செவ்வாய், 18 செப்டம்பர், 2018

வேற்று வழி இல்லையினி


விலங்கோடு விலங்காக வேட்டையாடி
பகிர்ந்துண்டான் ஆதி மனிதன்
பசி மட்டுமே வயிற்றில் இருந்தபோது 
பாழும் சாதிபேதம் இல்லை மனதில்
பரந்த உலகமே தனதாக் கி
ஊர் விட்டு ஊர் சென்று
உணவைத் தேடினான்
உயிர் பிழைப்பது மட்டுமே மனதில்
நாடுகள் இல்லை நதிகள் பிரிவில்லை
வயிறு நிரம்பிய உள்ளம்
வாலிப முறுக்கில் சுகம்தேட
வந்தது முதல் பிளவு
தன் துணை தன் மக்கள்
தனக்கென ஓர் இடம்
வீடுகள் கிராமம் நகரம்
பெருகிய வட்டத்தில்
பொறாமை சுயநலம் பொல்லாங்கு பலவும்
அமைதிப் பூங்கா காடானது
மனிதனை மனிதனே கொல்லும்
விலங்குத் தன்மை வந்தது
வேற்றுமை பாராட்டி
வெட்டி மடிந்து மானிடன்
விலங்கினும் கீ்ழானான்
வேதனை தான் என்றானது
வே
ற்று வழி இல்லையினி
மானுடம் மெல்லச் சாகும் !

விடிவு இல்லை

ஊருக்கு ஒரு பாதை இல்லை 
ஓடுகிற ஆற்றின் குறுக் கே ஒரு பாலம் இல்லை
விவசாயி வாழ்க்கை உயரவில்லை
கழனியில் வேலை செய்ய ஆளே இல்லை
நெல் விளயும் பூமிக்கு நீருமில்லை
வெள்ளக்காடாய் ஒரு பக்கம்
வெடிக்கும் பாலையாய் மறுபக்கம்
ஊருக்காய் உழைத்த உத்தமர் மறைந்தார்
ஊரை ஏய்க்கும் எத்தர் எங்கும்
கேட்கவும் ஆளில்லை செய்யவும் ஆளில்லை
எனைப் போன்றோர் எழுதும் வரிகள்
பட்டாணிக் கடையில் பொட்டலமாய்
பஜ்ஜிக்கடையில் வடிகட்டியாய்
விடிவும் இல்லை விடையும் இல்லை

அவசர உலகம்

தென்றல் வந்து எனைத் தொட்டுப் போகும்
தேமதுரத் தமிழோசை கேட்கும்
காலையிளம் கதிரவன் கண்டு புள்ளினங்கள் கூடு துறக்கும்
காளை பூட்டிய வண்டியில் சலங்கை ஒளிக்கும்
சாணம் தெளித்த வீதிகளில் மாக்கோலம் விரியும்
சாத்திரங்கள் ஓதும் சான்றோர் குரல் கேட்கும்
ஏர்பூட்டி உழவுக்கு ஏற்றம் இறைக்கும்
எண்ணிப் பார்த்தேன் எத்தனை அழகு
அனைத்தும் மாறிய அவசர உலகம் என்செய்வேன் !

அமைதியுண்டு

காட்டு மலருக்கும் வாசமுண்டு
காக்கைக்கு கரைந்துண்ணும் குணமுண்டு
சேற்றிலே செந்தாமரை மலர்வதுண்டு
பாதைகள் கரடானாலும் பயணங்களுண்டு
படிக்காத மேதைகள் பாரினிலுண்டு
படித்தும் பண்பில்லா மாக்களுமுண்டு
வறண்ட பாலையில் சோலைகளுண்டு
வளமான நிலமும் வறண்ட பாலையாவதுண்டு
ஏற்றமும் இறக்கமும் எதிலுமுண்டு
ஏற்றிடும் மனதில் நிம்மதியுண்டு
போற்றலும் தூற்றலும் பாரினிலுண்டு
போகட்டும் விட்டுவிடு் அமைதியுண்டு

மனிதவாழ்க்கை

அன்புக்கும் அணைப்புக்கும்
பண்புக்கும் பாசத்துக்கும்
உறவுக்கும் உரிமைக்கும்
ஏங்கிடும் மனித வாழ்க்கை
உண்மைக்கும் பொய்க்கும்
நன்மைக்கும் தீமைக்கும்
பொறுமைக்கும் கோபத்திற்கும்
இடைப்பட்ட மனிதவாழ்க்கை
காதலுக்கும் காமத்திற்கும்
கருணைக்கும் கயமைக்கும்
கருத்துக்கும் உணர்வுக்கும்
ஊசலாடும் மனிதவாழ்க்கை
சாதிக்கும் மதத்திற்கும்
நீருக்கும் நிலத்திற்கும்
உணவுக்கும் உரிமைக்கும்
போராடும் மனிதவாழ்க்கை
அனைத்தும் அமையாத
அடிப்படை வாழ்வுதேடி
அலைந்தே காலமெல்லாம்
அடங்கிப்போகும் ஒருநாள் !

தாயாக நீ

எனக்காக நீ அழுத காலங்கள் போய்
உனைத் தேடி உருகவைத்தாய்
ஓர் அடி வைத்த பாதம் முத்தமிட்டாய்
ஓராயிரம் அடிவைத்தாலும் உனைச்சேர முடியாது
கவளச்சோறூட்ட நிலா அழைத்தாய்
காணாமல் இன்று நிலவுக்கும் அப்பாலே
கண்ணே கனியமுதே என்றவளே
கண்ணுக்கும் எட்டாத தொலைதூரத்தில்
கன்னத்தைக் கிள்ளி நகைத்த நீ
கண்மூடிப் பார்த்தாலும் காணவில்லை
கள்ளமற்ற உன் உள்ளம்
காணக் கிடைக் கவில்லை
காத்திருக்கேன் பலகாலம் உனக்காக
தாயாக நீயும் தவழும் குழவியாய ்நானும்
இன்னொரு முறை விளயாடுவோமா ?

மனக் கசடு

மீண்டும் மீண்டும் சொல்வேன்
மத மொழி சாதியற்ற
மக்களே என் உறவினர்
மண்ணில் மாச்சர்யம் எதற்கு
இன்றிருப்போர் நாளைஇல்லை
இங்கிருக்கும் எதுவும் உனதில்லை
இயன்றவரை இல்லார்க்கு உதவு
இழிவாக எவரையும் எண்ணாதே
இறை பெயரால் இழிசெயல்
வர்ணவேற்றுமை தீண்டாமை
அறவே அழித்து விடு
அறம் வளரப் பாடுபடு
நாட்டுக்கும் நகருக்கும் நன்மைசெய்
நல்லதோர் தலைவனை தேர்வுசெய்
மனக் கசடுகளை கழுவிடு
மக்கள் அனைவரும் உற்றோரே
மாயக் கண்ணாடியைக் கழட்டு
இனியேனும் இவ்வுலகம் அமைதியுறும்
மாறுமாறவிடு இல்லையேல் மரித்துப்போ !

பேச்சு பேச்சா தான் இருக்கு

ஆத்து வெள்ளம் வீணாப்போது 
அணை கட்டு ஐயா
ஏரு பூட்டி உழறதுக்கு
ஏத்த உதவி செய்யுமய்யா
ஏரி குளம் தூர்வாரி
எங்க ஊருலே தண்ணி தேக்கு
நெல்லுக்கும் கரும்புக்கும் நீர்பாய்ச்சுனா
நீயும் நானும் முப்போகம்
விளைய வச்சு விவசாயம் செழிக்குமய்யா
ரோடு போடு குண்டு குழி மறை
நகரத்துலே ஆங்காங்கே பாலம் கட்டு
முடிக்காத பாலமே ஏராளமா இருக்கு
இதுக்குள்ளே எட்டு வழிச்சாலை எதுக்கு
எத்தனையோ வேல இருக்க
இதுக்கு மட்டும் அவசரமோ !
மல்லையா கோடி வருசம் பலவாச்சு
மத்தவங்க கோடி சுவிச் வங்கியிலே
கருப்பு பணம் சேரந்துகிட்டே இருக்கு
புது நோட்டு வந்தாலும.
உம்ம ஆளே பதுக்கறான்
பேச்சு பேச்சா தான் இருக்கு
சொன்னதைச் செய்யுமய்யா
கார்ப்பரேட்டுங்க மட்டும் இல்ல
கிராமங்களும் கொஞ்சம் கவனி
சொன்ன வார்த்தை காப்பாத்து !

இறைவனாகு

சொல்லித்தா சொல்வதை நன்றே
எழுத்தறிவித்த இறைவனாகு
தாய்மொழியோடு பழகு
மற்றமொழி ஏற்றாலும்
தாயை மறவாது இரு
கல்விக்கு வரம்பில்லை
கல் பலவும் கல் கருத்தில் கொள்
அள்ளக் குறையாதது
ஊற்று நீர் போல
சென்றவிடமெல்லாம் சிறப்பு
காசுக்கு கல்வி தரும்
கசடரை நீக்கு
அனைவர்க்கும் சமமாய்
அனைத்து ஊர்களிலும்
இலவசக்கல்வி இதுதான் தேவை !

விடியல் தேடு்!

காசுக்கு விலைபோன என் மக்களே !
காதையும் வாயையும் மூடியதேன் சொல்வீர் !
தூண்டில் புழுவுக்கு மீனாய் சந்தையிலே 
கால்காசு கொடுத்து கோடியிலே அவன் புரள
கால் வயிறு நிரம்பாமல் தெருக்கோடியில் நீ
காமராசல்ல இவர் கசடர் அறியவில்லை
கடமையே கண்ணென்பது அந்தக்காலம்
காசேதான் கடவுளடா இந்தக் காலம்.
இரண்டு நாள் இன்பத்திற்கு ஆண்டுகள் தொலைத்தாய்
நல்லவர் ஒருவரை ஊர்தோறும் தேடு
அரசுக்கட்டிலில் அமர வழிவகை செய்
ஆயிரம் காமராசர் அப்போது வ்ருவார்
கற்றுக்கொள் கசடு நீக்க காலம்கடக்குமுன்னே
விட்டில் பூச்சியாய் விளக்கில் மடியாதே்!
விழித்தெழு விரைந்திடு விடியல் தேடு்!

புரட்சி

என் நாட்டுக்கு என்னென்ன வேண்டும்
வறியவர் வயிற்றுப்பசி போக்கிட வளமை வேண்டும்
வயிறார அவர் உண்ண உணவு வேண்டும்
வயலுக்கு நீர் பாய்ச்ச ஊர்தோறும்
ஏரி குளங்கள் ஆறு வேண்டும்
அணைகள் ஆங்காங் கே அமைய வேண்டும்
ஊர்தோறும் சாலை ஊர்திகள் வேண்டும்
காடுகள் கழனிகள் கால்வாய்கள் வேண்டும்
ஊருக்கு ஒன்றாய் உண்மைத் தலைவர் வேண்டும்
உழைத்தே அனைவரும் உண்ணல் வேண்டும்
எம்மதமும் சம்மதமாய் எம்மொழியும் தன் மொழியாய்
ஏற்றிடும் உள்ளம் எல்லோர்க்கும் வேண்டும்
ஓட்டு அரசியலன்றி ஊருக்காய் அரசு வேண்டும்
இத்தனை மாற்றமும் இன்றைய தேவை
இதுதான் புரட்சியென்றால் இப் போதே வேண்டும் !

காத்திருப்பேன் நானே !

உனக்கென நானும் எனக்கென நீயும்
உருகிக் காதலித்த நாட்கள் எங்கே
உறக்கம் தவிர்த்து உன் நினைவாக
உறைந்த இரவுகள் எங்கே
இமைமூடி இதமான உன்நினவை
இதயக் கூட்டில் சுமந்த நாட்கள் எங்கே
உன்உடல் சூட்டில் குளிர்காய்ந்து
உரசும் உன்தோளில் சாய்ந்து
கண்ணோடு கண்பேசி காதலுற்று
கையோடு கைகோர்த்த நாட்களெங்கே
ஆறுதல் வார்த்தை அணைப்பு
இணைந்த உதடுகள் எங்கே
இருக்கும் காலமெல்லாம் உன்காலடி
இதுதானே நீசொன்ன சொற்கள்
இரக்கமில்லாமல் இனியேனும் விலகிநில்லாமல்
விரைந்து வந்திடு காதலியே
வழிமீது விழிவைத்து காத்திருப்பேன் நானே !

மனிதரே பகைவர்

வானத்தில் பறக்கும் வல்லூறு
பூமிமேல் காணும் கோழிக்குஞ்சு
வனத்தில் வலம்வரும் புலி
காற்றினும் விரைந்திடும் புள்ளிமான்
நீரினுள் உறையும் முதலை
நிலத்தின் வாழும் உயிரினம்
புற்றுக்குள் வாழும் பாம்பினம்
பதுங்கும் வாலினம் எலிகள்
பகையென்றும் பசியென்றும் வந்தால்
பாய்ந்தே தன்னுள் அடக்கிடும்
மனிதருக்கு மட்டுமே மனிதரே பகைவர்
மதமென்று மொழியென்று மண்ணென்று
நீருக்கு நீண்ட வான்வெளிக்கு
கடலுக்கு காற்றுக்கு கால்வாய்க்கு
கற்பனைக்கும் எட்டாத எல்லாவற்றுக்கும்
ஏனிந்த ஆட்டம் வாழ்வதோ சிலநாட்கள்
ஆறடி நிலமொன்றே சிலருக்கு
ஆற்றுநீரில் கரையும் சாம்பலாய்
அனைத்தும் அறிந்தும் அடங்கமாட்டாயா ?

காலமின்னும் இருக்கு !

கண்ணின் இமைமூடி கண்ணுறங்கு மகனே
காலம் பலவிருக்கு காரியமாற்ற
கருக்கல் முதலாய் கதிரவன் மறையும்வரை
மகனாய் கணவனாய் தலைவனாய்
மாறிடும் காலமெல்லாம் ஓயாத உழைப்பு
உனக்கென வாழும் நேரம் குறைவு
உரியவர் உடன்பிறந்தோர் உன்னவள்
உனைச்சுற்றி உறவுகள்
வாழ்க்கை நீண்டிடும் வசதி தேடும்
ஓட்டம் நிற்காது ஓடும்பாதை நீளம்
ஓயும் நேரம் உடலும் ஓய்ந்திடும்
கண்மூடி உறங்கு காலமின்னும் இருக்கு !

இரவல் எண்ணங்கள்

இரவு முதிர்ந்து இளைய காலை மீண்டும் உதயம்
இதய வானில் உலவும் உறக்கமற்ற இரவுகள்
இளமைக்கும் முதுமைக்கும்
உறக்கமில்லை
இரவானால் இரவல் எண்ணங்கள்
இருண்ட கண்ணுக்குள் ஆயிரமாயிரம் வண்ணங்கள்
இதற்கும் மேலே என்ன நடக்கும்
விடைகாணத் துடித்து வினாடிகள் பெருகி
விடியும் வேளையில் களைத்த கண்கள்
விழிமூடி உறக்கக் கூட்டில் அடங்கிப் போயின !

வேடிக்கை மனிதரடா!

கிறித்தவம் வேண்டாம் இசுலாம் வேண்டாம்
டாலர் வேண்டும் தினார் வேண்டும்
பைபிள் வேண்டாம் குர்ஆன் வேண்டாம்
தொழில் முனைவோர் பெட்ரோல். வேண்டும்
சர்ச் வேண்டாம் மசூதி வேண்டாம்
தளவாடங்கள் சொகுசுக்கார்கள் வேண்டும்
ஆங்கிலம் வேண்டாம் உருது வேண்டாம்
அந்நிய நாட்டில் அனைத்து வேலை வேண்டும்
அவனை இங்கே அடித்து நொறுக்கி
அவன் நாடு சென்று அனைத்தும் கேட்போம்
எவனும் வேண்டாம் எதுவும் வேண்டாம்
பொருள் கல்வி தொழில்
இவை வேண்டும் இன்னமும் வேண்டும்
வேடிக்கை மனிதரடா வேலவா !

உயரட்டும் உன்னதநாடு !

வள்ளுவனைத்தந்த தமிழினமே
வாழ்விலக்கணம் வகுத்தது நீயே
வரலாற்றில் வையகம் சேர்த்தாய்
வான சாத்திரத்தில் விற்பன்னரானாய்
வேதங்கள் படைத்து் வேள்விசெய்தாய்
பொற்றாமரைக்குளம் சங்கம் வளர்த்தாய்
புகழ்பாடும் புலவர்க்கு பொற்காசு ஈந்தாய்
பாண்டியன்சேரன் சோழன் பல்லவன்
பரங்கியரை பதறவைத்த மன்னர்கள்
வீரம் விளைந்த நாட்டிலின்று வீண்பேச்சு
விட்டில் பூச்சியாய் இலவசத்தில் அழியாதே
விழித்தெழு வீறுகொள் ஒளிர்விடு
விரைந்து செயல்படு உயரட்டும் உன்னதநாடு !

இறைவா நன்றி உனக்கு !

இனிய காலை இரவின் மறைவு
கதிரவன் வரவு காரிருள் விலகல்
புள்ளினங்கள் கூடு துறந்து 
இரை தேடும் பயணம்
புத்தம் புதுக் காலை
பூபாளம் இசைக்கும் நேரம்
கூவும் குயிலின் கானம்
கூடவே கிளிகளின் கீதம்
இயற்கையின் இன்ப விளையாட்டு
சுட்டெரிக்கும் சுடராய்
சுகமான தென்றலாய்
தூரத்து இடிமுழக்கமாய்
தூறும் மழையாய்
மலையின் அருவியாய்
மான்களின் துள்ளலாய்
மயிலின் தோகையாய்
மந்தியின் சேட்டையாய்
கானகமாய் பசுஞ்சோலையாய்
எத்துணை கொடுத்தாய்
இறைவா நன்றி உனக்கு !

ஆயிரம் கரத்தோனே ஆதவனே

ஆயிரம் கரத்தோனே ஆதவனே
ஆண்டுகள் பலவானாலும் ஆறாது உன் ஆற்றல்
ஆயுள் நீட்டிக்க நீ மருந்தே
காய்கனி காடு கழனி கார்மேகம்
நீயின்றி இவையில்லை 
இருளுக்கு எதிரி குளிருக்குப்பகை
இவையாவும் மறுக்கவில்லை
ஆயின் சுட்டெரிக்கும் சுடராய்
சிலகாலம் நீ சீறுவது ஏன்
மறந்துவிடுவர் மக்கள் உமையென்றா ?
மழை கொண்டு வந்து
மனம் குளிரச் செய்வாயா ?

வேதனையே மிச்சம் !

தீண்டாமை வேண்டாமென்றேன்
தீய சாதிப்பிரிவினை வேண்டாமென்றேன்
பார்ப்பனர் பரையர் பிரிவு வேண்டாமென்றேன்
பாகுபாடு ஆலயங்களில் வேண்டாமென்றேன்
மொழிகள் மதவேற்றுமை வேண்டாமென்றேன்
சிறார் திருமணம் வேண்டாமென்றேன்
கட்சிகள் பலவும் வேண்டாமென்றேன்
கருப்புப் பணமும் வேண்டாமென்றேன்
ஆண் பெண் பேதம் வேண்டாமென்றேன்
ஊழல் அறவே வேண்டாமென்றேன்
ஊருணி நீரை அணைபோட வேண்டாமென்றேன்
ஓட்டுக்கு பணம் வேண்டாமென்றேன்
காயப் படுத்தும் ஆலைகள் வேண்டாமென்றேன்
காலம் மட்டுமே மாறியது இங்கே
வேற்றுமை வெறும்பேச்சு பேதங்கள்
சாக்கடையாய் சமுதாயம் மாற்றமில்லை
சமாதானம் சமதர்மம் சிறிதுமில்லை
வேண்டாமென்றேன் இவ்வுலகம்
வேடிக்கை செய்கின்றார் வேதனையே மிச்சம் !

மனிதர் மாறுவரா ?

சொல் வளம் பொருள் வளம்
நீர வளம் நில வளம்
பல் வளமும் பெருகி
பாரதம் சிறக்கப்  பாடிடுவோம் !
பசியில்லா மனிதர் 
பகையில்லா தேசம்
பண்புள்ள மனிதர்
பாட்டுக்கு மட்டுமா ?
மனிதர் மாறுவரா ?
மனமும் பண்படுமா ?
மாக்களும் உறவு தேடும்
மானிடம் பகையை விடுமா ?
மாசற்ற உள்ளம் உண்டா ?
மண்ணுக்கும் பணத்துக்கும்
ஆசை கொண்டே
மாபாதகம் செய்யுமிவரே
மாறிடும் நாள் உண்டோ ?
வேதனையே வாழ்க்கை என்றால்
வேற்றுலகம் செல்வேன் நானே !

அம்மாவுக்கு ஒரு பாட்டு

அம்மாவுக்கு ஒரு பாட்டு
அன்னை தாலாட்டுக்கு ஒன்று
ஆராரோ பாடி அமுதூட்டிய தாய்க்கு
உயிர் கொடுத்த உத்தமிக்கு
உதிரம் பாலாய் ஊட்டியவளுக்கு
எனக்காக கண்விழித்த கண்மணிக்கு
எண்ணற்ற தியாகம் செய்த அவளுக்கு
கடல் அளவு பாசம் வானளவு வாஞ்சை
கிடைக்குமா இன்றும் எப்போதும்
உன் பாசக் கரங்களுக்கு
உலகையே ஈடு கொடுக்கலாம்
மீண்டுமொருமுறை உன் வயிற்றில்
பிறந்து தாயே
உன்மடி சேர வேண்டும்
வரம் தருவாயா 
காத்திருக்கிறேன் !