திங்கள், 31 அக்டோபர், 2022

மராட்டிய மண்

பிறந்த போதே பெயரில் வீரத்தைச் சேர்த்து வைத்ததாலோ என்னவோ வாழ்க்கைப் பாதையில் போர்கள் பலவற்றைக் கண்டு விழுப்புண்கள் பெற்று முன்னேறியபடி தொடர்வது வாடிக்கையாயிற்று. வில்லாளன் என்ற தந்தை வைத்த பெயரை விஜயனாக தாய் மாற்றியதாய் அறிந்தேன். வில்லுக்கு இல்லாமல் சொல்லுக்காய் நானும்.

கதைக்கு வருவோம். எப்போதும் ஏதோ செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற துடிப்பு. இயற்கையோடும் கடினப் பாதைகளோடும் பயணிப்பதில் அளவற்ற மகிழ்ச்சி. இந்தப் பயணமும் அவ்வாறே. சீனாவிலிருந்து புனேவுக்கு மகன் புலம் பெயர்ந்ததிலிருந்து போக வேண்டுமென நினைத்தது இப்போது தான் நிறைவேறியது.
இளங்காலைப் பொழுதில் பயணம் என்றும் சிறந்தது.பெங்களூரு புனே தூரத்தைக் கடக்க பயண நேரம் பதினான்கு மணி நேரம் என முடிவு செய்து 3/7/22 அன்று காலை சரியாக ஆறு மணிக்கு சாககார்நகர் அக்கா வீட்டிலிருந்து எனது i20 காரில் மகன் டிரைவிங்கில் தொடங்கியது.
மாற்றி மாற்றி ஓட்டுவோம் என முடிவெடுத்து காலை டிரக் வண்டிகளைக் கடந்து நெலமங்களா பிரிட்ஜ் ஏறி பயணம் வேகமெடுத்தது. மணிக்கு 100 கிமீ முதல் 120கிமீ வேகத்தில் காற்றைக் கிழித்துக் கொண்டு. இந்த வேகத்தில் பயண தூரத்தை 85 முதல்90 கிமீ வரை கடந்து கொண்டிருந்தோம். மழைத் தூறல் வழி நெடுக, தாவண்கெரே வெண்ணெய் தோசை தான் காலை உணவென முடிவெடுத்து தாவண்கெரே அடைந்த போது மணி காலை 8 54. அசோக் ரெசார்ட் சிற்றுண்டி அழகாய் வரவேற்றது. வெண்ணெய் தோசை சுவை அருமை. மசித்த உருளைக் கிழங்கும் சட்னியும் கலந்து ஆஹா பேஷ். தவறாமல் இதைச் சாப்பிடுங்கள் இந்தப் பக்கம் பயணம் செய்பவர்கள்.
காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு பயணம் தொடர்ந்தபோது மழையின் வேகம் அதிகரித்து வழி் நெடுகிலும் பார்க்கிங்லைட் போட்டே ஓட்ட வேண்டியதாயிற்று. கடக்கும் தூரமும் மணிக்கு 75 கிமீ் ஆகக் குறைந்தது.
மதிய உணவுக்குப் பிறகு பயணம் தொடர்ந்த போது 12 மணி நேரத்துக்கு முன்பாகவே புனே அடைந்து விடுவோம் என்று நினைத்தது மெதுவாக மாறிப் போனது.
போகப் போக மழை வேகம் அதிகரித்து, சாலை ஓர நீரைக் கடக்கையில் காரை ஒரு பக்கமாக இழுத்தது. அதனால் நீரைக் கடக்கும் போதெல்லாம் கவனம் தேவை. வேகம் குறைந்தது.
இப்போது புனேவை நெருங்கிக் கொண்டிருந்தோம்.மகாபலேஷவர் பிரிவைக் கடந்து, டனலைக் கடந்து, மலைப் பாதையில் சென்ற போது பரத் சொன்னான், கடைசி நூறு கிமீ கடக்க நான்கு மணி நேரம் ஆகுமென்று. அது உண்மை ஆயிற்று, தாறு மாறான சிக்னலகளைக் கடந்து மகன் தங்கியிருக்கும் கெரா பார்க் வியூ 12வது மாடி அடைந்த போது மணி 7 30. பதின்மூன்றரை மணி நேரப் பயணம் முடிந்தது.
இக்கட்டுரை எழுதும் இந்நேரம் வரை எந்த இடமும் செல்ல முடியாமல் ஆரஞ்சு மற்றும் ரெட் அலர்ட். திங்கள் முதல் சுற்றியுள்ள இடங்களைப் பார்க்கத் தொடங்கலாம். இன்று அருகிலுள்ள கோட்டை ஒன்றுக்குச் சென்று வரலாம் என முடிவு. பயணம் தொடரும்
( வரும்)

கருத்துகள் இல்லை: