திங்கள், 31 அக்டோபர், 2022

மராட்டிய மண்- 8

மலைகள் சூழ்ந்த பிரதேசமாதலால், மலைக் கோட்டைகளும் அதிகம். சிவாஜி 23 மலைக் கோட்டைகளை முகலாயருக்கு விட்டுக் கொடுத்ததாகவும் அவற்றில் சிலவற்றை சண்டையிட்டு திரும்பப்பெற்றதாகவும் சரித்திரம் சொல்கிறது. இங்குள்ள கோட்டைகளையும் மலைப் பகுதிகளையும் பார்க்க வேண்டுமெனில் பல நாட்கள் தேவை. கோதாவரி, கிருஷ்ணா நதிகள் இங்கே பிறந்து ஆந்திராவுக்குள் நுழைகின்றன.

அப்படியொரு புகழ் பெற்ற மலைக் கோட்டை சிங்காட் சுமார் 40 கிமீ தொலைவில். இதன் சரித்திரம் தெரிய தன்ஹாஜி என்ற அஜய் தேவ்கன் தயாரித்து நடித்த படத்தைப் பாருங்கள். உதய்பானு என்ற படைத்தளபதியாக சைஃப் அலிகான். முகலாயர் ஆட்சிக் காலத்திலிருந்தே இந்த பிரித்தாளும் சூழ்ச்சிகள் ஆரம்பித்திருக்கின்றன. மனித மனத்தில் மதம், மொழி, மண், பெண் என ஏதோ ஒன்று நுழைந்து சண்டையிட வைத்து விடுகிறது.
நமது கட்டுரைக்கு வருவோம். அருகில் இருப்பதால் நிதானமாக காலையுணவு முடித்து பத்து மணிக்கு மேல் கிளம்பி, நகரின் போக்குவரத்து நெரிசலைக் கடந்து, பெங்களூர் பம்பாய் நெடுஞ்சாலையில் பயணித்து, நீண்ட டனல் ( Tunnel) சாலையைக் கடந்து, மலைப்பாதையில் பயணித்து உச்சியை அடைந்த போது நண்பகல் ஆகி இருந்தது.
மேக மூட்டம் இல்லாத வானிலையில் கண்ணுக்கெதிரே விரிந்த பசுமைப் பள்ளத்தாக்கு மனதைக் கொள்ளை கொண்டது. செங்குத்தான மலையில் கோட்டை கட்டி வாழ்வதே அக்கால மன்னர்களின் வழக்கமாய் இருந்துள்ளது. யாரும் எளிதில் படையெடுக்க இயலாத வகையில். அடுக்கடுக்காய் மலைகள், ஆறு என்று பார்க்கக் கண் கோடி வேண்டும். படிக்கட்டுகளில் மூச்சிறைக்க ஏறி அவ் வப்போது போட்டோக்களும், வீடியோவும் எடுத்த படியே, மேலேறி நின்றால் சொர்க்கம் எனத் தோன்றியது. அங்குள்ள பாறையொன்றில் உட்கார்ந்து பசுமையான பள்ளத்தாக்கையும் வித விதமான மரம் செடி கொடிகளையும் பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றியது.
குன்று ஒன்றைக் குடைந்து குகை போன்ற அமைப்பில், மழை நீர் தேங்கி சிறிய குளம் போன்று தோற்றமளித்தது.்கோட்டை மதிற்சுவர், கோட்டை வாயில் என அங்கொன்று இங்கொன்றாக உருவமிழந்த தோற்றம். கடைகளில் பலவித உணவுப் பொருட்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். நானும் பேல்பூரி ஒன்றை வாங்கி, அளவு அதிகமே, மூன்று பேர் சாப்பிடலாம், சாப்பிட்டு மீண்டும் படிக்கட்டுகளைக் கடந்த போது கால்கள் கெஞ்சின. உயரமாய் இன்னொரு சிகரத்தில் மக்கள் நின்று கொண்டிருந்தனர். இதற்கு மேல் ஏற முடியாது, அங்கிருந்தும் அதே காட்சி தானே என சமாதானம் செய்து, திரும்ப மெதுவாக இறங்கி சுற்று மதில் அருகில் அமர்ந்து இயற்கையை இரசிக்க ஆரம்பித்தேன். மழைக் காலங்களில் இத்தகைய பிரதேசங் கள் எவ்வளவு அழகாய் மாறி விடுகின்றன.
கீழே இறங்க ஆரம்பித்த போது கால்கள் வலி தெரிய ஆரம்பித்தது. பூனாவைச் சுற்றியுள்ள மலைகளில் டிரெக்கிங் பாதைகள் ஏராளம். இளைஞர்கள் பலரும் எல்லா சுற்றுலாத் தளங்களிலும் காண முடிந்தது.
கீழிறங்கி காரில் திரும்பிய போது என்னையறியாமல் மாற்றுப் பாதையில் நுழைந்து மலையை ஒட்டி வளைந்து பயணித்த போது நெடுஞ்சாலை தொடாமலும், டேம் (dam) ஒன்றின் வழியாகவும்,்மிலிட்டரி ஏரியா வழியாக மிதமான போக்கு வரத்து நெரிசலில் வீடு வந்தடைந்தபோது மணி நான்கு. அடுத்து பயணிக்க இடங்கள் இருக்கின்றதா என கூகுளில் தேட ஆரம்பித்த போது வார இறுதி வரை எங்கும் போவதில்லை என முடிவானது. வெளியில் போகாத நாட்களில் வீட்டுச் சமையல்.
( வரும்)

கருத்துகள் இல்லை: