வெள்ளி, 6 டிசம்பர், 2019

நிரந்தரம் எதுவுமில்லை

நிலையில்லா வாழ்க்கை
நிரந்தரம் எதுவுமில்லை
நினைவுகள் மட்டுமே
நிழற்படமாய் கண்முன்னே
நீர்முட்டும் உடல்தளரும்
நீயும் நானுமே நண்பா
நாட்களோ மாதங்களோ
வாரமோ வருடமோ
வாழ்கிற தருணமெல்லாம்
மகிழ்வுடன் வாழப்பார்
மறுமுறை ஒன்று இல்லை

வறண்டு தான் போயிற்று

இயற்கையும் சார்ந்தவைகளையும் நன்றி மறவாதவன் தமிழன்

கதிரவனுக்குப் பொங்கல்
உறுதுணையான மாட்டிற்கு
பெரியோரைக் கண்டு வணங்க
புத்தாண்டிற்கு
சித்திரையும் கத்திரியும்
நிலவிற்கும்
நீர் கொணறும் ஆற்றுக்கும் ஆடியிலே
குல தெய்வங்களுக்கும்
புலால் தவிர்த்த மாதம்
தீயவை வதைக்கும் கொண்டாட்டம்
குளங்கள் ஏரிகளில் புனலாடி மகிழ்தல்
பனிவிழும் விடியலில்
தெருக்களில் கோலமும்
பூசணிப்பூவும்
இறை துதி பாடிய குழுக்களும்
ஊர்கள் தோறும் அரச மரத்தடியும் ஆலயமும்

வளமான வாழ்க்கை வறண்டு தான் போயிற்று

சுற்றம் நலமா

நண்பர்கள் நலமா ஞாயிறு விடிந்ததா
பண்பல பாடும் கலையும் நலமா
மணி வண்ணனும் நந்துவும் நலமா
அண்ணன் பள்ளியெழுச்சி கண்டாரா தொழுதாரா
சென்னையா கும்பகோணம் குளம் சென்றாரா
சௌக்யமா ரங்கா எங்கே காணவில்லை
சரத் தமிழ் பயிலியில் மூழ்கினாரா
சுரேஷ் கடற்கரைக் காற்றை சுகிக்கிறாரா
ராம் குழுவில் பதிவிட காத்திருக்கிறாரா
பங்காளி அமெரிக்க மண்துறக்கத் தயாரா
விச்சு விண்ணிலேறி ராயரைத் தேடுவாரா
மச்சினியைத் தேடிச் சென்றவர் என்னவானார்
ஞானி செல்லு ஊர்சுற்றி வருவாரா
பேசாமலே மௌனமாய் ரசிக்கும் நண்பர்களே
சுற்றம் நலமா சுவைமிகு தேநீர் குடித்தீரா
மாற்றங்கள் கடந்து மண்ணில் தொடர்ந்து
மகிழ்வோடு தொடர்வோம் தொடர்பில் இருப்போம்

புதன், 4 டிசம்பர், 2019

சுமையிறக்கி வைத்துவிடு

பேசுவது எதுவாயினும் பேதமை பார்ப்பதேனோ
பேருக்கு இருப்பதே மதமும் மற்றவையும்
ஊருக்கு ஒன்றாக உருவானது யாராலே
பாருக்குப் பொறுப்பான செயலே அவசியம்
பிறந்த போதில் நெஞ்சிலே வஞ்சமில்லை
இறக்கும் போதும் எவையுமே உனதில்லை
வாழுகின்ற நாட்களிவே வக்கணைப் பேச்செதற்கு
பாழும் மனவெறியை குழிதோண்டிப் புதைப்பாயே
அமைதியான உள்ளங்கள் ஆண்டவனின் உறைவிடம்
சுமையிறக்கி வைத்துவிடு சுத்தமான மனதோடு
சகோதரம் பழகு சமாதானம் நிலவும்
சாதிக்கப் பலவுண்டு மேதினியில் நண்பா !

மழைக்காதலி

மழைக்காதலியே உன்மீது மையலுற்றேன்
மடிமீது தவழ்ந்து விளையாட ஆவலுற்றேன்
மதிமயக்கும் கலையைக் கற்றதெங்கே பெண்ணனங்கே
மனங்குளிரத் தழுவிடும் உன்கரங்கள் சில்லென்று
அருகினிலே இருந்தாலே அணைப்பின் இதம்சுகமே
அனைத்தும் மறந்து கண்மூடி நானிருப்பேன்
இரவின் இருளும் அதிகாலைக் கருக்கலும்
இனியவளே உன்வரவால் குளிர்ந்து போனதுவே
கோடைக்காலத்தும் மறவாமல் வந்து என்னோடிரு
விடை கொடுப்போம் வெய்யிலின் கொடுமைக்கு
நீயின்றி நான்வாடிய நாட்கள் வேண்டாமினி
நீண்ட பயணத்தில் என்றுமே என்னோடிரு !

மழைப்பூக்கள்

சூலுற்ற கார்மேகம் சூடிய மழைப்பூக்கள்
சூரியக் காதலனை தன்னகத்தே அடக்கி
காதலால் குளிர்வித்து கண்ணயரச் செய்து
காலையிலே மெய்குளிரச் செய்து உடல்தழுவி
நீலப் போர்வையை அவன்மீது படரவிட்டு
நிலாவின் வரவுக்காய் காத்திருக்கச் செய்து
அமாவாசை இருட்டால் அகிலத்தை மறைத்து
ஆதவனைச் சிறைக்குள் அடைத்து பிணைத்து
விடியாத காலையிலே மின்னல் கீற்றாய்
வில்லியாய் நகைத்தாளே விண்ணில் இருந்து !

கடற்கரைக் காற்று

இராயப்பேட்டையில் அலுவலகம் இருப்பதால். வாரத்தில் ஓரிரு நாட்களில் கடற்கரைக்குச் செல்வது வழக்கம். கடல் மணலில் நடப்பது அரிதே.
கார் கண்ணாடி இறக்கிவிட்டு கடற்காற்றையும் தூரத்தே தெரியும் எல் இ டி விளக்குக் கம்ப வெளிச்சத்தில் சிதறியிருக்கும் மக்களையும் பார்ப்பதோடு வெவ்வேறு வாகனங்களில் வந்திறங்கும் இளஞ்சோடிகளையும் காண்பது இப்படியாக சுமார் ஒரு மணி நேரம் கழித்து ஸீ ஏஞ்சல் என்ற பெட்டிக்கடையில் ஃபிரைட் ரைஸ்,சூப், மீன் வறுவல் சாப்பிட்டுக் கிளம்பி வீடு சேர இரவு 9 30 ஆகிவிடும்.
நேற்றைய மாலை வேறொரு கதையை நமக்கு உணர்த்தியது.
சைக்கிளில் ஒரு பேக்கரியையே வைத்து ஒருவர் என்னிடம் வந்தார். முறுக்கு, கேக்,பன்பட்டர் ஜாம்,டீ,பர்பி...அடுக்கிக்கொண்டே போனார். பேச்சுத் திறமையால் முறுக்கு,தட்டை,பட்டர் பிஸ்கட் வாங்க வைத்து விட்டார்.நீர் பாட்டிலும் கூட.
நான் தான் போனியென்றுசொல்லி 15 நிமிடங்களில் 300 ரூபாய்க்கு விற்று விட்டு உங்கள் கை ராசி என்றார். சிரித்தார்.
சிரிப்புக்குப் பின்னே பெருஞ்சோகம் இருப்பது மெல்ல மெல்ல அவிழ்ந்தது. வாழ்ந்து கெட்ட கதை. பல மால்களில் வியாபாரம் செய்திருக்கிறார். இலட்சங்களில் புரண்டவர் கடனாளியாகி சைக்கிளில் இன்று வியாபாரம். சிட்டி சென்டரில் மசாஜ் பார்லர் வைத்திருந்திருக்கிறார்.
குழந்தையில்லாமல் டெஸ்ட டியூப் குழந்தையை காலம் கடந்து பெற்றுக் கொண்ட அவர்களின் குழந்தைக்கு ஏழு வயதென்றும் அவரது வயது 53 என்றும் கூறினார். நான்கு இலட்சம் செலவு செய்து பெற்ற குழந்தைக்கு மூன்று இலட்சம் செலவு செய்து பிறந்த நாள் கொண்டாட்டமே அவரது கடைசியான ஆடம்பரச் செலவு.
அற்ற குளத்தில் சுற்றம் விலகிப் போனது. வயிற்றுக்கு உணவும் கிட்டாமல் இத்தொழிலில் இப்போது. இவரது நிலை கண்டு நல்ல உள்ளங்கள் செய்யும் உதவிகளை ஏற்றுக் கொள்வதாகவும், குழந்தைக்கு பழைய துணி புத்தகங்கள் படிக்க எதுவாயினும் மனைவிக்கும் அவருக்கும் பழைய துணிமணிகள் எதுவாயினும் தந்தால் பெற்றுக் கொள்வதாய்க் கூறினார்.
ஐஜி ஆபிஸ் முன்னால் இரவு ஒரு மணி வரையும் கடற்கரை பார்க்கிங்கில் அதற்கு முன்னரும் இரவு நடமாடும் கடையாக இவரது சைக்கிள். உதவுவதாக நான் சொல்லி விட்டு வந்தேன்.
காற்று இதமாக வீசியது. வண்டிச் சக்கரங்கள் வேகமாக சாலையில் கடந்தன. பெட்டிக் கடைகளில் வட்டிக்குக் கொடுத்தவன் சத்தமிட்டபடி வசூலில் கண்ணாயினான். இளஞ் சோடிகள் இரகசியமாய் பேசிக் கொண்டனர். எதிரே ஒரு பெருங் குடும்பக் கூட்டம் பெட்ஷீட் விரித்து உணவருந்திக் கொண்டிருக்க அதன் தலைவனான ஆண்மகன் சைக்கிள் பேக்கரியில் நீர் பாட்டில் வாங்கிச் சென்றார்.
சோகத்தின் சுமையை இறக்கி வைக்க சுமைதாங்கியாய் சில மணித்துளிகள் இருக்க முடிந்ததே என்றெண்ணி கார் எஞ்சினை ஸ்டார்ட் பண்ணி மெதுவாக வீட்டை நோக்கிப் பயணப்பட்டேன்.
வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை

பிஸினஸ் - பாகம் 2

ஆரம்பிச்ச புதுசுலே கர்லான் மார்க்கெட்டிங் ஆளுங்க வந்தாங்க. ஹை என்ட் சோஃபா விக்க சொன்னாங்க. 3+1+1 செட் ஒரு லட்சத்துக்கும் மேல் வேண்டவே வேணாம்னு கையெடுத்து கும்பிட்டேன். பக்கத்து தெருவுலே ஆரம்பிச்சு மூணே மாசத்துலே குளோஸ் பண்ணிட்டாங்க.
வியாபாரத்து வளைவு நெளிவுகள புரிஞ்சுக்க ஆரம்பிச்சேன். மனசாட்சி நேர்மையா இருக்கவங்களுக்கு வியாபாரம் செய்யறது கஷ்டம்னு புரிய ஆரம்பிச்சது. உண்மையைப் பேசினா மதிப்பு குறைவேன்னு புரிஞ்சது.
நாமும் கடையிலே வாங்கறப்ப எப்படி விலை பேசறோம்னு யோசிச்சு பாத்தேன். லேண்டட் காஸ்ட் ஒர்க் பண்ணி அதனோட மார்ஜின் கூட்டி டிஸ்பிளே பண்ணினேன்.
ஸோஃபாக்கள் தவிர சைனீஸ் இம்போர்டட் பர்னிச்சர்ஸும் வாங்கி வச்சேன். நான் செய்த மிக நல்ல செயல் பேங்க் லோன் எதுவும் வாங்காதது. பின் நாட்களில் நிம்மதியாக உறங்க முடிந்ததே அதனால் தான்.
டிஸ்கவுண்ட் கொடுக்காம விக்கவே முடியாதுங்கற நிலமை புரிஞ்சது. கஸ்டமர் வீடுகளுக்கு கார்ப்பென்டரோட போய் அளவெடுத்து ஷெல்ஃப்,வார்ட்ரோப் எல்லாமும் பண்ண ஆரம்பிச்சோம். சில இன்டீரியர் டெகரேட்டர்ஸ் டை அப் பண்ணலாம்னு சொன்னப்ப ஓகே சொன்னேன். சுமார் ஐந்து கிமீ சுற்றளவுலே பர்னிச்சர்ஸ் சப்ளை ஆரம்பிச்சது.
பெரிய கனவுகளும் மனசுலே. தஞ்சாவூர் பக்கத்துலே தேக்கு மரங்கள் வாங்கலாம்னும் அத இழச்சு பர்னிச்சர் பண்ணலாம்னும் ஐடியா வந்தது. ஹுன்சூருனு மைசூர் பக்கத்து தேக்கும் ஃபேமஸ்.
ஆறுமாசம் கழிச்சு மாதாந்திர கணக்குகள் பாத்தா பிரேக் ஈவன் ஸேல்ஸே இன்னும் ரீச் ஆகலேன்னு புரிஞ்சது.
இதுக்கு நடுவுலே ஆடிட்டர் தேர்வு, குவார்ட்டர்லி ஸேல்ஸ் டாக்ஸ் ரிட்டர்ன்,ஸேல்ஸ் இன்வாய்சு,பர்ச்சேஸ் பில்ஸ் பைலிங் எல்லாம் என்னோடது. அப்பப்ப கடைல வேலை செய்யற பையனோட சேந்து லோடிங், அன்லோடிங் செய்றதும்,சைனீஸ் பர்னிச்சர்ஸ் கான்டிராக்ட் ஆளுங்க அசெம்பிள் பண்றப்ப கத்துக்கிறதும் எல்லாமே ஸ்கில் டெவலப்மெண்ட்லே சேத்துக்கலாம்.
பிஸினஸின் வளைவு நெளிவுகளில் நுழைய கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டேன். பொய் பேசவும் சில நேரங்கள்ளே செய்ய வேண்டியதாச்சு. மனசாட்சிய அப்பப்ப தட்டிக் கொடுத்து யாருக்கும் தீங்கில்லாத பொய்னு வள்ளுவரையும் துணைக்கழைச்சுகிட்டேன்
 (வளரும்)

கொட்டம் அடங்கும்

விட்டுவிடு நண்பா விடியல் நிகழும்
சுட்டுவிடும் நெருப்பு தொட்டே உணர்ந்திடுவார்
நட்டு விட்ட நாற்று மரமாகும்
கெட்ட பாலும் திரிந்தே போகும்
எட்ட நின்றுபார் எல்லாம் விளங்கும்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே அறிவோம்
வட்டம் வாழ்க்கை சுற்றிவந்து நிற்கும்
கொட்டம் அடங்கும் கொக்கரிப்பு நிற்கும்
திட்டம் போட்டு திருடும் கூட்டம்
விட்டில் பூச்சியாய் விளக்கில் கருகும்
நாட்டில் நல்லவை நடக்க வேண்டுமெனில்
சாட்டை கொண்டே தண்டிக்க வேண்டும்
ஓட்டை விழுந்த கப்பலைப் பழுதுபார்
கோட்டை ஒருநாள் உன்வசம் சேரும்

பிஸினஸ் - பாகம் 1

வாழ்க்கைச் சக்கரம் உருண்டோடி 2009ல் நின்றது. நண்பரொருவருடன் இணைந்து பிசினஸ் செய்வதென்ற முடிவு. முதலில் சென்னையில் செய்யலாமென்று பதிவு செய்து பெயரும் இட்டாயிற்று. செய்யும் எதுவாயினும் தாயின் பெயரிலே காந்தம் என்று.
என்னதான் எக்ஸபீரீயன்ஸ் இருந்தாலும் பிஸினஸ்னு வரப்ப விதி அப்பப்ப நம்ம பாத்து சிரிக்கும். வால்வ் காம்போனன்ட்ஸ் ஏற்றுமதி மற்றும் சர்வீஸிங் பண்ணலாம்னு முடிவெடுத்து இரண்டு மூன்று மாசங்க அலைஞ்சு திரிஞ்சப்ப தான் இதுக்கு நாம சரிப்பட மாட்டோம்னு தெரிஞ்சது.
அப்பதான் ஒரு பிரேக் எடுத்து பெங்களூர் போனப்ப நண்பர் ஜெய் சங்கர் ஸோபாக்கள் தயாரிச்சு கர்லான் போன்ற கம்பெனிகளுக்கு வித்துட்டு இருந்தார். நீங்களே ஷோரூம் வைக்கலாம்னு ஐடியா தந்தார்.
நானும் ஆஹா பேஷான ஐடியானு கடைகள வாடகைக்குத் தேட ஆரம்பிச்சு வியாபாரம் வளந்துகிட்டு இருந்ந ஷாகார்நகர் பெங்களூர் ஏர்போர்ட் போற ஹைவே பக்கத்துலே 1500 சதுர அடி முதல் மாடிக் கட்டிடம் மாத வாடகை 32000 என முடிவு பண்ணி அட்வான்சும் கொடுத்தாச்சு.
நண்பர் ஸோபாக்கள் சப்ளை பண்ணுவார். வித்துட்டு பணம் கொடுத்தா போதும். ஸோஃபா மட்டும் பத்தாதுனு சைனீஸ் இம்போர்டட் பரீனிச்சர்ஸூம் சேத்துக்க முடிவு செஞ்சு ராயல் ஓக்குன்ற ஹோல்சேலரோட டைஅப்பும் ஆச்சு.
கூடவே கஸ்டமர் கேட்கிற மாதிரி பர்னிச்சர் பண்ண அருகிலிருந்த கார்ப்பென்ட்டரோட டைஅப்பும் ஆச்சு.
முதலீடுக்கு வேலை விட்டு வந்த சேமிப்பு பணத்த செலவு பண்றதுனும் முடிவு ஆச்சு.
பூசை போட்டு வியாபாரம் தொடங்க முதல் லோடு ஸோஃபா மறைமலை நகரிலே இருந்து வந்து இறங்கியாச்சு. 8000 மாச சம்பளத்துலே வேலைக்கு ஆளும் வச்சாச்சு. ஜூலை 2009 லே பிஸினஸ் வாழ்க்கையை ஒரு எக்ஸிகியூடீடிவ் சேரும்
டேபிளோடும் தொடங்கியாச்சு. டின் நம்பர் வாங்கியாச்சு.
(வளரும்)

மாற்றம் வருமுன்னு நம்பிக்கை போச்சு

ஏன் இப்படிலாம் இருக்காங்க ஏன் மாறலேன்னு கேள்வி வரும் மனசுலே
பல விஷயங்க மதம் முதல் பணம் வரை. எல்லாமே பேராசையாலே வருதா ? இல்லே ஆட்டு மந்தை மாதிரி உணர்வா
விடை மட்டும் தெரியலே.
சாமியின் தூதுவர்னு சொல்லிக்கிட்டு சொகுசான வாழ்க்கை
மக்கள் தொண்டன்னு சொல்லிட்டு படாடோபமான செயல்பாடு
விரைவா பணக்காரனாக ஊழல்கள்
எங்கே போய்ட்டு இருக்கு மனித வாழ்க்கை. பேய்களின் உலகமான்னு கூட சந்தேகம் தோணுது
மாற்றம் வருமுன்னு நம்பிக்கை போச்சு. அழிவதற்கு அறிகுறிகள் தான் அதிகம்.
நல்லவங்கள பாக்கறதே அரிதாப்போச்சு. ஊருக்கு ஒரு நல்லவன் கூட கிடைக்கலே. கடைத்தெருலே கூறு போட்டு எல்லாத்தயும் விக்கறாங்க.
உண்மையானு கண்டுபிடிக்க google மாதிரி ஆளு தேவப் படுது. இருளே பரவுது. வெளிச்சம் வர வழி இல்லாம.
அடுத்ததலமுறைக்கு வெச்சுட்டுப் போற உலகம் எவ்வளோ கேவலமா. ஏன் இப்படி ஆச்சு, எதனால் மனுசங்க மிருகங்கள விட கேவலமா ஆனாங்க. தெளிவில்ல.
சமாதானம், சகிப்பு, சகோதரம் எல்லாம் சமாதிலே தூங்குது. விரைவிலே நாமும் தூங்கப் போயிடுவோம்.
இப்ப இருக்கிற இளய தலமுறையும் அடுத்து வரப்போற புதுத் தலமுறையும் சுமக்க போற பாரம் ரொம்பப்பெருசு.
ஏதோ தோணுச்சு. சொல்லிப்புட்டேன்.

இயற்கையோடு கலந்திடுவேன்

புல்லாங்குழலின் இசையாக மூங்கிலில் நுழைந்து
புனலாய் நதியாய் கடலோடி கரையேறி
காற்றினிலே தென்றலாய் தீந்தமிழாய் குளிரூட்டி
கானகத்தே பசுமைச் செடிகளாய் தழைத்தோங்கி
மலைமீது தவழும் மேகமாய் வடிவெடுத்து
மணல் மேடுகளில் சித்திரமாய் உருவெடுத்து
குயில்கூவ மயிலாட கிளிக் கீச்சிட
குரங்கோடு மானோடு சிங்கமும் கர்ச்சிக்க
இயற்கையோடு இரண்டறக் கலந்து இன்புற்றிருக்க
இயலுமாயின் இப்போதே கலந்திடுவேன் உன்னோடு !

சகோதரம் பழகிப் பார்

இடஞ்சுழியோ வலஞ்சுழியோ என்சுழி நன்றோ
கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்குதுவோ இன்று
உடன்பாடற்ற உள்ளங்கள் உலகில் உள்ளவரை தூக்கமில்லை
நடப்பவை மறந்து சரித்திரம் பேசும் வீணர்கள்
படித்தவர் பண்பாளராய் இல்லாயின் மற்றெவர் ஆவாரோ
கடிவாளம் இல்லாப் புரவிபோல் தறிகெட்டு ஓட்டமாய்
தடுமாறும் உள்ளமதை தள்ளி வைத்து விட்டு
தன்னொத்த மனிதனாய் சகோதரம் பழகிப் பார்
அமைதி கொள்ளும் அன்பு பெருகும் மகிழும்
அண்ணனாய் தம்பியாய் மனிதனாய் வாழ்ந்திடும் வளமாகும்
புல்நுனிப் பனிநீராய் கதிரவன் வரவினில் ஆவியாகும்
புதிய சமுதாயம் நிலவாய்க் குளிரும் நிம்மதியதுவே !

நான் வைத்துப் போகும் உலகு

உனக்கு நான் வைத்துப் போகும் உலகைப்பார்
உயிர் வாழ தூய்மைக் காற்று இல்லை
தாகத்திற்கு நீரருந்த குழாய் தண்ணீர் ஆகாது
தாய்ப் பாலும் வற்றிப் போய் புட்டிப்பாலே
மழைநீர் அரிதாகி வற்றிய நிலை சில இடங்கள்
மடைதிறந்த வெள்ளம் ஊர்புகுந்து சில இடங்கள்
மரங்கள் இருந்த காட்டில் தாரில் சாலைகள்
உரங்கள் போட்ட உன்நிலத்தில் சத்தற்ற தானியங்கள்
ஊருக்கே நெல்நட்டு அரிசியாய் அனுப்பி வைப்பான்
உலையில் நீர்கொதித்து உன்வயிறு நிரம்பவில்லை
நகரத்தில் சொகுசாக கட்டிடம் கட்டியவன் உன்அப்பன்
நரகத்து வாழ்க்கை மட்டும் உனதாக்கி நின்றான்
மன்னித்துவிடு மகனே மால்கள் மாளிகைகள் இங்கே
மண்ணில் கட்டிய குடிசைக்கூரை நிலாவைக் காட்டியது

குழந்தை

குழந்தையாய் மாறிஇன்று கள்ளமில்லாம சிரிக்கணும்
குற்றமற்ற மனமோடு கலகலன்னு சிரிக்கணும்
மழலையிலே கொஞ்சி மடிமீது உக்காரணும்
மம்மிடாடி விட்டு அம்மாஅப்பா சொல்லணும்
ரைம்ஸ் போலவே ஆத்திச்சூடி படிக்கணும்
ரயில் வண்டி ஓடிப்பிடிச்சு விளையாடணும்
பக்கத்து வீட்டு பாப்பாவோட விளையாடணும்
பம்பரம் விடும் அண்ணணோட ஆடணும்
தத்தி நடைபோட்டு தெருவுலே வலம்வரணும்
தங்கச்சி பாப்பாவ பத்திரமா பாத்துக்கணும்
நேரமாச்சுனா பசிக்கு பால ஊட்டணும்
நாளைக்கு நான் வாரேன் வேலயிருக்கு இப்ப !

உறவை வளர்த்திடு

உனதும் எனதும் சிவப்பே இரத்தம்
உண்மை சொல்லும் நேரம் இதுவே
ஆரியம் திராவிடம் படைத்தது எவரோ
ஆண்டான் அடிமை தீண்டாமை யாரால்
மூட நம்பிக்கை தலைச்சவரம் எவராலே
மூதேவி ஆனாளே துணையை இழந்து
சாதிப் பிரிவுகள் சண்டைகள் எதற்காக
சரித்திரம் கொடுமைகளை மறந்து விட்டதோ
அடங்கிய சமுதாயம் ஆர்ப்பரித்து எழுந்தது
அதனால் தானே மாற்றமும் வந்தது
மனிதனாய் இருக்க பழகிக் கொள்
மதங்கள் போதிப்பவை நல்ல கருத்தே
மானிடன் நீயே மாற்றி எழுதினாய்
மாய்ந்தது போதும் மயக்கம் தெளிந்திடு
உலகம் உனக்கு மட்டுமல்ல அவனதும்
உறவை வளர்த்திடு வாழு வாழவிடு

மெல்லிய விரல்

கேரளத்துக் கடற்கரையில் கன்னி ஒருத்தி வந்தாளோ
கேள்விகள் பல கேட்டு தோள்மீது சாய்ந்தாளோ
சாரல் காற்று சன்னலோரம் வந்ததுவோ குளிரூட்ட
மின்னல் கீற்று தென்னங் கீற்றில் தோன்றியதோ
அரபிக் கடவோரம் அலைகள் ஆர்ப்பரித்து வந்ததுவோ
அவளும் அதனைக் கண்டு கண்சிமிட்டி நகைத்தாளோ
மெல்லிய விரல் கோத்து கடற்கரையில் நடந்தீரோ
சில்லென்ற காற்று அவள்மீது தழுவித் தொட்டதுவோ
சேலை முந்தானை உமது முகம்தனை நுகர்ந்ததுவோ
மாலை மங்கி மயக்கும் இருட்டில் என்செய்தீர்
கன்னியவள் கண்கள் சிவக்க காதல் புரிந்தீரோ
களுக்கென்ற சிரிப்புச் சத்தம் கரைகடந்து கேட்டதிங்கே
கண்ணேறு பட்டு விடும் இரகசியமாய் காதலிப்பீரா
பெண்ணவளை கைகளுக்குள் பத்திரமாய் அணைத்துக் கொள்வீரா ?

இயற்கை விளையாட்டு

காட்டுக்குள் தீ கடலில் பேரலைகள்
நாட்டுக்குள் கரைகாணா ஆற்று வெள்ளம்
ஊழிக்காற்று ஊரை அழிக்க அவ்வப்போது
ஊருக்கு ஊர் குடிக்க நீரில்லை
இயற்கையின் சித்து விளையாட்டு இவையாவும்
இயல்பு வாழ்க்கை இல்லாமல் போனது
ஏனிந்த மாற்றம் இயம்பிட இயலுமா
வானின்று மழையும் வெள்ளக் காடாய்
விஞ்ஞானம் விடை சொல்ல வில்லை
மெய்ஞானம் மௌனித்தே அமைதி கொண்டது
மாற்றத்தின் காரணம் மானிடன் அறியான்
சீற்றம் கொண்ட இறைவன் விளையாட்டோ ?