திங்கள், 31 அக்டோபர், 2022

மராட்டிய மண் - 12

பல நாட்கள் ஓய்வுக்குப் பிறகு இன்று லாவாசா பயணம் செய்ய முடிவு , நாள் 10/8/22. காலை ஒன்பதரை மணியளவில் பயணம் தொடங்கிய போது மழைத் தூறலும், போகும் வழியில் வெயிலும் என மாறி மாறித் தோற்றம் தந்தது. காலை நேரப் போக்குவரத்து நெரிசலைத் தாண்டி, லாவாசா இணைப்புச்சாலை அடைந்தபோது, மழை தூற ஆரம்பித்தது.

சாலை மிகவும் பழுதடைந்து, காரை ஓட்டவே கடினமாக. சில கிமீக்கு அப்புறம் மலைப் பாதை ஆரம்பிக்க, பசுமைத்தோற்றம் கண்ணைக் குளிர்வித்தது. பள்ளத்தாக்குகள், மலை முகடுகள் பசுமைப் போர்வையில், வழி நெடுகிலும் விடாத மழை. அருவிகள் ஆரப்பரித்துக் கொட்டிய படி, எண்ணிலடங்காமல், காற்றின் வேகமும் பலமாய். மக்கள் சில இடங்களில் குளித்தாலும், ஆபத்தான பகுதியென அருவிகளில் அறிவிப்பு காணப்பட்டது, காட்டாற்று அருவிகளில், பாறைகள் உருண்டு வர வாய்ப்பிருப்பதால்.
உயரப் போக போக மழை வலுவெடுத்தது. வழியில் அணையொன்றும் காணப்பட்டது. நீர் களிப்பு நிறத்தில் நிரம்பிக் கொண்டிருந்தது. காரை ஓட்டுவதே கடினமாய் சில இடங்களில் மேக மூட்டமும்.
மலைகளைக் கடந்து, U வளைவுகளைத் தாண்டி , லாவாசா நுழைவில், 500₹ நுழைவுச்சீட்டு காருக்குப் பெற்றுக் கொண்டு உள்ளே நுழைந்தபோது, மெதுவாக பள்ளத்தாக்கில் நகரம் விரிந்தது. இத்தாலிய மொழி தெருப் பெயர்கள். கட்டிடங்களும் இத்தாலிய அமைப்பில். மலை மீது பங்களாக்கள். ஆனால் அனைத்தும் உபயோகப் படாத பழமைத் தோற்றம்.
சரத் பவார் காலத்தில் அவரால் ஆரம்பிக்கப் பட்டு பலரது பணம் வசூலிக்கப் பட்டு உருவாக ஆரம்பித்த நகரம், சுற்றுச் சூழல் அமைச்சகத்தால், நிறுத்தப் பட்டது எனவும் தகவல். சுற்றுலாத் தலமாக மாறினாலும் யாரும் தங்குவதற்கு விடுதிகள் அனுமதியில்லை. பல இடங்களில் குறுகிய நாட்கள் தங்கும் வசதி அனுமதியில்லையென அறிவிப்பு. இதனால் பெரும்பாலான கட்டிடங்கள் பாழடைந்ந தோற்றம். சுமார் ஒரு பில்லியன் டாலரில் ( ஏழாயிரம் கோடி) உருவான நகரம், இன்று பேய்களின் (Ghost Town) நகரமாய். வருத்தமாய் இருந்தது மனதிற்கு. ஏதாவது தலைமை தலையிட்டு அழகான நகராக புதுப்பிக்கலாம்.
ஏரியில் நீரின் அளவு பயமுறுத்தியது. மிகப் பெரியதாய் நீரின் அலைகள், காற்றின் வேகம் எல்லாம் சேர்ந்து பயமுறுத்தியது. நேர்த்தியான சாலைகள், தோட்டங்களுடன் வீடுகள், அழகாய் இருந்தன. ஆனால் அழிந்து விடுமோ என அச்சத்துடன். ஒரே ஒரு வீதியில் உணவகங்களுக்கு அனுமதி தந்துள்னர். டவுன் ஹால் எனப்படும் பெரிய கட்டிடத்தில் அலுவலகம் ஏதோ செயல்பட்டுக் கொண்டிருந்தது. மற்றபடி சிலர் இங்கே வாழ்வது போல் தோன்றுகிறது. ஆனாலும் கட்டிடங் களில் யாரும் இருப்பதாகத் தோன்றவில்லை. மிக மன வருத்தத்துடன் மதிய உணவு சாப்பிட ஆரம்பித்த போது மழை ஜோவென்ற ஓசையுடன் கொட்ட ஆரம்பித்தது.
காரில் தெரு வலம் வந்து திரும்ப ஆரம்பித்த போது பாதை தெரியாத அளவுக்கு மேக மூட்டம். லாவாசா கடந்து மழை வேகம் குறைந்து நகர போக்குவரத்தில் நுழைந்து வீடு சேர்ந்தபோது மணி ஆறரை.
இந்த ஒரு மாதம் பார்த்த இடங்கள் பலவென்றாலும், இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் அதிகம், பெரும்பாலும் மலையேற்றப் பாதைகள், மலைக் கோட்டைகள், புனேவைச் சுற்றி. மராட்டிய சிற்றரசர்கள் பலரால் கட்டப்பட்டு பிற்காலத்தில் சிவாஜி மற்றும் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில்.
இப்பயணங்களில் சில படிப்பினைகள்.
கூகுள் சில இடங்களை அப்டேட் செய்யவில்லை ஆனாலும் பயணம் முழுவதும் யாருடைய உதவியில்லாமல் பல இடங்களுக்கும் துல்லியமாய் வழி காட்டியது.
Booking.com,goibibo என பல தங்கும் இடங்கள் புக் செய்யும் apps இருந்தாலும், அவர்கள் இம்மாதிரியான மழைக் காலங்களில் விடுதிகள் செயல் படுவதை உறுதி செய்யாமல் புக்கிங் அனுமதிப்பது தவறு.
மழைக்காலமாதலால் விடுதிகள், கடைகள் மூடியே காணப் பட்டன. சாப்பிட உணவு விடுதிகள் கூட பல கடற்கரை நகரங்களில் இல்லை.
கடற்கரை நகரங்கள் முழுவதுமாய் செயலிழந்து அமைதியாய். பல கடற்கரைகளில் தனி ஒருவனாக, அல்லது ஒரு சில கிராம மக களோடு மட்டும். தேனீரின் சுவை மிக அருமை எங்கு சென்றாலும். உணவின் சுவை, மனிதர்களின் நட்புணர்வு அருமை.
பல நூறு கிமீகள் மலைகள் ஒரு புறமும், கடல் மறு புறமும், மலைப்பாதைகளும், காட்டுச் சாலைகளும் சேர்ந்தே பயணித்தன. கோவாவை விட அழகாய்த் தோன்றியது. மிகப் பெரிய சுற்றுலாத் தலங்களாக மாற வாய்ப்பு இருந்தாலும் இயற்கை அழகு கெடாமல் இருக்க அப்படியே இருப்பதே நலம்.
மீண்டும் ஒருமுறை நண்பர்களுடனும், உறவினருடனும் வரலாம் எனத் தோன்றியது. மராட்டிய மண் பயணம் இத்துடன் நிறைவடைகிறது. வேறொரு பயணத்தில் மீண்டும் தொடரலாம். நன்றி.
( முற்றும்)

கருத்துகள் இல்லை: