திங்கள், 31 அக்டோபர், 2022

வால்பாறை மூன்று

மூன்றாவது முறையாகச் சென்றதால் இத்தலைப்பு. திட்டமிடுதல் முக்கியமான ஒன்றாகும் பயணங்களில். நண்பன் சம்பந்தம் மகனின் திருமண ஒப்பந்தம் செப்டம்பர் 9 கோயம்பத்தூரில் என்ற அழைப்பு வந்தபோதே மூளை வேலை செய்ய ஆரம்பித்தது. இந்த பங்ஷன் முடித்து மேலும் இரண்டு நாட்கள் தங்கி ஊட்டி அல்லது மூணார் போகலாமென.

ஊட்டி இப்போதெல்லாம் அழகிழந்து விட்டது அதனால் குன்னூர் அல்லது மூணார் போகலாமென. மூணார் போகலாம் என முடிவெடுத்து நாட்கணக்கில் ஆராய்ச்சி தொடர்ந்தது. இரயிலில் திரும்ப 12 ந்தேதி மதியம் சென்னை நண்பர்கள் அசோக், அந்தோணி, இராஜேந்திரன் ஆகியோருக்கும், எனக்கு பெங்களூருக்கும் புக் பண்ணியாயிற்று. திட்டமிடுதல் முதல் படி.
ஆராய்ச்சிகளின் முடிவில் மூணார் செல்ல உடுமலைப்பேட்டை சென்று பஸ்ஸிலோ, டாக்சியிலோ போக வேண்டும், இல்லை கோயம்பத்தூரிலிருந்து டாக்சியில் போக வேண்டும் பட்ஜெட் உதைக்கும், அதுவுமன்றி 12ந்தேதி மதியத்திற்குள் ட்ரெயினைப் பிடிப்பதும் கடினமென பேசி, மழைக் காலம் சாலைகளும் பழுதடைந்து இருக்கும் என்பதால், மாற்று இடங் கள் ஆராயப் பட்டன. தூரம் குறைவான வால் பாறை கண்ணில் பட்டது. மூன்றாம் முறை போக வேண்டுமா என மனதில் ஒரு எண்ணம். என்றாலும் மழைக்கால மலைத்தொடர் தேயிலைத்தோட்ட பசுமை இவைகள் கண்ணில் தோன்ற மிகுந்த கலந்தாலோசிப்புக்குப் பிறகு வால்பாறை போவதென முடிவானது.
திட்டமிடுதல் இரண்டு கோயம்பத்தூரில் இருந்து , 10 ந்தேதி காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு புறப்பட்டுப் போகலாம் என, பஸ்ஸா டாக்சியா என்ற மறு ஆராய்ச்சியில் கோயம்பத்தூர் நண்பன் சுந்தர்ராஜின் அறிவுரைப் படி பஸ்ஸே எனத் தீர்மானமானது.
அடுத்தது தங்குவதற்கு விடுதி கூகுள் செய்யப்பட்டு 7.6/10 ரேட்டிங் பெற்ற சபரி ரெசிடன்சி புக் செய்தாயிற்று. முன்னமே கோயம்பத்தூரில் தங்க ஸ்ரீ லஷ்மி , காந்திபுரம் கிங் ஷூட் நான்கு பேரும் ஒரே அறையில் தங்கவும் புக் செய்தாயிற்று.
திருமண ஒப்பந்தம் மிகச் சிறப்பாகவும் பழைய நண்பர்கள் சந்திப்பும், நண்பர் சுந்தரின் ' வாத்தியார்' குறும்பட கதை விவாதமும், அருமையான இரவு உணவும் முடிந்து அறைக்குத் திரும்பியாயிற்று. காலை எட்டரைக்குத் தயாராக நண்பர்களிடம் சொல்லப் பட்டது.
சிறிது நேர அளவளாவலுக்குப் பிறகு அவரவர் அறையில் நாளைய பயணத்தின் நினைவோடு் உறக்கம் ஆட்கொண்டது.
( தொடரும்)

கருத்துகள் இல்லை: