வெள்ளி, 11 மே, 2018

கோடை வெயிலே கருணை காட்டுநீ

கோடை வெயிலே உன் கோரத்தாண்டவம் ஓய்வதெப்போது
கருணை காட்டுநீ காற்றும் சூடாச்சு
தொட்டவிடமெல்லாம் சுடுகிறது
தண்ணீரும் வெந்நீராய் 
தாகம் தணிக்க தண்ணீர் இங்கு காசுக்காய்
காற்றும் மணலோடு கலந்து
ஊழிக்காற்றாய் ஊர்தோறும்
புரிகிறது எனக்கு உன்கோபம்
தீயசெயல்கள் பெருகிடும் போதெல்லாம்
உணர்த்திடும் போக்கு இதுவன்றோ
சற்றே பொருத்தருள்வாய்
பிரளய மாற்றம் இப்போது வேண்டாம்
பிரிதொரு நாளில் திரும்ப வா !

சிந்தனைச் சிற்பிகள்

கனவிலே மிதக்கும் நாங்கள்
கற்பனை வான்வெளியில் தாரகைகள்
கணநேரத்தில் கண்டம்விட்டு கண்டம்பாய்வோம்
கண்முன்னே தோன்றும் காட்சிகள்
கவிதையாய் உருவெடுக்கும் உணர்வூட்டும்
சமுதாய நிகழ்வுகள் காதல் உணர்வுகள்
இயற்கை இனிய நினைவுகள்
கோபமாய் சில நேரம்
சாந்தமாய் சில நேரம்
பருவ மாற்றம் போல் மாறும்
பொய்யர்கள் அல்லர் கவிஞர்
பொறுப்பாய் பொருளுரைப்பர்
புரட்சிக்கும் வித்திடுவர்
புகழும் பாடுவர் புத்துணர்வூட்டுவர்
உள்ளக்குமுறல் வார்த்தையாய்
உலக நோக்கு வரிகளாய்
தினம் தினம் மாறிய சிந்தனை
சிறிய உளிகொண்ட சிற்பிகள் போல் !

விலை பேசப்பட்டுவிட்டது

பேனாக்கள் எழுத மை தேவையில்லை
மனமில்லை பணமே தேவை
உண்மை விடுத்து பொய்யும் பரப்பும்
விழுக்காடு முக்கியம் விலைகள் அல்ல
வருமானமே இலக்கு வறியவர் அல்ல
இரக்கம் விடுத்து இடம் நிரப்பும் செய்தி
நேர்மை நீதி நியாயம் கூறுபோட்டு
வீதிகளில் கூவி விற்கப்படும்
விலை பேசப்பட்டுவிட்டது
உன்னையும் என்னையும்
விற்றுவிடுவார்கள் ஒரு நாள் !

கவிஞன்

கவிஞன் என்றாலே கவலையின் உருவம்
கற்பனை உதிப்பதே அதனாலோ
உள்ளே எரிமலையாய் வெளியே குளிர்நீராய்
அந்நியன் அகமது புறமொன்று புதிராய்
அனைத்தும் அணையாத நெருப்பாய்
காதலால் கசிந்துருகி ஒரு கவிதை
காணும் காட்சியினால் கோபமாய் மற்றொன்று
வான்நிலை மாற்றம் நிகழும் நிதமும்
மழைமேகங்கள் மண்வாசம் சேர்க்கும்
மனக்குமுறல் நெருப்பாய் கொதிக்கும்
காலத்தை வென்று கவிதைகள் பேசும்
காதலும் காமமும் கலந்திருக்கும்
புரியாத புதிராய் சிலநேரம்
புதிய அறிஞராய் சிலநேரம்
இவனிலும் மாற்றமொன்றே நிரந்தரம் !