திங்கள், 22 ஏப்ரல், 2019

நாய்க்கனேரி 1

இயற்கை உணவு அப்பவே இருந்துச்சு. வயலுக்கு நடுவே மாமரம், ஊடு பயிரா மிளகா,தக்காளி,கிணத்துலே குறவை மீனு. மாங்காய நசுக்கி,மிளகாய் கூட வச்சு, பம்ப் செட்ல உப்பு எப்பவும் இருக்கும், கலந்து சப்புக்கொட்டி சாப்பிடறது பங்காளியோட. சில நேரம் கிணத்துலே மீன புடிச்சு, காய்ஞ்ச தென்ன மட்டையை கொளுத்தி வேக வச்சு,உப்பு மிளகா சேத்து ருசியா சாப்பிடறதும் உண்டு.
மலையோரம் ஓடையை ஒட்டி ஈச்ச மரங்க, பழுத்து பழங்க கீழ கொட்டி இருக்கும்,சாப்பிட அவளோ சுவை,சதை கம்மி,கொட்ட தான் பெருசு.தெரு முனைலே டீக்கட வாசல்ல மாமனுங்க இருப்பாங்க,வாடா போலீஸ்காரன் பையானு கூப்பிடுவாங்க.டீயும் பொறையும் ஓசிலே கிடைக்கும். அதுவே காலைலனா இட்லி தண்ணியா சாம்பாரோ,சட்னியோ,ஆனா செம்ம டேஸ்ட்.
காலைல டீ குடிக்கறதுக்கு முன்னாடி வேப்பங்குச்சிலே பல் விளக்கிடனும்,பெட் டீலாம் பழக்கமில்லே.
சொந்தக்காரங்க எல்லாம் கூப்பிடறதே் கண்ணுனு சொல்லி, வா கண்ணு சாப்பிடலாம்னு கூப்பிட்டு தேக்கு இலைலே கைக்குத்தல் அரிசி, துவரம்பருப்பு,கத்தரிக்கா சாம்பார் அந்த சுவை வேறெங்கையும் கிடைக்காது.
பஸ் வசதிலாம் கிடையாது அப்ப. ஊருக்கு போறப்பலாம் சின்ன வயசுலே அப்பாவோட தோளும் நடையும், கொஞ்சம் பெரியவனானதும் நடை அப்பாவோட,
அம்மா ஊருக்கு எனக்கும் தங்கச்சிக்கும் காது குத்தினப்ப மட்டும் வந்ததா ஞாபகம். சுமார் அஞ்சு கிமீ கட்டுப்படிலேர்ந்து நட தான். போர வழில கடல்போல ஓட்டேரி, அங்கருந்து 2 கிமீ இருக்கும், இருந்தாலும் ஊரே வந்த மாதிரி குஷி.
அப்பா தூரத்துல தெரியற தென்ன மரங்கள காட்டி,அதோ அந்த மரத்த தாண்டனா ஊருன்னு சொல்லியே நடக்க வப்பாரு சிணுங்கிட்டே நட தான், வேறென்ன.
ஊருக்கு திரும்பற இடத்துல இன்னொனு சின்னதா ஏரி் அது முடிஞ்ச உடனே மாமனோட தென்னந்தோப்பு, எதுருலே எங்களதும் பங்காளிகளதும் நிலம். இளநீரோ, நுங்கோ நிச்சயம்.
எல்லாரு பார்வையும் என் மேல,மதராசு போலீசு மாமா பையன் வந்துட்டாண்டி, தீ போல ஊர் முழுக்க வரவு சேதி பரவும்.
ஏழு மணிக்கெல்லாம் ஊரே அடங்கிடும்,காலைல நாலரைக்கே மாட்டோட சலங்க சத்தம் கேக்கும், சாணம் மொழுவுன திறந்த வெளி வராந்தால இருந்து குடிச உள்ளார, இன்னொரு குட்டித்தூக்கம் போட பாதி்தூக்கத்தோட பாய சுருட்டி எடுத்துட்டு போகணும்.
பெரும்பாலும் மஞ்சம்புல் கூரைக் குடிசைங்க ஒண்ணு ரெண்டு சிமென்ட் வீடு,மண் ரோடு இதான் எங்க கிராமம். சைக்கிளே சில வீடுகள்ளே தான் இருக்கும்.
மஞ்சம்புல்லும் மலைலே இருந்து அறுத்தாந்து கூர வேய்வாங்க.அடுப்புக்கு கூட மலையில இருக்கிற தேக்கு மர கன்னுங்க தான். அத வெட்டி கட்டா கட்டி தலல சுமந்து வரிசையா இறங்கிறதே ஊர்வலம் மாதிரி இருக்கும். தேக்கு அடுப்பெரிக்க, இல சாப்பிட உதவுச்சு. மல முச்சூடும் வளரும்.
மல மேலே ஏறி ஊர பாக்கறதுக்கு ரம்மியமா இருக்கும். ஆட்ட ஓட்டி கிட்டு காலைல போனா  இருட்டறப்ப தான் கீழ வருவா என் அக்கா,பெரியப்பா மக. தூக்குல கூழும், மாங்கா ஊறுகா மதியத்துக்கு சாப்பாடு. ஆட்ட அதட்டற சத்தம் அப்பப்ப எதிரொலிக்கும்.
ஊர் கிணத்துலே தான் நீச்சல கத்துகிட்டேன். கிணத்து பக்கத்துலே ஒரு கொடி ஓடும் ஸ்டாராங்கா இருக்கும்,அத இடுப்புலே கட்டி தண் ணிலே தள்ளி உடுவாரு மாமன் தண்ணி குடிச்சு மூச்சி முட்டி உயிர் போய் வரும். நீச்ச கத்துக்க எத்தன தடவ இப்படி உள்ள தள்ளுனாங்க ஞாபகமில்ல.

கருத்துகள் இல்லை: