திங்கள், 31 அக்டோபர், 2022

மராட்டிய மண் - 3

முந்தைய தொடரில் சொல்லாமல் விட்டது கிருஷ்ணா நதியின் பாதை பல இடங்களில் பள்ளத்தாக்குகளில். போகாமல் விட்ட இடங்களில் கோயில்களும் அடங்கும். இப்போது மற்றொரு பயணம் 13/7/22 பீமாசங்கர் ஜோதிர்லிங்கம் கோயில். 120 கிமீ பயணம், ஆதலால் இன்றும் காலை 6 45க்கு புறப்பட்டு கூகுள் அண்ணன் உதவியுடன். அவரில்லாமல் எங்கும் பயணித்து இருக்க முடியாது.

புறப்பட்டு அகமத்நகர் நெடுஞ்சாலையில் பயணித்து, SH ல் திரும்பிய போது சிமெண்ட் சாலை வரவேற்றது. சிறிது நேரமே அந்த மகிழ்ச்சி. கிராமத்துச் சாலையும், சுற்றியுள்ள சாயாத்ரி மலைத் தொடரும், விடாத மழையும் கூடவே பயணித்தது. மழையினால் சாலை பல இடங்களில் பழுதடைந்து இருந்தது. நீர் நிரம்பிய பள்ளங்களில் ஆழமாக இருக்குமோ என்ற அச்சத்துடனே கார் சக்கரத்தை இறக்கி ஏற்ற வேண்டியதாயிற்று.
காலை 8 30 மணியளவில் மீண்டும் NH 60 தொட்ட போது மகிழ்ச்சி. சிற்றுண்டிக்கு நிறுத்தி புதுவித மராட்டிய சாம்பாருடன் இட்லி, தோசை சாப்பிட்டு, பெட்ரோலும் நிரப்பி ,, பயணம் தொடர்ந்தபோது 5 கிமீ தூரத்தில் சாலை குறுகி மீண்டும் SH ஆரம்பித்தது. ஊர் கள் பலவும் கடந்து ஆங்காங்கே சாலையின் குறுக்கே நீரோட்டம், வேகமான மழை. என்னோடு யாராவது பயணித்திருந்தால், இந்த மழையில் பயணம் தேவையா என்றிருப்பார்கள். மூத்த கன்று பயமறியாது என்ற புதிய மொழி வந்து போனது.
கடைசி முப்பத்து நான்கு கிமீ மலையேற்றம் ஆரம்பித்த போது பழம்பெரு (டேம்) நீர்த் தேக்கம், ஆற்று நீர் வெள்ளம் செம்புலப் பெயல் நீர் போல ஆரப்பரித்து ஓடிக் கொண்டிருந்தது. தேனீர் இடைவேளை தேவைப்பட்டது. நிறுத்திய இடத்திலும் அருவி கொட்டிக் கொண்டிருந்தது. அங்கிருந்தவர்களோடு எனக்குத் தெரிந்த இந்தியில் பேசி விடை பெற்று மலைப்பாதையில் வளைந்து வளைந்து பயணம் தொடர்ந்தது. கோயிலை அடைவதற்கு சில கிமீகள் இருக்கும் போது பாதையே தெரியாத காட்டுப் பாதையில் அடர்ந்த மழை. கோயில் அருகில் பஸ் நிறுத்தத்தில் பலரும் காரை நிறுத்தி இருந்தனர். நான் வெளியேறும் பாதையில் நிறுத்தி, கோயிலுக்கு நடக்க ஆரம்பித்தேன். கோயிலை நோக்கி வெள்ளமாய் மழை நீர், அருவி போல் கொட்டினாலும் கோயிலுக்குள் வரவில்லை. படிகளைக் கடந்து இறங்கிய போது மழைநீரும் கூடவே, குடை பிடித்த படியே.
ஒரு பூக்கார அம்மாவின் கடையில் செருப்பை விட்டு, கோயிலை அடைந்து சிறிது நேர நண்பகல் பூஜைக்குப் பிறகு உள்ளே அனுமதித்தார்கள். மிகச் சிறிய, ஒரு பெரிய தேங்காய் அளவே, வணங்கிவிட்டு மேலே ஆரம்பித்தபோது மூச்சிறைத்தது. புதுவித பால்கோவா மூன்று வகை கொஞ்சமாய் வாங்கிக் கொண்டு மீதமுள்ள படிகளைக் கடந்து செருப்பை விட்ட கடையைத் தேடிய போது எல்லாக் கடைகளும் மூடியிருந்தது. மழையாலோ என்னவோ மூடிவிட்டுச் சென்றிருந்தார்கள். எல்லாக் கடைகளும் ஒரே மாதிரியான தோற்றம் வேறு, மூடியிருந்தது. ஏற்கனவே மூச்சிரைத்தது. செருப்பு ஹோகயா. வெறுங்காலில் காருக்குத் திரும்பிய போது வழியில் மதிய உணவு சாப்பிடலாம் என நினைத்து பயணித்து, வெறுங்கால்களில் இறங்கி நடக்கவும், தயக்கம், மராட்டிய மொழியில் பெயர்ப் பலகைகள் இப்படியே கடந்தது.
திரும்பும் வழி வேறாக இருக்கும் என்று எண்ணியதும் தவறு. வந்த வழியிலே பயணம். மழை கொஞ்சம் குறைந்திருந்தது. வெறும் காலில் ஓட்டுவது இதுவே முதல் முறை, கார் ஓட்ட டிரையினிங் போகிற சிலர் செருப்பை அணியாமல் ஓட்டுவார்கள், பிரேக் மற்றும் ஆக்ஸிலேட்டர் ஃபீல் பண்ணி ஓட்ட வேண்டுமென. எங்கும் நிற்காமலே, கண்கள் செருப்பு கடையைத் தேடிய படியே பயணித்து, உணவருந்தாமல் வீட்டை அடைந்த போது மணி நான்கு. கொஞ்ச நேரத்தில் வந்த மகனுடன் பேசிய போது அனைத்து டூரிஸ்ட் இடங்களுக்கும் செல்ல ரெட் அலர்ட் என்றும், செக்க்ஷன் 144 கும்பலாக பயண இடங்களுக்குச் செல்ல தடை என்றும் சொன்னதால் வார இறுதி வரை, பயணத்திற்கு விடுப்பு கொடுக்க முடிவெடுக்கப் பட்டது.
( வரும்)

கருத்துகள் இல்லை: