திங்கள், 31 அக்டோபர், 2022

மெரினா கடற்கரை

 பால்ய சினேகிதம் பழகிய பல நாட்கள்

கால்கள் கழுவி களித்த மாலை நேரங்கள்
நடப்பதே கடினமாய் மண்ணில் புதைந்து கரைசேர
நடந்த கதைகள் பலவும் பேசிய இரவுகள்
நிலாச் சோறு உண்ண குழுமிய குடும்பங்கள்
உலா வரும் நடைப் பயண நாயகர்கள்
குடை பிடித்து சுடும் வெயிலில் காதலர்கள்
வடை சுட்டு வாழ்வை நடத்தும் பெண்டிர்
மர நிழலில் கனாக் காணும் வாலிபர்கள்
மங்கையர் மழலை மனிதக் கடலாய் கூட்டம்
உடலோடு உரசி உலகை மறந்த காளையர்
கடலோசை கேட்பதே கானமென ஒரு சிலரும்
சுண்டல் முறுக்கு சுமந்த சிறுவர் குரலும்
கிண்டல் செய்தே நேரம் போக்கும் வாலிபரும்
அறிஞர் ஆன்றோர் சிலைகள் அணி வகுத்தும்
மீளாத் துயிலில் உறங்கும் தலைவர் சிலரும்
அழகிய மெரினா கடற்கரையே நினைவில் என்றும்நீ
அலையோசை கேட்டே ஆயிற்று மாதங்கள் பல
உன்னைப் பிரிந்து வாடும் உள்ளம் சொல்கிறது
உறவாட விரைவில் வருவேன் காத்திரு அதுவரை

கருத்துகள் இல்லை: