திங்கள், 22 ஏப்ரல், 2019

திருவிழா

வாழ்க்கைலே சில விஷயங்க புரியாமலே இருக்கும். சித்திரை பிறந்தா பாட்டி வீட்டுக்கு பரீட்சை‌‌ முடிஞ்ச கையோட.எனக்குத் தெரிஞ்சு நான் தான் பாட்டி, பெரியம்மா, அப்பா ஊருன்னு வருஷா வருஷம் போவேனே ஒழிய அவங்க யாரும் வரமாட்டாங்க. சில நேரம் அது நினச்சு ஒரு மாதிரி இருக்கும்.நாளடைவிலே பழகிடும்
காப்புக் கட்டறதுனு சொல்வாங்க.அது கட்டிட்டா திருவிழா முடியற மட்டும் ஊர விட்டு போகக்கூடாதுனு சொல்வாங்க.
திருவிழாக்கு ஒரு வாரம் இருக்கும்போதே அங்கங்கே பயிற்சி நடக்கும். ஒரு பக்கம் கோல் சுத்தறது,கால்ல கட்ட கட்டி ஆடுறது, புலி மாதிரி ஆடறது,தெருக்கூத்து வசனங்க பேசறது இப்படி ஊரே திடீர்னு களை கட்டும்.
நானும் ஒவ்வொரு முறையும் கோல் சுத்த கத்துக்க பாப்பேன் அது நமக்கு வராது. வேடிக்கை பாக்கறதோட சரி.
கூழ்ப்பானைய தலை மேல் சுமந்து போய் ஊர் எல்லைலே கோயில்லே வச்சிருக்க டிரம்லே ஊத்துவாங்க, பூசைலாம் ஆன பிறகு அவங்கவங்க வந்து பாத்திரத்துலே வாங்கிட்டு போவாங்க, பிரசாதம் மாதிரி.
திருவிழாக்கு முன்னாடி நாள் ராத்திரி அவங்க அவங்க வேண்டி கிட்டபடி வேஷம் கட்ட ஆரம்பிப்பாங்க. புலி மாதிரி உடம்பெல்லாம் பெயின்ட், ஒரு சின்ன ஜட்டி மட்டும் இது ஒரு கும்பல்.
உடம்பெல்லாம் ஊசி குத்தி நூல் கோத்து அதுல  எலுமிச்சம்பழம்,இவங்க தான் கால்ல கட்ட கட்டி ஆடறவங்க,வித விதமான வேஷம் போட்டு இன்னொரு கும்பல், இப்படி ராத்திரி முச்சூடும் தூக்கமில்லாம.
காலைல ஊர்வலம் ஆரம்பிச்சுடும், சாமித்தேர் கூட வேஷம் போட்டவங்க ஆடிட்டே தெருத்தெருவா,முடியறதுக்கு மத்தியானம் ஆயிடும்.
எப்படித்தான் இதல்லாம் தாஙகறங்கனு யோசிக்கறப்ப உச்சகட்டமா ஒருத்தர் முதுகுலே கொக்கிமாட்டி அதுலே உடம்பு தொங்கிட்டே போய் சாமிக்கு மாலை போடுவார், பாக்கவே கஷ்டமா இருக்கும், பக்தியின் உச்சம் அது.

கருத்துகள் இல்லை: