திங்கள், 31 அக்டோபர், 2022

மராட்டிய மண்- 7

திட்டமிட்ட படி ஞாயிறு காலை ஏழு மணிக்குள்ளாக புறப்பட்டு அகமத் நகர் நண்பன் ( என்னுடன் L& T ல் பணி புரிந்தவர்) வீட்டை அடைந்த போது காலை ஒன்பதே கால். சூடான அவல் உப்புமாவும், காபியும் கொடுத்து உபசரித்தனர். வெகு சில நாட்களே என்னோடு பணி புரிந்தாலும் அவராகவே தொடர்பு கொண்டு என்னோடு பயணிக்கிறேன் என்று சொன்னது, பெருந்தன்மை.

அங்கிருந்து புறப்பட்டு சனி சிங்னாபூர் சனி பகவானை தரிசித்து, கிளம்பிய போது, வீடுகள் எதற்கும் கதவில்லை என்பதும், திருடும் பொருள் மீண்டும் தானாகவே வந்து சேரும் சனி பகவானின் அருளால் என்பதை இன்றும் அவ்வூரினர் கடை பிடிப்பது ஆச்சர்யமே. ஆனாலும் கடைகளில் உள்ளவர்கள் முப்பது ரூபாய் எண்ணெயை நூறு ரூபாய்க்கு விற்க முயல்வது நேர்மாறு.
இப்போது அடுத்தது எங்கே என்ற போது வரும் வழியில் கண்ணில்பட்ட எல்லோரா போகலாம் என முடிவானது. காரையும் இருவரும் மாற்றி மாற்றி ஓட்டுவதென முடிவு செய்தோம். நூற்று நான்கு கிமீ தூரம். பிற்பகலில் அடைந்து, மதிய உணவுக்குப் பிறகு, டிக்கெட் வாங்கி உள்ளே நுழைந்த போது எதிரே தோன்றிய குகைக் கோயிலும் பசுமை போர்த்திய மலையும் கண்களைக் கவர்ந்தது.
கைலாஷ் என்று அழைக்கப்பட்டு சிதிலமடைந்த சிலைகள் பலவும். எல்லோராவின் சிறப்பே மேலிருந்து கீழாக செதுக்கப்பட்ட பல வித சிற்பங்கள். கால மாற்றங்களால் வடிவிழந்து காணப்பட்டன. குகைகளாக குடையப்பட்டு ஒவ்வொரு பெரும் பாறையும் அறைகள் போல் தோற்றமளிக்கின்றன.
சுற்றியுள்ள மலைகள அனைத்தும் குகைகளாக. பதினேழு முதல் முப்பத்து நான்கு வரை. ஒன்றிலிருந்து பதினாறு என்ன ஆனது தெரியவில்லை.
மழை பெய்து கொண்டே இருப்பதால் அங்குள்ள அருவியின் தோற்றம் மிக அழகாய். படிகளில் ஏறியும் இறங்கியும், மூன்று மணி நேரம் செலவிட்டு, போட்டோக்கள், வீடியோக்கள் கணக்கிலடங்காமல் எடுத்தபிறகு அங்கிருந்து புறப்பட்டு, மீண்டும் நாசிக் நோக்கி பயணம். இரவு ஒன்பதரைக்கு மேல் ஓட்டலை அடைந்து, இரவு உணவு சாப்பிட ஆரம்பித்த போது பத்துக்கு மேல். சுமார் இரண்டடி விட்டமுள்ள அப்பளம். இருவர் சாப்பிடவே முடியவில்லை. ஒரே நாளில் சுமார் நானூறு கிமீ பயணம்.
காலையில் புறப்பட்டு முப்பது கிமீ தொலைவில் உள்ள திரிம்பகேஷ்வர் ஆலயம் சென்றபோது கூட்டம் அதிகம் திங்கள் சிவன் தினமாதலால். சிறப்பு தரிசன வரிசையில் நின்று ஜோதிர்லிங்கம் அருகில் சென்றபோது , திருப்பதியை விட மோசமாக, சில வினாடிகள் கூட நிற்க விடாமல்.
இப்போது சிர்டி நோக்கி பயணம். இலவச வரிசையில்லாமல் வேறு வரிசையில் சென்று சற்றே தூரமானாலும் நின்று தரிசனம் முடித்துக் கிளம்பிய போது, பயணம் கடினமாக இருக்குமென நண்பன் கூறியது போல் சாலை நெடுகிலும் பள்ளங்கள். அகமத் நகரில் அவனை இறக்கிப் புறப்பட்ட போதே மணி ஏழாகி இருந்தது.
மகனிடம் மொபைலில் பேசி இரவு உணவுக்கு வீட்டுக்கே வருவதாய்க் கூறி எங்கும் நிற்காமல் 114 கிமீ கடந்து Gera park view அடைந்தபோது மணி 9 45.
பல இடங்களில் சாலைகள் பழுதடைந்து இருந்தாலும், நல்ல சாலைகளே அதிக இடங்களில்.
அடுத்த பயணம் எங்கே என்று முடிவெடுக்காமல், அன்றிரவு உறங்கப் போயாயிற்று.
( வரும்)

கருத்துகள் இல்லை: