திங்கள், 22 ஏப்ரல், 2019

நடைப் பயிற்சி

இப்பல்லாம் நடைப் பயிற்சி பண்ணுறவங்க அதிகமாகிட்டு இருக்காங்க. சில மாதங்கள் சோம்பேறியா தள்ளிப் போட்டு,ஒரு வழியா உடம்பை குறைக்கனும்னு நடைப்பயிற்சி போக ஆரம்பிச்சிருக்கேன்.
1969லே இந்த டவர் உலக வர்த்தகப் பொருட்காட்சி நடுவுலே இருந்தப்ப இப்படியொரு பெரிய பார்க் இங்கே அமையுமுன்னோ,அண்ணாநகர்னு ஒரு நகரப்பகுதி உருவாகுமுன்னோ நினைச்சே பாத்ததில்லே. காங்கிரஸ் ஆட்சி மாற்றம்,அண்ணாவின் மறைவு ஒன்னொன்னா நடந்து முடிஞ்ச நேரம் அது.
பழைய நினைவுகளை பின்னோக்கித் தள்ளிட்டு இப்போதைய காட்சிய பாக்குறேன். எவ்வளோ மாறிப்போச்சு. அய்யப்பன் கோயில் இருக்கிற தெருவிலே நுழைஞ்சா ஏதோ கடைவீதிக்கு வந்த மாதிரி தோற்றம்.
ஒரு பக்கம் மருந்துக்கடை முதல் சிற்றுண்டி உணவகம்னு நிறைய கடைகள். காலையில் சுறுசுறுப்பா காற்றுள்ள போதே தூற்றிக் கொள்கிற தள்ளு வண்டிக்கடைகள். காய்கறி, இளநீர், தேநீர், மூலிகைச் சாறு, சூப், கற்றாழை உட்சோறுடன் மோர் கலந்த பானம்,பூக்கள் எல்லாமே இங்கொன்றும் அங்கொன்றுமாக.
இதைக் கடந்து உள்ளே நுழையும்போது ஓட்டளிக்கச் சொல்லும் காகிதமும்,சென்னைக்கு மிக அருகிலுள்ள திருத்தணி குடியிருப்பு அடுக்கு மாடி வீடுகள் குறைந்த விலையில் பிரசுரமும் கையில் திணிக்கப்படும்.
உள் நுழைந்ததும் நடையின் வேகம் தானாக அதிகரிக்கும். இளைய வயது ஆண்பெண் வயதான ஆண்பெண் எங்கும் இறைந்து காணப்படுவர். நடை மற்றும் எட்டும் போட்டு முடித்து சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்து பார்வையைச் சுற்ற விட்டால் பல விதங்களில் காட்சிகள்
காதல் ஜோடிகள்
கம்பு சுழற்றும் பயிற்சி
உரக்கச் சிரிக்கும் பயிற்சி
மூச்சடக்கும் பயிற்சி
யோகாசனப் பயிற்சி
சிறுவர்கள் சறுக்கு விளையாட்டு
இன்னும் பலவும்.
நடந்து கொண்டே தகவல் பரிமாற்றங்கள், அரசியல், நாட்டு வீட்டு நடப்புகள் எல்லாமே நாடகம் போல். சரியாக எட்டு மணிக்கு டவரிலிருந்து கடிகாரம் அடித்து முடித்து அன்றைய‌ திருக்குறளையும் அதன் பொருளையும் சொல்லி முடிக்கும்.
நானும் அதைக்கேட்டு முடித்து முழுதாய் வேர்வையில் நனைந்த கைக்குட்டையால் மற்றும் ஒருமுறை முகத்தைத் துடைத்து, புறப்படத் தயாராவேன். இன்னொரு டம்ளர் மூலிகைச்சாறு வயிற்றில் இறங்கும். வாழைத்தண்டு, பாகற்காய்,நெல்லிக்காய்,புதினா முதலான கீரைகளின் சாறுகள் கலந்த கலவை அது.

கருத்துகள் இல்லை: