திங்கள், 31 அக்டோபர், 2022

வால்பாறை மூன்று - 2

நண்பர்கள் குழுவில் யோகா மாஸ்டர் இராஜேந்திரன் மிகவும் சுறுசுறுப்பு. காலை நான் கு மணிக்கே எழுந்து குளித்து அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று வருவான். இங்கும் அவ் வாறு பேரூர் கோயிலுக்குச் சென்று வந்தான். திட்டமிட்டபடி எட்டரை மணிக்குத் தயாராகி அறையைக் காலி செய்து அன்னபூர்ணா கௌரிசங்கர் ஓட்டலில் நுழைந்த போது ஒரு சிலரே இருந்தனர். நேற்றைய நண்பகல் திருவிழாக்கூட்டம் மனதில் வந்துபோனது. 90 களில் இங்கு தங்கி இட்லி வடை அல்லது சாதாதோசை சாப்பிட்டது போல் இப்போது இல்லை.

சிற்றுண்டி சாப்பிட்டு, அங்கிருந்த ஆட்டோவில் ஏறிய போது, ஓட்டுனர் குமாரின் குடும்பக் கதை ஆச்சரியப்படும்படி இருந்தது. இரண்டு பெண் குழந்தைகளை நன்றாகப் படிக்க வைத்து திருமணம் செய்து கொடுத்து விட்டு, இப்போது தனக்காகவும் மனைவிக்காகவும் ஆட்டோ ஓட்டிச் சம்பாதிப்பதை பகிர்ந்து கொண்டார். அருமையான மனிதர்.
உக்கடம் பஸ் நிலையத்தில் விசாரித்து பொள்ளாச்சி போனால் வால் பாறைக்கு அடிக்கடி பஸ் இருக்கும் என்று சொன்னதால், புறப்படவிருந்த பஸ்ஸில் ஏறி பழைய காதல் பாடல்களைக் கேட்டபடி பொள்ளாச்சி சேர்ந்தாயிற்று.
விசாரித்தபோது பஸ் இப்போது வரும் இருவர் முதலில் ஏறி இடம் பிடியுங்கள் என்றனர். எதிரே சாலையில் டாக்சிகள் நின்றதைப் பார்த்த போது மூளை வேலை செய்ய ஆரம்பித்தது. விசாரித்தபோது அவர்கள் சொன்ன கட்டணம் அதிகமெனத் தோன்ற, தனியே நின்றிருந்த ஆம்னி வேன் டிரைவர் சதீஷிடம் பேச ஆரம்பித்து போக மட்டுமல்ல எங்களுடனே தங்கி இடங்களைச் சுற்றிக் காண்பித்து மீண்டும் வருவதற்கென பேசி முடித்து, லக்கேஜ்களை எங்களோடு ஏற்றிப் புறப்பட்ட போது மணி பதினொன்று. சுமார் மூன்று மணி நேரப் பயணம். நாற்பது கொண்டை ஊசி வளைவுகள். தெற்கு மலை வாசஸ்தலங்களில் அதிக வளைவுகள் இங்கே தான்.
முதல் முறை உறவினர் குழுமம், இரண்டாம் முறை கல்லூரி நண்பர்கள் குழுமத்துடன் வந்து போனது பற்றிப் பேசியபடி தேனீர் அருந்தும் கடையில் நிறுத்தி சூடா ஒரு டீ சாப்பிட்டு பயணம் தொடர்ந்தது.
சதீஷ் தங்கப் போகும் ஓட்டல் பற்றியும் அங்கு போவதற்கு முன் சோலையார் டேம் போய் விட்டுப் போகலாமெனவும் முடிவானது.
நேரம் சேமிப்புக்கு ஆலியார் இறங்கி அணை மேலே போவது வேண்டாமென முடிவெடுக்கப் பட்டு, நுழை வாயிலில் காருக்கும் ஆட்களுக்கும் நுழைவுச்சீட்டு வரிசையில் நின்று பெற்ற போது, இப்பணம் மலைவாழ் மக்களின் முன்னேற்றத்துக்குப் பயன்படுத்தப் படுகிறது என்ற வாசகம் கண்ணில் பட்டது. அன்று சனிக்கிழமை ஆதலால் கார் மற்றும் பைக் வரிசையாய் நின்றன.
நுழைவுச்சீட்டைப் பெற்று பயணம் தொடர்ந்த போது முதலில் கண்ணில் பட்டது மங்கீ பால்ஸ். இறங்கி சிறிது தூரம் மேலேறி குளிக்கப் போகவேண்டும் என்ற தகவலோடு, அங்கே நிற்காமல் பயணம் தொடர்ந்த போது, ஆலியார் நீர்த்தேக்கம் பெரிதாய் கண் முன்னே விரிந்து கண்களுக்கு விருந்தளித்தது.
( தொடரும்)

கருத்துகள் இல்லை: