திங்கள், 31 அக்டோபர், 2022

இலக்கணம் பற்றாத கவிதை

 இலக்கணம் பற்றாத கவிதை

இலக்கு ஒன்றே மனதில்
மனதின் வெளிப்பாடு மட்டும்
தினமும் நிரைநேர் இல்லை
கலிப்பா வெண்பாவும் இல்லை
சலிப்பார் சிலரும் கண்டு
பட்டதைச் சொல்ல மட்டும்
கெட்டவை சாடுதல் உண்டு
காதலைக் கற்பனை செய்ய
வாதங்கள் செய்தலும் உண்டு
அணியும் அனிச்சம் இங்கே
பணியும் சொற்கள் சிதறும்
இயற்கை உலாவும் ஊடே
இறைவனும் வந்து போவான்
நட்பு நடுவே நடக்கும்
நகைப்பு சிலநேரம் உதிரும்
சினந்து சிதறவும் செய்யும்
இனம் கண்டு கொள்ளும்
தொடரும் படைப்பை என்றும்
தொல்லை என எண்ணாதீர் !

காலம் மாறியதே

 வேடிக்கை தான் வாடிக்கை ஆனதுவோ

பாடித்தான் போனவனே பதுங்கிய கதையுண்டே
பேசுவதும் செய்வதும் வேறானால் என்செய்ய
பேதைகளாய் மாறியதும் யார்செய்த தவறோ
புத்தி கெட்டுப் போச்சுதே படித்தோர்க்கும்
கத்தி கூப்பாடு போடுவதே தொழிலோ
தர்ம சிந்தனைகள் மறைந்தே போனதுவோ
கர்ம வீரரைப் போல் வருவாரோ
விளக்கிலே மடியும் விட்டில் பூச்சிகளே
விளங்கலியோ தவறான உம் செயல்கள்
மக்களை மறந்த மன்னன் மாடியிலே
மக்காய் படித்தவனும் மாறிய கொடுமை
காலம் மாறியதே கேட்பாரே இல்லாமல்
காற்று திசைமாறி புயலாய் மாறிடுமோ

தீபஒளித் திருநாளாம்

 விளக்குகள் ஒளியேற்ற தெருவெங்கும் ஒளிவெள்ளம்

விடலைப் பிள்ளைகள் ஓவென்ற கூச்சல்
இருள் விலகி இதயங்கள் மகிழ்ச்சி
கருக்கல் குளியல் கடவுளைத் தொழுது
எல்லோரும் சேர்ந்து ஏற்றிய தீபங்கள்
எண்ணைய்த் திரியுடன் ஒளிர்விடும் அழகு
அதிரசம் முறுக்கு அடுக்காய் அடுக்கில்
புதியதாய் இனிப்புகள் பலவும் பெட்டியில்
ஆரவாரம் வானைப் பிளந்து பரவிட
குரலோசை குதூகலம் கும்மாளம் கொண்டாட்டம்
தீபஒளித் திருநாளாம் ஊரெங்கும் உற்சாகம்
தீயவை அழிந்து நன்மைகள் பெருகட்டும்

விடியல் தேடியது

 கவிதை எழுத வேணுமாம் தினமும்

கவிஞர் சொல்லி வைத்தார் வைதார்
கருத்துத் தேடி அலைந்த மனது
களைத்துப் போகவில்லை களம் தேடி
விடிந்த போது விடியல் தேடியது
கடின சொற்கள் விடுத்த கவிதைக்கு
பாடிய வறுமை தொடர்ந்தே இன்றும்
வாடிய முகங்கள் வாழ்வதும் உண்டு
மாற்றம் ஏனோ வருவதே இல்லை
இல்லாத நிலையே இல்லாமை வேண்டும்
கல்லாத சிறுவர் கற்றலும் வேண்டும்
எத்தனை ஆண்டுகள் தேவையோ
எழுந்த சிந்தனை விடை தேடியே
மாற்றம் ஒன்றே மாறாதது என்றால்
மாறிடுமோ இவர்தம் வாழ்வும் ஒருநாள்

வருவாயா மீண்டும்

 எட்ட நின்று பார்த்த கண்கள்

கிட்ட வராமலே பேசிய உதடுகள்
வட்ட நிலவாய் ஒளிர்ந்த முகம்
ஏட்டீ பெண்ணே எங்கே போனாய்
சொட்டச் சொட்ட நனைந்த நாட்கள்
ஒட்டியே உன்னுடன் அமர்ந்த வரப்புகள்
சோளக் கதிரை உதிர்த்த கரங்கள்
சோற்றுப் புதையலில் தோய்ந்த விரல்கள்
காற்று வீசிய தாவணி மாலைகள்
நேற்றுப் போலவே மனதில் காட்சியாய்
பாட்டுப் பாடியே மயக்கிய மங்கையே
வீட்டுப் படியிலே விழிகள் சிமிட்டி
காட்டு வழியில் தொட்ட தருணங்கள்
விட்டுப் போகுமா மனதைத் துறந்து
கற்பனை உலகிலே எத்தனை நாட்கள்
கடந்தே போனது வாலிப வயது
என்றோ போனநீ எங்கே போனாயோ
இன்றோ நாளையோ வருவாய் எண்ணி
காலம் போனது கனவுகள் போலவே
காற்றில் கலந்த நினைவுகள் மறைந்தன
வருவதும் போவதும் வாழ்வின் வாடிக்கை
வருவாயா மீண்டும் என்பது வேடிக்கை

தினமொரு கவிதை

 தினமொரு கவிதை திகட்டாத தமிழில்

தினமொரு சித்திரம் கண்களுக்கு விருந்தாய்
எனக்கொரு கேள்வி எழுப்பிய கவிஞர்
தனக்கொரு பாணியைக் கொள்ளும் நண்பர்
வனப்பான வாலிபம் மறைந்த வருத்தம்
சினங்கொள ஏதுமிலை நட்பின் வலிமையில்
கனமென இருந்தும் கசப்பிலா வாழ்க்கை
கலகல சிரிப்பும் கவலையற்ற மனமும்
எனக்கென எத்தனை மனித நட்புகள்
தனக்கென வாழாத தகைசால் தலைமைகள்
வனப்பும் வளமையும் வாலிப முறுக்கு
வயதானாலும் வாடாத உள்ளச் செருக்கு
வட்டப் பாதையில் சுற்றும் கோள்கள்
எட்டாத தூரத்தே ஒளிரும் கதிரோன்
வானம் வசப்படுமா வாழ்வில் ஒளிதர

நட்டம் யாருக்கோ

 ஓயக் காத்திருப்பானோ ஓடக் காத்திருப்பானோ

தேயக் காத்திருப்பானோ தேடிக் காத்திருப்பானோ
மேயக் காத்திருப்பானோ மேட்டில் காத்திருப்பானோ
வாழக் காத்திருப்பானோ வாடிக் காத்திருப்பானோ
தோழன் காத்திருப்பானோ தோள்தரக் காத்திருப்பானோ
வீழக் காத்திருப்பானோ வீழ்த்திடக் காத்திருப்பானோ
ஆட்டம் தொடங்கிடுமோ அடங்கிப் போய்விடுமோ
ஓட்டம் பெரிதானால் ஒளிந்திட முடிந்திடுமோ
வட்டம் வாழ்க் கையெனில் மூலம் தெரிந்திடுமோ
பட்டம் பறந்திடுமோ எட்ட உயர்ந்திடுமோ
நட்டம் யாருக்கோ உனக்கோ எனக்கோ ?

சிந்தனை

 புள்ளி வைத்துப் போனவளே

கோலம் போட வருவாயா
வாசல் விட்டுப் போனவளே
வாசம் எங்கே இப்போது
காதல் பேச்சு மறந்தாயோ
காலம் மாறிப் போனதுவோ
கரும்புத் தோட்டம் கருகிடுச்சு
கருத்த மேகம் சூழ்ந்துடுச்சு
விரும்பிய உன்னைக் காணாம
களத்து மேட்டில் யாருமில்ல
கயித்துக் கட்டிலும் அப்படியே
கொலுசுச் சத்தம் என்னாச்சு
கைவளை குலுங்கி நாளாச்சு
சிரிச்சுப் பேசும் சிங்காரி
சின்னப் பற்கள் காணோமே
வருஷம் பலவும் போயாச்சு
வாலிப வயசும் கடந்தாச்சு
சிறுக்கி மவ ஞாபகமே
சிந்தனை விட்டுப் போகலியே !

ஒருவனே தேவன்

 இயற்கையைப் பாடுவோம் நல்லது அதுவே

செயற்கை உலகில் வேண்டும் அமைதி
இனியவை மட்டுமே மனதில் தேவை
இகழ்வதை ஏனோ மனிதன் தேடினான்
கடவுளர் யாவரும் நல்லதே சொன்னார்
கற்றவர் கருத்தும் அதுவே ஆனது
மாற்றம் நல்லதே நன்மை பயப்பின்
மாற்றுக் கருத்தை மதிப்போம் சகிப்போம்
கூற்றுவன் வருங்கால் கூடாகும் உடலே
கூக்குரல் விடுப்போம் நல்ல மாறுதலெனில்
நல்லதே நினைப்பின் நல்லதே நடக்கும்
பொல்லாத சொற்கள் புதைத்து விடுவோம்
ஒற்றுமை என்பதை உரக்கச் சொல்வோம்
ஒருவனே தேவன் என்பதை ஏற்போம் !

பாரதம் என்றதோர் நாடு

 கனவுகள் மெய்ப்பட வேண்டும்

கவலைகள் மறைந்திட வேண்டும்
ஒற்றுமை ஓங்கிட வேண்டும்
நற்றமிழ் போற்றிட வேண்டும்
நல்லவை பெருகிட வேண்டும்
நல்வினை செய்திட வேண்டும்
நானிலம் செழித்திட வேண்டும்
தலைமைகள் நிறைந்திட வேண்டும்
தாயகம் உயர்ந்திட வேண்டும்
வாய்மையே வென்றிட வேண்டும்
வறியவர் இல்லாமை வேண்டும்
வர்ணங்கள் பிரியாமை வேண்டும்
சொல்வதைச் செய்திடல் வேண்டும்
பல்வகை வளங்கள் வேண்டும்
பாரினில் உயர்ந்திட வேண்டும்
பாரதம் என்றதோர் நாடு !

கனவாய் கலைந்து

 சொக்க வைக்கும் அழகு

சொக்கட்டான் ஆடும் நளினம்
கண்ணசைவு புன்னகை பதுமை
கள்ளப் பார்வை கருவிழி
என்னவள் அவளோ ஐயம்
எங்கும் அவளின் தோற்றம்
சொற்கள் தேனமுதாய் செவியில்
பற்கள் முத்தின் வெண்மை
கொலுசுச் சத்தம் மெல்லியதாய்
கொலுவில் பொம்மை இவளோ
நீண்ட கூந்தலில் வெண்மல்லி
நீள்கழுத்து தங்கச் சங்கிலி
இடுப்பு ஒட்டியாணம் மெல்லியதாய்
இடையோ ஒடிவது போல்
கைவளை குலுங்கும் சத்தம்
கைவிரல்கள் என்முகம் தழுவ
கண்விழித்த போதினிலே கனவாய்
கலைந்து போனாளே கள்ளி !

உத்தமர் காந்தி

 எதையும் மறக்கும் மனிதர்

இதையும் மறந்து விடுவரோ
கதைகள் பலவும் பேசியே
பதைக்க வைக்கும் சிலரே
உத்தமர் காந்தி புகழை
பித்தன் போலவே மறப்பரோ
கத்தியின்றி பெற்ற சுதந்திரம்
புத்தியின்றி இகழ்தல் நியாயமோ
தன்னலம் மறந்த தியாகியை
இன்று ஏளனம் செய்வதோ
புத்தி பேதலித்த மானிடரே
புத்தனின் அகிம்சை நாயகனை
சிந்தையில் இருத்தி வணங்குவீர்
சிந்தனை செய்தே வாழ்த்துவீர் !

முடியாத காதலில் முகவுரை

 சொல்ல மறந்த கதை ஒன்று உண்டு

மெல்ல மலர்ந்ந காதல் கதையே அது
அன்றொரு நாள் அவள் எழுதிய கடிதம்
அவனது கைகளிலே வைகறை சேர்ந்த நேரம்
அவள் முகம் சிவக்க நோக்கிய தருணம்
அழகாய் மனதைச் சொல்லிய காகித வரிகள்
உள்ளம் திறக்க உதவிய தமிழ் சொற்கள்
கள்ளம் மனதில் இல்லா காதல் ஓவியம்
எத்தனை தெளிவு எழுத்துகள் காதல் சொன்னது
பித்தனாய் மாறிய இவனும் தன்னிலை மறந்தான்
கடிதங்கள் காதல் சுமந்து அவளிடம சேர்ந்தன
பிடிவாதம் உண்டு பிடித்தவன் கரம் பிடிக்க
கடிவாளம் போட்டாலும் கசிந்து உருகி வடியும்
படிதாண்ட வைத்திடும் பதற்றம் கொள்ளும் துடிக்கும்
விடியாத இரவுகள் வினாக்கள் ஆயிரம் மனங்களில்
முடியாத காதலில் முகவுரை எழுதிய நேரமாய்
கடிதான வார்த்தை காதலைச் சுட்டது துவண்டது
விடியவே இல்லை முடிவுரை எழுதி முடிந்தது

வால்பாறை மூன்று - 4

காலையில் என்றும் போல் நான்கு மணிக்கு எழுந்து இராஜேந்திரன் குளித்து, கோயிலுக்குச் சென்று வந்தான். ஒவ்வொருவராக எழுந்து ஆறு மணிக்கே புறப்படத் தயாராகி, அறையைக் காலி செய்து, சதீஷ் காரில் ஏறி உட்கார்ந்தோம்.

அறை நன்றாக இருந்தும் சர்வீஸ் மோசம், சொல்லி விட்டுச் சென்றும், அறையைச் சுத்தம் செய்யாதது, நால்வருக்கும் டவல் தராதது என பீட் பேக் சதீஷிடம் சொன்னோம்.
புறப்பட்டு வளைவுகளில் இறங்கிய போது ஓரிடத்தில் காட்டெருமைகள் கூட்டம் தேயிலைத்தோட்டத்தின் ஊடே மேய்ந்து கொண்டிருந்தது. இறங்கி நின்று போட்டோ எடுத்துக் கிளம்பி , சிறிது தூரத்தில் அருவியொன்று கொட்டிக் கொண்டிருந்தது. அங்கே நிறுத்தி போட்டோ ஷூட் நடந்தது.
கீழே கொண்டை ஊசி வளைவுகளில் இறங்க ஆரம்பித்த போது, ஒரு வளைவில் அழகாய் ஆழியாறு அணையும் சுற்றி மலைத்தொடரும் அழகாய். மீண்டும் நிறுத்தி போட்டோக்கள் எடுத்தபோது, காவலர் மூவர் ஒரு பைக்கில் வந்து நிற்கக் கூடாதெனக் கூறி அங்கே இருந்த தடுப்புச் சுவர் மீதேறி போட்டோ எடுத்துக் கொண்டார். காவலர் உடையணிந்தால் சட்டம் எமக்கில்லையென ஏனோ ஒரு நினைப்பு. இரண்டு நாட்கள் பயணத்தில் இராஜி, அசோக் இருவருக்கும் வயிற்றைக் கலக்க ஆரம்பித்தது.
மலையடிவாரம் நெருங்கிய போது, ஆழியார் வாழ்க வளமுடன் ஆசிரமத்துக்கு அருகில் சிற்றுண்டிக்கு நிறுத்துனோம். நன்றாக இருந்தது. மீண்டும் பயணம் தொடங்கி, கரும்புச் சாறு கடையில் அசோக் சாறு அருந்தி, புறப்பட்டு கோயம்பத்தூர் அடைந்த போது மணி பதினொன்றே. பெங்களூர் இரயில் 12.50க்கும் சென்னை இரயில் 3 15க்கும் என்பதால் உக்கடம் ஏரிக்கரையில் அரை மணி நேரம் செலவிட முடிவானது.
அழகான பூங்கா உருவாகி முடிவுறும் நிலையில் இருந்தது. ஓய்வெடுத்து, கிளம்பி இரயில் நிலையம் அடைந்து, மூன்று நாள் எங்களுடன் காரோட்டிய சதீஷுக்கு விடை கொடுத்தோம். மதிய உணவு இரயிலில் சாப்பிட நான் மட்டும் சாம்பார் சாதம் பார்சல் வாங்கிக் கொண்டு நண்பர்களிடம் விடை பெற்று, மூன்றாம் நடை மேடை அடைந்தேன். சிறிது நேரத்தில் இராஜி வந்தான். இரயில் வரவும், அவனிடம் விடை பெற்று, டேபிளுடன் கூடிய இருக்கையில் அமர்ந்தபோது, இரயில் புறப்பட்டது.
முன்னதாக அடுத்து பயணம் எங்கே என்று பேசியபோது, பிப்ரவரியில் கோவா பயணம் போகலாம், நண்பர்கள் பெங்களூருக்கு இரயிலில் வந்தால், அங்கிருந்து காரில் பயணிக்கலாம் என முடிவானது. ஏப்ரல் / மே மாதத்தில் அந்தோணி மீண்டும் அமெரிக்கப் பயணம் போகவிருப்பதாகச் சொன்னான். பயணங்கள் தொடரும், நட்பும் தொடரும்.
(முற்றும்)

புறம் பேசுதல் வேண்டாம்

 உயர்வு தாழ்வு சொல்லும் வேதமெதுவும் ஏற்புடையதல்ல

உண்மை எதுவெனில் அனைவரும் சமமே
மதங்கள் வேறாக இருப்பினும் நன்றே
மனிதம் மட்டுமே மனதினில் வேண்டும்
குலத்தொழில் என்பதெலாம் கயவர்கள் கற்பனை
குலமென்று சொல்வது மனித குலமே
பெண்களை அடிமை என்பவர் எவரோ
கண்களாய் தாய்மையாய் தாங்குபவர் அவரே
எதிலும் சமநிலை வேண்டும் மனிதா
எத்தனாய் வேற்றுமை பாராட்டி மாயாதே
கற்றதும் கேட்பதும் நல்லறிவாய் இருக்கட்டும்
பெற்ற கல்வியை மறந்து பேசாதே
விட்டில் பூச்சியாய் நெருப்பில் பொசுங்காதே
விட்டுவிடு புறம் பேசுதல் வேண்டாம் !

நோயற்ற வாழ்வே போற்றி

 என்னுளே உறைந்து நின்று

என்றுமே காத்து நிற்கும்
தாயெனும் தெய்வம் போற்றி
சேயெனைத் தோளில் சுமந்து
ஊரெலாம் பவனி வந்த
காவலர் தந்தை போற்றி
கல்வியைக் கற்பித்த ஆசான்
காலமெலாம் கூடவே வரும்
நட்பு சுற்றம் தோழமை
மனையாள் மக்கள் சோதரர்
எனையாளும் இறைவன் இயற்கை
அனைத்தும் ஒருசேரப் போற்றி
வாழ்விலே ஒளி சேர்த்த
உத்தமர் தமைப் போற்றி
ஆண்டுகள் பல கடந்து
நோயற்ற வாழ்வே போற்றி

வால்பாறை மூன்று - 3

ஆழியாறு நீர்த்தேக்கம் பிரமாண்டமாய் காட்சியளிக்க வளைவுகளில் சென்று கொண்டிருந்தது கார். சதீஷ் பேசிக் கொண்டே வந்தார். வரையாடுகள் இப்பகுதியில் காணப்படும் என்று சொல்வார்கள், முதன் முறையாக கண்ணில் பட்டது.

வால்பாறை நெருங்க நெருங்க மதிய உணவு நேரம் கடந்ததை அறிந்து முதலில் செக் இன் செய்து, உணவு முடித்து சோலையார் டேம் போக முடிவெடுத்தோம். பேருந்து நிலையம் அருகிலுள்ள மெஸ் போன்ற ஓட்டல் ஓரளவுக்கு நன்றாக இருந்தது. இப்போது சோலையார் டேம் நோக்கிப் பயணம். மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருப்பதால் நீர் ஆர்ப்பரித்து வெளியேறிக் கொண்டிருந்தது. குளிர்காற்று, அழகிய மலைக் குன்றுகள், நீர்த்தேக்கம் மனதை கொள்ளை கொண்டது.
தெருவோரக் கடைகளில் வியாபாரம் சூடு பிடித்தது. அந்தோணி மீன் வறுவல் ஆர்டர் செய்து இருந்தான். அதற்குள் அருகிலுள்ள கடைக்குச் சென்று சோமபானம் வாங்கி வந்தோம். வறுவல் தயாரானதும் அறைக்குத் திரும்பி, எட்டரை மணிக்கு இரவு உணவுக்குப் போக முடிவானது.
கச்சேரி ஆரம்பம். அதற்குள் இராஜேந்திரன் அருகிலுள்ள முருகரை தரிசித்து வந்தான். கீழே உள்ள ரெஸ்டாரெண்டில் பெருங்கூட்டமாய் ஒரு குடும்பம். எங்களுக்கு நல்ல வேளை இடம் கிடைத்தது. மிகச் சிறிய ரெஸ்டாரெண்ட்.
மறுநாள் போகுமிடங்கள் பற்றிய விவாதத்தில் வியூ பாயிண்ட் மற்றும் கூழாங்கல் ஆறு போக முடிவானது.
காலையில் எட்டரை மணிக்குத் தயாராகி, காலை உணவுக்குப் பிறகு பயணித்து வியூ பாயிண்ட் அருகே நெருங்கிய போது மழை வேகமாகப் பெய்ய ஆரம்பித்தது. லெமன் டீ ஆர்டர் செய்து குடித்து மழை விடக் காத்திருந்த போது முந்தைய கல்லூரி நணபர்கள் குழுவோடு இங்கே அனைவரும் போட்டோ எடுத்த ஞாபகம் வந்தது.
வெயில் மழை நிமிடத்திற்கொரு முறை மாறும் வானிலை. ஒரு கிமீ தூரம் தேயிலைத் தோட்டத்தின் ஊடே நடக்க வேண்டும். என்ன செய்வது என்ற யோசனையோடு வெயிட்டிங்.
( தொடரும்)

வால்பாறை மூன்று - 2

நண்பர்கள் குழுவில் யோகா மாஸ்டர் இராஜேந்திரன் மிகவும் சுறுசுறுப்பு. காலை நான் கு மணிக்கே எழுந்து குளித்து அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று வருவான். இங்கும் அவ் வாறு பேரூர் கோயிலுக்குச் சென்று வந்தான். திட்டமிட்டபடி எட்டரை மணிக்குத் தயாராகி அறையைக் காலி செய்து அன்னபூர்ணா கௌரிசங்கர் ஓட்டலில் நுழைந்த போது ஒரு சிலரே இருந்தனர். நேற்றைய நண்பகல் திருவிழாக்கூட்டம் மனதில் வந்துபோனது. 90 களில் இங்கு தங்கி இட்லி வடை அல்லது சாதாதோசை சாப்பிட்டது போல் இப்போது இல்லை.

சிற்றுண்டி சாப்பிட்டு, அங்கிருந்த ஆட்டோவில் ஏறிய போது, ஓட்டுனர் குமாரின் குடும்பக் கதை ஆச்சரியப்படும்படி இருந்தது. இரண்டு பெண் குழந்தைகளை நன்றாகப் படிக்க வைத்து திருமணம் செய்து கொடுத்து விட்டு, இப்போது தனக்காகவும் மனைவிக்காகவும் ஆட்டோ ஓட்டிச் சம்பாதிப்பதை பகிர்ந்து கொண்டார். அருமையான மனிதர்.
உக்கடம் பஸ் நிலையத்தில் விசாரித்து பொள்ளாச்சி போனால் வால் பாறைக்கு அடிக்கடி பஸ் இருக்கும் என்று சொன்னதால், புறப்படவிருந்த பஸ்ஸில் ஏறி பழைய காதல் பாடல்களைக் கேட்டபடி பொள்ளாச்சி சேர்ந்தாயிற்று.
விசாரித்தபோது பஸ் இப்போது வரும் இருவர் முதலில் ஏறி இடம் பிடியுங்கள் என்றனர். எதிரே சாலையில் டாக்சிகள் நின்றதைப் பார்த்த போது மூளை வேலை செய்ய ஆரம்பித்தது. விசாரித்தபோது அவர்கள் சொன்ன கட்டணம் அதிகமெனத் தோன்ற, தனியே நின்றிருந்த ஆம்னி வேன் டிரைவர் சதீஷிடம் பேச ஆரம்பித்து போக மட்டுமல்ல எங்களுடனே தங்கி இடங்களைச் சுற்றிக் காண்பித்து மீண்டும் வருவதற்கென பேசி முடித்து, லக்கேஜ்களை எங்களோடு ஏற்றிப் புறப்பட்ட போது மணி பதினொன்று. சுமார் மூன்று மணி நேரப் பயணம். நாற்பது கொண்டை ஊசி வளைவுகள். தெற்கு மலை வாசஸ்தலங்களில் அதிக வளைவுகள் இங்கே தான்.
முதல் முறை உறவினர் குழுமம், இரண்டாம் முறை கல்லூரி நண்பர்கள் குழுமத்துடன் வந்து போனது பற்றிப் பேசியபடி தேனீர் அருந்தும் கடையில் நிறுத்தி சூடா ஒரு டீ சாப்பிட்டு பயணம் தொடர்ந்தது.
சதீஷ் தங்கப் போகும் ஓட்டல் பற்றியும் அங்கு போவதற்கு முன் சோலையார் டேம் போய் விட்டுப் போகலாமெனவும் முடிவானது.
நேரம் சேமிப்புக்கு ஆலியார் இறங்கி அணை மேலே போவது வேண்டாமென முடிவெடுக்கப் பட்டு, நுழை வாயிலில் காருக்கும் ஆட்களுக்கும் நுழைவுச்சீட்டு வரிசையில் நின்று பெற்ற போது, இப்பணம் மலைவாழ் மக்களின் முன்னேற்றத்துக்குப் பயன்படுத்தப் படுகிறது என்ற வாசகம் கண்ணில் பட்டது. அன்று சனிக்கிழமை ஆதலால் கார் மற்றும் பைக் வரிசையாய் நின்றன.
நுழைவுச்சீட்டைப் பெற்று பயணம் தொடர்ந்த போது முதலில் கண்ணில் பட்டது மங்கீ பால்ஸ். இறங்கி சிறிது தூரம் மேலேறி குளிக்கப் போகவேண்டும் என்ற தகவலோடு, அங்கே நிற்காமல் பயணம் தொடர்ந்த போது, ஆலியார் நீர்த்தேக்கம் பெரிதாய் கண் முன்னே விரிந்து கண்களுக்கு விருந்தளித்தது.
( தொடரும்)

வால்பாறை மூன்று

மூன்றாவது முறையாகச் சென்றதால் இத்தலைப்பு. திட்டமிடுதல் முக்கியமான ஒன்றாகும் பயணங்களில். நண்பன் சம்பந்தம் மகனின் திருமண ஒப்பந்தம் செப்டம்பர் 9 கோயம்பத்தூரில் என்ற அழைப்பு வந்தபோதே மூளை வேலை செய்ய ஆரம்பித்தது. இந்த பங்ஷன் முடித்து மேலும் இரண்டு நாட்கள் தங்கி ஊட்டி அல்லது மூணார் போகலாமென.

ஊட்டி இப்போதெல்லாம் அழகிழந்து விட்டது அதனால் குன்னூர் அல்லது மூணார் போகலாமென. மூணார் போகலாம் என முடிவெடுத்து நாட்கணக்கில் ஆராய்ச்சி தொடர்ந்தது. இரயிலில் திரும்ப 12 ந்தேதி மதியம் சென்னை நண்பர்கள் அசோக், அந்தோணி, இராஜேந்திரன் ஆகியோருக்கும், எனக்கு பெங்களூருக்கும் புக் பண்ணியாயிற்று. திட்டமிடுதல் முதல் படி.
ஆராய்ச்சிகளின் முடிவில் மூணார் செல்ல உடுமலைப்பேட்டை சென்று பஸ்ஸிலோ, டாக்சியிலோ போக வேண்டும், இல்லை கோயம்பத்தூரிலிருந்து டாக்சியில் போக வேண்டும் பட்ஜெட் உதைக்கும், அதுவுமன்றி 12ந்தேதி மதியத்திற்குள் ட்ரெயினைப் பிடிப்பதும் கடினமென பேசி, மழைக் காலம் சாலைகளும் பழுதடைந்து இருக்கும் என்பதால், மாற்று இடங் கள் ஆராயப் பட்டன. தூரம் குறைவான வால் பாறை கண்ணில் பட்டது. மூன்றாம் முறை போக வேண்டுமா என மனதில் ஒரு எண்ணம். என்றாலும் மழைக்கால மலைத்தொடர் தேயிலைத்தோட்ட பசுமை இவைகள் கண்ணில் தோன்ற மிகுந்த கலந்தாலோசிப்புக்குப் பிறகு வால்பாறை போவதென முடிவானது.
திட்டமிடுதல் இரண்டு கோயம்பத்தூரில் இருந்து , 10 ந்தேதி காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு புறப்பட்டுப் போகலாம் என, பஸ்ஸா டாக்சியா என்ற மறு ஆராய்ச்சியில் கோயம்பத்தூர் நண்பன் சுந்தர்ராஜின் அறிவுரைப் படி பஸ்ஸே எனத் தீர்மானமானது.
அடுத்தது தங்குவதற்கு விடுதி கூகுள் செய்யப்பட்டு 7.6/10 ரேட்டிங் பெற்ற சபரி ரெசிடன்சி புக் செய்தாயிற்று. முன்னமே கோயம்பத்தூரில் தங்க ஸ்ரீ லஷ்மி , காந்திபுரம் கிங் ஷூட் நான்கு பேரும் ஒரே அறையில் தங்கவும் புக் செய்தாயிற்று.
திருமண ஒப்பந்தம் மிகச் சிறப்பாகவும் பழைய நண்பர்கள் சந்திப்பும், நண்பர் சுந்தரின் ' வாத்தியார்' குறும்பட கதை விவாதமும், அருமையான இரவு உணவும் முடிந்து அறைக்குத் திரும்பியாயிற்று. காலை எட்டரைக்குத் தயாராக நண்பர்களிடம் சொல்லப் பட்டது.
சிறிது நேர அளவளாவலுக்குப் பிறகு அவரவர் அறையில் நாளைய பயணத்தின் நினைவோடு் உறக்கம் ஆட்கொண்டது.
( தொடரும்)

மனிதம் பழகிடு

 காலமுண்டு நண்பா கடந்து செல்

ஞாலமுழுதும் நமதே உணர்ந்து கொள்
வாதமெதற்கு பெரிதோ சிறிதோ என்று
வாழவந்தோம் மகிழ்ந்தே நலமுடன் உலகில்
வர்ணங்கள் களைவோம் வெண்மை தூய்மையாகும்
இறைவனை இயற்கையைப் போற்றி வணங்குவோம்
சிறையென மனதில் சிந்தனை எதற்கு
கறுப்போ சிவப்போ கருகிடும் நெருப்பில்
வெறுப்பு மனதில் வேதனை தந்திடும்
மனிதம் பழகிடு மகிழ்வு பெருகும்
மற்றதை விலக்கு விலங்காய் மாறாதே

மாமன் மவன் வாரேண்டி

 கல்லெடுத்து அடிச்சுப் புட்டே போட்டும்

சொல்லெடுத்து அடிச்சுடாதே உள்ளம் தாங்காது
கண்டாங்கி சேலைலே அழகுன்னு சொன்னேனே
வண்டான கண்ணுக்கு வலைபோட முடியுமா
கண்ணுபட போகுதடி சிறுக்கி மவளே
கணுக்காலு கொலுசு சத்தம் கேக்குதடி
கருக்கால எங்கேடி போறவளே சொல்லேண்டி
துணைக்கு மாமன் மவன் வாரேண்டி
துரைபோல நானிருக்கேன் ஒனக்கு என்னிக்கும்
கரும்புக் கொல்லைலே கழனி மேட்டுலே
குறும்பு பண்ணவனே நான்தானே பொண்ணே
கொஞ்சம் சிரிச்சுத் தான் பேசேண்டி
கொஞ்சும் குரலாலே மாமோய்னு சொல்லுவியோ
சினிமாக் கொட்டாலே பக்கத்துலே உக்காந்து
சில்லுனு கையப் புடிச்சுக்க வாரேண்டி
கிழக்காலே போறவளே பேசாம போகாதே
வழக்கமா கொடுக்கறத தந்துட்டு போயேண்டி !

இயற்கைக்கு நன்றி

 கண்ணுக்கு விருந்தளிக்கும் இயற்கைக்கு நன்றி

விண்ணுக்கும் மண்ணுக்கும் காற்றுக்கும் நன்றி
உடலோடு உயிருக்கும் என்றும் நன்றி
கடலோடு நதியோடு மலையோடு பசுமை
மேகங்கள் கதிரவன் இரவோடு் பகல்
தாகங்கள் தீர்க்கும் அனைத்திற்கும் நன்றி
காலத்தின் ஓட்டத்தில் காரணிகள் பலவும்
ஞாலத்தே வாழ்ந்திட
கோடானுகோடி நன்றி

அருள்வாயோ நீயே

 புரியாத புதிருக்கு விடை தேடிப் போனேன்

சரியான பதிலுக்கு வினாவும் தேடினேன்
கரியோடு சாம்பலும் கலந்தே கண்டேன்
பரியேறி வலம் செல்ல எண்ணினேன்
திரியோடு எண்ணெயும் சேர்ந்தே ஒளிர்ந்தது
சரியாத தாவணி மங்கையின் காவலன்
எரியாத தீயிலே எங்கே நெருப்பு
தெரியாத ஒன்றை தெளிந்து நோக்கினேன்
அரியோ சிவனோ அய்யனோ அறியேன்
அறியாமை போக்கிட அருள்வாயோ நீயே !

ஊடகங்கள்

 8/9/22

காலை ஒன்பது JP Nagar 7th Phase புறப்பட்டு 23 kms தூரத்தில் உள்ள RT Nagar பெயர்சூட்டு விழா ஒன்றுக்குச் செல்ல வேண்டும். நகரை முழுமையாகக் கடந்து செல்ல வேண்டும்.
ஊடகங்களின் பயமுறுத்தல் வீடியோக்கள் மனத்திரையில். ஜெயநகர் கடந்து போர்வைக்குள் அடங்கிய பிள்ளையார் சிலைகள் JC Road கடந்து, டவுன்ஹாலும் கடந்து மகாராணி காலேஜ் அருகில் முதல் சுரங்கப்பாதை கடந்த போது ஒரு சொட்டு நீரும் இல்லை. டிராபிக் மிதமாக இருந்தது.
வின்ட்ஸர் மேனர் சுரங்கப்பாதை, மேக்ரி சர்க்கிள் சுரங்கப்பாதை என எங்குமே நீர்த்தேக்கம் இல்லை.
இரண்டு அல்லது மூன்று இடங்கள் ஏரிகளின் அருகில் நீர் வடிகால் சரிவர அமையாத இடங்கள் மட்டுமே வெள்ளம் ஏற்பட்டது. பொதுவாக பெங்களூரில் மழைநீர் தேங்குவதில்லை. மொத்த நகரின் பரப்பில் பத்து சதவீதம் கூட வெள்ளம் இல்லை. அதுவும் திட்டமிடாத கட்டிடங்கள். 1973 லிருந்து நகரின் வளர்ச்சியைப் பார்த்தவன் என்பதால் நகரின் வெளிப்புற தாறுமாறான வளர்ச்சியே இது போன்ற நீர்த்தேக்கத்திற்கு காரணம் என்பது தெளிவு. இது எல்லா பெரு நகரங்களுக்கும் பொருந்தும்.
ஊடகங்கள் உண்மைச் செய்திகளைப் போடுவதை விட மக்கள் மனதில் பயமுறுத்தும் செய்திகளைப் பரப்பி TRP ரேட்டிங் உயர்த்தவே பாடுபடுகிறார்கள்.
9/9/22
6 10am
Intercity Exp to Kovai

இனியவை கேட்க

 வார்ததைகள் கோர்வையாக வருகின்ற கவிதை

பார்த்த காட்சிகளை கண்ணுக்குள் அடக்கி
கைபேசி கண்ணால் படமாக்கும் அழகு
பண்பாடி மகிழும் விடியலின் கவிஞர்
குறளோசை வரிகள் முதியோரின் அறிவுரை
குரலோசை சிலநாள் கூக்குரல் சிலநாள்
வருவதும் போவதும் சட்டங்கள் செய்வதும்
கருவுள்ள கதைகள் கற்பனை ஓட்டங்கள்
சிந்தனைச் சிற்பிகள் சிலநேரம் சண்டைகள்
பந்தம் பாசம் பற்றுள்ள தகவல்கள்
இன்னும் எத்தனை எத்தனையோ அளவில்லை
இனியவை கேட்க இக்குழு வாருங்கள்
சுற்றுலா செல்வதும் கண்டம் கடத்தலும்
சுற்றமாய் என்றுமே சேர்ந்திடும் எம்குழு

நீயும் நானும்

 வில் தேடிப் போன விசயன் காட்டினிலே

சொல் தேடிப் போன இவனோ நாட்டினிலே
நல் வார்த்தை நாலாய் இருக்கட்டுமே என
பல் தேய்த்த பின்னே பாட்டு எழுத
கல் தேய்ந்து போனது போல் கவிதையது
காலம் உருண்டு ஓட காலன் வருமுன்னே
ஞாலம் இதிலே நட்போடே இருக்க எண்ணி
நாளும் நீயும் நானும் கவிதை பாட
மூளும் தீயது மனதில் முட்டிப் பார்க்கும்
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி எனில்
ஆகும் நட்பும் ஆலம் விழுது போல்
கேட்ட உனக்கு சில வரிகள் சிந்தனையில்
பாட்டு என்றே பாடி வைத்தேன் புலவரே!

நட்பை பத்திரமா பாத்துக்க

 கூடு விட்டு ஆவி போகு முன்னே ஏனோ இந்த நாடகம் மானிடா

கூடு கட்டி வாழும் பறவைக் கூட்டம் கூடித் திரியும் விலங்கினங்கள் வனமதிலே
ஏடு பல கற்றும் ஏனோ மனிதா உன் புத்தி மட்டும் மாறலியே
பாடு பட்டு சேத்த நட்பை பத்திரமா பாத்துக்க போனது என்றும் திரும்பாது
காடு சேரும் நாளும் அருகே தான் கசப்பு மட்டும் ஏனோ இன்னும்
மேடு விட்டுப் பாயும் தண்ணீ பள்ளத்துலே சேரும் பாசமும் அப்படித் தானே
நாடு விட்டு நாடு வந்து நல்லதை கத்து கிட்டு கூடித்தானே வாழ்ந்தோம்
விடு விட்டு விடு கசடுகள் வேணாம் மனசு சுத்தமா இருக்க விடு
கடு கடுத்த வாழ்க்கை காசுக்கும் ஆகாது கவலை எதுக்கு மனசுலே அகற்று
சிடு சிடுப்பு விட்டு சிரிப்ப வச்சுக்க சிந்தனை மாத்து மனசு மகிழும்
நெடு நெடுங் காலம் வாழ்ந்த வாழ்வை நினைச்சுப் பார் உண்மை புரியும்
வடு எதுவும் வேணாம் வாழும் சில காலம் மனசு கோணாம இருப்போம் !