திங்கள், 25 பிப்ரவரி, 2019

பசுமையெங்கே

எட்டி நடைபோடு போகும் தூரம் அதிகம்
நெட்ட நெடு மரமெல்லாம் கருகி நாளாச்சு
குட்டை நீருக்கும் வழியில்லை காயுது வயிறுமிங்கே
பட்ட காலிலே படுமென்றார் சுட்ட காயங்கள் வடுக்களிங்கே 
கொட்டும் மழையில்லை கோடையில் நீரில்லை 
பட்டினிச் சாவு பரிதாபம் பாரதி இல்லை பாட
கெட்டும் பட்டணம் போனால் கேட்க நாதியில்லை
கட்டுக் கட்டாய் பணம் சேர்க்க கும்பல்
பிட்டுக்கு மண்சுமந்த இறைவன் காப்பானா ?
பட்ட மரமாய் மனிதர் இங்கே பசுமையெங்கே
சுட்டும் விழிச்சுடரே சுடுவதெப்போ கயவர்களை
எட்டுக்கும் பத்துக்கும் அலையும் ஏழையர் உயர்வரோ
சுட்டிக் காட்டிவிட்டேன் சூழும் பனிநீக்கு !

கருத்துகள் இல்லை: