திங்கள், 31 அக்டோபர், 2022

வால்பாறை மூன்று - 3

ஆழியாறு நீர்த்தேக்கம் பிரமாண்டமாய் காட்சியளிக்க வளைவுகளில் சென்று கொண்டிருந்தது கார். சதீஷ் பேசிக் கொண்டே வந்தார். வரையாடுகள் இப்பகுதியில் காணப்படும் என்று சொல்வார்கள், முதன் முறையாக கண்ணில் பட்டது.

வால்பாறை நெருங்க நெருங்க மதிய உணவு நேரம் கடந்ததை அறிந்து முதலில் செக் இன் செய்து, உணவு முடித்து சோலையார் டேம் போக முடிவெடுத்தோம். பேருந்து நிலையம் அருகிலுள்ள மெஸ் போன்ற ஓட்டல் ஓரளவுக்கு நன்றாக இருந்தது. இப்போது சோலையார் டேம் நோக்கிப் பயணம். மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருப்பதால் நீர் ஆர்ப்பரித்து வெளியேறிக் கொண்டிருந்தது. குளிர்காற்று, அழகிய மலைக் குன்றுகள், நீர்த்தேக்கம் மனதை கொள்ளை கொண்டது.
தெருவோரக் கடைகளில் வியாபாரம் சூடு பிடித்தது. அந்தோணி மீன் வறுவல் ஆர்டர் செய்து இருந்தான். அதற்குள் அருகிலுள்ள கடைக்குச் சென்று சோமபானம் வாங்கி வந்தோம். வறுவல் தயாரானதும் அறைக்குத் திரும்பி, எட்டரை மணிக்கு இரவு உணவுக்குப் போக முடிவானது.
கச்சேரி ஆரம்பம். அதற்குள் இராஜேந்திரன் அருகிலுள்ள முருகரை தரிசித்து வந்தான். கீழே உள்ள ரெஸ்டாரெண்டில் பெருங்கூட்டமாய் ஒரு குடும்பம். எங்களுக்கு நல்ல வேளை இடம் கிடைத்தது. மிகச் சிறிய ரெஸ்டாரெண்ட்.
மறுநாள் போகுமிடங்கள் பற்றிய விவாதத்தில் வியூ பாயிண்ட் மற்றும் கூழாங்கல் ஆறு போக முடிவானது.
காலையில் எட்டரை மணிக்குத் தயாராகி, காலை உணவுக்குப் பிறகு பயணித்து வியூ பாயிண்ட் அருகே நெருங்கிய போது மழை வேகமாகப் பெய்ய ஆரம்பித்தது. லெமன் டீ ஆர்டர் செய்து குடித்து மழை விடக் காத்திருந்த போது முந்தைய கல்லூரி நணபர்கள் குழுவோடு இங்கே அனைவரும் போட்டோ எடுத்த ஞாபகம் வந்தது.
வெயில் மழை நிமிடத்திற்கொரு முறை மாறும் வானிலை. ஒரு கிமீ தூரம் தேயிலைத் தோட்டத்தின் ஊடே நடக்க வேண்டும். என்ன செய்வது என்ற யோசனையோடு வெயிட்டிங்.
( தொடரும்)

கருத்துகள் இல்லை: