புதன், 4 டிசம்பர், 2019

கடற்கரைக் காற்று

இராயப்பேட்டையில் அலுவலகம் இருப்பதால். வாரத்தில் ஓரிரு நாட்களில் கடற்கரைக்குச் செல்வது வழக்கம். கடல் மணலில் நடப்பது அரிதே.
கார் கண்ணாடி இறக்கிவிட்டு கடற்காற்றையும் தூரத்தே தெரியும் எல் இ டி விளக்குக் கம்ப வெளிச்சத்தில் சிதறியிருக்கும் மக்களையும் பார்ப்பதோடு வெவ்வேறு வாகனங்களில் வந்திறங்கும் இளஞ்சோடிகளையும் காண்பது இப்படியாக சுமார் ஒரு மணி நேரம் கழித்து ஸீ ஏஞ்சல் என்ற பெட்டிக்கடையில் ஃபிரைட் ரைஸ்,சூப், மீன் வறுவல் சாப்பிட்டுக் கிளம்பி வீடு சேர இரவு 9 30 ஆகிவிடும்.
நேற்றைய மாலை வேறொரு கதையை நமக்கு உணர்த்தியது.
சைக்கிளில் ஒரு பேக்கரியையே வைத்து ஒருவர் என்னிடம் வந்தார். முறுக்கு, கேக்,பன்பட்டர் ஜாம்,டீ,பர்பி...அடுக்கிக்கொண்டே போனார். பேச்சுத் திறமையால் முறுக்கு,தட்டை,பட்டர் பிஸ்கட் வாங்க வைத்து விட்டார்.நீர் பாட்டிலும் கூட.
நான் தான் போனியென்றுசொல்லி 15 நிமிடங்களில் 300 ரூபாய்க்கு விற்று விட்டு உங்கள் கை ராசி என்றார். சிரித்தார்.
சிரிப்புக்குப் பின்னே பெருஞ்சோகம் இருப்பது மெல்ல மெல்ல அவிழ்ந்தது. வாழ்ந்து கெட்ட கதை. பல மால்களில் வியாபாரம் செய்திருக்கிறார். இலட்சங்களில் புரண்டவர் கடனாளியாகி சைக்கிளில் இன்று வியாபாரம். சிட்டி சென்டரில் மசாஜ் பார்லர் வைத்திருந்திருக்கிறார்.
குழந்தையில்லாமல் டெஸ்ட டியூப் குழந்தையை காலம் கடந்து பெற்றுக் கொண்ட அவர்களின் குழந்தைக்கு ஏழு வயதென்றும் அவரது வயது 53 என்றும் கூறினார். நான்கு இலட்சம் செலவு செய்து பெற்ற குழந்தைக்கு மூன்று இலட்சம் செலவு செய்து பிறந்த நாள் கொண்டாட்டமே அவரது கடைசியான ஆடம்பரச் செலவு.
அற்ற குளத்தில் சுற்றம் விலகிப் போனது. வயிற்றுக்கு உணவும் கிட்டாமல் இத்தொழிலில் இப்போது. இவரது நிலை கண்டு நல்ல உள்ளங்கள் செய்யும் உதவிகளை ஏற்றுக் கொள்வதாகவும், குழந்தைக்கு பழைய துணி புத்தகங்கள் படிக்க எதுவாயினும் மனைவிக்கும் அவருக்கும் பழைய துணிமணிகள் எதுவாயினும் தந்தால் பெற்றுக் கொள்வதாய்க் கூறினார்.
ஐஜி ஆபிஸ் முன்னால் இரவு ஒரு மணி வரையும் கடற்கரை பார்க்கிங்கில் அதற்கு முன்னரும் இரவு நடமாடும் கடையாக இவரது சைக்கிள். உதவுவதாக நான் சொல்லி விட்டு வந்தேன்.
காற்று இதமாக வீசியது. வண்டிச் சக்கரங்கள் வேகமாக சாலையில் கடந்தன. பெட்டிக் கடைகளில் வட்டிக்குக் கொடுத்தவன் சத்தமிட்டபடி வசூலில் கண்ணாயினான். இளஞ் சோடிகள் இரகசியமாய் பேசிக் கொண்டனர். எதிரே ஒரு பெருங் குடும்பக் கூட்டம் பெட்ஷீட் விரித்து உணவருந்திக் கொண்டிருக்க அதன் தலைவனான ஆண்மகன் சைக்கிள் பேக்கரியில் நீர் பாட்டில் வாங்கிச் சென்றார்.
சோகத்தின் சுமையை இறக்கி வைக்க சுமைதாங்கியாய் சில மணித்துளிகள் இருக்க முடிந்ததே என்றெண்ணி கார் எஞ்சினை ஸ்டார்ட் பண்ணி மெதுவாக வீட்டை நோக்கிப் பயணப்பட்டேன்.
வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை

1 கருத்து:

ராசி சொன்னது…

வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை. அடுத்து என்ன நடக்கும் என்றும் தெரிவதில்லை. இருப்பினும் வாழவேண்டும் நம்பிக்கையுடன். கடமையை செய்.பலன் தானாக வரும். நம்பிக்கை தான் வாழ்க்கை.