திங்கள், 31 அக்டோபர், 2022

மராட்டிய மண்- 4

நீண்ட தூரப் பயணம் வார இறுதிவரை இல்லை என்பதால் 14 கிமீ நகருக்குள்ளே இருக்கும் சனிவார் வாடா என்ற பதினேழாம் நூற்றாண்டு கோட்டைக்குச் சென்று வர முடிவெடுத்து, போக்குவரத்து நெரிசலைக் கடந்து சாலையோரம் கிடைத்த இடத்தில் காரைச் செருகி உள்ளே நுழைந்தால் திருவிழாக் கூட்டம் போல் மக்கள் வெள்ளம்.

கோட்டைக்கு முன்னால் நின்று போட்டோ கிளிக்கியபடி ஒரு கூட்டம். வரிசையில் நின்று ஆளுக்கு 25₹ கட்டணம் செலுத்தி உள்ளே நுழைந்து, படிக்கட்டுகளின் உயரத்தில் கஷ்டப்பட்டு ஏறி கோட்டை மதில் சுவரில் வலம் வந்த போது, வாட்ச் டவர், பீரங்கிகள் மூக்கை நுழைக்கும் துளைகள் என கட்டிடம் ஆங்காங்கே சிதிலம் அடைந்து காணப் பட்டது.
அங்கிருந்த அறிவிப்புப் பலகையில் பேஷ்வாக்களால் பதினேழாம் நூற்றாண்டில் கட்டப் பட்டதெனவும் ஆயிரம் பேர் வரை தங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டது எனவும் தகவல் சொன்னது.
ஏனோ அறைகள் பார்வையிட வழியில்லை. மிகவும் பாழடைந்து காணப்பட்டது.மழை பெய்தபடி இருந்ததால், பசுமையான தோட்டங்கள் கணகளுக்கு ஆறுதலாக இருந்தது.பெரிய நீர்த்தொட்டி ஒன்றும் சிறு சிறு பவுண்டன் அமைப்புகளும் இருந்தன. இது பேய் நடமாடும் கோட்டையென நணபர் ஒருவர் கூறினார். பேயிடம் பேச அனுமதி கேட்டு வரலாறு தெரிந்து கொள்ளலாம்.
ஞாயிறன்று அங்குள்ள அர்மானி மாலில் திரையரங்கு எட்டில் மாலைக் காட்சி 4 45 க்குப் பார்த்திபனுக்கு FBல் தெரிவித்த படி, மகன் மற்றும் அவனது நண்பருடன் "இரவின் நிழல்" பார்த்த போது படமெடுப்பது எவ்வளவு கடினம் எனப்புரிய வைத்தது. புதுமுயற்சி. ஒருவன் தொட்டதெல்லாம் தீமையில் முடிய, வாழ்வே நரகமாகும் எனப் புரிய வைக்க சில அடல்ட் காட்சிகள் தேவைப்பட்டன. திரையரங்கில் மிகச்சிலரே இருந்த போதும் அவ்வப்போது கைதட்டி தங்கள் மனநிலையை வெளிப் படுத்தினர்.
சினிமாவுக்குப் பிறகு மறுநாள் எங்கெல்லாம் போவதென டிஷ்கஷனில், தினமும் பயணிக்காமல், ஒரு நாள் இரவு தங்கி போன பாதையில் மறுபடி பயணிக்காதவாறு, லோனாவாலா, அலிபாக் பீச், தாமினி காட் முடித்து கெரா பார்க்வியூ திரும்புவதென முடிவெடுத்து, பேக்கிங் முடித்து காலையில் சற்று நிதானமாக புறப்பட முடிவெடுக்கப் பட்டது.
(வரும்)

கருத்துகள் இல்லை: