வயிறு
தாலாட்டி பாராட்டி தன்ரத்தம் பாலாய் ஊட்டி
தவழ்ந்து நடந்து வளர்ந்த நாட்கள் கைபிடித்து
தனக்கென வாழா பிறர்க்கென வாழ்ந்த தந்தை
ஓடிப் பிடித்து தோள் கொடுத்த தோழர்
ஓடும் ‌‌உறவாற்றில் கூடவே பயணிக்கும் சுற்றங்கள்
அன்பும் அரவணைப்பும் ஆதரவும் அளித்த மனைவி
அருகிலே அமர்ந்து கதைபேசி பிரிநத காதலி
களிமண்ணாய்  இருந்த அறிவை பொற்குடமாக்கிய ஆசிரியர்
காலத்தால் அழியாத காவிய நாயகராம் இவர்கடன் !

காதல் வலியே ஒரு சுகம் !

தலை வாரி சாதிமல்லி் சூடி
தலைவி அவள் பின்னழகு அசைந்தாடும்
கள்வன் இவன் காதலுற்றான் கண்டதனை
கார் குழலாள் மீது மோகமுற்றான்
இட்ட அடி நோக அவள் நடையோ
இதயத் துடிப்போ இரு மடங்காய்
கடைக்கண் பார்வையினால் அவள் நோக்க
கால்கள் நடுங்க நாயகன் இவன்
காதல் நாடகம் அரங்கேறும் அங்கே
அவள் நோக்க அண்ணலும் நோக்க
ஆயிரம் வார்த்தைகள் பேசாமலே இடம் மாறும்
உறக்கம் மறுக்கும் உணவு துறக்கும்
உண்மைக் காதல் வலியே ஒரு சுகம் !

"மன விடு தூது" புத்தக வெளியீட்டு விழா


நாய்க்கனேரி 1

இயற்கை உணவு அப்பவே இருந்துச்சு. வயலுக்கு நடுவே மாமரம், ஊடு பயிரா மிளகா,தக்காளி,கிணத்துலே குறவை மீனு. மாங்காய நசுக்கி,மிளகாய் கூட வச்சு, பம்ப் செட்ல உப்பு எப்பவும் இருக்கும், கலந்து சப்புக்கொட்டி சாப்பிடறது பங்காளியோட. சில நேரம் கிணத்துலே மீன புடிச்சு, காய்ஞ்ச தென்ன மட்டையை கொளுத்தி வேக வச்சு,உப்பு மிளகா சேத்து ருசியா சாப்பிடறதும் உண்டு.
மலையோரம் ஓடையை ஒட்டி ஈச்ச மரங்க, பழுத்து பழங்க கீழ கொட்டி இருக்கும்,சாப்பிட அவளோ சுவை,சதை கம்மி,கொட்ட தான் பெருசு.தெரு முனைலே டீக்கட வாசல்ல மாமனுங்க இருப்பாங்க,வாடா போலீஸ்காரன் பையானு கூப்பிடுவாங்க.டீயும் பொறையும் ஓசிலே கிடைக்கும். அதுவே காலைலனா இட்லி தண்ணியா சாம்பாரோ,சட்னியோ,ஆனா செம்ம டேஸ்ட்.
காலைல டீ குடிக்கறதுக்கு முன்னாடி வேப்பங்குச்சிலே பல் விளக்கிடனும்,பெட் டீலாம் பழக்கமில்லே.
சொந்தக்காரங்க எல்லாம் கூப்பிடறதே் கண்ணுனு சொல்லி, வா கண்ணு சாப்பிடலாம்னு கூப்பிட்டு தேக்கு இலைலே கைக்குத்தல் அரிசி, துவரம்பருப்பு,கத்தரிக்கா சாம்பார் அந்த சுவை வேறெங்கையும் கிடைக்காது.
பஸ் வசதிலாம் கிடையாது அப்ப. ஊருக்கு போறப்பலாம் சின்ன வயசுலே அப்பாவோட தோளும் நடையும், கொஞ்சம் பெரியவனானதும் நடை அப்பாவோட,
அம்மா ஊருக்கு எனக்கும் தங்கச்சிக்கும் காது குத்தினப்ப மட்டும் வந்ததா ஞாபகம். சுமார் அஞ்சு கிமீ கட்டுப்படிலேர்ந்து நட தான். போர வழில கடல்போல ஓட்டேரி, அங்கருந்து 2 கிமீ இருக்கும், இருந்தாலும் ஊரே வந்த மாதிரி குஷி.
அப்பா தூரத்துல தெரியற தென்ன மரங்கள காட்டி,அதோ அந்த மரத்த தாண்டனா ஊருன்னு சொல்லியே நடக்க வப்பாரு சிணுங்கிட்டே நட தான், வேறென்ன.
ஊருக்கு திரும்பற இடத்துல இன்னொனு சின்னதா ஏரி் அது முடிஞ்ச உடனே மாமனோட தென்னந்தோப்பு, எதுருலே எங்களதும் பங்காளிகளதும் நிலம். இளநீரோ, நுங்கோ நிச்சயம்.
எல்லாரு பார்வையும் என் மேல,மதராசு போலீசு மாமா பையன் வந்துட்டாண்டி, தீ போல ஊர் முழுக்க வரவு சேதி பரவும்.
ஏழு மணிக்கெல்லாம் ஊரே அடங்கிடும்,காலைல நாலரைக்கே மாட்டோட சலங்க சத்தம் கேக்கும், சாணம் மொழுவுன திறந்த வெளி வராந்தால இருந்து குடிச உள்ளார, இன்னொரு குட்டித்தூக்கம் போட பாதி்தூக்கத்தோட பாய சுருட்டி எடுத்துட்டு போகணும்.
பெரும்பாலும் மஞ்சம்புல் கூரைக் குடிசைங்க ஒண்ணு ரெண்டு சிமென்ட் வீடு,மண் ரோடு இதான் எங்க கிராமம். சைக்கிளே சில வீடுகள்ளே தான் இருக்கும்.
மஞ்சம்புல்லும் மலைலே இருந்து அறுத்தாந்து கூர வேய்வாங்க.அடுப்புக்கு கூட மலையில இருக்கிற தேக்கு மர கன்னுங்க தான். அத வெட்டி கட்டா கட்டி தலல சுமந்து வரிசையா இறங்கிறதே ஊர்வலம் மாதிரி இருக்கும். தேக்கு அடுப்பெரிக்க, இல சாப்பிட உதவுச்சு. மல முச்சூடும் வளரும்.
மல மேலே ஏறி ஊர பாக்கறதுக்கு ரம்மியமா இருக்கும். ஆட்ட ஓட்டி கிட்டு காலைல போனா  இருட்டறப்ப தான் கீழ வருவா என் அக்கா,பெரியப்பா மக. தூக்குல கூழும், மாங்கா ஊறுகா மதியத்துக்கு சாப்பாடு. ஆட்ட அதட்டற சத்தம் அப்பப்ப எதிரொலிக்கும்.
ஊர் கிணத்துலே தான் நீச்சல கத்துகிட்டேன். கிணத்து பக்கத்துலே ஒரு கொடி ஓடும் ஸ்டாராங்கா இருக்கும்,அத இடுப்புலே கட்டி தண் ணிலே தள்ளி உடுவாரு மாமன் தண்ணி குடிச்சு மூச்சி முட்டி உயிர் போய் வரும். நீச்ச கத்துக்க எத்தன தடவ இப்படி உள்ள தள்ளுனாங்க ஞாபகமில்ல.

யாருக்கும் வெட்கமில்லை

அரசியல் நாடகங்கள் தொடங்கின
அடுத்த இரண்டு மாதங்கள்
அனல் பறக்கும் பேச்சுக்கள்
அள்ளி வீசப்படும் வாக்குகள்
யாருக்கும் வெட்கமில்லை நாட்டில்
யாவரும் கேளிராய் இப்போது
நேற்றையபகை இன்று நட்பாய்
நேர்மை கிலோகணக்கில் வி்ற்பனை
பட்டி தொட்டி எல்லாம் பேச்சு
பலப்பல வாக்குறுதி பாசமழை
பணமூட்டை காரேறி ஊர்வலம்
பகடைகள் உருண்டு தொகுதிஎண்கள்
மறுபடி பாலாறு தேனாறாய்
மாற்றம் நரகம் சொர்க்கம்
மானமின்றி வாய்ப்பேச்சு மேடையேறி
மக்கள் கூட்டம் மாக்கள்போல்
ஐந்தாண்டு ஆனால் திரைவிலகும்
தந்திர வார்த்தைகள் மயக்கும்
எந்திரமாய் மனிதர் இவரும்
மந்தை மந்தையாய் வாக்களிப்பர்
இரவுக்கு விடியல் எப்போது
இரவல் நாடாத இதயமெங்கே
இனியேனும் நல்லவர் வருவரோ
இல்லை இதற்கெல்லாம் விடை !

பிறவாமை

இன்னொரு பிறவி
பிறவாமை வேண்டும்
பிறப்பு தவறாது என்பின்
மானுடன் தவிர்த்து
மற்றவை ஏற்பேன்
பேதங்கள் பேய்களாயின
வேற்றுமை வேதாளமாயிற்று
பொறாமை பொல்லாப்பு
பிறர் பொருள் கவர்தல்
கருணையின்மை கயமை
கள்ளத்தனம் ஏய்த்தல்
எங்கும் பகைமை
ஏழை சொல் கேளாமை
வறுமை வன்கொடுமை
அப்பப்பா சொல்லி மாளாது
ஆதலின் இறைவா
மறுமுறை பிறப்பின்
பறவையாய்ப் படைத்திடு
கூடிவாழ்வோம் குலத்தோடு
உலக வெளி யாவும்
உற்றாரோடு உலா வருவோம் !

உப்புமா சமையல்

ரவையை வறுத்து வைத்து
மல்லி மிளகாய் வெங்காயம் கருவேப்பிலை
கடுகு உளுந்து கடலைப்பருப்பு உப்பு
கடலெண்ணெய் வாணலியில் காயவைத்து 
அதில் பொரியவைத்து
நீரூற்றி உப்பை அளவோடு போட்டு 
கொதிக்கின்ற நேரமதில் வறுத்த ரவையை
அதனில் போட்டு கிளறி சிறிது நேரம்
மூடியிட்டு மூடி வைத்து கூடவே
தேங்காய் மிளகாய் மல்லி கடலை அரைத்து
உப்பு சேர்த்து தாளிதம் ஊற்றி கலந்து
வெந்த உப்புமாவோடு சட்னி கலந்து
சப்புக்கொட்டி சாப்பிட்ட நேரம் நண்பன் வர
ஹாட்பேக்கில் அவனுக்கும் கொடுக்க
அவன் சாப்பிட்டுப் போன் போட்டுப் பாராட்ட
யார் சொ
ன்னது உப்புமா சுவையில்லை என
இத்தனையும் கலந்தாலே சுவையான விருந்தாமது

என் காதலி

முப்பது வருடமாய் என்காதலி
முழுநாளும் அவள் துணை
இணை பிரியா தோழியாய்
இன்பம் தரும் துணைவியாய்
காதல் இன்பம் கலவி இன்பம்
காலை முதல் நடுசாமம் வரை
அவளில்லாத வாழ்வை நினையேன்
அவளின் ஸ்பரிசம் அனுதினமும்
உலகமே அவளில் அடக்கம்
உடல்கூறு நுண்ணிய கலவை
ஆராய ஆராய ஆழமாய்
ஆழ்கடல் முத்தாய் ஆச்சர்யம்
அந்திம காலம் வயோதிகம் அவளோடு
கணிப்பொறி என்பது அவள்பெயர்
கடைசி வரையில் என்னோடு !

வார இறுதி

ஞாயிறு வந்தாலே மனதில் ஒருசோர்வு
படுக்கை துறக்க பகலாகும்
பசியென்ற ஒன்று மறந்தே போகும்
பாதிநாள் போனபின்னே விடியும்
பழைய நினைவுகள் வட்டமிடும்
வயது கூடாமல் குறைந்துவிடும்
வாலிபம் தலை தூக்கும்
பழைய பாட்டில் பரவசமாகும்
கண்மூடி கனவு விரியும்
காலமுள் ஓடாமலிருக்கத் தோன்றும்
அடுத்த நாள் நினைவு மறக்கும்
ஓய்வு நாளாய் நீண்டிருக்கும்
மாலை வந்ததும் மாறிப்போகும்
மறுநாள் விடியல் ஓட்டம்
மறுமுறை வார இறுதிவரை

பெண் தவசி

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே
கன்று ஈனும் தாயாக அவள்
அன்னை சகோதரி நண்பி மனைவி
அனைத்தும் அவளே அன்பின் உறைவிடம்
பெண் என்றாலே பேணிக் காப்பவள்
பெற்ற தாய் இறையினும் மேலாய்
தன்நலம் நோக்கா தாய்மைப் பண்பு
அன்றும் இன்றும் அயராத உழைப்பாளி
துவண்ட போது அவள் மடியே
துயர் துடைக்கும் போதி மரம்
பெண் என்பதே பொறுமையின் பிறப்பிடம்
ஆணை வழிநடத்தும் வாழ்க்கைப் பாதை
சொல்லில் அடங்கா சோர்விலா தவசி
சொற்கள் போதாது சொல்லிடப் பெருமை !

அரசியல் வியாதி

நான் அரசியல் வியாதி
நாட்டுக்காய் உழைப்பதாய் பொய்யுரைப்பேன்
ஓட்டுக்காய் பலவேடம் கொள்வேன்
ஐந்து வருடத்திற்கு ஒருமுறை
பந்தம் வரும் என்வாழ்வில்
மக்கள் என் தெய்வங்களாவர்
மனசாட்சி தலைதூக்கும் தர்மம்பேசும்
மாற்றுக் கட்சியினர் உறவினராவர்
பாலாறு தேனாறு ஓடுமென்பேன்
பாமரரோடு தோள் சேர்ப்பேன்
வறியவர் இப்போது கண்முன்
வாரி வழங்கிட அரசுகஜானா
கூட்டங்கள் கோஷங்கள் கொடிகள்
கூழைக் கும்பிடு பொய்ச்சிரிப்பு
தேர்தல் வந்தாலே தேனாய்ப்பேச்சு
தேடிப்போய் குடிசைக் கூழ்
ஆடிடும் நாடகம் அரங்கேறும்
பரத்தையினும் கீழாய் பதவிக்காய்
பலவும் செய்வேன் பண்பாளன்நான் !

வா நண்பா !

காலாற நடக்க கடற்கரை போவோமா
காற்று வாங்கி கதைபல பேசுவோமா
பட்டாணி சுண்டல் வேர்க்கடலை கொறிப்போமா
பழைய நினைவுகள் அசைபோட்டு பகிர்வோமா
சூடாக சுக்கு காப்பி தக்காளி சூப்
சுகமான கடல்காற்று உள்வாங்கி உறைவோமா
மச்சானோ மாமனோ உறவாடி மகிழ்வோமா
மனமெல்லாம் பஞ்சாக சிரித்து மகிழ்வோமா
போன காலமெல்லாம் போகட்டும் எஞ்சியநாட்கள்
பொல்லாத உலகமிதில் கதைபேசி கவிதைபாடி
களிப்பொன்றே வாழ்க்கையாக்கி களித்திருப்போமா
கவலைவிட்டு தினம்தினமாய் காற்றுவாங்கப் போவோமா
போதுமிந்த சக்கர வாழ்க்கை தள்ளிவைத்து
போய்விடலாம் காததூரம் கைகோர்க்க வா நண்பா !

தாய்த் திருநாட்டின் புதல்வர்

எல்லைகள் காத்திடும் வீரர்
எதற்கும் அஞ்சா தீரர்
உயரப் பறந்து கழுகாய்
கயவர் கூடாரம் காண்பர்
பாய்ந்து சென்று தாக்கி
பகைவர் பாசறை அழிப்பர்
நெஞ்சில் உறுதி வீரம்
நெருப்பென க
ண்களின் தீரம்
எல்லை தெய்வமாய் அவரே
என்றும் நம்மைக் காப்பர் !
காடுகள் மலைகள் கரடுமுரடாய்
கால்கள் கடுக்க கடப்பர்
கடமை ஒன்றே மனதில்
கணமேனும் கண்கள் அசரார்
நீர்நிலம் வான்என மூன்றாய்
நீண்ட எல்லை இவரது
தன் நலம் துறந்த தியாகம்
தாய்த் திருநாட்டின் புதல்வர்
எண்ணில் அடங்கா சாகசம்
எதிரிகள் எல்லைகள் கடந்து
என்றும் இவர்தம் சாதனை
எம் மனதில் கொள்வோம்
அவர்தம் தேசபக்தி
அனைவரும் போற்றி வணங்குவோம் !

காத்துக் கிடக்கும் கண்கள்

பூத்துக் குலுங்கும் பூக்களுக்கு பூசை செய்
காத்துக் கிடக்கும் கண்களுக்கு கருணை செய்
பாத்துக் கிடக்கும் பார்வைக்கு பரிசு தா
நாத்து நடவையிலே பாத்த உன்னை 
நேத்து வரை காணலியே எங்கே போனே
நீ நட்ட நாத்து கூட பூத்திடுச்சு
ஏர் பூட்டி உழுத நாளும் போயாச்சு
நெல் மணி கதிரறுக்கும் நாளும் வந்திடுமே
நெஞ்சைக் குளிராக்க நீ எப்ப வருவே
பொங்கப் பானை வச்சு புத்தரிசி போட
பெண்ணே நீதானே வரணும் கழனிமேட்டுக்கு
காத்திருக்கேன் பலநாளாய் பரிதவிச்சு நானே
காலம் கடத்தாம காலையிலே வந்துசேர் !

வன்மம் விடு

கணக்கில் சரியாயிற்று மீதமில்லை
என் சகோதரனை எம்மிடம்சேர்
தேநீரின் சுவை நன்றே
தேசமே அவனுக்காய் காத்திருக்கு
வேண்டாமே இனியும் விளையாட்டு
வேரோடு அறுத்து களையெடு
வளம் கொழிக்க அதுவே வழி
வன்மம் விடு வாழு வாழவிடு
மண்ணாசை வேண்டாம் மனதில்கொள்
மதம் விடுத்து மனிதநேயம் கொள்
நாடு செழிக்கும் நாட்டோர் போற்றுவர்
நட்பொன்றே நன்மை பயக்கும் !

கற்பனை ஊற்று

தீந்தமிழ் மீது காதல்
திருக்குறளின் மீது காதல்
கண்களின் மீது காதல்
கலைகள் மீது காதல்
கற்பனைக் காதல்
கலவிக் காதல்
ஊடலும் உண்டு
கூடலும் உண்டு
உறவுக்கும் நண்பர்கள்
உரிமைக்கும் நண்பர்கள்
உதவிடவும் உறுதுணையாகவும்
உன்னால் தானே
கற்பனை ஊற்று
காட்டாறாய் பெருகியது
தூண்டியதில் சுகம்பெற்று
சுடர்விட்ட தீபம்
சுடுசொற்களாயும் சுட்டது
சங்கு சுட்டாலும்
வெண்மை தரும்
ஆதலால் காதலும் சொல்வோம்
கயவர் கதையும் சொல்வோம்
வேதனை சில நேரம்
வேட்கை சில நேரம்
இரவும் பகலும் போல்
இருத்தல் தவறாது !