திங்கள், 25 பிப்ரவரி, 2019

முறையா இறைவா

முறையா இறைவா
திரண்டு வரும்வேளை
தாழி உடைதல் சரியா ?
பல ஆண்டுகள் பார்க்காத
பலதிசை நண்பர்கள்
ஒன்று கூட சிலநாட்களே
ஒவ்வொன்றாய் மூன்று
ஏனிந்த அவசரமுனக்கு
அணையாத தீபங்களாய்
உலகைத் துறந்தாலும்
எம் உள்ளங்களில் என்றும்
உம்நினைவு அழியாது !

பாசம் தொடரட்டும் !

நன்று ஒரு நாளும் வர
தொன்று தொட்ட நட்பு வர
அன்று விட்ட கதை தொடர
கன்று கண்ட பசுவினைப் போல்
இன்று நண்பர் யாவரும்
நன்றி போற்றும் நாயினைப் போல்
குன்றா மகிழ்வோடு குவலயம் எங்கும்
பன்று தொட்டு வரும் பாசம்
இன்று நாளையின்றி என்றும் தொடரட்டும் !

இலங்கை

இலங்கை என்றால் சீதைராமன்
ராவணன்
தேயிலை ரத்தின கற்கள் கடல்மலை
தேடிச் சென்று பார்த்திட பலவிடங்கள்
நண்பர்கள் குழுவோடு நல்லதோர் பயணம்
பசுமை எங்கும் மலை முகடுகள்
குதூகலம் கொண்டாட்டம் பாட்டு பரவசம்
வயதில்லை வாலிபம் வாலில்லாக் குரங்கு
பழைய நாட்கள் மீண்டும் உற்சாகம்
பறவைகள் தம்கூடு விட்டு வந்தன
எத்தனை மகிழ்ச்சி என்றும் தொடரட்டும் !

கற்பனை உண்டு

கவிதை செய்ய நானுண்டு
கற்பனை உண்டு
காற்றைப் போல்
காசில்லா சுவாசம்
மூச்சடக்கி முத்தெடுப்போம்
மணிமாலை தொடுப்போம்
மாணிக்கம் மரகதம்
பவழம் கோமேதகம்
நீலக்கல் இரத்தினம்
நடுநடுவே இணைப்போம்
சங்குக் கழுத்தில் சூடி
மகிழ்வோம் மனம் குளிர்வோம்

பசுமையெங்கே

எட்டி நடைபோடு போகும் தூரம் அதிகம்
நெட்ட நெடு மரமெல்லாம் கருகி நாளாச்சு
குட்டை நீருக்கும் வழியில்லை காயுது வயிறுமிங்கே
பட்ட காலிலே படுமென்றார் சுட்ட காயங்கள் வடுக்களிங்கே 
கொட்டும் மழையில்லை கோடையில் நீரில்லை 
பட்டினிச் சாவு பரிதாபம் பாரதி இல்லை பாட
கெட்டும் பட்டணம் போனால் கேட்க நாதியில்லை
கட்டுக் கட்டாய் பணம் சேர்க்க கும்பல்
பிட்டுக்கு மண்சுமந்த இறைவன் காப்பானா ?
பட்ட மரமாய் மனிதர் இங்கே பசுமையெங்கே
சுட்டும் விழிச்சுடரே சுடுவதெப்போ கயவர்களை
எட்டுக்கும் பத்துக்கும் அலையும் ஏழையர் உயர்வரோ
சுட்டிக் காட்டிவிட்டேன் சூழும் பனிநீக்கு !

நாளைய சமுதாயம்

கேள்விகள் பலவுண்டு பதில் சொல்ல ஆளில்லை
காசுக்குப் பணியாத கயவர்கள் இங்குண்டா
வாய் திறந்தால் பொய்யன்றி வேறுண்டா
வானத்து நட்சத்திரம் உன்வாசல் வருமா
கோடியில் புரண்டு குடிசையில் வாழ்வரோ
கோமாளி நீயாநானா கேட்டுப் பார்
ஓட்டுக்குக் கூட்டணி காலையும் தொடுமா
ஓயாத பகையும் ஒரேநாளில் ஓயுமா
பகை நாட்டில் ஓட்டிருந்தால் நாடே விலை போகும்
யாருக்கும் வெட்கமில்லை எதையும் உண்போம்
யாசகம் என்ன வஞ்சகமும் செய்வோம்
மக்களுக்கு அல்ல மகளுக்காக மகனுக்காக
மலைபோல சேர்த்து வைப்போம் மறுபிறவிக்கும்
சேற்றில் உழைக்குமவன் மண்ணோடு போகட்டும்
சேர்த்த சொத்தோடு சமாதிக்கு தங்கப்பேழை செய்
நாளைய சமுதாயம் சாக்கடை ஆகட்டும்
நாம் மட்டும் சந்தனக் கட்டிலிலே உறங்குவோம்!

மழலைச்சொல்

தத்தித் தவழ்ந்து
தாழ்வாரம் சுற்றி
பிஞ்சு மொழியில்
பிதற்றி புன்னகைத்து
வாயோரம் எச்சிலுடன்
வலம் வரும் பாப்பா
கொஞ்சு மொழியில்
வார்த்தைகள் உளறி
உற்று எனைநோக்கி
உம்மா என்றாயே
உன்மொழி எதுவென்று
அகராதியில் தேடுகிறேன் !

மௌனம் பேசும்

நீ உறங்கிய வேளையில் விழித்திருந்தேன்
இமைகளை மூடிட விழையவில்லை 
விழிகளில் நீ
காலம்தான் எத்தனை வேகம் பறந்தோடிற்று
கைகள் இணைந்து நடந்த நாட்கள்
காற்று ஊடுருவ கைகள் இறுகும்
மனதினில் எண்ண ஓட்டம் மயக்கநிலை
மந்திரச் சொல்போல் உன் வார்த்தை
பேசிப் பேசியே பொழுதெல்லாம் கடக்கும்
பேசாமலே சிலநாட்கள் மௌனம் பேசும்
பிரியும் சிலநேர
ம்  பித்தம் பிடிக்கும்
தெரிந்தே சிலநாட்கள் தேம்பி அழும்
ஓய்ந்து போயிற்று உடலின் சுழற்சி
ஓடமுடியாத வயதில் ஒவ்வொன்றாய் மனத்திரையில்

இனியவை செய்து வாழ் !

பொன்னும் பொருளும் உன்னோடு வாரா
என்றும் துணையாக மனையாளும் இல்லை
கண்ணே மணியே என்ற உறவும் தொடரா
மண்ணுக்குப் போகும் உடலோடு யாதுமில்லை
சொல்வதற்கு எளிதே செல்வம் சேரவழி
சொத்து சேர்ந்தபின்னே சொர்க்கம் வருமோ
கட்டுக் கட்டாய் பணமிங்கே பிணம் எரியூட்டுமோ
காசுபணம் சேர்த்தே காலமெல்லாம் போச்சே
காலன் வரும் வேளை கண்விழிப்பு வருமோ
கடவுளே என்ற கூக்குரலும் எழுமோ
என்ன வாழ்க்கையடா மானிட நண்பா
எதைக் கொணர்ந்தாய் எதனைக் கொண்டு செல்வாய்
இன்று இருப்போன் நாளை இல்லை
இருக்கும் காலந்தனில் இனியவை செய்து வாழ் !

கால இயந்திரம்

வந்தியத் தேவனாய் இளஞ்செழியனாய் 
அருண்மொழிவர்மனாய் சரித்திர வீரனாய்
பிறந்து போரிட ஆசை
மார்பிலே ஏற்ற விழுப்புண் கணக்கிடவும்
அரண்மனைச் சாரளத்தில் நின்று தொலைநோக்கி
அகில உலகும் ஆண்ட பரம்பரையாய்
தோள்கள் தினவெடுக்க 

புரவியேறி காடுமேடெல்லாம்
காற்றினும் விரைந்து சுற்றிவரவும்
பாய்மரக் கப்பலேறி கடல்கடந்து சென்று
வணிகம் வளர்க்கவும் வசப்பட வைக்கவும்
மனதிலே பலப்பல ஆசை உண்டு
கல்கி சாண்டில்யன் பாத்திரங்களாய் மாறி
மஞ்சளழகி குந்தவை யவனராணி எமிலி
நாயகியரோடு வலம் வரவும் உறவாடவும்
நான் என்ன செய்ய வேண்டும்
பின்னோக்கிச் செல்ல கால இயந்திரம் வேண்டுமோ ?

தொலைந்தது திரும்பும்

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
அருகில் இல்லாமல் தூர விலகப் பெருகும்
முதுமையில் உடல் ஓயும் வேளை
முதலில் இருந்து தொடங்கும் துணைதேடும்
வட்டம் சதுரம் நீளம் அகலம்
வானம் வரை சென்று திரும்பும்
மறந்த உறவுகள் மறைவு துறக்கும்
மறுபடி ஒன்று கூடும் மகிழ்ந்திருக்கும்
தூரம் துச்சமாகும்
தேடும் தோள் சாய்ந்திருக்க அணைக்க
தொலைந்தது திரும்பும் துணை இருக்கும்
உணர்வு உள்ளம் நிறையும் உருகும்
உதிர்க்கும் கண்ணீரில் உண்மைப் பாசம் தெரியும் !

கோழையே

முதுகிலே குத்தியே பழகிய கோழையே
முட்டாளே இதுவா உன் இராஜதந்திரம்
நேருக்கு நேர்நி்ன்று போரிட்டு என்னாயிற்று
நேர்ந்த கதைகேட்டு உள்ளம் கொதிக்குதைய்யா
மறைந்திருந்து கொல்லுதலே உன் வழக்கமாயிற்று
மார்பிலே போர்க்காயம் தாங்கிய வீரர்எம்மவர்
போரிட்டுப் பார் புறமுதுகு காட்டி ஓடுவீர்
போதாதா எத்தனை தோல்விகள் உமக்கு
ஓட ஓட விரட்டி நாட்டையும் இழந்தீர்
ஓயாத தொல்லைநீர் பொறுமைக்கு எல்லையுண்டு
வெகுண்டெழுந்து துவம்சம் செய்தாலே
வெறும் காடாக மாறும் உம்நாடு !

காதல் அழியாதது

காதல் சாதி மதம் வயது கடந்தது
கற்பனை ஓவியம் காவியம் படைத்தது
வெற்றி தோல்வி விரக்தி கடந்தது
நேற்று இன்று நாளையும் தொடரும்
நேர்ந்திடும் சோதனை எதிர் கொள்ளும்
வீழ்ந்திடும் மீண்டும் எழும் போராடும்
வீரம் சிலநேரம் விளையாடி மகிழும்
கண் இல்லை என்பார் கருத்துண்டு
கண்ணிமை போல் காக்கச் சொல்லும்
தூரங்கள் துச்சமாகும் துணிவு பிறக்கும்
தூய்மைக் காதல் மட்டும் அரிதாகும்
தூக்கம் தவிர்க்கும் பித்தம் பிடிக்கும்
தூரிகை பேனா மை எல்லாமே ஆயுதம்
அழியாதது அரசனையும் விடாது தொடரும்
அகிலம் உளநாள் மட்டும் உடனிருக்கும் !

என்ன எழுதுவேன்

என்ன எழுதுவேன் ஏதோ ஒன்றா
எதுகை மோனை வருமா எழுத்தில்
காதல் இயற்கை சமுதாயம் அறிவுரை
கற்பனைக்கு கடிவாளம் உண்டா இல்லையா
கருத்து சொல்லவா வேண்டாமா கேள்விகள்
வெறும் வார்த்தை ஜாலமா வேடிக்கையா
பொறுப்பாய் அழகுத் தமிழில் வடிவமைக்கவா
இத்தனை கேள்விகள் மனதில் இருந்திட
புத்தனை நினைக்க மன அமைதி கொள்ளும்
பாரதியை நினைக்க ரௌத்திரம் பெருகுமோ
கம்பனை நினைக்க காவியம் தோன்று்மோ
கண்ணனின் தாசன் நினைக்க பாடல் வருமோ
நினைத்துக் குழம்பி நித்திரை கலைய
நிதமொரு கவிதையாய் இதுவே இன்று !

கற்பனையாறு

கற்பனையாற்றில் கவிதைப் படகோட்ட
எண்ணத் துடுப்பை கையிலெடுத்தேன்
கடல் நீரா ஆற்று நீரா ஏரியா
துடுப்பின் விரைவு வெவ்வேறாய்
படகின் ஓட்டமும் பலவிதமாய்
கைகளின் வலிமை வேகமூட்டும்
காற்றின் திசைக்கு வழிசேர்க்கும்
நீரின் அலைகள் நிலைதடுமாற்றும்
முகமதில் குளிர்காற்று மோதும்
முத்து முத்தாய் நீர்த்திவலைகள் தெறிக்கும்
தொலைதூரப் பசுமை காட்சியாகும்
தொலைந்தே போகும் மனக்கவலை யாவும்
உலவிடும் போது உள்ளம் குதூகலிக்கும்
உற்சாகம் பொங்கும் குழந்தையாய் மாறும்
செடிகொடிகள் ஊடே வளைந்து செல்லும்
சேருமிடம் வந்து முற்றுப்புள்ளியாகும்!

ஏனிந்தக் கோபம் ?

மேக ஆடை முகம் மறைக்க
மெல்லியலாள் நிலா முகத்தாள்
கணநேரம் ஒளி இழந்தாள்
கண்ட வான் வெளியோ
முகம் சுருங்கி இருண்டான்
மலையரசன் கோபம் கொண்டான்
காற்றின் வரவால் கலைந்த மேகம்
நிலாமகள் முகம் காட்ட
கண்சிமிட்டும் தாரகைக் கூட்டம்
களுக்கென்று சிரித்து மகிழ
மலையரசன் முகமதில் ஒளிவெள்ளம்
கணப்பொழுதில் எத்தனை மாற்றம்
இயற்கை என்றாலே அழகு !

பக்தி

பக்தி என்று சொன்னார் 
பாடல் ஒன்று வேண்டினார்
எந்த பக்தி யோசித்தேன்
தாய் மீது குழந்தையினதா
தாரமவள் தன்னவன் மீதா
மாணவன் கு்ருவின் மீதா
பக்தனவன் கடவுளர் மீதா
யாதொன்று கொண்டாலும் உயர்வே
மனதில் மகிழ்வொன்று முகிழ்க்கும்
உள்ளம் உருகிக் கசியும்
மனமங்கே ஏகாந்த வெளியில் உலவும்
மன அமைதி கொள்ளும்
தெளி வொன்று பிறக்கும்
உறவொன்று உருவாகி உள்ளுறையும் !

நாற்பதாண்டு தொடக்கம்

கிழக்கு வெளுத்தது கீழ் வானம் சிவந்தது
கீச்சிடும் பறவைகள் கூடு துறந்தன
தொலைதூர கோயிலில் அரங்கன் துதி
தூதுசென்ற அலைபேசி துணையை எழுப்பியது
காலையிது மலர்ந்தாலே காகங்கள் இரைச்சல்
கூட்டை விட்டுப் பறந்து இரைதேட
குளிர்காற்று உடல்தழுவ வேகநடை உடல்குறைக்க
கடற்கரைச் சாலையில் தினம்தினம் காட்சியிது
சென்னை நகரம் விழித்து புதன்கண்டது
சுமந்த நண்பருடன் பலதிசை விமானங்கள்
ஒவ்வொன்றாய் தரையிறங்கி வரவைத் தெரிவித்தன
சரித்திரம் படைத்திட நட்புக்கூட்டம் நகரில்
நாற்பத்தெட்டு மணிநேரமே காத்திருப்பில் ஒருசுகம்
நாள்குறித்த நாள்முதலாய் நாற்புறமும் சழன்ற
கல்லூரித் தோழர்கள் கணக்கிட்ட நேரம்
கடிதில் விரைந்து தேரேறி வருகிறது
நாளிதழ்கள் செய்தியாகச் சொன்ன வார்த்தைகள்
நடந்தேறும் தருணம் சிலமணித் துளிகள்
காத்திருக்கப் பொறுக் கவில்லை இதயத்துடிப்பிற்கு
காணக் கண்கோடி வேண்டும் வந்துசேருங்கள் !

பாட்டு வர மறுக்குதைய்யா

பாட்டு வர மறுக்குதைய்யா
பாடல் சொல்லத் தயங்குதய்யா
வறண்டு போச்சோ கற்பனையே
வளமான வார்த்தை தேடி
கூடுவிட்டுக் கூடுபாயும் சங்கதியோ
கூட்டிப் பார்க்க சொல் வரலே
பாடுபட்டு எழுத வந்தா
பாவியந்த சந்தம் எங்கே
கண்ணை மூடி கிட்டு
கவிதையை யோசிச்சு முடிச்சா
காத்தாடி நூல்போல அறுபடுது
கலைதான் வேணுமோ கருத்துரைக்க
கவிஞர் அவரேதான் அழகழகா
கற்கண்டா கவிதை தந்தார்
காலை ஒன்று மாலை ஒன்று
காய்ச்சலுக்கு மாத்திரை போல்
மருத்துவம் எனக்கும் பாரீர்
மடைதிறந்து கவிதை பாட !

காட்டாறாய் கவிதை

பாட்டுக்குப் பாட்டெடுத்து
பாடுவதே இன்பமன்றோ
தேடிய போதெல்லாம்
ஓடிவரும் வார்த்தைகளை
கோர்வையாய்ச் சேர்த்து
கொஞ்சு தமிழ்ச் சொற்களிலே
கவிதைகளாய்ப் புனையும்போது
கற்பனை ஊற்றெடுத்து
காட்டாறாய் ஓடுதிங்கே
இத்தனை நாள் ஒளிந்துநின்று
வேடிக்கை பார்த்ததுவோ
வியப்பாய் என்னுள்ளம்
விடியும் போதெல்லாம்
மடைதிறந்த மனதில்
வெள்ளப் பெருக்காய்
அருவியாய் என்கவிதை !

அனைத்தும் அனுபவம்

நானொரு மனிதனாக 
நாளொரு பொழுதினில்
புவிதனில் பிறந்ததாலே
புதியதோர் உருவமேற்றேன்
தந்தையும் தாயும்
விந்தையாய் வியந்து
ஈன்ற மகவை நோக்க
பிறந்த நானோ சிரித்தேன்
பிறத்தலும் இறத்தலும்
முதலும் முடிவுமாயின்
இடையினில் நடப்பவை
எழுதிய கவிஞன் யாரோ ?
கற்றவை கேட்டவை
கண்டவை பட்டவை
அனைத்தும் அனுபவம்
சுழலும் உலகமதில்
பம்பரமாய்ச் சுற்றிநின்று
அமைதி கொள்கையிலே
ஆங்கோர் கேள்வி
நான் பிறந்ததேன் ?
விடை காண முடியா
முடிச்சாய் என்முன்னே!

நான் ஏன் பிறந்தேன்

கேள்விகள் ஆயிரம்
கேட்பது சுலபம்
வாழ்க்கைச் சக்கரம்
வலம்வரும் பாதைகள்
மலையும்மடுவும் இயல்பே
பிறப்பது ஓரிடம்
வளர்வது ஓரிடம்
அவரவர் திசைகள்
அளவிடல் அரிது
ஆடிய ஆட்டமும்
தேடிய செல்வமும்
ஓய்ந்திடும் வேளையில்
கேட்பது ஒன்றுண்டு
நான் ஏன் பிறந்தேன்
விடைகள் பலவாறு
வினைப்பயன் பொறுத்தே !

உழவரின் திருநாளாம்

புத்தரிசி புது வெல்லம்
புதுக்கரும்பு புதுமஞ்சள்
புதுப்பானை புதிய அடுப்பு
கிழங்கு காய்கறிகள் பயறு 
பொங்கிவரும் வேளை
பொங்கலோ பொங்கலென்றும்
கதம்பக் காய்கறிக் குழம்போடு
வெண்பொங்கல் வெல்லப் பொங்கல்
கரும்பும் இலைவேர்களுடன்
இலைகளிலே படையலிட்டு
தந்நை தாய் உடன்பிறந்தோரோடு
புத்தாடை அணிந்து
புதுப் பொலிவோடு
ஆரத்தி எடுத்து
அகமகிழும் நாளே
தமிழரின் திருநாளாம்
உழவரின் திருநாளாம்
உளமகிழ்வோடு உணர்ந்திடுவோமே !

நட்பின் நறுமணம்

வாழிய செம்மொழி
வாழிய வாழியவே
கூடிய நண்பர்
கூறிடும் கதைகள்
செவிதனில் நுழைந்து
மகிழ்ந்திடும் எம்மனதே
பலதிசை சென்ற
பறவைகள் மீண்டும்
கூட்டினை அடைய
கூடிடும் உளமகிழ்வே
பழைய ஏட்டினை
புரட்டிப் பார்த்து
பலகதை பேசி
பரவசம் அடைந்திடுமே
ஊர்க்கதை பேசி
உறவினை நாடி
ஊர்க் குருவிகள்
சேர்ந்திடும் கூட்டை
நாற்பது வருடங்கள்
நாளொன்றில் பேசிட
நட்பின் நறுமணம்
கல்லூரிக் காற்றில்
கலந்து இழைந்து
காவியம் படைத்திடுமே !

பொசுக்கிடு தீயவை

போகிப் பண்டிகை பழையன எரித்தலாம்
பொசுக்கிடு தீயவை யாவையும் தீயிலிட்டு
ஊழல் பெருச்சாளிகள் கொதிக்கும் கொப்பரையில்
ஊரை ஏமாற்றும் உன்மத்தருக்குத் தூக்கு
சாதிப் பேய்களுக்கு சம்மட்டி அடி
சாக்கடை அரசியல்வாதிக்கு சாட்டையடிகள்
பொய்வாக்கு பெருமுதலைகள் முதலைகள் உணவாய்
பெண்மானம் பறிப்பவர் பெரும்பாதாளக் குழியில்
காசுக்கு விலைபோகும் கயவருக்கும் கசையடி
ஏய்ப்பவர் எவரும் இல்லா உலகம்
வாய்த்திட வேண்டுமெனில் இதுவே வழியாம் !

எண்ண ஊற்று

பாட்டெழுத நான். நினைத்தேன்
பாடாத பாட்டொன்று உண்டா
நினைத்துப் பார்த்தேன் ஒன்றுமில்லை
இயற்கை இறைவன் காதல்
நட்பு உறவு சமுதாயம்
சாதி மதம் சகலமும்
இனியென்ன நான் எழுத
இல்லையோ வேறெதுவும் யோசித்தேன்
தோண்டத் தோண்ட வற்றாத
மணற்கேணி நீராய் சொற்கள்
கவிதைக்கு கரு மூலம்எது
ஆழ்ந்து யோசித்தேன் அகப்படவில்லை
ஆயினும் ஆயிரமாயிரம் கவிதை
தொன்று தொட்டு தொல்காப்பியம் முதல்
நூல்கள் பல ஏட்டுச் சுவடிகளும்
எழுதக் குறையாத எண்ண ஊற்று
கற்பனைக்கு எல்லையில்லை கவிதைக்கும் !

மனைவி

சொந்தமென்று வந்து நின்று
சொக்க வைத்தவளே 
சாதிசனம் சேத்து வச்ச
சம்சார திருவிளக்கே
வாய்க்கு ருசியா சமைச்சு
வயிற்றை நிறைத்தவளே
உன் வயிற்றில் சுமந்து
வாரிசை வளர்த்தவளே
காலை முதல் மாலை வரை
பம்பரமாய்ச் சுற்றிவந்து
கடைசியாய்த் தூங்கி முதலில் விழித்தெழுந்து
கவளச்சோறும் சாப்பிட நேரமில்லா
பெண்ணாய் வந்தாய் தாரமாயானாய்
தாயாய் உருமாறி தளர்ந்து தடுமாறி
தாதியாய் பாட்டியாய் தாலாட்டுப் பாடி
பெண்ணின் பெருமை பேணிக் காத்தாய் !

எங்கே சென்றாயோ

எங்கே சென்றாயோ என்னவளே
எனை விடுத்து எங்கு சென்றாய்
அருகில் நீயின்றி உறக்கம் வருமோ
அறிந்தும்நீ அரவணைக்க மறுத்தாய்
காக்க வைத்தல் முறை தானோ
காலம் கடந்த பின்னே வருவாயோ
எத்தனை இரவுகள் தனிமைக் கொடுமை
ஏக்கம் மனதில் நிரந்தரமாய் நின்றது
காற்றின் திசையெங்கும் காணேன்  உன்னுருவம்
கண் காணா உருவம் கொண்டாயா
கருணை மனம் கொள் விரைவில் வா
காதல் வலியென்றும் கொடுமை அன்றோ
இரவின் இனிமைக்கு இசையே நீதானே
அந்தி சாயுமுன்னே அணைப்பில் வந்துவிடு !

சீரிய நட்பு

இனிய நினைவுகள் இன்ப ஊற்றுகள்
இனிய காலை இரவின் முடிவு
இனிய கனவு மனதின் பிம்பம்
இனிய உறவு இருமனச் சேர்க்கை
இனிய நட்பு இருக்கும் நாளெல்லாம்
கண்ணுக்கு இமை காவல் செய்ய
காதலுக்குத் துணை கனிவு மௌனம்
நட்புக்கு நல் உள்ளம் புரிதல்
அன்புக்கு அம்மா அரவணைக்க அப்பா
அனைத்தும் இயங்க ஆண்டவன் ஒருவன்
வந்ததும் போனதும் வாழ்வில் பலப்பல
ஏற்றம் இறக்கம் வாழ்வின் இயல்பு
மகிழ்வு துக்கம் மாறி வரும்
மாறாத ஒன்றுண்டு சீரிய நட்பு
மனதோடு ஒன்றி என்றும் தொடரும்

தாய்மொழி

எங்கும் பனி மழை பருவ மாற்றம்
எத்திக்கும் தமிழ் மணக்க விழாக்கள்
தமிழே பழமை மொழி ஆதாரங்கள்
தனிக் கண்டமே கடல் கோள் கொண்டதென
சரித்திரச் சான்றுகள் ஓலைச் சுவடிகள்
சத்தியம் மறையாது சான்றோர் வாக்கு
சீனரும் சப்பானியரும. தமிழ் கற்க
சீரிய மொழி செந்தமிழ் என உலகெங்கும்
சிற்றார் தாய்மொழி கற்பது கடமை
விளக்கப் படங்கள் ஆங்காங்கே திரைகளில்
அழியக்கூடாத மறக்கவொண்ணா மொழியிது
தாய்ப்பால் இருக்க மாற்றாந்தாய் நாடுவரோ
தாய்மொழி தமிழென்று தலை உயர்த்தி
தரணியெங்கும் முரசறைந்து உரக்கச் சொல்வேன் !

வந்திடும் மீண்டும் வாலிபம்

சிறு துளியாய் தோன்றி
சிறுகச் சிறுக பெருகி
நூறைக் கடந்து நின்று
பெருவெள்ளமாய் கண்முன்னே
மலைத்துப் போனேன் உண்மைதானா
நாளொன்றில் பல உள்ளங்கள்
நாம் படித்த கல்லூரி கால்பதிக்க
ஆர்வம் கொள்ள பல்கிப்பெருகியது
கடல்கடந்து தாய்மடி காண
கற்பித்த கோயில் கடவுளர் போல
அறுபது கடந்த இளைஞரணி
நாற்பது நிறைவை பிறந்த வீட்டில்
ஒன்றாய் கூடி ஒருசேர நின்று
மறவாத நாளாய் மாற்ற விழைந்தனர்
வாழ்க்கை ஏட்டில் வைரமாய் ஒளிர்விட
வாருங்கள் நண்பர்காள் கூடிமகிழ்வோம்
வந்திடும் மீண்டும் வாலிபம் அன்று !

என்றென்றும் புத்தாண்டு

புத்தாண்டு என்றாலே கொண்டாட்டம்
புதிய எண்ணங்கள் புகும்மனதில்
கசப்பை ஒதுக்கி கற்கண்டாய்
காதுக்கு இனிமையாய் வாழ்த்துகள்
கடல்கடந்து அன்பு வார்த்தை
கடிதில் சுமந்த அலைவரிசை
நல்வாழ்வு நற்சுகம் அமைதி
நன்றாக அமைய இறையருள்
ஒளிவெள்ளம் வாண வேடிக்கை
உலக வெளியெங்கும் உற்சாகம்
என்றென்றும் புத்தாண்டாய் இருந்திட ஆசை
எங்கும் அமைதி எதிரிகளில்லை

காத்திருப்பேன் உனக்காக

தோள்சாய தோழிநீ வருவாயா
கைகோர்த்து காலாற நடப்போம்
அசைபோட ஆயிரம் கதைகள்
அருகினில் நீமட்டும் வேண்டும்
கதைக்க பலவுண்டு நமக்குள்
கால்கள் செவிகள் துணையோடு
நினைவுக் குமிழிகள் நிறைய
நீயும் நானும் இணைந்த நாட்கள்
கண்பேசி வாய்பேசாக் கணங்கள்
கண்ணீரும் காவியமான நாட்கள்
என்னோடு என்றென்றும் அன்பாய்
இருந்திடுவேன் என்றாயே அன்று
எங்கே சென்றாயோ இன்று
எத்திசையில் தேடுவேன் 
 ன்னை
காற்றில் கலந்து தழுவிடுவாயா
காத்திருப்பேன் உனக்காக நானே !

கல்லூரி நட்பு

காலத்தால் அழியா நட்பு
கடல் கடந்து போனாலும்
கண்ணுக்கு இமைபோல் காத்திருக்கும்
விண்மீனாய் சிதறி நின்று
கண்சிமிட்டி ஒளி வீசும்
பசுமையாய் பரிமளிக்கும் என்றென்றும்
ஊர் விட்டு ஊர் போனாலும்
உறவுக்குக் குரல் கொடுக்கும்
உதவும் கரம் நீட்டும்
உரிமையாய் அழைக்கும் மச்சானென்று
உள்ளத்தில் கள்ளமற்று உருகும்
உயரப் பறந்தாலும் ஊர்க்குருவியாய்
கூட்டில் சேரும் கூடிநிற்கும்
பாட்டுக்குள் அடங்கா பண்பிது
பலவும் கற்றிருக்கும் பகுத்தறியும்
பண்பட்ட எம் நட்பு
பலகாலம் நிலைத்திருக்கும்
பாரினில் ஈடில்லை இதற்கு
கல்லூரி முதல் கல்லறை வரை !

க முதல் ன வரை

கற்றதோ கையளவு 
கல்லாதது உலகளவு
வங்கத்து நீரில் பயிர் செய்ய பாரதி அல்ல
சந்திப்பிழையும் சந்தப்பிழையும் இல்லா
ஞானியர் ரசிக்கும் கவிபுனையும்
மட்டக்கவி நான் மன்னியுங்கள்
மணம் வாசம் உண்டோ அறியேன்
தோன்றும் கற்பனையில் வரிகள்
நன்றோ தீதோ நீவிர் அறிவீர்
பயன் உண்டாயின் நன்று பாட்டதனால்
மன விடு தூது என்று சொன்னேன்
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றேன்
ரகசியமாய் சில பாக்கள் உதிர்க்கும்
இலக்கில்லா கவியும் உண்டு
வருவதை வடிக்கும் வண்ணமொழி உண்டு
கள்ளுண்ட குரங்காய் சில நேரம்
கற்ற பெரியாராய் சிலநேரம்
எனக்குள்ளே என்றும் அவளே
தமிழ்த்தாயே போற்றிடுவேன் என்றும் நின்னை !

Waves of love

Its been long i wrote a poem
You have been asking for it
I have been dodging and avoiding
Words don't fill the real feeling
You may not see me but still you can feel me
I may not see you but can feel.your love
Distance ages time nothing can reduce intensity
We speak silent language no letters in it
We speak a language which is musical
Both want to defy the nature's rule
Feeling of together fills our soul
Months of separation strengthens the bonding
The nupital knot is not a must the hearts are tied
The waves of love travels across to you all the time
We live a life of saint but still love of puritans
Power of care touches my body all the time
Pondering over our days of love on seashore !

பசுமை நினைவுகள்

வான் பொய்ப்பினும் 
தான் பொய்யாக் காவிரி
வறண்டது போல்
வசப்படவில்லை வார்த்தைகள்
வயதில்லை இதற்கு
வாஞ்சை நெஞ்சில்
வாலிபமென்ன வயோதிகமென்ன
இதயம் என்றும் இளமை
இருமனங்கள் ஒன்றானால்
இனிக்கும் கற்கண்டாய்
கன்னல் சுவையும் கடைசியில்தானே
ஓடிவிளையாடி ஓயாதே
ஓயுமிடம் ஒன்றேயொன்று
பசுமை நினைவுகள்
மனவெளியின் சித்திரங்கள்
ஓவியமாய் ஒளிர்ந்திருக்கும்
வண்ணம் தொலையாமல்
கண்கள் காணட்டும் !

பாரதியே மறுமுறை பிறப்பாயா ?

வீறு கொண்டு எழவைக்கும் வரிகள்
வீணர்கள் கண்டு கோபமுறும் கண்கள்
பாட்டுச் செல்வமொன்றே பாரதியே
பாழும் காலன் பறித்துக் கொண்டானே
ஏட்டில் யாம் எழுதும் வரி உனதே
ஏனோ உன்மீசை மீது மோகமுற்றேன்
சொற்களில் கனல் தெறிக்கக் கண்டேன்
தேசத்தின் நேசம் தெறித்த வார்த்தைகள்
பாசம் பணிவு ஒற்றுமை காதல்
பராசக்தி கண்ணன் குயில் அனைத்தும்
அழகான வரிகளில் அடுக்கடுக்காய்
காதலுற்றேன் உன்மேலே காணாமல் தவிக்கின்றேன்
மறுமுறை பிறப்பாயா ? மனம் ஏங்குகிறேன் !

இறைவன் காலடி

உலகளந்தவனும் உமைப் பாகனும்
உலகமே தந்தையும் தாயுமாய் ஒருவனும்
மயிலேறி அண்டம் சுற்றியவனும்
மலை தூக்கி மக்களைக் காத்தவனும்
தீயவை களைய வேலேந்தியவனும்
நல்லோர் பக்கம் நின்று பழியேற்றவனும்
சிலையாய் அருவமாய் உருவமாய் நின்றாங்கே
உனையும் எனையும் ஊராரையும் எந்நாளும்
உதவிக்கரம் நீட்டி துயரும் போக்கி
உய்விக்கும் இறைவனவன் காலடிகளில் சரணம் !